நுனிக்கரும்பு
Nunikkarumbu
கலைஞர் மு. கருணாநிதி · கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
நுனிக்கரும்பு
‘சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும், வானில் மிதக்கும் அவள் தாமரைக்கை மேலும் வதங்கவிலாச்சண்பகத்து நல்லரும்பு. சாடை புரிகின்ற விரல் கண்டவரும் செம்பவளக் காம்பு’.
கவிஞர் பாரதிதாசனின் இந்தக்கவிதைக்கு அவள் ஆடற்கலை மூலம் அழகு தந்தபோது அந்தக் கலையரங்கமே மகிழ்ச்சிக் கூத்தாடியது. தாமரைக் கொடியொன்று, முகமலரும் இருமொட்டும் பெற்று, உயிர் பெற்று, ஓவிய உருவமும் பெற்றுக் களி நடனம் புரிய வந்ததோ அந்தக் கலையரங்கில் என வியக்காதார் யாருமில்லை.
‘ஆணிப் பொன்னுலே மேனி—அழகு ரத்தினத்தால் ஒரு பேழை—அது நிறைய ஒளிமுத்து—ஆடற்கலை அவள் சொத்து’ என அரங்கத்துச் செயலாளர் அருள்நம்பி பாராட்டுரை பொழிந்தபோது கையொலியால் அந்த மண்டபமே அதிர்ந்தது. அமுதா, பெயருக்கேற்ற அழகின் பூரிப்பும் அங்கமெல்லாம் இளமையின் அதிகமும் கொண்ட ஆடலரசி. அவள் ஆடாத மேடையில்லை—அவளைத் தேடி ஓடாத நெஞ்சமில்லை! அன்று நாறுவது நடன நிகழ்ச்சி. அதனைத் தனது கலையரங்கத்திலேயே நடத்த வேண்டுமென்று அருள்நம்பி பெருமுயற்சி எடுத்து வெற்றி பெற்றார். அரங்கின் செயலாளர் அவர். கவிதை புனையக் கற்றவர். கலைத்தாயின் சேவையே வாழ்வின் இலக்கு எனக் கொள்கை முழக்கம் செய்து கொண்டிருப்பவர். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, அறுபது என எண்ணத்தக்க அளவுக்கு அனுபவமும் தோற்றமும் கொண்டவர்.
அவரது நிர்வாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிற அந்தக் கலையரங்கத்தில் எத்தனையோ கலை நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் அமுதாவின் நிகழ்ச்சியை அங்கு நடத்த வேண்டுமென்பதில் அவருக்கு எத்துணை ஆர்வம்! எத்துணை துடிப்பு! அவர் நினைத்தது நடந்தது. இலக்கியங்களில் நுழைந்து புலவர்களைக் கெஞ்சிக் காவியங்களைப் புரட்டிக் கடைசியாக ஒரு தமிழ் வளங் கொழிக்கும் பாராட்டுரையைத் தயார் செய்து, அதனை இரண்டு நாள் இரவு பகல் மனப்பாடம் செய்து, கனவிலே கூட அதனை உளறி, இத்தனைக்கும் பிறகு அன்று மேடையில் அமுதாவை வர்ணித்து, மன்றத்தின் பாராட்டுதலைப் பெற்றார்.
அவர் விரும்பியது மன்றத்தின் பாராட்டு மட்டுமா?
அமுதாவின் ஓர விழிகள் அவரை நோக்கி ஒருமுறை அசைந்தால் போதும்; அதற்காகவே அவர் அத்தனைநாள் கடந்தவம் இயற்றினார். அருள்நம்பி கலையுலகில் செல்வாக்கு மிக்கவர். தமிழ் மேடைகளில் அவர் தோன்றாதிருப்பதில்லை. விழாக் கூட்டங்களில் அவரது முத்திரை எங்காவது இல்லாமல் இருக்காது. விருந்து கேளிக்கைகளில் அவர்தான் முன்னேடி. இப்படி அவரது கவனத்தையும் எப்படியாவது கவர்ந்து நினைவில் தன்னை ஒட்டவைத்துக் கொள்வதில் திறமை மிக்கவர். அவரது சில பிடிக்காத செயல்களைக் கூடக் ‘கிடக்கிற பாவம் வயதான மனிதர்’ என்று பலர் மன்னித்து விடுவது வாடிக்கை. அவருக்கு என்னவோ; தன்னை வயதானவர் என்று குறிப்பிடுவதை விட வேறு வசை புராணம் ஒன்று இருப்பதாகவே நினைப்பதில்லை. அந்த வார்த்தையைத் தவிர வேறு எதைச் சொன்னாலும் தாங்கிக்கொள்வார். உலகின் இன்பங்கள் இளமை உணர்வோடு அனுபவிக்கத்தக்க ஆற்றல் அவரிடம் இருப்பதை யார் மறுத்தாலும் அவருக்கு மனம் புண்ணாகி விடும். அந்த உணர்வோடு அவர் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
அப்படிப்பட்டவர் அமுதாவின் அன்புப்பார்வையையே எதிர் நோக்கியதில் அவரைப் பொறுத்தவரையில் தவறில்லையல்லவா?
பாராட்டுரையை நிகழ்த்திவிட்டு மல்லிகை மாலையை அமுதாவின் கழுத்தில் அணிவிக்க அவளருகே சென்றார். அதற்குள் அமுதா அவர் இருக்குமிடம் நோக்கி வந்து விட்டாள்.
மாலையைக் கழுத்திலேயே வாங்கிக்கொள்வாளா? அருள்நம்பிக்குச் சற்றுக்குழப்பம். கழுத்திலே வாங்கிக் கொண்டால், ‘வயதானவர் தானே பரவாயில்லை’ என்ற முறையில் வாங்கிக் கொண்டாள் என்று ஆகிவிடும். அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இதையெல்லாம் அவர் நினைத்துப் பார்த்து முடிவுக்கு வருவதற்குள் அமுதா, அவர் கையிலுள்ள மாலையைத் தனது அழகுக் கரங்களால் பற்றி வாங்கிக் கொண்டாள். அடடா; அப்போது அந்தக் கரங்களின் மென்மையை அவர் உணர்ந்து கொண்டார். மாலையைப் பற்றும்போது அவளது விரல்கள் தன் விரல்களை விட்டு மெதுவாகத்தான் பிரிந்து சென்றன என்பதும் அவரைக் கிறு கிறுக்க வைத்தது.
அரங்கத்தின் திரை விழுந்தது.
அமுதா, ஒப்பனை அறைக்குள் சென்றாள். அவரும் கூடவே சென்றார். ஆடிய களைப்புத் தீர பாதாமிட்ட பால்கொண்டு வந்து தந்தார்கள் அவளுக்கு. அவளோ அதனை அருள்நம்பிக்குக் கொடுத்தாள். பால் கிண்ணத்தைத் தரும்போது இரண்டாவது முறையாக அந்த மலர்க்கரத்தின் மெல்லிய ஸ்பரிசம் அவரை இன்பபுரிக்கு இழுத்துச் சென்றது. “அமுதா! நாளைக்கு ‘போன்’ பண்ணுகிறேன்!” என்று விடைபெற்றுக் கொண்டார் அருள்நம்பி.
“அவசியம் ‘போன்’ பண்ணுங்க” என்று வணங்கி விடை கொடுத்தாள் அமுதா.
“அவசியம் ‘போன்’ பண்ணுங்க” என்ற அந்தக் குயில்மொழி காட்டும் குறிப்பை நினைத்து நினைத்து மகிழ்ந்தவாறு வீட்டுக்குச் சென்றார் அருள்நம்பி.
எப்பொழுது விடியும் என்று இரவுப்பொழுதைச் சாபங் கொடுத்து விரட்டிக் கொண்டிருந்த அருள்நம்பி, காலை எட்டு மணிக்கெல்லாம் அமுதாவின் இல்லத்திற்கு ‘போன்’ செய்தார். வேலைக்காரி பேசினாள். “அம்மா தூங்குகிறார்கள்; உங்களைப் பத்து மணிக்கு ‘போன்’ செய்யச் சொன்னார்கள்” என்று அவள் கூறியதும் பரக்கப் பரக்கக் காலக்கடன்களை முடித்து விட்டுக் கடிகாரத்தின் முட்களைச் சவுக்கால் அடித்து ஓட்டிக் கொண்டிருந்தார்.
மணி பத்தாயிற்று! அமுதா வீட்டு ‘போன்’ நீண்ட நேரம் மணி அடித்தது. யாருமே எடுக்கவில்லை. வெகுநேரம் கழித்து “ஹலோ” என்று ஒரு முரட்டுக் குரல் கேட்டது.
“யார், அமுதா வீடா? அமுதா இருக்குதா?”
“நோ! நோ! ராங் நம்பர்!”
“மன்னிக்கவும்.”
அவன் இந்த மன்னிப்பைக் கேட்டாமலே ‘போனைத்’ தடால் என்று வைத்து விட்டான். அருள்நம்பிக்கு ஏதோ ஒரு வெட்கம்; மீண்டும் எண்ணை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே ‘போன்’ செய்தார்.
“ஹலோ?”
ஆகா! அது அமுதாவின் குரல்தான். அருள்நம்பி எச்சில் விழுங்கிக் கொண்டார். தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.
“நான்தான் அருள்நம்பி பேசுறேன்!”
“அமுதாதான், வணக்கம்...”
“என்ன, செளக்கியமா?”
“நீங்க இருக்கும்போது செளக்கியத்துக்கு என்ன குறை?”
அமுதா சிரித்தது அவர் காதில் விழுந்தது. அதற்குள் அவர் முகமெல்லாம் ‘குப்’ என்று வியர்த்து விட்டது.
“ம்? அப்புறம் என்னங்க?”
“ஒண்ணுமில்லே!...என்ன, உன் வீட்டிலே எனக்கு விருந்து இருந்து கிடையாதா?”
“ஓ...தாராளமாக! எப்ப வர்றீங்க! எப்ப வந்தாலும் விருந்து உண்டு.”
“என்ன விருந்து?”
“எல்லா விருந்தும் உண்டு. உங்களுக்கு என்ன பிடிக்கும் மாமிசமா? சைவமா?”
“சைவமா? சேச்சே! மனிதன், மாமிசத்திற்குத் தானே அடிமை!”
“சரி, உங்களுக்குத் தனியா மாமிசம் சமைக்கச் சொல்கிறேன். நாங்களெல்லாம் சைவம்!”
“வேண்டாம்....வேண்டாம்....உனக்கு ஒரு சாப்பாடு; எனக்கு ஒரு சாப்பாடா? எனக்கும் சைவமே இருக்கட்டும். எப்ப வர்றது?”
“இன்னைக்கு மத்தியானமே வாங்கலேன்!”
“பகல் விருந்து ரசிகுமா? ராத்திரி எட்டு ஒன்பது மணிக்கு வரட்டுமா?”
“ஓ! வாங்க! கண்டிப்பா வரணும். வராம இருந்திடாதீங்க! நிச்சயம் வரணும்!”
அருள்நம்பி, அப்படியே ரிசீவரைக் கன்னத்தில் அழுத்திக் கொண்டு சற்று நேரம் மயங்கிய நிலையில் அமர்ந்துவிட்டார். நினைவு வந்த பிறகு, உடலில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு, ‘அப்பனே முருகா! எல்லாம்; உன் அருள்!’ என்று வாய்விட்டுக் கூறிக்கொண்டே திருப்புகழ் புத்தகத்தைக் கையில் எடுத்து ஏடுகளைப் புரட்டத் தொடங்கினார்,
இரவு எட்டரை மணி. “வாங்க வாங்க” என்று அமுதா இள நகை சிந்தி வரவேற்க, அருள்நம்பி, உடம்பெல்லாம் தணலான நிலையில் அவள் வீட்டுக் கூடத்தில் அமர்ந்தார்,
“என்ன, வீட்டில் யாரையும் காணோம்?”
“எல்லாம் ஆறரை மணி ஆட்டத்துக்குச் சினிமாவுக்குப் போயிருக்காங்க! இப்ப வந்துடுவாங்க!”
“மணி எட்டரை ஆயிட்டதே. இப்ப வந்துடுவாங்களா?”
“அது இன்னும் ஒருமணி நேரம் ஆகும்; நீங்க இப்பவே சாப்பிடுறீங்களா?”
“நான் மட்டுமா? நீ?”
“இரண்டு பேருந்தான்! இருங்க; இதோ வர்றேன்!”
அடுக்குளப்பக்கம் அமுதா போன அழகைப் பின்னிலிருந்து அருள்நம்பி ரசித்துச் சொக்கிப் போனார். போதாக்குறைக்குச் சினிமாவில் வேறு அப்படிப்பட்ட காட்சிகளைக் காட்டி உள்ளங் களைக் கெடுத்து வைத்திருக்கிறார்கள் அல்லவா? அரைமணி நேரமாயிற்று அமுதா திரும்பிவர! அதுவரையில் அருள்நம்பியின் நெஞ்சத்தில் அமுதாவின் எத்தனையோ விதவிதமான நடனங்கள்.
“வாருங்கள்; சாப்பிடலாம்” என்ற வண்ணமொழிகேட்டு வாரிச் சுருட்டியெழுந்து அவள் பின்னால் சென்றார். அலங்காரமான மேசையில் ஆடம்பரமான விருந்து. எதிர் எதிரே இருவரும் அமர்ந்து கொண்டனர்.
வேலைக்காரி இருவருக்கும் பரிமாறினாள்.
இடையிடையே இரண்டு மூன்று தடவை, அருள்நம்பியின் கால், எதிரே வீற்றிருந்த அமுதாவின் காலில் பட்டுவிட்டது. ‘சிவ! சிவா!’ என்பார். ‘பரவாயில்ல’ என்று அவள் புன்னகை புரிந்த வண்ணம் உணவு அருந்துவாள். அவருக்குச் சாப்பிடவே முடியவில்லை. மேனியெங்கும் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு வழியாகச் சாப்பாட்டை முடித்துவிட்டுக் கூடத்திற்கு வந்தார்கள். தனது நடன நிகழ்ச்சி ‘ஆல்பங்கள்’ எல்லாவற்றையும் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அதைக் கொடுக்கும்போதும் வாங்கும்போதும் கைகள் உராய்ந்தன. அருள்நம்பிக்கு இருப்புக் கொள்ளவில்லை. மணியும் ஒன்பதரை ஆகிவிட்டது. அறையைக் காட்டி, அவளிடம் ஏதோ சொல்ல ஆரம்பித்தார். அதற்குள் வாசலில் கார் வந்து நின்ற சப்தம். “ஓ! சினிமாவுக்குப் போனவர்கள் வந்து விட்டார்கள்” என்றவாறு எழுந்து நடந்தாள். அவளது மேலாடை நாற்காலியில் சிக்கிக் கீழே விழுந்தது. அதனை எடுத்துச் சரிப்படுத்திக் கொண்டு, அவரைப்பார்த்து ஒரு சிரிப்பையும் கொட்டிவிட்டுத் தெருப்பக்கம் போனாள். சினிமாவுக்குப் போனவர்கள் திரும்பி வந்தார்கள். அமுதா, தன் கையில் ஒரு குழந்தையைப் பிடித்துக் கொண்டு அருள்நம்பியிடம் வந்தவாறு—
“இவனத் தெரியுமா? என் மகன்!”
என்று அறிமுகப்படுத்தினாள். அமுதாவுக்கு ஒரு குழந்தை இருப்பது அவருக்கு முன்பே தெரியுமாதலால், “ஓ! நம்பப் பயலா?” என்று ஆர்வத்தோடு கேட்டார். அதை அவ்வளவாகக் காதில் போட்டுக் கொள்ளாத அமுதா குழந்தையைப் பார்த்து,
“டே, டே! கண்ணு! எங்கே, தாத்தாவுக்கு வணக்கம் சொல்லு!”
என்று அவன் கரங்களைத் தொழுவதற்கான முறையில் கூப்பி வைத்தாள்.
அவன் அடம்பிடித்து வேறுபக்கம் போகவே, அவனைத் தொடர்ந்து போய் இழுத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள்.
கூடம் காலியாக இருந்தது!
அமுதா, ஒரு வெற்றிப்புன்னகையுடன் குழந்தையை முத்தமிட்டாள்.
◆ ◆ ◆