மயில் ராவணன்

Mayil Ravanan

மு. கருணாநிதி

மயில் ராவணன்

உசேனை கழகத்தினுடைய கூடுதல் அமைப்புச் செயலாளராக நியமித்தோம் என்பதை பொருளாளர் வீராசாமி இங்கே குறிப்பிட்டார். என்றைக்கும் அவர் ஊடுதல் செயலாளராக இருக்க மாட்டார் என்பதால் தான் அவரை கூடுதல் செயலாளர் என்கிற பொறுப்பிலே நாம் நியமித்திருக்கிறோம். இந்த இயக்கத்திற்கு எத்தனையோ சோதனைகள், வேதனைகள் எல்லாம் வருகிற நேரத்தில் இது எப்படி கட்டிக் காக்கப்படுகிறது. சோதனைகளை எல்லாம் இந்த இயக்கம் எப்படி சந்தித்து மீண்டும் வீறு கொண்டு எழுகிறது என்கிற ஐயப்பாடு பல அரசியல் கட்சிகளிலே உள்ளவர்களுக்கெல்லாம் உண்டு. அதிலும் குறிப்பாக இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்கின்ற நிலையில் ஆணையிடப் பட்டிருக்கின்ற என்னால் இவ்வளவு பெரிய சோதனைகள், வேதனைகள், சூறாவளிகள், புயல்கள், பூகம்பங்கள் இவைகளுக்குப் பிறகும் எப்படி நிமிர்ந்து நிற்க முடிகிறது என்கிற வியப்பு உண்டு. பல கட்சிக் காரர்களுக்கும் பொதுமக்களிலே பலருக்கும் கூட உண்டு.

நான் அவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்ள வேண்டுமேயானால் மயில் ராவணன் கதையில் மயில் ராவணனைப் பிடிப்பதற்கு முப்பத்து முக்கோடி தேவர்களாலும் முடியவில்லை. அவர்கள் முறையிட்டு அழைத்து வந்த மும்மூர்த்திகளாலும் இயலவில்லை. அப்பொழுது மயில் ராவணனுடைய வீழ்ச்சிக்கு என்ன வழி என்று அவர்கள் யோசித்த நேரத்தில் இரகசியமாகக் கண்டுபிடித்தார்கள்.

பாதாள உலகத்தில் ஒரு பளிங்குமண்டபம் இருக்கிறது. அங்கே நீரோடை ஒன்று இருக்கிறது. அந்த நீரோடைக்குள்ளே குதித்து தண்ணீருக்குள் மூழ்கிச் சென்றால் அங்கே ஒரு தாமரைத் தண்டு இருக்கிறது. அந்த தாமரைத் தண்டின் வழியாக உள்ளே சென்றால் ஒரு பெரிய குகை இருக்கிறது. அந்த குகைக்குள்ளே சென்றால் அங்கே ஒரு பெரிய தங்கத்தாலான மாடம் இருக்கிறது. அந்த மாடத்திற்குள்ளே ஒரு பேழை இருக்கிறது. அந்த பேழைக்குள்ளே ஒரு வண்டு இருக்கிறது. அந்த வண்டை எடுத்து நசுக்கினால் மயில் ராவணனை வீழ்த்தலாம் என்பது புராணம். அப்படி உள்ள வண்டு தான் உசேன் (பலத்த கைதட்டல்)

உசேனைப் போன்றவர்கள் இந்த இயக்கத்திலே அத்தகைய வண்டுகளாய் இருக்கிற காரணத்தால் மயில்ராவணனாகிய என்னை, நான் தலைமை ஏற்று நடத்துகின்ற இந்த இயக்கத்தை யாரும் வீழ்த்த முடியவில்லை (பலத்த கைதட்டல்)

*