நாக்குத் தமிழ் மணக்கும்

Naakkuth Tamil Manakkum

மு. கருணாநிதி

நாக்குத் தமிழ் மணக்கும்

காளமேகப் புலவர் கேள்விப்பட்டிருப்பாய்! சிலேடையாகப் பாடல் புனைவதில் சிறந்த மேதை! அவர் ஒரு சமயம் யாத்திரை புறப்பட்டு பல ஊர்களையும் கடந்து வந்தபோது நாகைக்கு வந்தாராம்! புலவருக்கு நல்ல பசி! எங்கேயாவது ஒரு உணவுக்கடையில் சோறு வாங்கி சாப்பிடலாம் என்ற நினைவில், அங்கே கோயிலருகே கோலி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களைப் பார்த்து, “தம்பி சோறு எங்கே விற்கும்?” என்று கேட்டிருக்கிறார். உடனே ஒரு குறும்புக்கார இளைஞன் “சோறு தொண்டையிலே விக்கும்” என்று கூறி சிரித்திருக்கிறான். சினம் கொண்ட காளமேகப் புலவர் அந்த இளைஞர்களை சபிப்பதற்காக ஒரு கரித்துண்டை எடுத்து சுவரில் எழுதினார்.

“பாக்கடிக்கும் பாலகர்க்கு நாக்கு...”

என எழுதி முடிப்பதற்குள் கோயில் மணி அடிக்கவே, காளமேகம் கோயிலுக்குச் செல்லும் பரபரப்பில் எழுதியதை சுவரில் அப்படியே விட்டு விட்டுப் போய் விட்டார். கோயிலில் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு வெளியில் வந்து, அந்த இளைஞர்களுக்கு தான் இடப்போகும் சாபத்தைப் பூர்த்தி செய்ய, மீண்டும் கரித்துண்டை எடுத்து சுவர் அருகே சென்றார். ஆனால் அவருக்கு முன்பே அந்த இளைஞர்கள் அந்த வாசகத்தைப் பூர்த்தி செய்திருந்தார்கள்.

‘பாக்கடிக்கும் பாலகர்க்கு நாக்குத் தமிழ் மணக்கும் நன் நாகை”

என்பதாக!

அந்த இளைஞர்களைத் தண்டிக்க நினைத்த காளமேகமே அவர்களின் தமிழ்ப்புலமை கண்டு பூரித்துப் போனார் என்றால், அந்த நன் நாகையில் நாக்குத் தமிழ் மணக்கும் நல் இளைஞர்கள், பல பகுதிகளிலிருந்தும் அண்ணா சுடர்களை ஏந்தி மேடைக்கு வந்த போதும், கழகத்தின் பால் கொண்ட பற்று பாசத்தைக் கண்ணொளியாய் உணர்த்தி உற்சாக மேமிட்டால் ஒலி முழக்கமிட்ட போதும், என்னை நான் மறந்தேன் என்பது வியப்பில்லை அல்லவா!

*