பாலும் தண்ணீரும்
Milk and Water
மு. கருணாநிதி
பாலும் தண்ணீரும்
அன்பில், என்றைக்கோ, நான் வேடிக்கையாகச் சொன்ன வார்த்தையை வைத்துக் கொண்டு “நீ என்னய்யா சர்வ கட்சித்தலைவன்” என்று நான் கூறியதை வைத்துக் கொண்டு இங்கே வந்திருக்கிற சர்வ கட்சித் தலைவர்களும் ஆதரிப்பது போதாது என்று எம்-ஜி. ஆர் கட்சியும் தன்னை ஆதரிக்கும். இந்திரா காங்கிரஸ் கட்சியும் தன்னை ஆதரிக்கும் என்று கூறினார்.
எல்லோரும் என்னை ஆதரிப்பார்கள் என்று அவர் சொன்ன கருத்துக்கு, ‘நான் இனிமேல் வேலையே செய்ய வேண்டியதில்லை’ என்று பொருள் அல்ல ! அவர் லால்குடிக்கோ, அன்பிலுக்கோ சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்ற அர்த்தமல்ல.
அன்பில் சொன்னதெல்லாம் எம். ஜி. ஆர். கட்சி இந்திரா காங்கிரஸ் கட்சி அத்தனை கட்சிகளும் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று அவரும் நம்பி நாமும் நம்பினால் பழைய காலத்துக் கதை தான் நினைவுக்கு வருகிறது.
மன்னன் ஒருவன் ஊரிலே உள்ளவர்களெல்லாம் ஆளுக்கு ஒரு குடம் பால் கொண்டுவந்து கோட்டையில் கட்டியுள்ள தொட்டியில் ஊற்ற வேண்டும் என்று கட்டளை இட்டானாம்.
“ஒரு குடம் பாலுக்குப் பதில் ஒருகுடம் தண்ணீரைக் கொண்டு போய் ஊற்றினால் தெரியவா போகிறது ! எத்தனையோ பேர் பால் கொண்டு வந்து ஊற்றுவார்கள். அதிலே நாம் ஒருகுடம் தண்ணீரை ஊற்றினால் யார் கண்டு பிடிக்க முடியும்” என்று ஒவ்வொரு வீட்டுக்காரனும் எண்ணிக் கொண்டு அத்தனை பேரும் தண்ணீரைக் கொண்டுபோய் ஊற்றிவிட்டார்கள். கடைசியில் தொட்டியைத் திறந்துபார்த்த போது அதில் தண்ணீர்தான் இருந்ததே தவிர பால் இல்லை. அதைப்போல இங்கு வீற்றிருக்கிற அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நம்பாமல் எம். ஜி. ஆர். கட்சியும், இந்திரா காங்கிரஸ் கட்சியும் அவருக்கு வாக்களிக்கும் என்று அன்பில் நம்புவாரேயானால் இவர்களும் சேர்ந்து அத்தனைபேரும் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள் என்று அன்பில் நான் எச்சரிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். எச்சரிக்கை அன்பிலுக்கு அல்ல! தஞ்சைத் தொகுதியில் திமுகழகத்தினருக்காக பணியாற்றுகிற அருமைச் செயல் வீரர்கள் அனைவரையும் எச்சரிக்கவும், கேட்டுக் கொள்ளவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.