கொல்லப்பட வேண்டியது புலி, ஆனால்...
The Tiger Was the One to Be Killed, But...
மு. கருணாநிதி
கொல்லப்பட வேண்டியது புலி, ஆனால்...
...கொல்லி மலையை ஒரு காலத்தில் பரிபாலித்தவன் வல்வில் ஓரி என்பான் ஆவான். கடை ஏழு வள்ளல்களில் அவனும் ஒருவன். அந்த ஒருவனுடைய பரிசினை வேண்டி வன்பரணர் என்ற புலவர் வருகிறார். வருகின்ற நேரத்தில் அந்த ஓரியைப் பற்றி ஒரு பாடல் இயற்றிக் கொண்டு வருகிறார். அந்தப் பாடலின் பொருள் என்ன தெரியுமா?
“வல்வில் ஓரி மன்னா! உன்னுடைய கையிலே இருக்கின்ற அம்பு, யானையை வீழ்த்தத்தக்க அம்பு. அத்தகைய அம்பால் நீ ஒரு புலியை எய்தாய். அந்த அம்பு புலியின் மீது பட்டு, அதனுடைய உயிரைக் குடித்து - பிறகு புலியை விட்டுக் கிளம்பி அங்கே ஓடிக் கொண்டிருந்த மான் மீது பட்டு, அதன் உடலை ஊடுருவி அங்கே திரிந்து கொண்டிருந்த பன்றியின் உடலில் பட்டு, அந்தப் பன்றியையும் கொன்று விட்டு, கடைசியாக அந்த அம்பு ஒரு புற்றிலே படுத்திருந்த உடும்பின் உடலிலே தைத்தது” என்று அந்த அம்பின் பெருமையைச் சொல்கிறார்.
கொல்லப்பட வேண்டியது புலி. ஆனால் அத்துடன் மானும் கொல்லப்பட்டது என்கிற போதுதான், நமக்கு வருத்தம் ஏற்படுகிறது.