மானம்

Honour

மு. கருணாநிதி

மானம்

வேலனுக்கு அப்போது வயது பத்துதான்.

பள்ளிக்குச் செல்லும் பருவம். அள்ளிப்பருகிடத் தோன்றும் அழகான உருவம். பிள்ளைக் கனியமுதெனப் பண்பாடும் அவன் பெற்றோர் தங்கள் குல விளக்கை கொஞ்சாத நேரமில்லை. இருபத்தாறு வயது நிரம்பிய வைதேகியும், முப்பத்தைந்து ஆண்டு கடந்த சிங்காரமும் அந்த ஊரில் நடத்திக் காட்டிய இல்லறமிருக்கிறதே; அது எழில் மிக்க எடுத்துக்காட்டு. ‘சிங்கார வாழ்வு’ என்றே கூறுவார்கள் ஊரார்—உரையாடல்களின்போது! சிந்தை மகிழச் செய்யும் கணவன்—சிறப்புவளர் மனைவி — செல்வப் பிள்ளையாண்டான் — குறையென்ன அக்குடிக்கு! சாவின் கண்ணிலே அந்தக் குடும்பம் பட்டது.

பகைவரும் புகழும் பண்புடைய வாழ்வு என்று அவர்களுக்கு பாராட்டுரையா படித்துக்கொடுக்கும் சாவு! சாவு நுழைந்தது அந்த சந்தனக்காட்டிலே! மேய வந்தமாடு அழகான அருகம்புல்லாயிற்றே என்று விடுவதில்லை; அதன்மீது பாயவந்த புலியும் சாந்தமான பசுவாயிற்றே என்று விடுவதில்லை. அது போலத்தான் சாவும்.

அது, வைதேகியின் கணவன், வேலனின் தந்தையை, சீருற்ற சிங்காரத்தைக் கொத்திக்கொண்டு போய்விட்டது. சாவினுங் கொடிய சமூகமும் அவளுக்கு “சகுனத்தடை” என்ற ‘சர்’ பட்டத்தை சூட்டி குப்பை மேட்டில் கொளு வைத்துக் களித்தது.

◆ ◆

குப்பை மேட்டு குண்டுமணியை குறிபார்த்துக் கொண்டிருந்தான் குடிகாரக் கருப்பன். வேலியிழந்த கொல்லையும், தாலியிழந்த தையலும். இந்த முரட்டு உலகில் பாதுகாப்பற்றவர்கள் தானே! கருப்பன் வைக்கும் கண்ணியைப் புரிந்துகொண்டாள் வைதேகி. மகனை பள்ளிக்கு அனுப்புவதும், அவன் திருப்பி வரும்போது கணவனின் தேஜசை மைந்தனின் மந்தகாசமுகத்தில் கண்டு மகிழ்வதுமே இனி தனக்கு வேலையென்று முடிவு கட்டிக்கொண்ட அவளுக்கு, குடிகார கருப்பனின் குறியிலிருந்து எப்படித் தப்புவது என்ற வேதனையும் வந்து சேர்ந்தது வானம்பாடிகளையும் வல்லூறுகளையும், வட்டமிடச் செய்யும் வையகத்தை வைத்து தீர்த்தாள். ஆனால் அதுவல்ல அவள் மீள்வதற்கு வழியென பதையும் உணர்ந்து வெதும்பினாள். அவளுக்கு ஒரே ஒரு ஆறுதல் இருந்தது. அதுவும் அரை குறையாக! புதல்வன் பெரியவனாகிவிட்டால் பொல்லாத கருப்பன்களே வில்லாக வளைந்தெறிந்துவிடுவான் என்பதுதான் அந்த ஆறுதல் ஆனால் அதை நினைத்து அவளே “சே! என்ன ? நேரத்திற்கு பொருந்தாத ஆசை” என்று தன்னையே கிண்டல் செய்து கொள்வாள். ஆனாலும் அவள் இருதயத்தின் ஒரு மூலையிலே துளிர்த்த அந்த ஆசை வளரத்தான் ஆரம்பித்தது. நாட்கள் எண்ணினாள். மகன் பெரியவனாகிவிடவேண்டுமென்று நாட்களை விரட்டியும் அடித்தாள். சிறைச்சாலையிலே கைதியின் அவசரத்தை யுணர்ந்து கொள்ள முடியாத “நாள்” தானே வெளியுலகிலும் இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியவில்லை. வேலன் விரைவில் வளர்ந்து விட்டால், தன்னைக் காக்கும் அரணாவான் ; தாயைக் காக்கும் மகனாவான், மானங்காக்கும் வீரனாவான் என்று நம்பினாள்.

வேலன் வளர்ந்தானே இல்லையோ; கருப்பனின் கொடுமைகள் கனவேகமாக வளர்ந்தன. அந்தத் தேள் என்றைக்குத் தன்னைக் கொட்டுமோ என்று பயந்து கிடந்த வைதேகியின் காதில் தேனினுமினிய சேதியொன்று தென்றல் கொண்டுவந்தது. குடிகாரக் கருப்பன் கொலைக் குற்றம் ஒன்றில் ஈடுபட்டு பதினைந்து ஆண்டு தண்டனை பெற்று சிறையேகினான். நாள் என்னும் அவசியம் வேலனின் தாய்க்கு இல்லாமல் போயிற்று.

◆ ◆

ஆண்டுகள் உருண்டன. வேலன் வியாபார நிமித்தம் வெளியூர் சென்றவன் திரும்பி வரவில்லை இன்னும்! மகன் வந்ததும், அவனிடம் மண விஷயமாகப் பேசி அடுத்த மாதத்திலே “ஜனநாயக மாமியார் ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்று எண்ணிக்கிடந்தாள் வைதேகி. கதவு தட்டும் சப்தம் கேட்டது. கண்மணி வந்துவிட்டான் என்று கதவைத் திறந்தாள். கண்மணியல்ல; காராக்கிரகத்திலிருந்து மீண்ட கருப்பன் உள்ளே நுழைந்தான்.

“ஆகா! வைதேகி — நாற்பது வயதானாலும் நல்ல அழகாய்த்தானிருக்கிறாய்! பார்த்தாயா; எனக்கு உன் மேலுள்ள பாசத்தை!

சிறையைத் திறந்தார்கள் — நேரே இங்கு வந்தேன். “செப்புச் சிலையினைக் காண” என்று கருப்பும் வெளுப்பும் கலந்த மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டான். வைதேகி கதறினாள். அவள் வாயைப் பொத்திக்கொண்டான். கசங்கிப்போய் உதிர்ந்து படுத்துப்போன இந்த மலரைப் பிய்த்தெறிய விரும்பினான். நிலமை பயங்கரமாயிற்று. அவன் பிடியிலே சிக்கினாள். வைதேகி, வெறித்துப் பார்த்தாள் அவனே சிரித்து அணைத்தான்.

பலகணியிலே ஒரு முகம். வேலனின் முகம். வேலா வந்துவிட்டாயா மகனே! “மானத்தைக் காப்பாற்றடா தம்பி” என அலறினாள். அதற்குள் கருப்பன் வாயை அடைத்துவிட்டான். வேலன் பாய முனைந்தான் அதே நேரத்தில் கருப்பனின் இடையிலிருந்து கைக்கு மாறிய பளபளப்பான கத்தியையும் கண்டான் கருப்பன் வேலன் பக்கம் திரும்பி கத்தியை ஓங்கியபடி “மானமா? உயிரா?” என்று அதட்டினான். வேலன் ஓடினான். கருப்பனிடமல்ல-வெளியே ஓடினான்.

கருப்பன் வைதேகியை இறுக அணைத்தான். அவள் இலட்சியச் சுடரையும் அணைத்தான்.

மகன் வளர்ந்து விட்டால் யாருக்கும், எதற்கும் அஞ்சவேண்டியதில்லை என்றிருந்த அந்தத் தாய் இப்போது அழுதாள், மானத்தைக் காக்கமுடியாத கோழை மகனே என்று புலம்பினாள். மானங்காக்காத மைந்தனைவிட தன்மானத்தைப் பறித்த கருப்பன் எவ்வளவோ மேல் என்று அந்த மாதாவின் மனம் பேசிற்று. ஆனால் மானத்தைப்பற்றி பிரசங்கம் செய்ய முடியவில்லை. பிணம் பேசாதல்லவா! கடைசியாக, வீட்டு வெள்ளைச் சுவரில் கரியால் எழுதிவைத்திருந்தாள் “மானத்தைக் காக்காத கோழையின் மாதா மரணத்தைத் தழுவினாள்” என்று!

ஓடிய வேலன் ஊருக்குத் திரும்பவே பயந்தான். அன்று கருப்பன் காட்டிய பட்டாக்கத்தி அவனைப் பயமுறுத்தியபடியிருந்தது. சிலநாள் சுற்றிக்கொண்டிருந்தான் வேலன். ஒருநாள் தினசரி பத்திரிகை கட்டு ஒரு ருசிகரமான செய்தி கிடைத்தது. “புகைவண்டியொன்று கவிழ்ந்தது. நானூறுபேர் மாண்டனர்” என்பதுதான் அது. அப்படி செத்துப்போனவர்களில் அடையாளம் தெரியாமல் போன வேலனும் ஒருவன். எந்த உயிருக்காக, தன்னை போஷித்த உதிரத்தையே உதிரத் தள்ளினேனே, அந்த உயிர் பறிபோயிற்று. அன்றைக்கே கருப்பன்மீது பாய்ந்து அவன் கத்திக்கு நேர் நின்றிருந்தால் அன்னையின் மானத்தையும் தன்மானத்தையும் காப்பாற்றியிருக்கலாம். இப்போதோ மானத்தையும் இழந்தான். உயிரையும் இழந்தான். இழந்த மானத்தை இறப்பால் காப்பாற்றிக் கொண்டாள் தாய். ஆனால் மகனே? அந்தோ பரிதாபம்! அவன் மானமிழந்தது பற்றித்தான் ஊர் பேசியது. நானூறு பேரோடு செத்தது யாருக்குமே தெரியாமல் போய்விட்டது.

சாவை இன்று தடுத்துவிடலாம். ஆனால் என்றைக்கோ ஒருநாள் அது மனிதனை மேய்ந்து விட்டுப் போய்விடுகிறது. அதனால் சாவுக்குப் பயந்து பயனென்ன ? மானத்துக்கு பயப்படுவோம் என்ற ஒரு சாதாரண எண்ணங்கூடவா இந்த மானிட சாதிக்கு ஏற்படக்கூடாது ! மானத்தை செத்தும் காப்பாற்றலாம். உயிர், ஒருநாள் போயே தீரும். காப்பாற்ற முடியாத உயிரை காப்பாற்ற துடிக்கும் மனித குலமே ! காப்பாற்றக்கூடிய மானத்தை, நீ காற்றிலே பறக்கவிடுவது நியாயந்தானா ?