மதுரைச் செலவு

Journey to Madurai

மு. கருணாநிதி

மதுரைச் செலவு

“கானல் வரி நான்பாட, மாயப்பொய் பல கூட்டும் காதல்மொழி சிந்தியதை இந்தக் காதுகளால் கேட்டிருந்தேன். காளையரை ஏமாற்றக் காட்சிவரி, கண்கூட்டு வரி முதலிய எட்டு வகை நடிப்புவரியும் கற்றவளடி நீ! குமிழம்பூ மூக்கும் குவளை மலர்க் கண்ணும் கொண்டு இனி இந்தக் கோவலனை ஏமாற்ற முடியாது!” எனக் கூறி மாதவியாம் மங்கையர் திலகத்தைப் பிரிந்து வந்த கோவலன், பேடை தேடி வரும் சேவலெனக் கண்ணகியைக் காண வீடு நாடி ஓடுகிறான். ஆளனைக் கண்ட அந்த ஆரமுதுப் பெண்ணாள் அடி தகர்ந்த மரம்போல அவன் அடிவீழ்ந்தாள். கண்ணீர்த்துளிகளால் அவன் காலைக் குளிப்பாட்டினாள்.

கோவலன், “கண்ணகி!” எனக் கதறினான்.

அந்தக் கதறலில் தான் எத்துணை ஏக்கம்!

‘இத்தனைநாள் உன்னை உயிருடன்வைத்து வதை புரிந்த இந்தக் கயவனை மன்னித்து விடு’ என்ற வாசகமே அந்த ஒரு சொல்லில் அடங்கி இருந்தது.

“கற்பின் திருவுருவம் உனை விடுத்துக் கணிகையின் மடியிலே சுகங்கண்ட இந்தக் கற்றறிந்த மூர்க்கனை........” என்று ஆரம்பித்தான் மன்னிப்புப் படலம் எழுதுவதற்கு!

அதற்குள் அவன் அழகிய உதடுகளில் தன் கரங்களால் பூட்டிட்டு “திட்டாதீர்கள்! என் கணவரை என் கணவரே கூடத் திட்டக்கூடாது. நான் அனுமதிக்கமாட்டேன்.” என்று தழுதழுத்த குரலில் பதில் கூறினாள்.

“மாதர்குல மாணிக்கமே! தமிழ் மறை காத்து மனை காக்கும் இன்பப் பெருமாட்டி நீ இருக்க மாதவியாம் விலைமாதின் வசப்பட்டேன். அவள் வாச மலர்க் கூந்தலிலே வையகமே அடிமையென எண்ணி விட்டேன். அந்த மோசம் நிறை மங்கை என் குடும்பப் பாசம் அறுத்தாள். தேசமெல்லாம்! தெருவெல்லாம் இகழ்ந்துரைக்க, தேகமிருந்தும் உயிரில்லாப் பாண்டமாக என்னை ஆக்கிவிட்டாள்.”

“அத்தான்! என் தங்கை பாவம்! அவளை ஒன்றும் சொல்லாதீர்கள். என் குழந்தை மணிமேகலை சுகந்தானே அத்தான்...?”

“குழந்தை மணிமேகலை! ஐயோ, அது உன் குழந்தையா? குவிந்திருந்த பொன்மணிகள், தங்கக் குன்று அணிந்திருந்த நகைகள் எல்லாம் கொட்டிக் கொட்டி நான் பெற்ற இன்பத்தில் விளைந்ததன்றோ அந்தக் குழந்தை? விலை கொடுத்துச் சுவை பார்த்த காதல் விருந்தின் அடையாளம். கணிகை வீட்டில் உன் கணவனுக்கு ஏற்பட்ட களங்கம்தான் கண்ணகி, அந்தக் குழந்தை!”

“ஐயோ! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். மணிமேகலை மாதவிக்குப் பிறந்தாலும் என் குழந்தைதான்! என் குழந்தையைப்பற்றித் தவறாக ஒன்றும் சொல்லாதீர்கள் அத்தான்!”

“என் தெய்வமே! நீ என் மதிப்பிற்குரியவள். மரியாதைக்குரியவள். என்னை மன்னித்து விடு. உன் இதயத்தை உணர முடியாத இந்த இழிமகனை மன்னித்துவிடு கண்ணகி. கடல் வாணிபத்தில் தமிழருக்கு ஈடில்லை என்ற புகழ் என்னாலே பெருகிற்று. இன்றோ உடல் வாணிபத்தில் ஈடுபட்ட ஒருத்தியிடம் அறிவிழந்தேன். அளவிட முடியாத பொருளிழந்தேன்; புலம்புகிறேன் ஏழையாக! என் செல்வமே! பூம்புகார்ப் பெருவணிகள் என்ற பெயர் போயிற்று. புயல்தனிலே படகானோம். கரையேற வழியில்லை. அலை மோதும் கடல் மாதா வயிற்றுக்குள் போய்விடுவோம், வா...வா......”

“ஏன் கண்ணே அந்த முடிவு? ஆனை உயரம் அடுக்கி வைத்த தங்கம் உண்டு என் தாய் வீட்டில்! நாம் எடுத்துக் கொண்டால் தடை சொல்ல யாருண்டு?”

“ஆருயிரே! மாமன் கைபார்த்துப் பிழைக்கின்றான் என ஊர் பேசும்; மானம் போகும்! வேண்டாம்; வேண்டாம்.”

“நெல்மணியை அளப்பதுபோல் அளக்கின்றார் முத்துக்களைத் தங்கள் தந்தை; அவர்கூட ஆதரவு காட்டுவதற்கு மறுப்பாரோ அத்தான்?”

“தனியாக வாழ்வதற்குத் தகுதியுண்டு என எண்ணிப் பொருள்கொடுத்தார் தந்தை! அதைத் தொலைத்து விட்டுப் புதுத் தொல்லை கொடுப்பதற்கு மனமே இல்லை. மார்க்கம் வேறு இருந்தால் சொல், இல்லையேல் மரணம்தான் மேல்.”

“நானிருக்கும் வரையிலே சோகத்தால் வாடாதீர். என் காற் சிலம்பு இரண்டு உண்டு. அதைக் கழற்றித் தருகிறேன். விற்றுவிட்டால் புதிதாக வாணிபத்தைத் தொடங்கலாம் அத்தான்!”

“சிலம்பை விற்பதா? ஐயோ கண்ணகி! இந்த வார்த்தையைக் கேட்கும் காலமும் வந்ததா?... உன் காலை அழகு செய்யும் அந்தச் சிலம்புகள்--இந்தக் காமுகன் இதுவரையில் கழற்றாமல் கடைசியாக விட்டு வைத்திருக்கும் அந்த ஆபரணத்தையும் விற்றுவரச் சொல்கிறாயா கண்ணகி?”

“கவலைப்படாதீர்கள். நான் சொல்லுவதைக் கேளுங்கள். சிலம்பை விற்று அந்தப் பொருளைக் கொண்டு நாம் துவங்கும் வாணிபம், வளரத் தொடங்கிவிட்டால் இதுபோல் எத்தனையோ சிலம்புகள் வாங்கிக் கொள்ளலாம்.”

“ஆனால்...பூம்புகாரிலேயே சிலம்பை விற்பது அவமானமல்லவா?”

“பிறகு...எங்கே விற்கலாம் என்று நினைக்கிறீர்கள்?”

“நம்மையாரும் எளிதில் அடையாளம் காண முடியாத பாண்டிய நாட்டுக்குச் செல்லலாம். அங்கே...மதுரைத் தலைநகரில் சிலம்பு நல்ல விலைக்குப் போகும்.”

“தங்கள் விருப்பம் போலவே செய்யுங்கள். மதுரைக்குத் தங்களோடு நானும் வருகிறேன்.”

“வா! இனிச் சாகும் வரையில் அணுப்பொழுதும் உன்னைப் பிரியமாட்டேன் கண்ணே.”

இந்த உரையாடலுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். ஒருவர் கண்ணீரை ஒருவர் கண்ணீரால் கழுவிக்கொண்டனர்.

கோவலனும் கண்ணகியும் பிரிந்து கூடி பெருமகிழ்வு பெற்று மதுரைப்பயணம் தொடங்கிய வேளையிலே பூம்புகார்க் கலைச் செல்வமாம் மாதவியோ தூண்டிற் புழுவெனத் துடித்துக் கொண்டிருந்தாள். குழந்தை மணிமேகலையைத் தூக்கி வைத்துக்கொண்டு,

“அம்மா மணிமேகலை! உன்னையும் என்னையும் பிரிந்து உன் அன்புத் தந்தை ஊரைவிட்டே போய்விட்டார். என் செல்வமே! வாரி அணைத்து ‘வண்ணப்புது நிலவே! எண்ணச் சுடரே! தமிழ்க்கனியே!’ என்றெல்லாம் முத்தமாரி பொழிவாரே--அவர், உன்னையும் என்னையும் வெறுத்து இந்தப் பாவியிருக்கும் பூம்புகாரிலேயே இருக்கக் கூடாதென்று போய் விட்டாராம்.

‘அப்பா!’ என்று எப்போது அழைப்பாய்--

“அம்மா!” என்று என்றைக்கு வாய் திறப்பாய் என ஆவலோடு கேட்டுக் கேட்டுத் துடித்த உன் தந்தை, உன் செந்தமிழ் மழலையைச் சுவைக்க விருப்பமில்லையென்று உன் தாயைச் சுடு நெருப்பில் எறிந்து விட்டுப் போய்விட்டாரம்மா, போய்விட்டார்!” என அலறி அழுதாள்.

அவளைத் தேற்றுவதற்கு யாராலும் முடியவில்லை. கோவலனின் அன்புச் சின்னமாம் மணிமேகலையின் முகத்தோடு முகம் பதித்து விழுந்து கிடந்தாள். பூம்புகார் பட்டினம் மேலும் மேலும் இருளில் மூழ்குவதுபோலவே அவளுக்குத் தோன்றியது.

“வெண்மதி நீங்கக் காரிருள் நின்ற கடைநாள் கங்குல்” என இளங்கோவடிகள் வர்ணிக்கும் அந்த நேரத்தில், வீட்டு வாயிலில் விளையாடிக் கொண்டிருந்த அன்னம், ஆட்டுக்கடா, கவரி மான் ஆகியவற்றையெல்லாம் கவனிக்காமல் கோவலனும் கண்ணகியும் மதுரைச் செலவு தொடங்க வெளிக்கிளம்பினார்கள். பூம்புகார் மக்கள் புது நீராடக் காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில் கனிச்சுமையால் தாழ்ந்த சோலைகளின் பக்கமாகக் காவிரியின் சங்கமுகத்துறையின் கடைசி இடத்தையும் கடந்து சென்றார்கள்.

வழியில் அவர்கள் கவுந்தி எனும் சமணமதப் பெண் துறவியைச் சந்திக்க நேரிடுகிறது. கவுந்தியைக் கண்டதும் கோவலன் வணக்கம் தெரிவித்துவிட்டு, கண்ணகிக்கும் அடிகள் அறிமுகப் படுத்துகிறான். ஆனால் கவுந்திக்கு அவர்கள் இருவரையுமே அறிமுகமில்லை. வாழ்த்துக் கூறிவிட்டு “நீங்கள் யார் என அறியலாமோ?” எனக் கேட்கிறார்.

“வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உயர்ந்த குதிரைகளும், ஏற்றுமதிக்கெனக் குவியும் மிளகு மூட்டைகளும், வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலையில் பிறந்த ஆரமும் அகிலும், தென் கடல் முத்தும், குணகடல் பவளமும், கங்கையின் பொருளும், காவிரியின் பயனும் நிறைந்து தோன்றியிருக்கும் சோழனின் கடற்கரைப் பட்டினமாம் பூம்புகார்த் தலைநகரமே எமது ஊர். என் பெயர் கோவலன். இவள் என் வாழ்க்கைத் துணை நலம் கண்ணகி” எனக் கோவலன் பதில் கூறியதும், கவுந்தியடிகள் திகைப்படைந்து விட்டார்.

“என்ன? கோவலனா? பெருவணிகர் மாசாத்துவானின் மகனா? குழந்தாய்! உனக்கு வந்த இடர் யாது?”

“சுடர் விளக்காம் கண்ணகிக்குத் துரோகம் செய்தேன். அது போதாதென்று...படர்கின்ற முட்புதரில் என் பத்தினியின் பாதம் பட்டுப் பாகற் பழம்போல் சிவக்கின்ற பாதகத்தையும் செய்கிறேன் இப்போது.”

“வருந்தாதே! தவறு செய்தவர்கள், தங்கள் தவறை உணரும்போது அதுவே பெருந் தண்டனையாகிறது. பரவாயில்லை. மதுரைக்குத்தானே போகிறீர்கள்? நல்லது. ஆனால் நீங்கள் போகும் வழியில் அடர்ந்த காடுகள் இருக்கின்றன. இப்போதே உன் துணைவி களைத்துப்போயிருக்கிறாள். அவள் மெல்லிய பாதங்கள் அக்காடுகளைத் தாண்டிக் கடப்பதற்கு ஏற்றவையாக மாட்டா. வழியில் பல இடர்களும் உண்டு. ஆயினும் மதுரை செல்வதெனத் தீர்மானித்து விட்ட உங்களை நான் தடுப்பது என்பதும் இயலாத ஒன்று. உங்களுக்குத் துன்பத்திலும் சிறு ஆறுதல் அளிக்கலாம் என்ற நோக்கத்துடனும்--மதுரையில் உள்ள பெரியவர்களின் அறமொழிகளைக் கேட்க வேண்டுமென்ற ஆசையுடனும் நானும் வழித்துணையாக வருகிறேன்.” எனக் கூறிக் கவுந்தியும் அவர்களுடன் புறப்பட்டார்.

கொஞ்ச தொலைவு நடந்ததற்கே ஒடிந்து விழும் கொடி போன்ற கண்ணகியின் இடை வருந்தி வாடிற்று. விரைந்து விரைந்து மூச்சை இழுத்து விட்டாள்.

வழியில் ஒரு சோலையைக் கண்டவுடன் மதுரைக்கு அருகாமையில் வந்து விட்டோம் என்று நினைத்தாள். அப்படி நினைக்கச் சொன்னது அவளுக்கேற்பட்ட களைப்புத்தான்.

“மதுரை மூதூர் எது?” என்று கோவலனைப் பார்த்து அவள் கேட்டாள்.

ஏதோ நாலைந்து ஊர்களைப் பார்த்துவிட்டு அவைகளில் எது மதுரை என்று தெரியாது திண்டாடியவளைப்போல “மதுரை மூதூர் எது?” எனக் கேட்டதும் கோவலனுக்குச் சிரிப்பும் வந்தது; வருத்தமும் மேலிட்டது. முப்பது காதத் தொலைவு என்று கூறினால் கண்ணகி அயர்ந்து விடுவாளோ என அஞ்சுகிறான் கோவலன். ஆனாலும் அவளுக்கு அவன் பதில் சொல்லியாக வேண்டுமே! இந்தச் சோகமான கட்டத் திலும் நறுக்குத் தெரித்தாற்போல ஒரு நகைச்சுவையை உண்டாக்கி விட்டு நடக்கிறார் பெரும் புலவர் இளங்கோவடிகள்.

“மதுரை மூதூர்யாது?” என வினவ,

“ஆறு ஐங்காதம் நம் அகல்நாட்டு உம்பர், நாறு ஐங்கூந்தல்! நணித்து”

“ஆறு ஐந்து காத தூரந்தான் இருக்கிறது. அதாவது அருகாமையில் தானிருக்கிறது” என்று பதில் கூறிவிட்டுத் துன்பச் சிரிப்பு சிரிக்கிறான் கோவலன்.

உடன் கவுந்தியடிகள் கண்ணகியைப் பார்த்து, “கண்ணே! உன் துணைவர் உன்னை ஏமாற்றுகிறார். ஆறைந்து காதமென்றால் முப்பது காதம்.” என்று கேலி பேசுகிறார்.

களைப்பின்றிப் பயணம் நடத்துவதற்குப் பேச்சுத் துணை இன்றியமையாதல்லவா? துவண்டு துவண்டு கண்ணகி நடப்பதைப் பார்த்துக் கவுந்திக்கே பெரும் வேதனையுண்டாயிற்று.

விளையாட்டுப் பேச்சுக்களால்தான் அந்த வாட்டத்தைப் போக்க முடியும் என்று கருதியவராய்க் கோவலனை நோக்கி, “குழந்தாய்! நான் வேண்டுமானால் முன்னே போய் விடுகிறேன். நீ கண்ணகியைத் தூக்கிக்கொண்டு......” என இழுத்தாற்போல் கூறியதும், கோவலன் வியப்புடன் கவுந்தியைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.

“நீ அவளுக்குச் செய்த குற்றத்திற்குத் தண்டனை வேண்டாமா? அதற்காகச் சொன்னேன். அது மட்டுமல்ல; முன்பே குறிப்பிட்டேனே--நாம் செல்லும் வழியில் நிறைய இடர்ப்பாடுகள் உண்டு என்று; அந்த இடர்ப்பாடுகளையும் விளக்குகிறேன்; கேள்! வழியில் வள்ளிக்கிழங்கு தோண்டிய குழிகளில், வாடிய சண்பக மலர்கள் குவிந்து மூடியிருக்கும்; கவனமாகச் செல்லாவிட்டால் மலர்க்குவியலென எண்ணி அந்தப் பொய்க் குழிகளில் விழுந்துவிட நேரும். கண்ணகிக்கு இவ்வழியெல்லாம் நடந்து பழக்கமில்லையல்லவா—சோலையிலுள்ள துன்பங்களை நீக்கி வயல் வெளிகளில் செல்வோமானால் நீர்நாயினால் கௌவப்பட்ட வாளை மீன்கள் உயிர் தப்பத் துள்ளி மேலே விழும். அதைக் கண்டு கண்ணகி பயப்படுவாள். கரும்புத் தோட்டங்களில் நடக்கும்போது கரும்பின்மீது தவறி உராய்ந்து விட்டால் அங்குள்ள பெரிய தேன் கூடுகள் உடைந்து தேனெல்லாம் அருவி நீரோடு கலந்துவிடும். அதோ கண்ணெதிரே ஓடுவதெல்லாம் தேனருவிகள்தான். வரப்புகளில் நடந்து செல்வோமென்றால் களை எடுப்பவர்கள், வயலில் பிடுங்கிய குவளை மலர்களை வரப்புகளின்மேல் போட்டு வைத்திருப்பார்கள். அந்தப் பூக்களைச் சுற்றி வண்டினங்கள் நாட்டியம் பயின்று கொண்டிருக்கும். நடக்கும்போது நம்மையறியாமலே அந்த வண்டுகளைக் கொன்றுவிடக் கூடும். இவைகளையெல்லாம் விட்டு சோலையின் ஓரத்தில் ஒதுங்கியே செல்வோமென்று கருதி நடந்தால் கிளைகளில் தாழ்ந்து தொங்கும் பலாப் பழங்கள் எதிரிகள் போல் தலையில் முட்டித் தடுக்கும்.”

--எனக் கவுந்தி கூறியதும் கண் கலங்கியவாறு கோவலன், “ஐயோ! நான் சென்ற தவறான வழியில் அந்தப் பலாக்கனிகளைப்போல முட்டி என்னை யாரும் தடுக்கவில்லையே...” என்று கூறினான்.

கவுந்தி, அவனைத் தேற்றினார்.

அவர்களுடைய பயணத்தில் இல்வாழ்க்கையின் சிறப்பு பற்றிய தெளிவு மட்டுமல்ல; தமிழகத்தின் பெருமையும் தலை நிமிர்ந்து நின்றது. சோழ நாட்டையும் பாண்டிய நாட்டையும் இணைக்கின்ற அந்தப் பாதையோரத்துச் சிறப்புகளின் வாயிலாக வளம் பெற்றிருந்த தமிழகத்தைப் படமெழுதிக் காட்டுகிறார் இளங்கோவடிகள்.

குளங்களில் தாமரைக் காடுகள். அந்தக் காடுகளில் சம்பங்கோழி, நாரை, அன்னம், கொக்கு, காட்டுக்கோழி, நீர்க்காக்கை, உள்ளான், குளுவை, கணந்துள், பெருநாரை முதலிய பறவைகள் எழுப்புகின்ற ஒலி, போர்க்களத்தில் வெற்றிவேந்தன் எழுப்புகிற ஒலியை ஒத்திருக்கிறதாம். வயற் களங்களில் நெற்கூடுகள் குன்றுகளென நிற்கின்றன. கூடுகள் பிரியாமலிருக்கும் பொருட்டு அவைகளை வைக்கோற் கயிறுகொண்டு கட்டியிருக்கிறார்கள். சிவந்த கண் படைத்த எருமைகள், தினவெடுத்த முதுகை அந்தக் கூடுகளில் தேய்க்கின்றன. அதனால் கயிறு அறுந்து கூடுகளில் உள்ள நெல் மணிகள் வயலில் விளைந்திருக்கும் நெற்பயிரின் மேல் சரிந்து விழுகின்றன. கழனிகளில் வேலை செய்யும் பெண்கள், தங்கள் கூந்தலில் உள்ள மலர்களை வீசியெறிந்துவிட்டு நெல் நாற்றை நறுக்கித் தலையில் சூட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் தோளிலும் மார்பிலும் சேறு படிந்திருந்த போதிலும் அது அவர்களின் துணைவர்களுக்கு சந்தனம்போல் தோன்றுமளவுக்கு அழகு வீசுகின்றது. கள் குடித்ததால் அந்தப் பெண்களுடைய கயல்போன்ற கண்கள் சிவப்பேறியிருக்கின்றன.

இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டவாறு மூவரும் பயணம் நடத்தித் திருவரங்கத்தை அடைந்தனர். அங்கே பெருஞ் சாரணரைக் கண்டு அறிவுரைபெற்று அதன் பின்னர் பள்ளியோடத்தில் ஏறித் துறையைக் கடந்து காவிரியின் தென் கரையை அடைந்தனர். அங்கிருந்து உறையூர் சென்று அதன் பின்னர் மதுரை நோக்கிக் கிளம்பினர்.

வழியில் மாதவியின் ஓலையொன்றைக் கோவலன் பெறுகிறான். அந்த ஓலையில் தன் அன்பிற்குரியவளின் கையெழுத்தைக் கண்டதும் கோவலனின் மனம் மாறுகிறது. மாதவியை எண்ணி உருகி நிற்கிறான். ஓலையைப் படித்துப் பார்க்கிறான்.

“பேரன்புடையவரே! தங்கள் அடிதொழுது வணங்குகின்றேன். பெற்றோர்க்குப் பணி புரியாமல்--உற்ற மனைவிக்கும் தீங்குசெய்து

--பிழைப்பு நடத்த வெளியூர் செல்வதற்கும் நானே காரணமானேன். என் தவறால் வருந்தும் உங்கள் நெஞ்சை ஆற்றிக்கொள்ள வேண்டுகின்றேன்.”

கோவலனின் கண்கள் கலங்குகின்றன. மாதவி யெழுதிய அந்த மடலையே தன் பெற்றோருக்கு அனுப்பிவிடுகிறான். மாதவி, கோவலனுக்கு எழுதிய மடலின் வாசகமே--கோவலன் தன் பெற்றோருக்கு எழுதவேண்டிய வாசகம் எனக் கருதுகிறார் சிலப்பதிகார ஆசிரியர். என்னே இலக்கியச் செறிவு! என்னே வாழ்க்கை இலக்கணம்! என்னே தமிழனின் கற்பனை வளம் என்று நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா?

அப்படிப் பாராட்டிக்கொண்டே, கோவலனின் பதிலைப்பெற்ற மாதவியைப் பற்றி ஒரு புதுக் கற்பனை செய்து பார்ப்போம்.

கோவலனுக்குத் தான் எழுதிய மடல் திரும்பி வந்ததும் அதை எடுத்துக்கொண்டு மாதவி, மாசாத்துவான் வீட்டுக்குப் போகிறாள். கோவலன் அனுப்பிய மடல் கண்டு அவன் பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். எதிரே குழந்தை மணிமேகலையுடன் மாதவி நிற்கிறாள். அவளுக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான பெண்கள், வெள்ளித் தட்டுகளில் பொற்காசுகளை நிரப்பிக்கொண்டு வருகிறார்கள்; மாசாத்துவான் திகைத்த நிலையில் பேசுகிறார்.

“யார்?”

“மன்னிக்கவும்; நான்தான் மாதவி. தங்கள் பெருமை வாய்ந்த குடும்பத்தின் சீரழிவுக்குக் காரணமான பாவி மாதவி நானேதான்! இதோ! எனக்கும் தெரியாமல் எங்கள் வீட்டில் குவிக்கப்பட்டிருந்த தங்கள் வீட்டுச் செல்வம்!...”

“என்ன, மாதவி!...நீ மாற்றுக் குறையாத பசும்பொன் என்று இப்போதே உணர்ந்தேன்!”

“இனி யார் உணர்ந்தென்ன, உணராவிட்டால் என்ன? நான் உதிர்ந்த மலராகி விட்டேன்!”

“மாதவி! இந்தப் பொற்குவியல் என் மகன் உனக்காக அளித்தது! இதை நான் மீண்டும் பெறமாட்டேன்; திரும்பப்பெறுவது தீங்கானது!”

“எனக்கு ஏன் பொருள்? என் அன்புச் செல்வமே பறிபோய்விட்ட பிறகு; அழிகின்ற இந்தச் செல்வம் எதற்காக? எங்கே, என்னை மன்னித்தேன் என்று ஒரு முறை சொல்லுங்கள்!”

“மாதவி, நீ என் அன்பு மருமகள்!”

“ஐயோ, மணிமேகலை...எவ்வளவு நல்ல குடும்பத்தை உன் தாய் நாசமாக்கிவிட்டாள்!”

“அழாதேயம்மா—எங்கே; குழந்தையைக் கொடு!” என்று மணிமேகலையைக் கையில் வாங்கிக்கொள்கிறார்.

குழந்தை தாத்தாவின் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறது.

குலைந்த குடும்பம் ஒன்றாகி விடக்கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது. ஆனால் கோவலன், சாவை நோக்கியல்லவா கால்கடுக்க நடந்து கொண்டிருக்கிறான். அந்த மதுரைச் செலவு குறித்துத்தான் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதை, காடுகாண் காதை, வேட்டுவ வரி, புறஞ்சேரியிறுத்த காதை ஆகியவை முழங்குகின்றன.

இருவரும் பூம்புகாரை விட்டுப் புறப்பட்டுக் கவுந்தியைச் சந்தித்து மூவரும் உறையூரை அடையும் வரையில் உள்ள சிறப்புக்கள் நாடுகாண் காதை விளக்குகிறது. காட்டுவழி நடந்து, கொடும்பாளூர் நெடுங்குளக்கரையின் வழியாக உள்ள மூன்று பாதைகளில் வலப்புறப் பாதையில் நுழைந்து தென்னவன் மலையைத் தொட்டு, இடப்புறம் திரும்பி, திருமால் குன்றம் வரை சென்று அங்கிருந்து மதுரைக்கேகும் வழியில் ஐயை கோட்டத்தில் தங்கியது வரையில் உள்ள நிகழ்ச்சிகள்--அக்காலத்திற்கேற்ற எண்ணங்களை முன்வைத்துச் சொல்வதே காடுகாண் காதையாகும். வழியில் கொற்றவை எனும் தெய்வத்தை வணங்கும் வேட்டுவரை சந்திப்பதே வேட்டுவ வரியாகும். மாதவி அனுப்பிய ஓலை பெற்று அதனைத் தன் பெற்றோருக்கு அனுப்பிவிட்டுப் பின்னர் பாணருடன் சேர்ந்து யாழ் வாசித்துவிட்டு அவர்கள் வாயிலாக வழியறிந்து மதுரையைச் சேர்வதை வர்ணிப்பதே புறஞ்சேரியிறுத்த காதையாகும்.

வழியிற் கண்ட பாணரை நோக்கி, “இன்னும் எத்தனை காதமிருக்கும் மதுரைக்கு?” என்று கேட்கிறான் கோவலன்.

“அதிக தூரமில்லை. இதோ மதுரைத் தென்றல் வீசுகிறது. இந்தத் தென்றல் பொதிகைத் தென்றல் போன்றதல்ல. இதில் மிகுதியான அகில், மணமிக்க குங்குமப்பூ, சந்தனக் குழம்பு, புழுகுக் குழம்பு ஆகியவற்றின் மணங் கலந்திருக்கிறது. செங்குவளை, சண்பக மாலை, குருக்கத்தி, மல்லிகை, மல்லி முல்லை முதலிய பூக்கள் விரிக்கப்பட்ட பஞ்சணைகளின்மீது பட்டு, அந்த மணந்திருடிவரும் தென்றலாகும் இது! மன்னவனின் மாளிகையில் எழும் பரிமள வாசத்தைத் தன்னிடம் காட்டி, புலவர் நாவில் பொருந்திய பெருமையுடன் மதுரைத் தென்றல் வருகிறது” எனப் பாணர் விடை பகர்ந்தனர்.

தென்றலா அது?

கோவலன் கண்ணகி வாழ்வில்—ஏன்; நெடுஞ்செழியப் பாண்டியனின் ஆட்சியில் வீச இருக்கும் புயலுக்கான பொல்லாத அறிகுறியல்லவா அது?