குறிக்கோள்

The Goal

மு. கருணாநிதி

குறிக்கோள்

எனக்குப் பிடித்தமான கருத்தல்ல கதையம்சங்கொண்ட பாரதத்திலே இருந்து ஒரு உதாரணம்.

அர்ச்சுனன் புகழ்பெற்ற வில்வீரன். அவன் காண்டீபன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது மிக இளமைக் காலத்தில். அந்தப் புகழைப் பெற்றது அவன் துரோணரிடத்தில் மாணவராக இருந்த போதுதான். துரோணரிடத்தில் மாணவராக பாண்டவர்களும் கௌரவர்களும் இருந்தபோது அவர்களது பயிற்சி முடிந்து ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்காக சோதனை செய்து பார்ப்பதற்காக துரோணர் பாண்டவர்களையும் கௌரவர்களையும் அழைத்து ஒரு பெரிய மரத்தைக் காட்டி அந்த மரத்தில் அமர்ந்திருந்த கிளியைக் காட்டி ஒவ்வொருவரையும் வில்லை வளைக்கச் சொன்னார்.

வில்லை வளைத்துநின்ற துரியனைப் பார்த்து, ‘என்ன தெரிகிறது’ என்றுகேட்க மரம்தெரிகிறது—இலைதெரிகிறது— என்று வர்ணித்துக் கொண்டு செல்ல நீ வேண்டாம் என்று கூறிவிட்டு எல்லா வீரர்களையும் பார்த்துக் கேட்க ஒவ்வொருவரும் மரம் தெரிகிறது—இலை தெரிகிறது கிளை தெரிகிறது என்று கூற அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு இறுதியாக அர்ச்சுனனை அழைத்து “நீ பார்! என்ன தெரிகிறது” என்று கேட்க அர்ச்சுனன் சொன்னதும் “என்னுடைய வில்லில் பூட்டப்பட்டிருக்கின்ற அம்பின் முனையும், மரக்கிளையிலே அமர்ந்திருக்கின்ற கிளியின் கழுத்தும் தான் தெரிகிறது” என்று சொன்னதும். உடனே அம்பை எய்தான். கிளியின் கழுத்து கீழே விழுந்தது.

எனவே குறிக்கோள் என்று ஒன்று இருக்குமேயானால் அந்தக் குறிக்கோளின் மேல்தான் முழுக்கவனமும் இருக்க வேண்டுமே அல்லாமல் அக்கம்பக்கம் கவனம் செல்லக்கூடாது என்பதற்கு எடுத்துக் காட்டாகவும், அந்த எடுத்துக்காட்டிலே வெற்றி பெற்றவனாகவும் விளங்கினான் அர்ச்சுனன் என்றால் இளம்பிராயத்திலேதான் ! கொஞ்சம் வாலிபனான பிறகு அக்கம் பக்கம் திரும்பினான் எந்தெந்தப் பக்கம் என்றெல்லாம் உங்களுக்குத் தெரியும். நான் அந்த அல்லி, பவளக்கொடி கதைக்கெல்லாம் செல்ல விரும்பவில்லை. ஆனாலும் இளமைக் காலத்திலே அர்ச்சுனன் புரிந்த அற்புதங்களைக்காட்டத்தான் இதை சொன்னேன்,