மன மாற்றம்
Change of Mind
மு. கருணாநிதி
மன மாற்றம்
ஒரு கொடையாளி அவனுடைய துணைவி இருவரும் ஓர் ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். யாருக்காவது கொடை வழங்க வேண்டும் என்பது அவர்களது எண்ணம்.
எதிரேயிருந்து அந்த ஒற்றையடிப் பாதையிலே ஒருவன் வேகமாக நடந்து வருகிறான்.
கொடையாளியிடம், அவன் துணைவி சொல்லுகிறாள். ‘அதோ வருகிறானே அவனுக்கு இந்த நன்கொடையைத் தாராமே’ என்று கையிலிருந்த பண முடிப்பைக் கணவனிடம் தருகிறாள்.
கணவன் அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு ‘ஓ! அவனா! அவன் அடிக்கடி மனம் மாறுபவன் ஆயிற்றே! அவன் இதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கொடுத்தால் பெற்றுக் கொள்ள அவன்தவறிவிடுவானே!’ என்கிறான் கொடையாளி. அதையும்தான் பார்ப்போமே என்கிறாள் மனைவி.
‘சரி, பார்’ என்று சொல்லிவிட்டு அந்தப் பணமுடிப்பை பாதையில் வைத்துவிட்டு ‘நாம் இருவரும் இந்த மரத்திற்குப் பின்னால் மறைந்திருப்போம்; வருகிறவன் இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு போகிறானா பார்ப்போம்! அவனுக்கு இப் பொருள் கிடைத்தால் அது அவனுக்கேற்பட்ட நல்வாய்ப்பு என்று கருதுவோம்! மகிழ்வோம்!’ என்றுஇருவரும் ஒளிந்து கொள்கிறார்கள்.
ஒற்றையடிப் பாதையிலே அந்தப் பணமுடிப்பு வைக்கப் படுகிறது.
அவன் வேகமாக வருகிறான். வரும்போதே அவனுக்கு ஒரு மனமாற்றம்.
என்ன மனமாற்றம் தெரியுமா? நாம் இந்த ஒற்றையடிப் பாதையிலே கண்களைத் திறந்து கொண்டு இவ்வளவு வேகமாகச் செல்லுகிறோமே கொஞ்ச தூரம் கண்ணை மூடிக்கொண்டு செல்லமுடியுமா? பார்ப்போம் என்று கண்ணை மூடிக்கொண்டு செல்லுகிறான்.
அவ்வாறு அவன் கண்ணைமூடிக் கொண்டு செல்லுகிற இடம் அந்தப் பணப்பை கிடக்கிற இடம். அதைக் கடந்து சென்று விடுகிறான்.
அவன் சென்றபிறகு அந்தக் கொடையாளி தன்னுடைய மனைவியிடம், பார்த்தாயா! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது என்பார்கள். இவனைப் பொறுத்தவரை அது எவ்வளவு சரியாக இருக்கிறதுபார். அவன் மனதை மாற்றிக் கொண்ட காரணத்தால் அவனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போயிற்று” என்று சொல்கிறான்.
இதைப் போலத்தான் மனம் மாறுகிற இயல்பு கொண்டது.
தமிழக மக்கள் மற்ற நேரங்களில் விழிப்பாக இருக்கின்றனர். தேர்தல் வரும்போது மனம் மாறி அயர்ந்து விடுகின்றனர்.