மனைவி சொன்ன விளக்கம்
Manaivi Sonna Vilakkam
மு. கருணாநிதி
மனைவி சொன்ன விளக்கம்
இன்று மாலை 3 மணிக்கு நான் வாலிப நாடகம் ஒன்றைக் கேட்டேன். அந்த நாடகத்தில் சந்தனா என்னும் ஒரு பெண் - சந்தை ஒன்றில் விலை கூறி விற்கப்படுகிறாள். மிக அழகான பெண் அற்புதமான பேரழகி... ஒரு பெரிய செல்வச் சீமான், அந்தப் பெண்ணை விலைக்கு வாங்கி, தன்னுடைய ஊருக்கு அழைத்துச் செல்கிறான். ஊருக்குச் சென்றதும், நந்தவனத்தில் இருக்கின்ற மனைவியை அழைத்து, “என்னுடைய ஆருயிர் மனைவியே!” ஓர் அழகான அடிமையை விலைக்கு வாங்கி வந்திருக்கிறேன்” என்று சொல்கிறான். தனக்கு ஒரு வேலைக்காரி கிடைத்த மகிழ்ச்சியில் ‘அவளுடைய முகத்திரையை நீக்குங்கள் பார்க்கலாம்’ என்றாள் மனைவி.
இதன்படி முகத்திரை நீக்கப்பட்டதும் அவள் பேரழகியாக இருப்பதைப் பார்க்கிறாள். அந்தச் சீமான் தன் மனைவியிடம், “இவளைப் பார்த்துக் கொள்; நான் சற்று வியாபார வேலைகளைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு வெளியூர் போகிறான். அவன் போனதும், அவன் மனைவி நினைக்கிறாள் - ‘இவர் இந்த அழகியை வேலைக்காக வாங்கி வரவில்லை. தன்னுடைய இச்சையைத் தீர்த்துக் கொள்ளத்தான் அழைத்து வந்திருக்கிறார். ஆகவே, அவர் வருவதற்குள்ளாக இந்த அழகியை விகாரமாக ஆக்கிவிட வேண்டும்’ என்று எண்ணி முடி திருத்துபவனை அழைத்து வரச் சொல்லி - அவளுடைய கூந்தலை கோணல் மாணலாக வெட்டச் சொல்கிறாள். முகத்தில் சுட்டுக் கோணல் கோடுகளைக் கிழித்துக் கோர ரூபமாக அவளை ஆக்குகிறாள்!
அதற்குக் காரணமாக அவள், ‘என் கணவன் அவளைக் காதலித்து விடுவார். ஆகவேதான் இதைச் செய்கிறேன்’ என்று சொல்கிறாள்!