கொன்று வருக!
Go and Kill Him!
மு. கருணாநிதி
கொன்று வருக!
கற்பின் திருவுருவாம் கண்ணகியின் காற்சிலம்பை விற்க கடைவீதி வருகிறான் கோவலன். அங்கே ஒரு பெரியவரிடம் காட்டுகிறான்.
“ஏ அப்பா!...விலை மதிக்க முடியாதசிலம்பு. என்சொத்து முழுவதும் விற்றால்கூட இதை வாங்கப் பொருள் போதாது... நீ இதை எடுத்துக்கொண்டு அரண்மனைப் பொற்கொல்லரிடமேபோ!...அவர் விற்றுத் தருவார்” என்கிறார். பிறகு வீதியைப்பார்த்து “அடேடே.. அதோ, அவரே வருகிறாரே. பொற்கொல்லரே! பொற்கொல்லரே! நில்லும்” — என்று கூறிய அந்தப் பெரியவர் தலைமைப் பொற்கொல்லரைத் தடுத்து நிறுத்துகிறார். தலைமைப் பொற்கொல்லருடன் வந்த நூறு பொற்கொல்லர்கள் நிற்கிறார்கள். பின்னர், தம்மை அழைத்த பெரியாரைப் பார்த்து, “என்ன...... என்ன?” — என்று கேட்கிறார் தலைமைப் பொற்கொல்லர்.
“இதோ, இவரிடம் ஒரு அழகான சிலம்பு இருக்கிறது.” — என்கிறார் பெரியவர்.
“சிலம்பா?”.....
“ஆமாம். விலைமதிப்பில்லா சிலம்பு!...அதை விற்றுத் தர வேண்டுமாம்.” என்று கூறிய பெரியவர் கோவலனை நோக்கி “கொடப்பா அவரிடம்” என்கிறார்.
கோவலனும், தன் சிலம்பைத் தலைமைப் பொற்கொல்லரிடம் தர
“இனி என் வேலை தீர்ந்தது. நான் வருகிறேன்” என்று கூறிக்கொண்டே பெரியவர் போகிறார்.
சிலம்பைப் பார்த்தவாறு பொற்கொல்லன் மெளனமாக நடக்கிறார். கோவலனும் அவர் பின்னால் நடக்கிறான். நூறு பொற்கொல்லர்களும் தொடர்கிறார்கள். பொற்கொல்லர்கள் ஏனோ ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஒரு பெரியமண்டபத்தினருகே சென்றதும் பொற்கொல்லர் நின்று, “நீ எந்த ஊர்?” என கோவலனைக் கேட்கிறார்.
“பூம்புகார்...”
“பெயர்?...”
“மனைவியின் சிலம்பை விற்கும் அளவிற்கு தாழ்ந்துவிட்ட நான்... என் பெயரை சொல்ல விரும்பவில்லை. மன்னிக்கவும்....”
“நீ எப்படி என்னிடமே சிலம்பை விற்க வந்துவிட்டாய்?”
கேள்விக்குப் பொருள் புரியாமல் கோவலன் விழிக்கிறான்.
“பரவாயில்லை. அந்தப் பெரியவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எல்லாம் நல்லதுக்கே! பாண்டிமாதேவியாருக்கு ஒற்றைச் சிலம்பு தேவை. அவர்கள் விரும்பும் அந்த ஒப்பற்ற சிலம்பு. இதுவாகவே இருக்க முடியும். தேடி யலைந்தது தானாகவே கிடைத்துவிட்டது. நீ சிலம்போடு இந்தமண்டபத்திலேயே இரு. நான் மன்னரிடம் செய்தியை அறிவித்து உன்னை அழைத்துப் போகிறேன்.” என்கிறார் தலைமைப் பொற்கொல்லர்.
“மிகவும் நன்றி” என்கிறான் கோவலன். தலைமைப் பொற்கொல்லர் நூற்றுவரைப் பார்த்து, “நீங்களும் இவருக்குத் துணையாக இங்கேயே இருங்கள். நான்விரைவில் வந்துவிடுகிறேன்.” — கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் போகிறார்.
*
ஆரியப்படை கடந்தநெடுஞ்செழியனின் பள்ளியறை.
அவைக்களம் செல்லுதற்குரிய உடை புனைந்து புறப்படத் தயாராகிவிட்ட பாண்டியன், அரசியை நோக்கி “நேரமாகிறதே!...நீ புறப்படவில்லை நீதிமன்றத்திற்கு?”
“நான் வரவில்லை சிலம்பில்லாத காலோடு!”
“இன்று நீதிமன்றத்தில் சிலம்புத் திருடனையுந் தான் கண்டு பிடிக்கப் போகிறேனே!....”
“ஆகா!...எவ்வளவு அக்கறை! உங்களுக்குப் புறப்பாட்டு எழுதவும், போர்த்தளவாடம் சேகரிக்கவும், பொழுதெல்லாம் பாண்டி மண்டிலத்துச் சேதி கேட்கவும் நேரமிருக்குமே தவிர, பொலிவிழந்து கிடக்கிறதே துணைவியின் பாதம் என்ற கவலை வேறு இருக்கிறதா?....”
“உன்னையும் என்னையும் விட நாடு பெரியது என்பதை மறந்துவிடாதே! அற்பச் சிலம்புக்காக ஒரு அரசி இவ்வளவு கவலைப்படுவதா?”
“அற்பச் சிலம்பாகத்தானிருக்கும் தங்களுக்கு! நானே அற்பமாகி விட்டேனல்லவா அதனால்...”
“சரி...சரி...நீ வருகிறாயா இல்லையா; நீதிமன்றத்துக்கு?”
“சிலம்பில்லாமல் இங்கிருந்து ஒரு அடிகூட எடுத்து வைக்க மாட்டேன்.”
“...ம்...சரி...வருகிறேன்” — என்று கூறிவிட்டு வேகமாகப் போகிறான் பாண்டியன் நெடுஞ்செழியன். வெளியே அதிகாரி (சிலம்புத் திருடி) தயாராக இருக்கிறான். அரசனைக் கண்டதும் வணங்கிப் பின்னால் செல்கிறான். தாழ்வாரத்தில் நெடுஞ்செழியன் வந்தபோது தலை தாழ்த்தி வணங்குகிறார், தலைமைப் பொற்கொல்லர்.
“என்ன?....”
“சிலம்பு திருடிய கள்வன் அகப்பட்டு விட்டான் மன்னவா?....”
“எங்கே அவன்?”
உண்மையிலேயே சிலம்பைத் திருடிய அதிகாரி திடுக்கிடுகிறான்.
“சிலம்பைப் பழுது பார்த்து விற்பதற்கு முயன்றுகொண்டிருந்தான். அவனைப் பிடித்து பத்திரப்படுத்திவிட்டு செய்தி சொல்ல ஓடி வந்தேன்” — பொற்கொல்லன்.
“அப்படியா?” — என்று கேட்ட நெடுஞ்செழியன் அதிகாரியை நோக்கி “பாண்டிய நாட்டில் கள்வனா? அவனைக் கொன்று வருக!” என்கிறான்.
கோயில் மண்டபத்தில் கோவலன் உலவிக்கொண்டிருக்கிறான். பலிபீடம் போன்ற ஒரு மேடை அங்கே இருக்க அதனருகே 100 கொல்லர்களும் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் தலைமைப் பொற்கொல்லரும் அதிகாரியும் வருகிறார்கள். அவர்களைக் கண்ட கொல்லர்கள் எழுந்து நிற்கிறார்கள்.
“பொற்கொல்லரே! போன காரியம் வெற்றி தானே?” — என்று ஆவலுடன் கேட்டான் கோவலன்.
“நான் போன காரியம் வெற்றிதான்! நீ வந்த காரியம் தான் தோல்வியில் முடிந்து விட்டது!” என்றான் பொற்கொல்லன்.
“அப்படியானால் மன்னருக்குச் சிலம்பு தேவையில்லையா?”
“மன்னருக்கு ஏன் சிலம்பு?... மகாராணிக்கல்லவா வேண்டும்...”
“பொற்கொல்லரே!......” கேலி கண்டு ஆத்திரப்பட்டான் கோவலன்.
“சிலம்பை அவரிடம் கொடு.” — என்று அதிகாரியைக் காட்டினான் பொற்கொல்லன்.
அதிகாரி கைநீட்ட சிலம்பை அவனிடம் தருகிறான் கோவலன்.
“உனக்கேது இந்தச் சிலம்பு?” கேட்டான் அதிகாரி.
“என் மனைவியின் சிலம்பு...”
“இதை விற்க வேண்டிய காரணம்...”
“வாங்குபவருக்குத் தேவையில்லாத கேள்வி...”
“ம்... ஒற்றைச் சிலம்பை விற்கிறாயே! அதற்காவது விளக்கம் கூறு!....”
“விலை கூறுவேன் சிலம்புக்கு?... விளக்கம் கூற மாட்டேன் விற்பதற்கு!”
“திறமையான திருடன்!”
“என்ன?” அதிர்ச்சியடைந்தான் கோவலன்,
“ஆமாம். இல்லாவிட்டால் தோலிருக்கச் சுளை விழுங்கியதுபோல் பூட்டிய பெட்டி பூட்டியவாறிருக்க திறவுகோலோ என்னிடமிருக்க, திருட முடியுமா இந்தசிலம்பை...?” — என்று கூறினான் தலைமைப் பொற்கொல்லன்.
“ஆ!... சிலம்பைத் திருடினேனா? பொற்கொல்லரே!... ஏனிந்தப் பழி என்மீது? இஃது என்ன அநியாயம்?” — என்று துடித்துக் கேட்டான் கோவலன்.
“அரசியின் சிலம்பைத் திருடியது மட்டும் நியாயமோ!....”
“யார் திருடியது உங்கள் அரசியின் சிலம்பை?.... அதைக் கண்டு பிடிக்க வகையற்றவர்கள்—திறனற்றவர்கள்... வழியிலே போகிறவன்மீது பழியைப் போடுவதா?....”
அதிகாரி துடித்தெழுந்து “அடக்கடா வாயை!... பஞ்சமா பாதகங்களின் நிழல்கூட நுழையமுடியாத பாண்டி மண்டலத்தில் ஒரு பாதகம் உன்னுருவில் நுழைந்திருக்கிறது என்பதைக் கேட்டு மன்னர் பதைக்கிறார்... துடிக்கிறார்!....” என்றான்.
“அந்த மன்னரை நான் காணுகிறேன்... கள்வனல்ல காவலனே நான்...... கருத்தழிந்த காரணத்தால் கைபிடித்த மனைவிதனைக் கண்ணீரால் மிதக்கவிட்டுக் கனகமலை.. வைரமலை... கணக்கிடவே முடியாத வெள்ளிமலை... அத்தனையும் அழித்துவிட்டுப் பிழைப்புக்கு வழிதேடிப் பிற நாடு வந்திட்ட மாபாவி!...
“என் சீதளச் செந்தமிழாள்... சிந்தைக்குப் பெருவிருந்து.. அவள் செந்தாமரைக் கால்களிலே அணிந்திருந்த சிலம்புதனை விற்பதற்கும் துணிந்து விட்ட கொடுமையாளன்!—என விளக்குகின்றேன்!......
“தமிழ் படிந்த நெஞ்சமிது! தமிழ்த்தாயின் வயிற்றினிலே கருவாகி உருவாகித் திருநாட்டின் மண்மீது தவழ்ந்தவன் நான்... இருட்டுமதி படைக்கவில்லை. திருட்டுத் தொழில் நடத்துவதற்கு—என்பதனைக் கூறுகின்றேன்!... எந்நாடும் புகழுகின்ற பெரு வேந்தன் நெடுஞ்செழியன் அவைக்களத்தில் நீதிதனைப் பெறுகிற உறுதி எனக்குண்டு!... உடன் அழைத்துச் செல்வீர் வேந்தரிடம்!....”
“வேந்தரென்ன; உன் வீட்டுக்காவலனென்று நினைத்தபோது சந்திக்க?...”
“நாட்டுக்குக் காவலன்!... நீதிக்கு நேர்மைக்கு அறத்துக்கு அன்புக்குத் தமிழுக்குக் காவலன் நெடுஞ்செழியன்...! அநீதி... அணுவிலோர் பாதி அவன் ஆட்சியில் நடைபெறவும் அனுமதிக்கமாட்டான்.... என அகிலம் புகழக்கேட்டிருக்கிறேன். அந்தப்பாண்டியத்துப் பெருவேந்தன் பார்க்கட்டும் என் முகத்தை!... கள்வனுக்குரிய இலக்கணத்தைக் காண்பானா?... களங்கத்தின் சாயல்தனை எடுத்துக் காட்டுவானா?... முகக்குறியால் நீதி சொல்லும் முடிவேந்தன் நெடுஞ்செழியன் முன்னாலே நிற்கிறேன்!... அவன் முடிவு தனை ஏற்கின்றேன்!... இட்டுச் செல்வீர் என்னை!....”
“மன்னரை ஏமாற்றலாமென நம்புகின்றாய்... கைகாரக் கள்வனே!... உன் போன்ற பாவிகள் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் எமது பாண்டியர்!”.......
“ஏன்!... உன்னைக் காண்பவர் என்னைக் காணமாட்டாரா?....”
“திமிர் பிடித்தவனே!.... ஒப்புக்கொள் உன் குற்றத்தை..... இல்லையேல் தப்பாது உன் உயிர்!”...
“மானம்போய் உயிர்வாழும் மரபிலே பிறக்கவில்லை நான்... மறத் தமிழர் குடியிலே பிறந்தவன்!....”
‘நானும் தமிழ்க்குலந்தான்!’ திமிராகக் கூறினான் அதிகாரி.
“நீ... குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு! கொள்கையற்றவன்!... குள்ளநரி! வீரபரம்பரையின் விதிவிலக்கு!....”
“நாக்குத் துண்டாகிவிடும் நடுத்தெருவில் நாய் போல் இழுத்துச் செல்லப்படுவாய்!”...
“உங்கள் நாட்டின் புகழ் நாலு திக்கிலும் பரவும்!... செய்யுங்கள் அந்த நல்ல காரியத்தை!....”
இடையிலே தலைமைப் பொற்கொல்லர் தலையிட்டு “ஏனப்பா உனக்கு இவ்வளவு வாய்த்துடுக்கு!... திருடியதுமில்லாமல் திமிர்வாதம் வேறா?... கொழுப்பெடுத்தவனே!.......... எதிர்த்துப் பேசாமல் உண்மையைக் கூறிவிடு!...” என்றார்.
‘பொற்கொல்லரே’ உணர்ச்சிவசப்பட்டுக் கூறினான் கோவலன். பொற்கொல்லன் “நீ கள்வனே தான்!...” என, நூறு பொற்கொல்லர்களும் சேர்ந்துகொண்டு “கள்வனே தான்! கள்வனே தான்!!” என கோவலனை நோக்கிக் கத்துகிறார்கள்.
கோவலன் உணர்ச்சிப் பெருக்கோடு “கள்வன்! நான் கள்வன்! கண்ணகி!... உன் கணவன் கள்வன்! என் பத்தரை மாற்றுத் தங்கமே!... பாண்டிநாடு தீர்ப்பளிக்கிறது அப்படி! நான் கள்வனா கண்ணே!... கண்ணீர் ததும்ப விடை கொடுத்தாயே கண்ணகி; இப்படி ஒரு களங்கம் எனக்கு வருமென்று தெரிந்து தானே, கண்மணி!
“தித்திக்கும் செந்தேனே!... தெருப்புழுதியில் வீனை என உன்னை வீசிவிட்ட கயவனுக்குச் சரியான தண்டனை! சரியான பரிசு!... கள்வன்! கள்வன்!!... கள்வன்!!!... ஐயோ! ஏற்கனவே ஏக்கத்தால் வாடிவிட்ட உன் இதயம்... இந்த இழிசொல் எனக்குக்கிடைத்த சேதியை எப்படித்தான் தாங்குமோ!... எனை மணந்தாய்! இன்பம் பெறலாம் என இருந்தாய்!... எரிமலையாய் ஆக்கி விட்டேன் உன் வாழ்வை!... அதுபோதாதென்று கள்வனின் மனைவியடி கண்ணகியென்று ஊரார் தூற்றுதற்கு உனை ஆளாக்கி விட்டேன்! உதய தாரகையே! ஒப்பில்லா மாணிக்கமே! மாடமாளிகை கூட கோபுரத்தில் அமர்ந்து, மகரயாழ் நீ மீட்ட... மந்தமாருதம் தாலாட்ட உன் மடிதனிலே உறங்க வேண்டிய நான்... மதுரைமாநகரத்து வீதியிலே... கள்வன் எனும் கனை தாக்கக் கதறுகின்றேன்! புலம்புகின்றேன்!...
“நான் கள்வனாம் கண்ணகி, கள்வனாம்!...
நீ சொல்...
நான் கள்வனா...?
நான் கள்வனா?...
இதோ கள்வன்!!
இவன் கள்வன்!!!....
இவன் கள்வன்!!!”
என அதிகாரியிடம் அணுகி அவனைச் சுட்டிக் காட்டினான். அதிகாரி வாளை ஓங்கி “என்ன சொன்னாய்?” எனத்தலையைத் துண்டிக்க வீசுகிறான். கழுத்தில் வெட்டு விழுந்தது.
“ஆ... கண்ணகி!”... எனத் துடித்து விழுகிறான் கோவலன்.