முடியாத தொடர்கதை

The Never-Ending Story

மு. கருணாநிதி

முடியாத தொடர்கதை

1

சிறைச்சாலை—இரவு நேரம்

[சங்கு, சந்தனம் என்ற இரண்டு கைதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்]

சங்கு :- என்ன சந்தனம் அண்ணே! சந்தோஷம் தான் உனக்கு, நாளைக்கு விடுதலையாகப் போறே! உம் அச்சடிச்ச சோறும் அவுன்ஸ் குழம்பும் வேப்ப மரத்து காத்தும், வேர்க்கடலை உருண்டையும்—இன்னையோட சரி—இல்லையா?

சந்தனம் :- ஆமாம் சங்கு — உங்களையெல்லாம் பிரிய வேண்டுமென்று எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கிறது. ஏறத்தாழ எட்டு வருடமாக ஜெயிலுக்குள்ளேயே சிநேகிதர்களாக வாழ்ந்துவிட்டோம். சங்கு! நம்முடைய நட்பை யெல்லாம் மறந்துவிடாதேயப்பா!

சங்கு :- எப்படி மறக்க முடியுமண்ணே! நீ தினம் தினம் சொல்லுவாயே; அந்தக் கதைகளை மறக்க முடியுமா? பழைய காலத்து பாட்டுக்களைப் பாடிக்காட்டி அர்த்தம் சொல்லுவியே; அதைத்தான் மறக்கமுடியுமா? உனக்கு கிடைக்கிற எந்தப் பண்டத்திலேயும் எனக்குப் பாதி கொடுப்பியே அதைத்தான் மறக்கமுடியுமா? படிச்சவங்களோட சிநேகம் கிடைக்கிறது கூட பெரிசு இல் லேண்ணே, படிச்ச புத்திசாலிகளோடே சிநேகம் கிடைக்கிறது பெரியபாக்கியம் அண்ணே—அந்த வகையிலே நான் பாக்கியசாலிதான்.

சந்தனம் :- நல்ல தோழனாக நீ இருந்தாய்—இனி இந்தப் பொல்லாத உலகத்திலே நான் யாரோடுபோய் நட்பு கொள்ளப்போகிறேன்.

சங்கு : ஒருத்தன் சிநேகிதம் உனக்கு வேண்டாமண்ணே! நீயுண்டு உன் குடும்பமுண்டு என்று வாழ்க்கையை குஷியா நடத்தண்ணே போய்!

சந்தனம் : குடும்பம்! எனக்கு யார் இருக்கிறார்கள் குடும்பம் நடத்த...?

சங்கு : ஏன் அண்ணே கண் கலங்குறே! குடும்பத்தைப் பத்தி பேச்சு எடுத்தா எப்போதுமே நீ இப்படித்தான் ஆயிடுறே! நானும் இந்த எட்டு வருசமாத்தான் உன்னைக் கேட்கிறேன்—என்ன விஷயம்ணு! உன் கதையைச் சொல்லக் கூடாதா?

வேண்டாம்! வேண்டாம்!!—இதுக்காக அழாதே அண்ணே! இன்னைக்கு ஒரு நாளு; சந்தோசமா இருந்துட்டு வெளியே போண்ணே!

சந்தனம் : சங்கு! என் கதையை இன்று சொல்லத்தான் போகிறேன். இருதயத்திலிருந்து சுமையை இறக்கத்தான் போகிறேன். உன்னைவிட நல்ல நண்பன் யாரப்பா எனக்கு இருக்கிறார்கள்?—உன்னிடம் சொல்லாமல் யாரிடம் என் சோகக் கதையை சொல்லப் போகிறேன்.

சங்கு : அண்ணே—ரொம்ப வேதனையாயிருக்கும்ணு சொல்ல வேண்டாம்.

சந்தனம் : என்னப்பா வேதனை! தூக்குக்குப் போகும் கைதிகளை துடிக்கத் துடிக்க இழுத்துப்போகிற காட்சியை இந்த சிறைக்குள்ளே எத்தனையோ முறை பார்த்திருக்கிறோமே அதைவிடக் கொஞ்சம் அதிக வேதனையானது என் கதை; அவ்வளவுதான்...சொல்கிறேன் கேள். என் முகம் இவ்வளவு விகாரமாக இருப்பது ஏன் தெரியுமா? சதை கிழிந்து கிழிந்து தொங்குவதற்குக் காரணம் புரியுமா? பிறக்கும் போதே நான் இப்படி பிறந்திருப்பேன் என்று நீ கருதுகிறாய்? என் அம்மா, 'மாம்பழமேனி என் மகனுக்கு' என்று வர்ணிப்பார்களாம். உற்றார் உறவினர் எல்லாம் “ஆடுதன் ராஜா போல இருக்கிறான், ஆண் சிங்கம்!” என்று பாராட்டுவார்களாம். ஏன்—அவள் கூட என் அழகுக்கு ஆசைப்பட்டுதான் என்னைக் காதலித்தாள்.

சங்கு : ஓ! காதலி வேறே இருக்கிறதா?

சந்தனம் : இருந்தாள் ஒரு காலத்தில்! இப்போது இல்லை. இனிமேலும் இல்லை.

சங்கு: செத்து விட்டதா அண்ணே!

சந்தனம் : என்னைப் பொறுத்த வரையில் அப்படித்தான்—

சங்கு : ஏன்?

சந்தனம் : அழகுக்காக என்னைக் காதலித்தாள்—நான் அலங்கோலமானதும் என்னை வெறுத்து விட்டாள்...

சங்கு : என்னது?

சந்தனம் : ஆச்சரியப்படாதே சங்கு ... பெண்களே அப்படித்தான்....

சங்கு : எல்லாப் பெண்களும் அப்படியிருக்கமாட்டாங்க அண்ணே!

சந்தனம் : தவறான கணக்குப் போடுகிறாய்—அதற்குக் காரணம்—உனக்கு கல்யாணமாகவில்லை...சங்கு!

சங்கு : எனக்குத்தான் கல்யாணம் ஆயிட்டுதுன்னு சொல்லியிருக்கேனே—

சந்தனம் : அப்படியானால் உன் முகத்தில் யாரும் ஊற்றவில்லையே...அதனால்தான் பெண்களைப் பற்றி உனக்குத் தெரியவில்லை.

சங்கு : அய்யோ—உன் முகத்தில் திராவகம் ஊற்றினாங்களா!

சந்தனம் : ஆமாம் சங்கு ஆமாம்! நான் அழகாயிருந்தது பிடிக்காமல் அல்ல; என் அழகில் மயங்கி விட்டாளாம் அவள்—அதைத் தடுப்பதற்காக என்னை சித்ரவதை செய்து விட்டார்கள்.

சங்கு : கொஞ்சம் விபரமாகச் சொல்லண்ணே உன் கதையை!....

சந்தனம் : சொல்லுகிறேன் — குறுக்கே கொஞ்சம் பேசாமலிரு! குமுதம் என்னோடு படித்தவள். குபேரன் வீட்டுக் கோதை. நானோ குடியானவன் மகன். இறந்து போன என் அப்பாவின் எண்ணத்தை எப்படியும் பூர்த்தி செய்ய எண்ணி, என் தாய் என்னைப் படிக்கவைத்தாள். படித்தேன் குமுதமும் நானும்...சரி, கதையை வளர்த்து வானேன்; காதலர்களாகி விட்டோம். வலியோன்மகளை எளியோன் காதலித்தேன் என்பதைத் தவிர எங்கள் காதலில் வேறெந்தக் குற்றமும் யாரும் சொல்ல முடியாமல்தான் இருந்தது. வழக்கம்போல் எங்களின் திருமணத் திட்டம் முறியடிக்கப்பட்டது. வயதான என் தாயும் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள்—குமுதமோ ஒரு நாள் இரவு என் குடிசைக்கு ஓடிவந்து “கொத்தடிமை ஆகிவிட்டேன் உங்களுக்கு—குடும்பம் நடத்துவோம் வாருங்கள்” என அழைத்தாள். ‘எதிர்ப்பு மலையாகுமே குமுதம்!’ என எச்சரித்தேன். ‘மலையைப் பிளக்கும் சிற்றுளி நம் காதல்’ என்றாள்—மறுக்க முடியுமா என்னால்! அன்றிரவே பயணமானோம். அயலூரிலே எங்கள் குடும்பம் ஆரம்பமானது; ஆனந்தமானது; ஆனந்த மயமான அந்த வாழ்க்கையை நினைத்து இப்போது அழுவானேன்! எங்களுக்கு ஒரு செல்வமும் தோன்றினான்.

சங்கு : பிள்ளையிருக்கானு அண்ணே உனக்கு?

சந்தனம் : இருக்கிறான்—கேள் பாக்கியை!...குழந்தையுடன் குதூகலமாய் நடை போட்டோம் வாழ்வுப் பாதையில்! குமுதாவின் அண்ணன் மலேயா போயிருந்தவன் சம்பாதிக்க—அவன் திரும்பி வந்து விட்டான். வீட்டார், விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்—அவன் ஒரு பர்மாக்காரியை பாரியாளாக அழைத்து வந்தவன்—அவனுக்கு குமுதாமீது கொள்ளை ஆத்திரம் பிறந்துவிட்டது. ஆகவே எதிர்க்கப் புறப்பட்டான், ஆள்முரடன், சண்டை போட்டு சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். குமுதாவை அடிமையாக்கினது என் அழகுதான் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள் அவனிடம்—என் குமுதாவே அடிக்கடி அதைச் சொல்லிக் கொண்டிருப்பாள். அந்த அழகையே குலைத்து விடுகிறேன் என்று அவள் அண்ணன் அக்கினித் திராவகத்துடன் புறப்பட்டு விட்டான்! வீட்டிலே தூங்கிக் கொண்டிருந்தேன். அவன் வந்துவிட்டான், விழித்துக் கொண்டேன். திராவகத்தை என் அழகான முகத்திலே வீசிவிட்டான், அய்யோ—அந்த எரிச்சல் இப்போது நினைத்தாலும் பயமாயிருக்கிறது; பொறாமைக்காரர்களின் வயிற்றெரிச்சலையும் மிஞ்சக் கூடிய எரிச்சல் அது! திராவகம் ஊற்றப்பட்ட இடத்தை கையால் தொடாமல் இருப்பது கொஞ்சம் நல்லதாம்—அவசரத்தில் அந்த யோசனையெல்லாமா வருகிறது—முகத்தைத் துடைத்துக்கொண்டேன் கையால்; அப்போது கிழிந்ததுதான் இந்த சதையெல்லாம் — குமுதாவின் அண்ணன் ஓடினான், நான் துரத்திப் பார்த்தேன் முடியவில்லை—தெருவில் விழுந்துவிட்டேன் குமுதாவும் குழந்தையும் அப்போது வீட்டில் இல்லை. பையனைப் பள்ளிக் கூடத்தில் கொண்டு போய் விடுவதற்காகப் போயிருந்தாள். உடனடியாக என்னை யாரோ தெருவிலுள்ளோர் வைத்தியசாலையில் கொண்டுபோய் சேர்த்தார்கள். குமுதாவும், குழந்தை செல்வனும் வைத்தியசாலைக்கு ஓடிவந்து அலறினார்கள். குமுதா என் முகத்தின் கோரத்தைக்கண்டு அலறிவிட்டாள். முதலில் நான் சோகத்தின் உச்சத்தில் அலறுகிறாள் என்றுதான் நினைத்தேன். பிறகு தான் நான் ஊகித்துக் கொண்டேன் — அவளுக்குத் தேவையான அழகு முகம் போய்விட்டதேயென அலறியிருக்கிறாள் என்று, மறுநாள் வைத்தியசாலையில் இருந்தபடியே கேள்விப்பட்டேன்; குமுதா எங்கேயோ போய்விட்டாள் என்று. குழந்தை செல்வன் மாத்திரம் தெருவினரால் பராமரிக்கப்பட்டான். குமுதாவின் அண்ணன் மீது வழக்கு நடைபெற்றது. நானும் சிகிச்சைப் பெற்று இந்த அலங்கோலமான முகத்துடன் வெளியே வந்தேன். ஐந்து வருடத்திற்கு கிட்டத்தட்ட வழக்கு நடைபெற்று கடைசியில் குமுதாவின் அண்ணன் விடுதலை பெற்றான். குற்றவாளியல்ல என்று தீர்ப்பு கூறப்பட்டு விட்டது. என்னால் தாங்க முடியவில்லை; பொறுக்க முடியாத ஆத்திரத்தில் துடித்தேன்; அவசரப்பட்டு ஏதேனும் செய்துவிட்டால், குழந்தை செல்வன் நாதியற்றுப் போய்விடுவானேயென்று யோசித்தேன். கடைசியாக சிலரது சிபாரிசு பிடித்து, செல்வனை வெளியூரில் ஒரு பள்ளிக்கூட தர்ம உணவு விடுதியில் சேர்த்துவிட்டு ஒரு பெருமூச்சை விட்டேன்.

அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து குமுதாவின் அண்ணனைப் பழிவாங்கும் மூச்சும் பிறந்தது. குமுதா என் விகார ரூபத்தைச் சகிக்காமல் எங்கேயோ போய்விட்டாள். குமுதா என் இருதயத்தைக் காதலிக்கவில்லை—அழகைத்தான் காதலித்தாள் என்ற பேருண்மையை அவள் அண்ணன் வீசிய அக்கினித் திராவகம் எனக்கு உணர்த்தியது என்றாலும் கூட; போகும்பாதை மோசம் என்பதை எச்சரிக்குந்தோரணையில் முள் குத்துகிறது என்பதற்காக அந்த முள்ளை எடுத்து முத்தமிட முடியுமா? அதை ஒடித்து முறித்து தூரத்தில் வீசித்தானே எறிகிறோம்; அது போலவே என் முகத்தைப் பாழ்படுத்திக் காதல் பாதை மோசம் என்று உணர்த்திய மூர்க்கனை விட்டுவைக்க மனமில்லை. என் அருமைச் செல்வனுக்கு அறிவுரைகள் புகன்றேன் — “எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்! ஒரு பெண்ணை மட்டும் காதலிக்காதே!” என்பதை அவனுக்கு ஆயிரம் முறை சொல்லிவிட்டு கையில் ஒரு கத்தியுடன் புறப்பட்டேன் ... குமுதாவின் அண்ணன், அந்தப் பர்மாக்காரி, அவர்களின் பெண் குழந்தை மூவரும் முற்றத்தின் பக்கம் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். யாரையும் கேட்காமல் உள்ளே நுழைந்தேன். வீட்டிலும் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை. குமுதாவின் தகப்பன் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டான் — பர்மாக்காரிக்கும் க்ஷயரோகம் வந்து மிகவும் கஷ்டப்படுகிறாள் என்று கேள்விப்பட்டிருந்தேன். இந்த சோக நிகழ்ச்சிகள் எல்லாம் குமுதாவின் அண்ணனைத் தாக்கி வேதனை கொடுத்திருந்தாலும் கூட, நான் நேரிடையாக வஞ்சம் தீர்த்துக் கொள்ளவே மிகவும் துடித்தேன். அவர்கள் பக்கம் வேகமாக வந்தேன். பர்மாக்காரி பலமாக இருமிக் கொண்டிருந்தாள். கையிலிருந்த கத்தியை குமுதாவின் சகோதரனுடைய நெஞ்சில்—ஆம், என்னை அலங்கோலப்படுத்திய அந்தப் பாவியினுடைய இருதயத்துக்கு நேராக செலுத்தினேன் மாறிமாறிக் குத்தினேன்—அங்கேயே பிணமானான். அதனுடைய விளைவுதான் சங்கு, இத்தனை ஆண்டு சிறைவாசம்! அவன் என்னைக் கொல்லாமல் கொன்று விடுதலைப் பெற்றான். நான் அவனை ஒரேயடியாகக் கொன்று தண்டனை பெறுகிறேன்.

சங்கு : என்னால் உன் கதையைத் தாங்க முடியவில்லை அண்ணே! போகட்டும், நாளைக்கு வெளியிலே போய் மகனையாவது சுகமாகக் காப்பாற்று அண்ணே!

சந்தனம் : என் செல்வனுக்காகத்தானே, நான் வாழ்ந்து கொண்டிருப்பதே—ஆனால் ஒன்று, என் மகன் எந்தப் பெண்ணையும் காதலிக்கவிடமாட்டேன்.

சங்கு : அப்படியெல்லாம் ஆத்திரத்திலே சொல்லாதே அண்ணே!

சந்தனம் : அமைதியாகத்தான் சொல்லுகிறேன்—போன மாதங்கூட பையன் என்னைப் பார்க்க வந்திருந்தானே; அப்போதும் அவனுக்கு “யாரையும் காதலிக்காதே!” என்று சொல்லித்தான் அனுப்பினேன்—அழகை விரும்பும் அரக்கனிடம் காதலா! கூடாதப்பா கூடாது!

சங்கு : சரியண்ணே வா—அதோ களிப்பட்டை வந்து விட்டது! வா, சாப்பிடலாம்—நாளைக்கு எங்கே நம்ம ரெண்டு பேரும் சாப்பிடப் போகிறோம்—நீ வெளியிலே—நான் உள்ளே...! வாண்ணே வா!

[இருவரும் சாப்பிடப் புறப்படுகிறார்கள்] 2

இரவு நேரம்—நிலவு, ஒளிமழை பொழிந்து கொண்டிருக்கிறது. விடுதலையடைந்த, சந்தனம் தன் புத்திர சந்தானத்தை எண்ணிப் பூரித்தபடி அவனைக் காணப் போகிறோம் என்ற மகிழ்ச்சி பொங்க நடந்து கொண்டிருக்கிறான், மகன் வாழும் உணவு விடுதி நோக்கி! உலகத்தைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் அவனுக்கு எத்தனை எத்தனையோ புதிய நினைவுகள் மோதுகின்றன. மகன் நன்கு படித்து திறமை பெற்றிருப்பான் — தான் சொன்ன “காதல் ஒரு கடும் விஷம்” என்ற உபதேசத்தைக் கடைப்பிடிப்பான். தந்தை சொல் தவறாத தனயனைப் பெற்ற பாக்கியமே பாக்கியம்—இப்படியெல்லாம் எண்ணியபடி நடக்கும் சந்தனத்தின் காதில் ஏதோ ஒரு கீத ஒலி கேட்கிறது. நிலவு மழையிலே அவனும் பல முறை கீதமிசைத்திருக்கிறான் குமுதாவுடன்—அதே போன்ற ஒரு கீதம், அவனுக்கு ஆத்திரமூட்டும் கீதம் இப்போதும் கேட்கிறது. குளிர்ச்சியூட்டும் இசைதான்; அவனுக்கு பழக்கமான சொற்கள்தான்; ஆனால் இப்போது மட்டும் அவனுக்கு அந்தக் கீதம் இடி முழக்கமாக இருப்பானேன்—குமுதா பாடிய அதே பாட்டுத்தான் அது! சந்தனத்தின் தோளிலே முகத்தைப் பதித்துக்கொண்டு அவள் காதலி இசைத்த கீதம்தான் அது!

“காதலோர் தொடர்கதையே! சாதலும் ஏற்போம்—அனுச்சரணமும் அடைவோம்—எனும் காதலோர் தொடர்கதையே!”

இந்த எழிலும் எழுச்சியுமிக்க வரிகள் சந்தனத்தின் உள்ளத்தைத் தொட்டு உலுக்கிவிட்டன; “ஆம் குமுதாதான் அப்படிப் பாட முடியும்—வேறு யாரும் பாடமுடி யாது—” என்று தனக்குள் கூறிக்கொண்டான். கண்களில் கனல் கிளம்பியது. “குமுதா” என்று பயங்கரமாக உச்சரித்தபடி இசை வந்த பக்கம் பாய்ந்தான். அவன் எதிர்பார்த்தபடி பாடியது இருவர்தான்!

அவர்களிடம் வேகமாக நடந்தான் சந்தனம் அவர்கள் இருவரும் தழுவியபடி பேசிக் கொண்டிருந்தனர். அவனும் அவளும் தான்!

அவன் :- கண்ணே—எவ்வளவு களிப்பூட்டும் தென்றல் இந்தப்பாட்டு...! ஆயிரம்முறை பாடினாலும் அலுப்பு ஏற்படுவதில்லையே கேட்க—சொல்லாமா? அல்லது சுந்தரியின் குரல் நயமா?

அவள் :- இரண்டுமில்லை ...கருத்தற்ற சாகித்யமும், களிவற்ற கொளியும்கூட கற்பனையில் தேனுமாகிறது. இந்தக் கண்ணாளின் மடியிலே நான் படுத்திருக்கும் போது...!

அவன் :- சித்ரா...என் சிந்தை கவர்ந்தவளே... இந்த நாள்போல் எந்த நாளும் இன்பம் குவியுமல்லவா...

அவள் :- இந்த நாள்போல் என்று சொல்லாதீர்கள்... இந்தநாள் தோற்றதென அடுத்தநாள் சொல்லும்; அடுத்த நாளை மறுநாள் வெல்லும்—அந்த மறுநாளை இன்னொரு புது நாள் கொல்லும்—என்ன செல்வம் சரிதானே!

ஆம்—சந்தனத்தின் மகன் செல்வம்தான் சித்ராவுடன் காதல் மொழி பேசி களித்துக்கிடக்கிறான். அதைச் சந்தனம் நேரில் பார்த்துவிட்டான். “காதலோர் கடும் விஷம்” என்று போதனை செய்தவனின் புத்திரன் பூப்படுக்கையிலே புதுப் பெண்ணின் மனதை அள்ளிக் கொண்டிருக்கிறான். ஆத்திரம் தாங்காத சந்தனம் ‘அடே செல்வம்!’ என்று பாய்ந்தான். அந்தப் பைங்கிளி சித்ரா பயந்துவிட்டாள். அவளால் அந்த அகோரமான மனிதனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை; அலறினாள். சந்தனம் அந்தப் பெண்ணை ஓங்கி அறைந்தான், ஓடிப் பிடித்து! அடியைப் பெற்றுக்கொண்டு அவள் ஓடி விட்டாள். “அப்பா! அப்பா!!” என்று செல்வம் கத்தினான். “உன் உயிரை எடுத்து விடுகிறேன் வா!” என்று உறுமியபடி செல்வத்தின் கையைப்பிடித்து பரபரவென இழுத்துக் கொண்டு போனான் சந்தனம்.

சந்தனத்தின் பிடியிலே சிக்கிய செல்வம், துடித்துப் போய் விட்டான். தந்தையின் அன்பான அணைப்பைப் பெறலாம் என்றிருந்த அவன், அழுத்தமான இரும்புப் பிடியிலே அகப்பட்டுத் திணறினான். அவன் கண்கள் நீர் நிலைகளாயின. அப்பா! அப்பா!! என்று அலறியபடியே சந்தனத்தின் முரட்டுத் தாக்குதலுக்கு ஆட்பட்டான். மரங்கள் சூழ்ந்த ஒரு இருட்டு மண்டபம். நிலவின் ஒளியையும் உள்ளே விடாமல் தடுக்கும் நெடிய தருக்களின் ஓரத்திலே ஒரு குட்டிச்சுவர். அந்தச் சுவரின் மீது செல்வத்தை வீசியெறிந்தான் சந்தனம். குத்துவிளக்கைக் குடும்பத்துப் பெண்கள் அன்பும், பக்தியும் வழிந்திட எடுத்து நடப்பார்கள். ஆனால் ஏற்றிய விளக்கைக் கூடத்தில் வைத்திட எடுத்துச் செல்லும் போது, கை தவறி, எண்ணெயும் எரியும் திரியும் கையிலே விழுந்து விட்டால், நல்ல விளக்கென்றும் பாராமல் திடீரெனப் போட்டுவிடுவார்கள். அதே போலத்தான் சந்தனம், தன் அருமைச் செல்வன் செய்த தவறின் காரணமாக அவன்மீது வைத்திருந்த அன்பையெல்லாம் மறந்து விட்டுக் குட்டிச் சுவரின்மீது குமார செல்வத்தை வீசியெறிந்தான்-குடும்பத்துப் பெண்ணவள், குத்து விளக்கை எறிந்ததைப் போல! சுவரின் கீழ்த்தனத்திலே குப்புற விழுந்த செல்வம், குமுறும் நெஞ்சுடனே எழுந்து நின்றான். அவனும் தந்தையை ஒரு கணம் மறந்தான். கோபக் கனல் அவன் விழிகளைப் பொத்துக் கொண்டு புறப்பட்டது, மரக்கிளை—இலை—தழைகளின் இடுக்கின் வழியாக, எட்டிப் பார்த்து வெள்ளிச் சிரிப்புக் காட்டும் நிலவொளி, செல்வத்தின் முகத்தை சந்தனத்திற்கு எடுத்துக் காட்டியது. சந்தனமோ, உடலெல்லாம் நடுங்கிட, முகமெல்லாம் பயங்கரக் கிறல்கள் எழுந்திட உறுமினான் மகனைப் பார்த்து!

‘கல்வி கற்கும் அழகு நன்றுயிருக்கிறதடா! காதல் நாடகம் நடத்தவா இங்கு வந்தாய்! அறிவு மணம் பெற வந்தவனுக்கு அர்த்தராத்திரிப் படிப்பு. விவேக சிந்தாமணியை அழைக்க வந்தவனுக்கு விரக்தாப சிந்தாமணியின் அணைப்பு, அறிவு பெறுவாய் என்று உன்னைக் கல்விச்சாலைக்கு அனுப்பினால் நீ காமவேள் நடன சாலைக்கு கால் கடுக்க ஓடுகிறாய்! இவ்வளவு கஷ்டப்பட்டு காதல் காவியமா படிக்க வந்தாய் முட்டாளே!’

தந்தை பேசும் வரையில் மெளனமாக நின்று கொண்டிருந்தாலும் கூட, ஏதாவது பதிலுக்குச் சொல்லி விட வேண்டுமென்று தோன்றிற்று அவனுக்கு. அப்படி சொல்லக்கூடாதென்றும் எண்ணினான். அவனையும் மீறி சில வார்த்தைகள் குதித்துவிட்டன. பிறகென்ன; அணையிலே சிறு வெடிப்பு கண்டாலும் பெருவெள்ளம்தானே!

‘காதலுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை.’

‘அதனால்தான் கேட்கிறேன்; அறிவுகெட்டத்தனமாய் ஏன் நடந்தாய் என்று! உனக்கென்னடா தெரியும் காதலைப்பற்றி?’

‘தெரியும் வாலிப உள்ளத்தின் வசீகர ஓவியம் காதல்! வாடிப்போன வயோதிக இருதயங்களுக்கு அதன் பெருமை தெரியாது!’

சந்தனத்திற்கு ஆத்திரமான சிரிப்பு வந்துவிட்டது, காதலைப்பற்றிய உண்மையைத் தன் மகனே தனக்குச் சொல்லும்போது ஒரு தந்தைக்குச் சிரிப்பு வரத்தானே செய்யும். அதுவும் அந்த நிலைமையில் எரிச்சல் கலந்த சிரிப்பு வருவதில் என்ன வியப்பு. சந்தனம் சிறிது நேரம் அப்படியே நின்றான். அந்த அரைக் கணத்திலே அவன் இருதயத்திலே ஒரு பெரும் போராட்டம் நடைபெற்றுத் தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் கொஞ்சம் இறங்கிவந்து பேசியிருக்கத் தேவையில்லை. அது என்ன போராட்டமாக இருக்கும்.

‘அய்யோ பாவம்-இளைஞனுக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி. இளமை, பாம்பையும் தூக்கி விளையாடும் பருவமாயிற்றே; பெரிய பெரிய மனிதர்களே, மனிதர் கவனம்! மக்களே அந்த மயக்கத்தால் அழிந்தனர் என்று கதைகள் உண்டு-இவன் என்ன கண்டான் அந்தக் காதலெனும் கயமைத் தன்மையைப்பற்றி என்று அவன் தன் இருதயத்தோடு பேசிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அந்தப் பேச்சு முடிந்ததும் மகனிடம் பேசத் துவங்கினான்.

‘செல்வம்! வாணிகத் தெரியுமடா எனக்கும்-கேள் இதை-கல்விச்சாலை ஒரு கடல்.... அதிலே மூழ்கி முத்தெடுக்க வேண்டுமே தவிர, காதற் கிளிஞ்சல்களைப் பொறுக்கக் கூடாது. பள்ளிக்கூடம் ஒரு தங்கச் சுரங்கம் அதில் பொன்னைத்தான் எடுக்கவேண்டும், காதலெனும் கனகாம்பரப் பூவைத் தேடி அலையக் கூடாது. சரித்திரங் களைப் படிப்பாய்-சமுதாயம் வளர்ந்த விதங்களைத் தெரிந்துகொள்வாய்-என்று உன்னை சர்வகலாசாலைக்கு அனுப்பினேன் நீ, சரசம்-சல்லாபம்......இவைகளிலே ஈடுபட்டு சரிந்துபோகிறாய்!’

“சரித்திரத்திலேதான் படித்தேன்; ஷாஜகானுக்கும் மும்தாஜுக்கும் ஏற்பட்ட காதல்! ஆங்கில இலக்கியத்திலேதான் படித்தேன், ஜூலியட்டும், ரோமியோவும் ஜோதிமயமான காதல் நடத்தினார்கள் என்று!”

“அதைப் படித்தாய்-ஆனால் கிளியோ பாட்ராவின் கிளிமூக்கிற்கு அடிமையான சீசர். ஆண்டனி இவர்கள் சீரழிந்த விதத்தை நீ படித்திருக்கமாட்டாய்! காதலாம் காதல்-பித்துப்பிடித்த சில எழுத்தாளக் கழுகுகள் பிராண்டிவைத்த காட்டுமிராண்டிக் கற்பனை. காமத்துக்குப் போடுகின்ற திரை. ஏதன் பெயரடா காதல்! இளிச்சவாயனே! தலைப் பொம்மைகளின் மேல் ஏற்படுகின்ற தணியாத வேட்கைக்குப் பெயர் காதல்! வெறி அழகைக் கண்டு கண்களின் ஒளி இழந்தவர்கள் ஊற்றி வைத்த உருப்படாத சொல்லலங்காரத்துக்குப் பெயர் காதல்! தூதுக்குப் பெயர் காதல்! துணையத்துக்குப் பெயர் காதல்! சுகங் காணுகிற இடத்துக்குத் தாவுகிற உணர்ச்சிக்குப் பெயர் காதல்! நானும் பார்த்திருக்கிறேன் காதல்! நானும் பார்த்திருக்கிறேனடா-“காதல் காதல்!” என்று பேசி, கடைசியில் என்னைக் காணவும் சம்மதிக்காத ஒரு காதலியை!”

“சூடான பாலு சுவைத்த பூனை-ஆறிப்போன பாலைப் பார்த்ததும் அஞ்சி நடுங்குகிறது!”

“சீ! என்ன சொன்னாய்-அந்த மூதேவியின் மோகம் தலைக்கேறிவிட்டதா?”

“என் மூச்சோடு கலந்தவளை மூதேவி என்று சொல்லாதீர்கள், என் விழியிலே புகுந்துவிட்டவளை விரட்ட முடியாது என்னால்!”

“அடேய்! முள்ளம்பன்றிகளவிட மோசமானவர்களடா பெண்கள்! உள்ளத்தைக் காதலிக்கத் தெரியாத கள்ளத்தனம் வாய்ந்தவர்களடா!” அவர்களுக்குத் தேவையானது, கருத்துக்கு விருந்தல்ல-கண்ணுக்கு ரம்மியம்-அன்பல்ல, அவர்கள் விரும்புவது! அழகு! அழகு! அழகு இருக்கும்வரையில் அடிமையாயிருப்பார்கள். அழகு தேய்ந்துவிட்டால் வேறிடத்துக்குப் பாய்ந்து விடுவார்கள்!”

“உங்கள் அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு காதலுக்கு அகராதி தயாரிக்கிறீர்கள்-”

“ஆ!”

சந்தனத்தின் தொனி, யானை பிளிறுவது போல் இருந்தது. தன்னுடைய அனுபவத்தை தன் மகனே இழித்துரைக்கிறானே-என்று கொதித்தான். அந்த வேகத்தில் செல்வத்தின் இரண்டு தோள்பட்டைகளையும் பயங்கரமாக உலுக்கியபடியே “என்னடா சொன்னாய்?” என்று கத்தினான், இனி எதற்கும் துணியவேண்டியதுதான் என்ற நிலைமைக்கு ஆளான செல்வம்; காதல் மீது அவன் வைத்திருந்த மதிப்புக்கும், சிந்தை கவர்ந்த சிங்காரியாம் சித்ராவின் மீது கொண்டிருந்த அளவிட முடியாத ஆசைக்கும், தந்தை கற்பிக்கும் களங்கத்தை சகித்துக்கொள்ள முடியாமல் எதிரே நிற்பது தந்தையென்றும் பாராமல் ஒரு வார்த்தை கூறி விட்டான். சந்தனமே, தன் மகனிடம் எதிர்பார்க்காத வார்த்தை அது!- ‘என்னடா சொன்னாய்’ என்று அதட்டி உலுக்கியதுதான் தாமதம்; உடனே செல்வம்- “சும்மா நிறுத்தும்; உமது அவலட்சணத்தை யாரும் காதலிக்கவில்லை என்பதற்காக எங்கள் மீது சீறுகிறீர்” - சொல்லி முடித்தான் செல்வம், அவன் தோள் மீது இருந்த சந்தனத்தின் கைகள் திடீரென எடுக்கப்பட்டன. “அய்யோ!” என்று தன் தலையில் பலமாக பலமுறை அறைந்து கொண்டான் சந்தனம்; அவனால் நிற்க முடியவில்லை. மயக்கம் வந்துவிட்டது போலிருந்தது. அழ வேண்டும்-நன்றாக அழவேண்டும்-என்ற உணர்ச்சி அவன் நெஞ்சத்தை கனமாக்கியது. ஆம்; அழுதேவிட்டான் - ஏறெட்டு வருடங்கள் சிறைச்சாலையிலே காலத்தைப்போக்கி, தன் அன்பு மகனைக் காண வந்து அவன்-இவ்வளவு பெரிய தீக்குண்டத்திலே தன்னைத் தள்ளி விடுவான் என்று எதிர்பார்க்கவில்லை. ‘ஓ-வென அழுது விட்டான். கால்கள் பூமியிலே பதியவில்லை. குடிகாரனைப்போல் தள்ளாடினான். போதையில் உளறுகிற விதத்திலே ஏதேதோ பேசினான்-

“அவலட்சணம்! நீயும் கூறி விட்டாயா? நீதானடா பாக்கி-உன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்ததற்கு, கடைசியாக நீ தந்த காணிக்கை, அவலட்சணம் என்ற பட்டம். இந்தப் பட்டம் பெறத்தானு, உன்னைத் தோளிலும், மடியிலும், தொட்டிலிலும் போட்டுத் தொல்லைகள் அனுபவித்து வளர்த்தேன். அழகே உருவெடுத்தவனே! அதனால் அகம்பாவம் கொண்டிருப்பவனே! கள்ளக் காதலியை அடிமையாக்கி வைத்திருக்கும், உன் கட்டுக்குலையாத அழகு, இந்த அவலட்சணத்தால் தானடா வளர்க்கப்பட்டது!

அவலட்சணம்-அகோரம்-விகாரம்-அலங்கோலம்! அறிவு கெட்ட சிறுவனே! அவலட்சணத்துக்கும் அறிவுக் குந்தானடா உலகத்தில் நிரந்தரப் போட்டி! அதிலே அழகு ஜெயித்ததில்லை-ஜெயிக்க முடியாது!”

இன்று அழகு. நாளை விகாரம். இளந்தளிர், பழுப்பாகும். இளமை, கிழமாகும், அழகு, அலங்கோலமாகும். என் முகத்தைத் திராவகமும், தீயவனும் தீய்த்து விட்டார்கள். இளமை தவழும் முகங்கள் கால ரேகைகளால் கரைப்பட்டுப்போகுமென்பதை மறந்து விடாதே! கொய்யா இதழ்-கொம்புத் தேன் கொட்டும் கன்னம்-குழி விழுந்துபோகும்!

கோமளத் தாமரைகள், குளிர்ச்சி தரும் கண்கள்—குருடாகிவிடும்!

வாலிப வனப்பு, வயோதிகப் படையெடுப்பின் முன்னே, சரணடையத்தான் வேண்டும். அப்போது பார்; அழகு ஜெயிக்கிறதா—அலங்கோலம் ஜெயிக்கிறதா என்று!

அலங்கோலம், அவலட்சணம், எவ்வளவு கருணையற்ற உள்ளமடா உனக்கு! ரத்தம் கசியும் இருதயமடா இது! இதிலே நீ வேறு ஈட்டியைப் பாய்ச்சிவிட்டாய். நீ என்ன செய்வாய்; என்னை அவலட்சணமென்று நினைத்து அலறி ஓடி விட்ட அற்ப புத்திக்காரியின் அருந்தவப் புதல்வன்தானே நீ! மீனவி புதல்வன்—அவர்களாலேயே சகித்துக்கொள்ள முடியவில்லை என் அழகை. அழகு விரும்பிகள் கலாரசிகர்கள்; அவர்களிடத்திலே இந்த அவலட்சணத்திற்கு வேலையில்லை! வேலையில்லை! வேலையில்லை!

இப்படி ஓங்கி அலறியவாறு இருண்ட மண்டபத்தின் உடைந்த தூணிலே தலையை ‘டமார்! டமார்!’ என்று மோதிக் கொண்டான் சந்தனம்.

செயலற்றுப்போன செல்வம் ‘அவனருகே ஓடிப் போய்—‘அப்பா! அப்பா!’ என்று கதறினான்—காலில் விழுந்தான்.

“அப்பனும்—மகனும்! அவலட்சணத்திற்கு ஏதடா மகன்!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஓட ஆரம்பித்தான் சந்தனம். “அய்யோ, அப்பா என்னை மன்னித்து விடுங்கள்” என்று பின்னே ஓடினான் செல்வம்.

ஓடிய சந்தனம், பயங்கரமாகத் திரும்பி—“நான் யார் உன்னை மன்னிக்க—இனி இந்த உலகில் எனக்கு யார் இருக்கிறார்கள்—பாவி மகனே! இன்னும் சிறிது நேரத்தில் மூச்சற்று சாயப்போகும் என் பிணத்தையும் உன் அழுக்குக் கரங்களால் தொடாதே!” என்று சொல்லிவிட்டு சந்தனம்—அந்த மரமடர்ந்த சோலையைத் தாண்டி குவிந்து கிடக்கும் மலைப்பாறைகளின் பக்கம் ஓடினான்.

‘சித்ராவை மறந்து விடுகிறேன் அப்பா!’ என்று செல்வம் பின்தொடர்ந்தபடி கதறியது சந்தனத்தின் காதில் விழவில்லை. இருவரும், நிலவு பொழியும் அந்த இரவில் ஓடிக் கொண்டேயிருந்தார்கள்.

4

சந்தனத்தின் வேகம் நிறைந்த ஓட்டத்தைப் பிடிக்க முடியவில்லை. தந்தை ஏதோ ஒரு விபரீத முடிவோடு செல்கிறார் என்பதுமட்டும் தெளிவாகப் புரிந்துவிட்டது அவனுக்கு; எப்படியும் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட வேண்டுமென்று அவன் துடித்தான். ஐந்து விரலோடு ஒட்டி ஒரு சிறு விரல் முளைத்திருந்தால் அந்த மனிதனைப் பார்த்து; “ஏ ஆறுவிரல்” என்று அழைத்தால் அவனுக்கு எவ்வளவு கோபம் வருகிறது—அழைப்பவன்; “ஆறு விரல் உடையோனே! ஆசையுள்ள ஆண் மகனே!’ என்று போற்றிப் பாடினால்கூட அவன் ஆத்திரமே கொள்வான்—“ஐந்து கரனே! ஏகதந்தனே! மூஷிகவாகனே!” என்று பக்தர்கள் கேலியாக அழைக்கும் போது விநாயகர் வேண்டுமானால் தன் அங்கஹீனங்களையும் அவலட்சணங்களையும் நினைத்து கவலைப்படாமல் கல்லுப்போல் உட்கார்ந்திருக்கலாம். உயிருள்ள மனிதர்கள் அந்தக் கேலிகளைச் சகித்துக்கொள்வது மிகவும் கஷ்டந்தான். அதுவும் தந்தையின் அவலட்சணத்தை மகனே கேலி பேசுவது என்றால் அதைச் சந்தனம் பொறுத்துக் கொள்ள முடியுமா? தனக்கு ஏற்பட்ட அந்த விகார உருவை நினைத்து, நினைத்து மனம் புழுங்கிப் போனவனல்லவா அவன்—ஆகையால் அவனால் தன் செல்வத்திருமகனை மன்னிக்க முடியவில்லை. மன்னிப்புப் பெற ஓடோடியும் வரும் மகனையும் திரும்பிப் பார்த்திடும் எண்ணம் எழவில்லை. சரி—இனிமேல் தந்தையைக் காணமுடியாது என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டான். ஓடிக் களைத்த செல்வம். மேல் மூச்சும், கீழ்மூச்சும் போட்டி போட, ஓடிய திசையையும் அறிய முடியாமல் தவித்தான்.

அவன் கண்களில் இரு பெரும் நீர்வீழ்ச்சிகள்—அவன் வாய் முணுமுணுத்தது—அதுவும் திணறி திணறி—நாக்குழறிக்குழறி! “அப்பா! அப்பா!”—பிறகு ஓவென அலறி விட்டான் செல்வம். எவ்வளவு நேரம் அப்படி அலறிக் கொண்டிருந்தானோ தெரியாது; பின், வந்த வழியே திரும்பினான், சித்ராவை பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அந்த இருட்டில் இனிமேல் அவளை எங்கு போய்த் தேடுவது; தேடிக் கண்டுபிடித்தால் தான் அவன் இருதயத்தின் சுமையைக் கொஞ்சம் குறைத்திட முடியும்—சித்ராவும் அவனும் காதலர்கள் தான்; ஆனால் அவன் சித்ராவின் வீட்டுக்குச் சென்றதில்லை—சித்ராவின் தாயார் தங்கம்மாள் அவர்களுடைய காதல் கதைக்கு உடனடியாக மதிப்புரை எழுதக்கூடிய குணம் படைத்தவள் அல்ல என்பதை செல்வம், சித்ராவின் வாயிலாகக் கேள்விப்பட்டிருக்கிறான். அதனால் அவன் அவளுடைய வீட்டில் நுழைந்ததே இல்லை. தங்கம்மாள் ஏழைதான் என்றாலும் தன்மகள் சித்ராவை செல்வமாக வளர்த்து வருகிறாள்; அவள் பிரியப்படியே நடந்து வருகிறாள் என்றெல்லாம் காதலியின் மூலமாக அவன் கேட்டிருக்கின்றானே தவிர, தாங்கள் இருவரின் காதல் தோன்றிய நாள் முதலே நோயுற்றுப் படுக்கையிலிருக்கும் சித்ராவின் தாயார் தங்கம்மாளை அவன் சந்திக்க துடித்ததும், சமயம் ஏற்படவில்லை. “உன் அம்மா வியாதியாயிருக்கிறாளே; அவர்களை நான் பார்க்கிறேனே; நான் பார்த்ததே இல்லையே” என்று செல்வம் சொன்னபோதெல்லாம்; அய்யோ வேண்டாம்—எங்கம்மா பெரிய பழைய காலம்; மூடநம்பிக்கையின் சிகரம்; அவர்கள் நம்மிருவரையும் சேர்த்து பார்த்தால் உடனே புரிந்துகொண்டு, இந்த சகவாசம் எல்லாம் கூடாது சித்ரா! என அழ ஆரம்பித்து விடுவார்கள்” என்று அவள் அவனை வீட்டுக்கு வராமல் தடுத்திருந்தாள். அத்தகைய தாயைப் பெற்றிருக்கும் தன் அருமைக் காதலியின் வீட்டுக்கு இப்போது அவன் எப்படியும் போய்த் தீர்வது என்று முடிவு கட்டிவிட்டான்.

தந்தையின் திடீர் பிரவேசத்தால் தீ மிதித்தவன் போலாகிவிட்ட என் மலர்ப்பாதமுடையாள்—மனவாட்டத்தை சுமக்க முடியாமல் தூக்கத்திலிருந்து விடுபட்டுத் துடித்துக் கொண்டு தனிருப்பாள்—கொல்லைப்புறம் நின்றுகொண்டு, ஒரு குரல் கொடுத்தால்போதும்; எப்படி யும் ஓடிவந்து விடுவாள்—பூனையின் பாதத்தைவிட மிருதுவான பஞ்சுப் பாதங்களாயிற்றே அவளுக்கு; அதனால் அவள் அம்மாவின் காதுகளை நன்றாக ஏமாற்றி விட முடியும்—இருவரும் சந்திக்கலாம்; இருதயக் கீறல்களுக்கு மருந்து போட்டுக் கொள்ளலாம் என்று எண்ணியவாறு செல்வம், சித்ராவின் வீடு நோக்கி நடந்தான். கொல்லைப்புற வேலியைத் தாண்டிக் குதித்தான் அப்போது அவன் காலிலே குத்திய முட்கள் கணக்கிலடங்கா. அவைகளையெல்லாம் எடுத்தெறிந்தான். ‘இந்த முட்களை எடுத்துவிட்டேன்; என் நெஞ்சிலே சொருகிவிட்ட முட்கள் வேதனையில்லாமல் எடுத்துவிட முடியுமா? அல்லது எடுக்கும் முயற்சியிலேயே இறந்து விட வேண்டுமா’ என்றெல்லாம் அவனுக்குள்ளாக சொல்லிக் கொண்டான். அந்த நல்ல வாலிபனின் காந்தி நிறைந்த முகம், தூசி நிறைந்த கண்ணாடி போல் ஆகியிருந்தது. நிலவின் ஒளியிலே சித்ரா வீட்டுக் கொல்லை வாயில் அவன் அடையாளம் கண்டுபிடித்து விட்டான், அந்த வாயில் நோக்கி அவன் நடந்தான். அவனுக்கே அவனை நம்ப முடியவில்லை. கதவு திறந்து கிடந்தது. சற்று திகைத்தான்—நின்று கவனித்தான். அவன் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. மீண்டும் உன்னிப்பாக கவனித்தான், உள்ளேயிருந்து தேம்பும் குரல் கேட்டது! விக்கி விக்கி அழுகிற ஒரு பெண்ணின் தொனிதான் அது!

“சரி-நமது விஷயம் அவள் தாய்க்கும் தெரிந்து விட்டது; அதனால் மகளைக் கண்டித்திருக்கிறாள்!” என்று தனக்குத்தானே பதில் சொல்லிக் கொண்டான். அவன் நெஞ்சு முன்னிலும் பலமாக அடித்துக் கொண்டது. அழுகை ஒலியுடன்-‘அம்மா! அம்மா!’ என்ற ஒலியும் கொஞ்சம் உச்சஸ்தாயில் கேட்டது. “சித்ரா!” என்று கூப்பிட்டுவிடலாமா என்று தோன்றியது அவனுக்கு! “ஒரு வேளை-நோயால் பீடிக்கப் பட்டிருந்த அவள் தாய் திடீரென இறந்திருக்க வேண்டும்” என்ற யூகமும் பிறந்தது-ஆகவே மெதுவாக அடியெடுத்து வைத்து வீட்டுக்குள் பிரவேசித்தான்; உள்ளே பார்த்தான். மினுக்-மினுக்கென்று ஒரு மங்கலான விளக்கு தன்னுள் முடிந்த கடமையைச் செய்துகொண்டிருந்தது. அந்த ஒளியிலே சித்ரா கீழே சுருண்டு படுத்திருப்பதும் தெரிந்தது, சுற்று முற்றும் பார்த்தான், ஒரு கயிற்றுக் கட்டில்-ஆம்; அதில்தான் நோயுற்ற அவள் தாய் படுத்திருக்க வேண்டும்-இப்பொழுது அவள் எங்கே போய்விட்டாள்? ஒருவேளை தன் தகப்பனைப் போல அவளும் எங்காவது ஓடி விட்டாளா? இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்க செல்வத்துக்கு நேரமில்லை, அவன் சித்ராவைப் பார்த்ததும் ‘சித்ரா!’ என்று கதறி விட்டான், அவளும் திடுக்கிட்டுத் துள்ளி எழுந்தாள், “செல்வம்” என்று கூவியபடி அவன்மீது தாவிவிட்டாள். இருவரும் சிறிது நேரம் எதுவுமே பேசவில்லை; அழுது கொண்டிருந்தார்கள்.

“ஏன் சித்ரா, அழுகிறாய்?...அம்மா?”

“அம்மாவா?”

“அம்மாவுக்கு என்ன......?”

“அம்மா!”

“அழாதே சித்ரா! விஷயத்தைச் சொல்!......அம்மா எங்கே-போனார்கள்?”

‘திரும்பி வராத இடத்துக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்!’

“ஆ!......இறந்து விட்டார்களா”

“இறந்து விடுகிறேன் என்னை இழந்து விடு சித்ரா! என்று கூறிப் போய்விட்டார்கள்!”

“புரியும்படி சொல்-நானே குழப்பமாக இருக்கிறேன்-நீ அதை அதிகப்படுத்திவிடாதே!”

“நம்மிருவரின் காதலை அம்மா தெரிந்து கொண்டார்கள்”

“ஏன் அப்பாவைப் போலக் கோபித்துக் கொண்டார்களா?”

“அப்படித்தான் எதிர்பார்த்தேன் -ஆனால் என் அம்மா, அவ்வளவு கோபமடையவில்லை. புத்தி சொன்னார்கள்; காதல் புனிதமானதுதான்-ஆனால் அதிலே வெற்றி பெறுவது கஷ்டம், சித்ரா! இந்தப்பாழும் உலகம் காதலுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் மிகப் பயங்கரமானவை—“நாடகத்தில், காவியத்தில் காதலென்றால் நாட்டினர் தாம் வியந்து நன்றும் என்பர்-வீட்டகத்தே கிணற்றோரத்தே ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்-பாடை கட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்”—என்ற பாரதியின் பாட்டைக் கேட்டும் திருந்தாத நாடு பெண்ணே, இந்தக் கேடுகெட்ட நாடு! என்று அழாக்குறையாகச் சொன்னார்கள்.”

“அய்யோ அவ்வளவு நல்லவர்களா! ‘கேளடி என் கண்ணே உலகம் மிகப் பொல்லாதது! அதன் கோரப் பற்களுக்கிடையே அகப்பட்டுப் போன காதலர் தொகை ஏராளம்! ஏராளம்!! தீனப்புனத்து வள்ளிக் குறத்திக்கும், தேவலோகத்து முருகனுக்கும் கல்யாணம் செய்து ஆனந்தத் திருவிழாவை நடத்தும் பக்தர்களே, தங்கள் வீட்டிலே அப்படி ஒரு காதல் திருமணம் நடக்க ஒட்டாமல் நல்ல பாம்பு போல் சீறுவார்கள்—கடவுள் காட்டிய பாதை யையே அலட்சியம் செய்வார்கள்.” என்று கண்ணீர் சிந்தியபடி அம்மா பேசினார்கள்.”

“உன் அம்மா இங்கிருந்தால் இப்போது ஒரு திருத்தம் கூட சொல்லுவேன் — தேவலோகத்து முருகன் என்றால் வெறும் பிரம்மச்சாரி முருகனல்ல; தெய்வயானையின் புருஷன் கூட! அவனுக்கு ஒரு குறப்பெண்ணை இரண்டாந்தரமாக மணமுடித்து வைக்கும்-இந்த சட்டம் மீறிகள்-காதலுக்குத் தடை போடுகிறார்கள் என்று!”

“அந்தத் திருத்தத்தை அம்மா ஏற்கமாட்டார்கள்—ஆண்டவனைக் குறை கூறல் அவர்களுக்குப் பிடிக்காது! அந்த நம்பிக்கையிலேதான் போலும் என் அம்மா—இப்படித் தன் வாழ்வைக் கெடுத்துக்கொண்டார்கள்!”

“எப்படிக் கெடுத்துக் கொண்டார்கள்—கொஞ்சம் விளக்கமாகச் சொல்வேன் சித்ரா!”

“எனக்கே தெரியாது விளக்கமாகச் சொல்ல! ஏதோ ஒரு பெரிய வேதனை என் அம்மாவின் உள்ளத்தை உருக்கிக் கொண்டிருந்தது என்பது மட்டும் எனக்குத் தெரியும்—நான் காணாமலிருக்கிற எத்தனையோ சமயங்களில் அவர்கள் அழுதிருக்கிறார்கள் என்பதை அவர்கள் கண்கள் சொல்லும்—தூங்குவதுபோல் இரவில் நான் படுத்திருக்கும் போது அவர்கள் தேம்பி அழுவதை நான் கேட்டிருக்கிறேன்.”

“ஏன் என்று நீ கேட்டதில்லையா?”

“கேட்டாலும் பதில் கிடைக்காது. ஆகவே அது வழக்கமாகி விட்டது!”

“சரி-இன்றைக்கு என்ன நடந்தது; அதைச் சொல்லு கண்ணே!”

“அம்மா என்னைக் தேடிக்கொண்டிருக்கும்போது நான் அழுதபடி வீடு வந்து சேர்ந்தேன். ஏன் அழுது கொண்டு வந்தேன் என்றுதான் தெரியுமே; நாமிருவரும் இனி சேர மாட்டோம் என்ற பயங்கர நினைவு என்னை அப்படி அழ வைத்துவிட்டது! அம்மா கேட்டார்கள்—ஏன் அழுகிறாய் என்று! நான் விஷயத்தை ஜாடையாக சொன்னேன்—அப்போதுதான் நான் இப்போது கூறிய உபதேசத்தை ஆரம்பித்தார்கள்—”

“சரி! நான் யாரென்று உன் அம்மாவிடம் சொன்னாயா?”

“அதைச் சொன்ன பிறகுதானே விபரீதப் புயல் வீச ஆரம்பித்தது!”

“ஏன்?—என்ன காரணம்? அழாமல் சொல்லு சித்ரா!”

‘உன் காதலன் பெயர் என்ன என்று கேட்டார்கள்; செல்வம் என்றேன்—அம்மாவின் முகம் மாறிவிட்டது. கண்கள் கலங்கிவிட்டன—செல்வத்தின் அப்பா எப்படி இருந்தார் என்று கேட்டார்கள்; “பார்ப்பதற்கு பயங்கரமான முகம், அம்மா” என்று கூறினேன்—அவ்வளவுதான்; அம்மாவின் நிலையை என்னால் வர்ணிக்க முடியாது செல்வம்! தரையில் விழுந்து புரண்டு அழுதார்கள் நோயின் காரணமாக கட்டிலிலேயிருந்து எழுவதற்கும் இயலாத என் தாய், கட்டிலிலேயிருந்து தரையில் உருண்டதும், வீடு முழுதும் புரண்டதும் அய்யோ செல்வம்—என்னால், அதை நினைக்கவே முடியவில்லை! நான் “அம்மா! அம்மா!” என்று அவர்களைத் தடுத்துப் பார்த்தேன், கதறிப் பார்த்தேன், என்னால் அடக்க முடியவில்லை, அவர்கள்! பிறகு அவர்களாகவே எழுந்தார்கள். ஏதோ ஒரு உறுதியோடு நின்றார்கள்—“இந்தா சித்ரா, இதை வைத்துக்கொள்” என்று நான் இதுவரையில் காணம லிருந்த இந்த டைரியை என்னிடம் கொடுத்தார்கள்—கொடுத்துவிட்டு “அருமைக் கண்ணே! என்னை மறந்து விடு! என்னை இழந்து விடு!” என்று கூறியபடி என்னை முத்தமிட்டாள்.

டைரியைப் படி! அதன்படி நடந்துகொள்! என்று மீண்டும் என் கன்னத்தில் முத்தங்களைப் பொழிந்தார்கள். எனக்கு மயக்கம் வந்துவிட்டது. பிறகு என்ன நடந்தது என்றே தெரியாது—இப்போதுதான் கண் விழிக்கிறேன்—என் செல்வத்தைக் காணுகிறேன். என் அம்மாவை இழந்து விட்டேனே செல்வம்; நான்? இனிமேல் அம்மாவைக் காணவே முடியாதா செல்வம்?”

சித்ரா செல்வத்தின் தோளிலே சாய்ந்தாள்—

“சரி—அந்த டைரி எங்கே?” என்று செல்வம் கேட்டான்.

“நான் அதைப் பிரிக்கவும் இல்லை—இதோ இருக்கிறது” என்று கட்டிலின்மீது கிடந்த டைரியை எடுத்து அவனிடம் கொடுத்தாள்!—அவன் டைரியைப் பிரித்தான். முதல் பக்கத்தைப் பார்த்தான்—“அய்யோ! மோசம் போய் விட்டோம் சித்ரா!” என்று கூச்சலிட்டான் செல்வம்.

“என்ன என்ன?” என்று அழுகையும், ஆவலும் ததும்பக் கேட்டபடி டைரியை வாங்கினாள் சித்ரா.

ஆம்; மோசம் போய்விட்டதாகவே அவளும் முடிவு கட்டினாள்—டைரியின் முதல் பக்கத்திலே ஒரு காதல் ஜோடியின் புகைப்படமிருந்தது. அதன் கீழே சந்தனம்—குமுதம் என்று கையெழுத்தும் போடப்பட்டிருந்தது! குமுதம், வேறு யாருமில்லை—தங்கம்மாள்தான்! சித்ராவின் தாயார் தங்கம்மாள்தான் அந்த குமுதம்!

குமுதம் யார்?—செல்வத்தின் தாயார்!

தங்கம் யார்?—குமுதமே தங்கம்!

சித்ரா யார்? குமுதத்தின் மகள்!

“அய்யோ, சித்ரா! நாமிருவரும் சகோதரர்கள்?” என்று அலறிக்கொண்டே அந்த டைரியை வீசியெறிந்தான் செல்வம். தாயின் குளிரை அடக்குவதற்காகப் புகைந்து கொண்டிருந்த கணப்புச் சட்டியிலே அந்த டைரி விழுந்து எரியத் தொடங்கியது. “சகோதரர்கள்—காதலர்கள்” அதுல்தான் அம்மா — ஓடிவிட்டாள் உயிரை விடுவதற்கு என்று புரிந்துகொண்டாள் சித்ரா!

5

இரவிலே ஓடிக்கொண்டிருந்த சந்தனத்தைப் பிடிக்க முடியாமல் திரும்பிய செல்வம், தன் காதலியாக இருந்த சித்ரா, தன் சொந்த சகோதரி என்பதை டைரியின் முதல் பக்கத்தைப் பார்த்ததும் உணர்ந்தான். உடனே இருவர் நெஞ்சிலும் நெருப்பு கொட்டியது போலாயிற்று நிலைமை.

அங்கே, செல்வத்தின் வார்த்தை கேட்டு, உள்ளம் சிதறிப்போன சந்தனம், ஒரு மலைப்பாறையின்மீது வேகமாக ஏறிக்கொண்டு இருந்தான். அந்த சாய்வான மலைப்பாறையின் உச்சியிலேயிருந்து, தன்னுடைய அலங்கோலமான உடலை சுக்குநூறாக்கிக் கொள்ளலாம் என்ற முடிவோடு மேல்நோக்கி நடந்தான். மண்ணின் அடித்தளத்தில் காலூன்றி விண்ணின் விளிம்பைத் தொடுவது போல தன் உச்சியை நீட்டிக்கொண்டிருக்கும் அந்த சாய்வுப் பாறையிலே சந்தனம் சாவுப்பாதையை எண்ணி ஒரு விரக்தியான மகிழ்ச்சியோடு ஓடினான். உயர்ந்த பாறை—அதன் கீழே பயங்கரமான பள்ளம்; அந்தப் பள்ளத்தின் முரட்டுத்தனமான அணைப்பிலே தன் உயிரைப்பிழிந்து கொடுத்து, சரீரத்தையும் சக்கை சக்கையாக ஆக்கிக்கொள்ளும் வெறியுடன் சந்தனம் ஏறினான்.

தற்கொலை செய்துகொள்வது தகாத பண்பு, கோழைகள் செயல் என்றாலும்—சாவதற்கு ஒரு அசாதாரணமான துணிவும் வேண்டும். அந்தத் துணிவோடுதான் சந்தனம் ஆகாயத்தை நோக்கி நிற்கும் அந்த ஆபத்தான குன்றிலே—மேல்நோக்கி ஏறினான்; கீழ் நோக்கி வீழ்ந்து சாவதற்காக!—அந்தப் பாறையின் உச்சியை அடைந்து விட்டான். அவனுக்கு முன்பாக அந்த உச்சியிலே நின்று கொண்டிருந்தது ஒரு உருவம் அவன் கண் முன்னே தெரிந்தது; அவனது வேகம் தணிந்தது. அந்த உருவம், பாறையின் முகப்பில் இருந்தபடி கீழ் நோக்கியவாறு தேம்பி அழுதது.—கடைசியாக, உரக்க ஒரு வார்த்தை வெளிப்பட்டது! “சந்தோஷமான சாவே! இதோ இந்த ஏழைக் குமுதாவை ஏற்றுக்கொள்!” அந்த வார்த்தையுடனே, அந்த உருவம் பாய்ந்திடத் தயாரானது. அதற்குள் சந்தனம் அங்கே தாவிவிட்டான். தற்கொலை செய்துகொள்ள வந்தவன்—இன்னுமொரு உயிரைக் காப்பாற்றிடும் சூழ்நிலைக்கு ஆளாகிவிட்டான்.

குமுதா! குமுதா! ஆம்—அவன் நெஞ்சத்துக் கோட்டையை இடித்து எறிந்து விட்ட பெயர்தான் அது! அவனது உள்ளத்துப் பூங்காவிலே நுழைந்து விட்ட சூறாவளிதான் அது! அவனது இன்பகரமான வாழ்விலே விழுந்துவிட்ட இடிதான் அந்தப் பெயர்! ஆனாலும் அந்தக் குமுதா, உயிர்விடப் போவதை அவனால் தடுக்காமல் இருக்க முடியவில்லை. அதே நேரத்தில்—தன்னை யாரென்று அவளிடம் காட்டிக் கொள்ளாமலே, அவளது வாழ்வின் திருப்பங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் ஆசை கொண்டான்; மேல் அங்கியை எடுத்து நன்றாக முகத்தை மூடிக்கொண்டு, அவளோடு பேச ஆரம்பித்தான். அவளோ, நடுங்கியபடி நின்றாள். “யார்?” என்று சந்தனம் கேட்டதற்குள்ளாகவே, அவள் கேட்டாள்; “நீங்கள் யார்? என்னைத் தடுக்க?” என்ற கேள்வியை! “நானா? நானும் உன்னைப்போலத்தானம்மா தற்கொலை செய்துகொள்ள வந்தேன் முதலில் உன் கதையைச் சொல்! பிறகு என் கதையைச் சொல்கிறேன். அதன் பின்னர் இருவருமே, சாவு உலகத்துக்கு பிரயாணத்தை ஆரம்பிப்போம்!” சந்தனம் கூறினான், குரல் மாற்றிக்கொண்டு பேசினான் என்றாலும், அவளது, குரல்வளையை நெரித்து விடலாமா, என்ற கேள்வி எழும்புகிற அளவுக்கு அவன் கோபத் தீயில் நின்று கொண்டுதானிருந்தான்.

“என் பெயர் தங்கம்” என்று கதையை ஆரம்பித்தாள் அவள்,

“முன்னுரையே-பொய்யுரையாக இருக்கிறதே-உன் பெயர் குமுதம் அல்லவா?” என்றான் சந்தனம்.

“எப்படித் தெரியும் என் பெயர்?”

“இந்த ஏழை குமுதத்தை ஏற்றுக்கொள் என்று, மரணதேவதைக்கு மடல் அனுப்பினியே, அது என் காதிலே விழுந்தது.

குமுதம் சற்று திகைத்து நின்றாள். பிறகு தாழ்வான குரலில், ‘என் கதையை நீங்கள் கேட்கவேண்டாம்-தயவு செய்து என்னை சாகவிடுங்கள்” என்று அழுதாள்.

“நானும் சாகத்தானே வந்திருக்கிறேன்-உன் ரகசியக் கதையைக் கேட்டுக்கொண்டு போய்-நான் யாரிடம் சொல்லப் போகிறேன்; மேல் உலகத்தில்தான் சொல்ல வேண்டும்-மேல் உலகம் என்று ஒன்று இருந்து அங்கே போய் உன் கதையைச் சொன்னால், இதைவிட பெரிய கதையெல்லாம் எம்மிடம் உண்டு, என்று மேனகையும்-திலோத்தமையும், ஊர்வசியும், ரம்பையும் ஓடி வருவார்கள்-ஆகையால் அங்கும் சொல்லமாட்டேன்; பயப்படாமல் உன் கதையைக் கூறு!”

“குமுதம் என்றுதான் என்னை அழைப்பார்கள். ஆனால் நான் அமுதமாக இருந்தேன்; அவருக்கு!”

“யாருக்கு? இதோபார் குமுதம்-இப்படி உட்கார்! உன் சோகச் சுமைகளை-புரியும்படி இறக்கு!-யாருக்கு நீ அமுதமாக இருந்தாய்?”

“அவருக்குத்தான்-என் அன்பருக்கு!-என் ஆருயிர் சந்தனத்திற்கு!”

இதைக் சொல்லும்போது குமுதம் உடம்பெல்லாம் நடுங்கியது. இருதய பாரத்தை கீழே போட்டுவிட வேண்டும்-கண்களிலே பெருக்கெடுக்கும் நீரிலே சோகப் பெருங்கற்கள் ஓரளவு கரைந்துவிட வேண்டும்-என்ற ஆசையோடு அவள் மேலும் பேசினாள்-சந்தனம், கூடியவரை தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமலே அவள் பேசியதைக் கவனித்தான். ஆகாயத்திலே, நிலவு மேகத்திலே மறைவதும் வெளியே வந்து ஒளியைக் காட்டுவதுமாகத் தன் வேலையைச் செய்துகொண்டிருந்தது. சந்தனத்திற்கோ, குமுதாவின் கதைச் சுருக்கம் கிடைத்துவிட்டது.

“சந்தனத்தைக் காதலித்தேன், வீட்டிலே அப்பா எதிர்த்தார், இருவரும் காதல் வளர்க்க-வெளியூர் ஓடினோம். செல்வன் பிறந்தான். என் அண்ணன் மலேயா விலிருந்து திரும்பினான். எங்களை வெறுப்போடு நோக் கினான். என் அருமைச் சந்தனத்தின் அழகு முகத்திலே திராவகத்தை ஊற்றி அலங்கோலமாக்கினான். என்னையும் ஒரு இரவிலே திருட்டுத்தனமாகக் கடத்திச் சென்று, தனக்குள்ள செல்வாக்கின் காரணமாக பைத்தியக்கார விடுதியிலே சேர்த்துவிட்டான். பைத்தியங்களோடு வாழ்ந்தேன்-பின்னர் எனக்கு விடுதலை கிடைத்தது. அந்த வேதனைபுரியிலிருந்து-அந்தப் பித்தர்களின் வேடிக்கை மண்டபத்திலிருந்து வெளிவந்தேன்-வெளி வந்த மறுநாளே என் சந்தனத்தையும், செல்வத்தையும் காணவேண்டுமென்று அண்ணனிடம் அழுதேன். அவனும் போகுமாறு விடையளித்தான். எங்கள் காதலின் தூய்மையைக் கருக்கிட இனியும் துணியேன் என்று வருத்தத்தோடு கூறி என்னை வழியனுப்பினான். வெளியூரிலிருந்து சந்தனத்தின் வீட்டுக்கு வரும் வழியிலே, ஒரு சிற்றூர். அதன் பெயர் பூந்தார்குடி. அந்த பூந்தார்குடி கிராமத்திலே ஒரு சாமியார் இருக்கிறார்; மிகவும் பெரிய மகான். அவரிடமுள்ள ஒரு கோழியை வெறிநாய் கடித்து, அந்தக் கடிபட்ட கோழி, சாமியாரைக் கொத்தியதால் அவர் இறந்து சமாதியாகிவிட்டார். அந்த சமாதியிலே தினந்தோறும் பேய் பிடித்த பெண்கள் ஆடுவார்கள். அவர்களின் நோய் நீங்கும். அந்த இடத்திலே நீயும் போய், கோழிகடி சாமியாரைக் கும்பிட்டு அருள் பெற்றுப்போ என்று அண்ணன் சொல்லியனுப்பினான்.

அங்கே கோழிக்கடி சாமியாரின் சிஷ்யர் குஞ்சுக்கடி சாமியார் என்னைப்பற்றி விசாரித்தார். அந்தப் பெரிய மகான் சிஷ்யர் எனக்கும் சந்தனத்துக்குமுள்ள காதலும் அதில் குறுக்கிட்ட இடையூறுகளையும் நடந்தது நடந்தபடி சொன்னார். அதோடு இனிமேல் நான் சந்தனத்தையே அல்லது என் மகனையே, பார்க்கக் கூடாதென்றும்-என் ஜாதக பலன்படி, அப்படிப் பார்ப்பதால் உடனடியாக அவர்கள் இறந்து விடுவார்கள் என்றும் சாமி யார் கட்டளையிட்டார் என் ஜாதகத்தால்தான், என் காதலனின் முகம் கருகி விட்டதென்றும் சாமியார் சொன்னார். என் கணவனும், மகனும் எந்த இடையூறுமின்றி சுகமாக வாழவேண்டுமானால் அவர்களுக்கும் எனக்கும் இனி தொடர்பே இருக்கக்கூடாதென்றும் அவர் கூறிவிட்டார். சந்தனத்தின் வாழ்வும், செல்வனின் வாழ்வும் வளப்பட்டால் போதுமென எண்ணிய நான், என்னை அண்ணன் வீட்டிலேயே மறைத்துக் கொண்டு வாழ ஆரம்பித்தேன். காதலன் முகமும், செல்வன் முகமும் என் இருதயத்திலே பதிந்திருக்கும்போது வெளிப்பார்வைக்கு அவை என்-என்ற திருப்தியால் வாழ்ந்தேன். என் பார்வைப்பட்டு அவர்கள் வாழ்வு பட்டுப் போகுமாம். அத்துணை துட்ட லக்கணமாம் நான் பிறந்த வேளை! யாராலும் பிரிக்க முடியாத எங்களை சாஸ்திரம் பிரித்துவிட்டது. அந்தத் தடையை மீறி போகலாமா? போனால் என் அன்புச் செல்வங்களின் உயிரல்லவா போய்விடும்.

ஆகவே என்னை ஒளித்துக்கொண்டு கிடந்தேன். திடீரென ஒருநாள் என் அண்ணனைக் கொலைசெய்து சந்தனம் சிறை புகுந்தார். ஆம், பழி தீர்த்துக்கொண்டார். என் அண்ணன் திருந்திவிட்டது அவருக்குத் தெரியாது-நானே அனாதையானேன். தந்தையை அண்ணை-இழந்து, தனயனையும் இழந்து தவித்த நான், தனயன் மனைவியையும் இழந்தேன். அவள் தனது குழந்தை சித்ராவை என்னிடம் ஒப்படைத்து மறைந்தாள். அந்தப் பர்மாக்காரி பெற்ற பைங்கொடி சித்ராவுடன் இந்தப் பக்கத்து ஊருக்கு, குடிவந்தேன்-சொந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல்! நோய் என்னை வாட்டியது-ஆம் மனநோய்தான்-சித்ராவுக்கு ஒரு காதலன் கிடைத்துவிட்டான். யார் தெரியுமா அந்தக் காதலன்-என் மகன்-என் ஆசை சந்தனத்தின் அன்புக் கனி. அந்த செல்வனுக்கு என் அண்ணன் மகள் சித்ராவை திருமணம் செய்துவைக்க நான் என்ன மறுக்கவா போகிறேன். ஆனால் அந்தக் காட்சியை நான் பார்க்கக்கூடாதே! என் மகனும், மருமகளும் காதலர்களாகிவிட்டார்கள். நானே அவர்களை வாழ்த்தமுடியாது. அன்றொரு நாள் குஞ்சுக்கடி சாமியார் கூறிய வார்த்தைகள் எனக்கு அணி போட்டன. அதோடு என் சந்தனமும் சிறையிலேயிருந்து திரும்பிவிட்டார். அவரையும் நான் பார்த்துவிடக் கூடாது. ஆனால் எல்லோரையும் பார்க்கும் சந்தர்ப்பம், சித்ரா செல்வம் திருமணத்தால் ஏற்பட்டுவிடும்-ஆகவே, என்னுடைய கதை முழுவதும் குறிக்கப்பட்ட டைரியை சித்ராவிடம் கொடுத்து விட்டு, என் சந்தனத்தையும், செல்வத்தையும் காண முடியாத லோகத்திற்குச் சென்றுவிட முடிவுகட்டி இங்கு வந்தேன்.”

என்று அழுதுகொண்டே தன் கதையை முடித்தாள் குமுதம்.

குளமாகியிருக்கும், தன் விழிகளைக் காட்டிக் கொள்ளாமலே, சந்தனம் அவளிடம் கேட்டான்’

‘அந்த சாமியார் என்ன சொன்னார்; சந்தனத்தை நீ பார்த்தால் உடனே, அவன் செத்து விடுவானு? அப்படித் தானே சொன்னார்?’

“ஆமாம்—அப்படித்தான் சொன்னார்—அந்த மகான்”

“மகான்! அவன் ஒரு மலைப்பாம்பு! இதோ பார் குமுதம், உன் சந்தனத்தின் முகத்தை!—சந்தனம் சாகிறு பார்!” என்று முக்காட்டை விலக்கினான் சந்தனம்.

குமுதத்திற்கு எதுவுமே புரியவில்லை. “ஆ!” என்று அலறியபடி அவனை அணைத்துக்கொண்டாள். அவனது அலங்கோலமான முகத்தில் மாறிமாறி முத்தமிட்டாள்.

‘குமுதம்—என்னை மன்னித்துவிடு! தவறான எண்ணத்தால்—நான் காதல்பற்றியே ஒரு தவறான முடிவுக்கு வந்து விட்டேன்—அந்த சாமியாரை விட்டு உன்னை ஏமாற்றியிருக்கிறான்; உன் அண்ணன்!—நீயும் ஏமாந்து விட்டாய்—இதோ பார்! சாமியார் சொன்னது உண்மையானால் இப்போது நான் செத்திருக்கவேண்டுமே; மாறாக, சாகப்போன என்னையல்லவா உன் சுந்தரமுகம் காப்பாற்றியிருக்கிறது!” என்று கூறியபடி அவளை, அவனும் ஆரத்தழுவிக்கொண்டான்.

அண்ணனின் சூழ்ச்சியால், ஏற்பட்ட விபரீதத்தை எண்ணி குமுதம் கண்ணீர் வடித்தாள். உடனே இருவரும், சித்ராவையும் செல்வத்தையும் பார்த்திட ஓடினர். ஓடும் போதே சந்தனம் கூறினான்—“காதல் ஒரு தொடர்கதை—அதிலே சங்கடம் அனுபவிப்பவர்களும், சஞ்சலம் கொண்டவர்களும், சந்தேகம் பிடித்தவர்களும், சாவுக்குத் துணிந்தவர்களும் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். இத்தகைய கதாபாத்திரங்கள், ரோமியோ ஜூலியட்டிலே—லீலா மஜ்னுவிலே, கிளியோபாட்ரா காதலிலே—ஒத்தல்லோ கதையிலே, மும்தாஜ் காவியத்திலே, அம்பிகாபதி ஓவியத்திலே, பில்கனாவிலே, இன்னும் பிறவற்றிலே காணுகிறோம்; அந்தச் சிறு கதைகள் முடிந்து விடலாம். ஆனால், காதல் தொடர்கதை; உலகம் உள்ளவரை முடியவே முடியாது; இன்ப முடிவுகளும், சோகமுடிவுகளும் பின்னிப் பின்னி வரும் காதல் ஒரு பெரிய தொடர்கதைதான்”

இந்த உண்மையை, ஏதோ புதிதாக கண்டுபிடித்து விட்டது போல், அவன் குமுதாவின் குளிர்க்கன்னங்களில் முத்தமிட்டான். அப்பா! எத்தனை ஆண்டுகளா யிற்று; அவளது கன்னம்-காதலனின் ஈர உதடுகளால் ஸ்பரிசிக்கப்பட்டு!

இருவரும் வீடுநோக்கி ஓடினர்கள் “சித்ரா சித்ரா!” என அழைத்தபடி உள்ளே ஓடிய குமுதம்-“அய்யோ” என அலறினாள். சித்ராவும், செல்வனும் தூக்கு மாட்டிக் கொண்டு பிணமாகத் தொங்கினார்கள்.

“தவறு செய்துவிட்ட சகோதரர்களே—உலகமே மன்னித்துவிடு!” என்று சுவற்றிலே கரியால் எழுதப்பட்டிருந்தது.

குமுதா கதறினாள். சந்தனம் சுவற்றிலே முட்டிக் கொண்டான். என்ன செய்தால் என்ன; கருகிவிட்ட மொட்டுக்கள் மலரவா போகின்றன. நீங்கள் சகோதரர்கள் இல்ல! இல்ல!” என்று குமுதம் அலறினாள். அவளது டைரியோ நெருப்பிலே எரிந்து கிடந்தது. “அய்யோ-இதை முழுதும் படிக்கவில்லை போலும்—அதனாலேயே என் தங்கங்கள் தங்களைத் தவறாகப் புரிந்துகொண்டன” என்று தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாள் குமுதா! “காதலர்கள் அவசரக்காரர்கள்” என்ற ஒலி சந்தனத்தின் இருதயத்திலே எழுந்தது.

இளம் தளிர்கள் இரண்டும், தங்களுக்கு மூத்தவர்கள் செய்த முடத்தனத்திற்கு இரையாகி—பிணங்களாகத் தொங்கிக்கொண்டே,

“காதலோர் தொடர்கதையே!” என்ற பாட்டைப் பாடாமல் பாடிக்கொண்டிருந்தார்கள்.