மானும் பெருமானும்

Maanum Perumaanum

மு. கருணாநிதி

மானும் பெருமானும்

காட்டில் நபிகள் நாயகம் நடந்து வருகிறார். ஒரு மான், வேடனால் துரத்தப்பட்டு ஓடி வருகிறது. அந்த மான் எப்படி துரத்தப்பட்டது என்றால், மான்கள் நிரம்பிய ஒரு கூட்டத்தில் ஆண் மான் ஒன்று, பெண் மான் ஒன்று மூன்று நாளே நிறைந்த குட்டி மான் ஒன்று. வேடன் அந்த மூன்று மான்களையும் பிடிக்க துரத்துகிறான். கூட்டத்தோடு கூட்டமாக ஆண் மானும், குட்டி மானும் போய்விட பெண் மான் தனியாக சிக்கிக் கொள்கிறது. அதைத் துரத்துகிறான். பிடித்து விடுகிறான். பிடித்து இழுத்து வரும்போது நபிகள் நாயகம் எதிரே வருகிறார். பெண் மான் வேடனைப் பார்த்து “என்னை விட்டு விடு” என்று கெஞ்சுகிறது. “என்னைப் பிரிந்து ஆண் மான் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும். அது மாத்திர மல்ல. மூன்று நாள் கூட நிரம்பாத குட்டி மானுக்கு நான் பால் கொடுக்க வேண்டும். வேடனே என்னை விட்டுவிடு” என்று கெஞ்சுகிறது. “விட முடியாது” என்று வேடன் மறுக்கிறான். நபிகள் நாயகம் குறுக்கிடுகிறார். “உனக்கு இரக்கமே இல்லையா அப்பா? குட்டிக்குப் பால் கொடுக்க வேண்டுமென்று அந்த மான் கெஞ்சுகிறதே அதை விட்டுவிடு” என்கிறார். வேடன் முடியாது என்கிறான்.

பிறகு சொல்கிறார் “அந்த மானை விடு. அது போய் மீண்டும் உன்னிடம் திரும்பி வந்து விடும். குட்டிக்குப் பால் கொடுத்து விட்டு வந்து விடும்” என்கிறார். வேடன் நம்ப மறுக்கிறான். “நீ நம்பவில்லை என்றால் அந்த மான் திரும்பி உன்னிடம் வருகின்ற வரை அதற்குப் பிணையாக - ஜாமீனாக நான் உன் பக்கத்திலே இருக்கிறேன்” என்று நபிகள் நாயகம் சொல்கிறார்.

அதற்குப் பிறகு வேடன் அந்த மானை “நீ குட்டிக்குப் பால் கொடுத்து விட்டு உடனே வந்து விடவேண்டுமென்று நிபந்தனை விதித்து அனுப்புகிறான். அந்தப் பெண் மான் தனது குட்டியைத் தேடி ஓடுகிறது. ஓடுகின்ற நேரத்திலேயே குட்டிக்குப் பால் கொடுக்கப் போகிறோம் என்ற பாச உணர்வால் வழியெல்லாம் பால் பொங்கி வழிகின்றது. அது வெண் நிலவின் ஒளியைப் போல் இருக்கின்றது என்று உமறுப்புலவர் வர்ணிக்கிறார்.

குட்டிக்குப் பால் கொடுத்து விட்டு பெண் மான் ஆண் மானிடம் விடைபெறுகிறது. “நான் மீண்டும் வேடனிடம் செல்ல வேண்டும். எனக்காக நபிகள் நாயகம் அங்கே ஜாமீன் இருக்கிறார்” என்று கூறுகிறது. மற்ற மான்கள் எல்லாம் செல்ல வேண்டாமென்று தடுக்கின்றன. அப்பொழுது அந்தப் பெண் மான் “நான் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றாமல் உயிரோடு வாழ்வதைவிட ஒரு புலியால் அடிக்கப்பட்டு செத்துவிடுவதே மேல்” என்று கூறுகின்றது.

அந்த அளவிற்கு நாணயமான மான். இந்த மான், சீறாப் புராணத்தில் உமறுப்புலவர் சுட்டிக் காட்டுகின்ற மான். அது வேடனிடம் திரும்பி வருகின்றது. வேடன் அந்த மானின் நாணயத்தைக் கண்டு “நீ உயிரோடு இரு” என்று சொல்லி வாழ்த்தி அனுப்புகிறான்; நபிகள் நாயகத்தையும் வணங்குகிறான் என்று அந்தப் புராணத்தின் அந்தக் கட்டம் முடிகிறது.

*