கழுத்திலே ஒரு முடிச்சு... அதற்கு ஒரு கதை

A Knot in the Neck... and a Story Behind It

மு. கருணாநிதி

கழுத்திலே ஒரு முடிச்சு... அதற்கு ஒரு கதை

...ஒருமுறை உங்கள் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கழுத்திலே ஒரு முடிச்சு இருக்கும். ஓர் எலும்பு முடிச்சு. ஏனென்றால் அந்த எலும்பு முடிச்சுக்கு விஞ்ஞான ரீதியாகக் காணப்படுகின்ற ஆராய்ச்சியின் மூலம் நமக்குக் கிடைக்கின்ற தகவல் - உண்மை. கழுத்தை வளைத்து நிமிர்த்த, இப்பக்கம், அப்பக்கம் ஆட்ட உதவி புரிகின்ற சக்தியைத் தருகின்ற ஓர் எலும்பு முடிச்சு....

இந்த எலும்பு முடிச்சுக்குக் கூட புராணக் கதை இருக்கிறதே!...

ஒரு காலத்திலே தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். வீரர்களான (!) தேவர்கள் வாசுகி என்கிற பாம்பினுடைய வால் பக்கத்தையும், கோழைகளான (!) அசுரர்கள் அந்தப் பாம்பினுடைய தலைப்பாகத்தையும் பிடித்துக் கொண்டு மேரு மலையை மத்தாக ஆக்கி திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்.

ஒரு பக்கத்திலே அமிர்தம் உருவாயிற்று. இன்னொரு பக்கத்திலே ஆலகால விஷம் உருவாயிற்று.

அமிர்தத்தை தேவர்கள் எடுத்துக் கொண்டார்கள் - தன்னல மற்றவர்கள்!

“அமிர்தம் எங்களுக்கு இல்லையா?” என்று அசுரர்கள் கேட்டார்கள். ‘இல்லை’ என்றார்கள் தேவர்கள்.

ஆலகால விஷம் பொங்கிற்று. ஆலகால விஷம் பொங்கினால் அகில உலகத்திற்குமே ஆபத்து என்பதை அறிந்த எல்லா மக்களும் தேவர்கள் உட்பட அனைத்துப் பேரும் பரமசிவனிடத்திலே ஓடிச் சென்று “எங்களைப் பாதுகாப்பாயாக! அபயம்! அபயம்!” என்று கூறினார்கள்.

உடனே பரமசிவன் மக்களையெல்லாம் காப்பாற்ற, பொங்கி வந்த ஆலகால விஷத்தை எடுத்து வாயிலே போட்டுக் கொண்டார்.

பக்கத்திலே இருந்த பார்வதி, விஷம் சிவனுடைய வயிற்றுக்குள்ளே போனால் ஆபத்தாயிற்றே என்று கழுத்தைப் பிடித்துக் கொண்டார். ஆகவே வயிற்றுக்குள்ளே விஷம் போகாமல், கழுத்தோடு நின்றுவிட்டது.

சிவனுக்குக் கழுத்திலே நின்ற விஷம் தான் ஒரு கட்டியாக ஆயிற்று. அதுமுதல் உலகத்திலே இருக்கின்ற எல்லா ஆண்களுக்கும் கழுத்திலே ஒரு கட்டி...