பாரூர் போல...

Paarur Pola...

மு. கருணாநிதி

பாரூர் போல...

கிள்ளி வளவன் என்ற மாமன்னனுக்கு உற்ற தோழர் நப்பசலையார் என்னும் புலவர். அவர் அந்தக் கிள்ளி வளவனைப் பற்றிப் பாடுகிறார்.

கிள்ளிவளவன் இறந்து விடுகிறான். அவன் எப்படி இறந்திருக்க முடியும்? என்று கேள்வி கேட்கிறார் புலவர். அவனை யாருமே கொல்ல முடியாது!

“பொலந்தார் மண்டமர் கடக்குந் தானைத் திண்டோர் வளவற் கொண்ட கூற்றே”

அப்படிப்பட்ட மாமன்னன் உயிரை எடுத்துவிட்ட கூற்றுவன் - எமன் - எப்படி அவன் உயிரைப் பறித்திருக்க முடியும் என்று கேட்கிறார். ஏன் எடுக்க முடியாதாம்?

“செற்றன் றாயினும் செயிர்த்தன் றாயினும் உற்றன் றாயினும் உய்வின்று மாதோ!”

எதிர்த்தோ, உறவாடியோ, சண்டையிட்டோ கிள்ளி வளவனுடைய உயிரை எமனால் பறிக்க முடியாது. பிறகு எப்படிப் பறித்திருப்பான்?

“பாடுநர் போலக் கை தொழு தேத்தி இரந்தன் றாகல் வேண்டும்”

எமன் ஒரு கவிஞர் போல வேடம் போட்டுக் கொண்டு போய்க் கிள்ளிவளவனுடைய உயிரைத் ‘தா’ என்று கேட்டிருப்பான். கிள்ளிவளவன் கூற்றுவனைப் புலவனெனக் கருதி தனது உயிரைக் கொடுத்திருப்பான் என்கிறார்.

அந்தக் காலத்தில் அரசர்கள், புலவர்கள் மீது எத்தகைய மதிப்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் நப்பசலையாரின் இந்தக் கவிதையாகும்.

*