நாராயணா ! நாராயணா !

Narayana! Narayana!

மு. கருணாநிதி

நாராயணா ! நாராயணா !

நாரதர் பூலோகத்தில் பல பகுதிகளைச் சுற்றி விட்டு ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திற்கு வருகிறார். அங்கே ஓர் ஏழை விவசாயியைப் பார்க்கிறார். அவன் வயலிலே வேலை செய்து கொண்டிருக்கிறான். நாரதர் வரும்பொழுதே நாராயணா, நாராயணா என்று சொல்லிக் கொண்டே வருகிறார். அப்படி வரும்பொழுது அந்த விவசாயியைப் பார்த்து நாரதர் “நான் உலகமெல்லாம் சுற்றுகிறேன். ஓயாமல் என் உதடுகள் ‘நாராயணா, நாராயணா’ என்றே ஜெபித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நீ இந்த வயலில் சும்மாதானே வேலை செய்து கொண்டு இருக்கிறாய். ‘நாராயணா, நாராயணா’ என்று சொல்லக்கூடாதா? பாபம் தொலையாதா? புண்ணியம் உன்னை அணுகாதா?” என்று கேட்கிறார்.

உடனே அந்த விவசாயி நாரதரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று நான் ஒரு வேலை தருகிறேன் முதலில் நீங்கள் அதை செய்யுங்கள். பிறகு நீங்கள் எழுப்பிய சந்தேகத்தை நான் போக்குகிறேன் என்று சொன்னான். என்ன வேலை என்று கேட்டார். ஒரு சிறு கிண்ணத்திலே எண்ணெயை ஊற்றி நாரதர் கையில் அந்தக் கிண்ணத்தைக் கொடுத்து “நாரத முனிவரே! இந்த எண்ணெய்க் கிண்ணத்தை கையில் வைத்துக் கொண்டு இந்த ஊரை ஒரு முறை சுற்றி வாருங்கள்” என்று விவசாயி சொன்னான். நாரத முனிவர் அந்தக் கிண்ணத்தைக் கையில் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தார்.

ஊரைச் சுற்றிவந்து முடிந்ததும் அந்தவிவசாயி “ஊரைச் சுற்றினீர்களே! இப்படி எண்ணெய்க் கிண்ணத்தைக் கையிலே வைத்துக் கொண்டு சுற்றிய பொழுது எத்தனை முறை ‘நாராயணா, நாராயணா’ என்று சொன்னீர்கள்” எனக் கேட்டான். நாரதர் “நான் சொல்லவே இல்லை” என்று சொன்னார். “ஏன்” என்று விவசாயி கேட்க “என்னுடைய கவனமெல்லாம் எண்ணெய்க் கிண்ணத்தில் தான் இருந்தது. எண்ணெய் சிந்தாமல், சிதறாமல் கிண்ணத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கவலையில் நான் இருந்தேன். அதனால் நான் நாராயணா! நாராயணா என்று சொல்லவில்லை” என்று நாரதர் சொன்னார்.

அதைப் போலத்தான் நாரதர் கையிலே தரப்பட்ட எண்ணெய்க் கிண்ணத்தைப் போல மாநில உரிமைகள், மாநில பிரச்சினைகள். இந்த மாநிலத்தில் உள்ள தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம். தமிழனுடைய உரிமையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம். இன மானம் காக்க வேண்டும் என்ற எண்ணம் பகுத்தறிவுப் பாசறையாகத் தமிழகத்தை ஆக்க வேண்டும் என்ற எண்ணம் இவைகள் எல்லாம் நம்ம கையிலே எண்ணெய்க் கிண்ணத்தைப்போல இருப்பதால் அதைச் சிந்தாமல் சிதறாமல் கொண்டு வரவேண்டும் என்ற அக்கறையில் நாம் தேசீயம்!

தேசீயம் என்று சொல்லவில்லை. நாராயணா ! நாராயணா மறந்து விட்டதைப் போல நாமும் தேசீயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நம்மைப்பற்றி, நம்முடைய சமுதாயத்தைப் பற்றி மொழியைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இதைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ தேசீயம் என்றால் சொர்க்கத்தைப் போல நம் மாநில உறவுகளைப் பற்றிப் பேசினால் இது படு நரகத்திற்கு நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதைப் போல சில தேசீயவாதிகள் பேசுவது முறையல்ல!