மலையைத் தூக்குவேன்!
I Will Lift the Mountain!
மு. கருணாநிதி
மலையைத் தூக்குவேன்!
“மலையொன்றைத் தலையில் தூக்கிக் கொண்டு நாடு முழுவதும் பவனி வருவேன். இது என்னுடைய முதல் திட்டம். வானத்தை வில்லாக வளைத்து, அந்த வில்லுக்கேற்ற நாணாக மணலைக் கயிறாகத் திரித்துக் காட்டுவேன். இது என்னுடைய இரண்டாவது திட்டம். அடுத்தடுத்து இன்னும் பல அற்புதத் திட்டங்களை வைத்திருக்கிறேன். அவற்றைப் பின்னர் இந்த நாட்டு மக்களின் முன்னிலையில் நிறைவேற்றிக் காட்டுவேன்”
இவ்வாறு பொது மக்களின் மன்றத்தின் நடுவே தோள் தட்டி அறைகூவல் விடுத்தான் ஒரு வாலிபன். மக்கள் அவன் வார்த்தைகளை வாய்ப் பிளந்தவாறு கேட்டு மயங்கிப் போயினர். இப்படிப் ஒரு வாலிபன் பேசிக் கொண்டு திரிவது மன்னன் காதுக்கும் எட்டியது. அவனைக் கொலுமண்டபத்திற்கு அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தார். பின்பு போட்டுக் கொலு மண்டபத்தில் நுழைந்த வாலிபனை மன்னர் அலட்சியப்படுத்தாமல் அவன் மக்களிடம் அறிவித்த திட்டங்கள் சாத்தியமானவையுதானா என்று வினவினார்.
“இயலாதது என்று இவ்வுலகில் எதுவுமில்லை அரசே! நான் அறிவித்த திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவேன்” என்று நிமிர்ந்து நின்று முழங்கினான் அந்த வாலிபன்.
“அப்படியானால் வீரமிக்க வாலிபனே! உன் முதல் திட்டத்தை என் எதிரில் செய்து காட்டுக. தயார்தானா?”
மன்னரின் இந்த ஆவல் ததும்பிய கேள்விக்கு அவன் மிக்க அமைதியாகப் பதில் அளித்தான்.
“மன்னர் மன்னவா! எதற்கும் சில வசதி வாய்ப்புகள் வேண்டுமன்றோ? நான் நாட்டு மக்களிடமும், தங்களின் திருமுன்னும் கூறிய செயல்களை நிறைவேற்றியே தீருவேன். ஆனால் ஒன்று! நான் வெகு நாட்கள் பயணம் செய்து களைத்துப் போயிருக்கிறேன். தங்களுக்கும் விருப்பமிருந்தால் அரண்மனைக்கு விருந்தினனாக ஓரிரு மாதங்கள் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். உடலில் வலிவு மிகுந்ததும் என்னுடைய முதல் திட்டமான மலையைத் தலையில் தூக்கும் காரியத்தைச் செய்து காட்டுகிறேன்.”
மன்னர் மகிழ்ச்சியுடன் அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். “ஓரிரு மாதங்கள் என்ன, மூன்று மாதங்கள் முழுமையான காலமும் எடுத்துக் கொள், அந்த மூன்று மாத காலமும் அரண்மனையில் உனக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் வழங்கப்படும்” என்று கூறி அவனைத் தட்டிக் கொடுத்தார்.
வாலிபனின் வீரச் செயலைக் காண, பொது மக்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு அரண்மனையில் உல்லாசமான வாழ்க்கை; உடலுக்கு வலிவு தரும் உணவு வகைகள், உள்ளத்திற்குக் களிப்பூட்டும் பானங்கள், கேட்டதெல்லாம் கிடைத்தன அவனுக்கு.
அவன் வெளியிட்ட திட்டங்களை நிறைவேற்றி விடுவானே யானால் அவனையே தனது படையின் தலைமைத் தளபதியாக நியமித்துக் கொள்ளப் போவதாக மன்னன் அமைச்சர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
மூன்று மாதங்கள் முடிவுற்றன. முதல் திட்டம் மலையைத் தலையில் தூக்கிக் கொண்டு நடக்கும் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான நாள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மலையடி வாரத்தில் கூடியது. மன்னரும் அமைச்சப் பெருமக்களும், அரண்மனை அலுவலர்களும் தத்தமக்குரிய இடங்களில் அமர்ந்தனர்.
வாலிபன் வண்ண ரதமொன்றில் வந்து இறங்கினான். அவன் மேனி புதுப் பொலிவுடனும், வலிவுடனும் விளங்கியது. மூன்று மாத கால அரண்மனை வாசத்தின் விளைவு உடற்கட்டில் நன்கு தெரிந்தது.
அவனைக் கண்ட மன்னரும், மக்களும் கையொலி செய்து வரவேற்றனர். முரசுகள் அதிர்ந்தன. இசைக் கருவிகள் ஒலித்தன. வாலிபன் தன் இரு கைகளையும் உயர்த்தினான். அனைத்து ஒலிகளும் நின்று அமைதி நிலவிற்று. அவன் மலையின் அடிவாரம் நோக்கிச் சென்றான். அனைவரது விழிகளும் இமைக்காமல் நடக்கப்போகும் நிகழ்ச்சியை உற்று நோக்கிக் கொண்டிருந்தன.
“நான் மலையைத் தலையில் தூக்கிக் கொண்டு நடக்கத் தயார்” என்று கூவினான் அவன். ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்.
ஆனால் நடந்தது என்ன? அவன் மலையைத் தூக்கவில்லை. திரும்பத்திரும்ப “நான் மலையைத் தூக்கிக் கொண்டு நடக்கத் தயார்” என்பதையே சொல்லிக் கொண்டிருந்தான்...
“ஏன் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறாய்? செய்து காட்டு” என்று மன்னர் உரத்த குரலில் கூறினார்.
அதற்கு வாலிபன் பதில் சொன்னான்;
“மன்னா; மலையைத் தலையில் தூக்கிக் கொண்டு நடப்பதாகத் தான் சொன்னேனே. அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இப்போதே இந்த மலையை என் தலையில் தூக்கி வையுங்கள். அதைத் தூக்கிக் கொண்டு நாடு முழுவதும் நடக்கிறேனா இல்லையா என்பதைப் பிறகு பாருங்கள்”