கஜினி முகமதுவும் கவிஞர் பார்டோசியும்
Gajini Muhammad and Poet Pardosi
மு. கருணாநிதி
கஜினி முகமதுவும் கவிஞர் பார்டோசியும்
பார்டோசி என்கின்ற பெரும் கவிஞன் கஜினிமுகமது வுடைய நண்பன். கஜினிமுகமது அந்த நண்பனைப் பார்த்து “நான் எத்தனையோ போர்க்களங்களைக் கண்டிருக்கிறேன்; எத்தனையோ வெற்றிகளும் அடைந்திருக்கிறேன்; எவ்வளவோ பொருட்களைக் குவித்திருக்கிறேன்; மாடமாளிகைகள் கூட கோபுரங்கள் இவற்றுக்கெல்லாம் சொந்தக்காரனாக இருக்கின்றேன். ஆனால் இவைகள் அத்தனையையும் விட உயர்ந்ததாக நான் கருதுவது ஒரு கவிஞன் என்னைப் பற்றிப் பாராட்டுவதைத் தான்; எனவே கவிஞர் பார்டோசி அவர்களே அப்படிப்பட்ட ஒரு பாராட்டின் கவிமாலையத் தொடுத்து எனக்கு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்ள.
கவிஞர் சற்று தயங்க, உடனே கஜினிமுகமது, “நீங்கள் என்னைப் புகழ்ந்து அப்படிப்பட்ட ஒருகவிமாலை எழுதித்தருவீர்களேயானால் உங்களுக்கு அறுபதாயிரம் பொற்காசுகளைப் பரிசாக ‘வழங்குவேன்’ என்று குறிப்பிட்டு, அறுபதாயிரம் பொற்காசுகள் தனக்குக் கிடைக்கிறதே என்ற ஆர்வத்தின் காரணமாக பார்டோசி உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு கவிதைகளை எழுதத்தொடங்கி, எழுதியஅந்தக் கவிதை மணிமாலையை கொலு மண்டபத்திற்கு வந்து கஜினிமுகமதுக்குமுன் பாடிக்காட்ட கஜினிமுகமது பரவசத்தால் மயங்கியே போனான்.
கவிஞர் தனக்கு அறுபதாயிரம் பொற்காசுகள் வழங்கப்படும் என்று நின்றார். “ஏன் நிற்கிறீர்” என்று கேட்டான் கஜினிமுகமது.
கவிஞர் பார்டோசி “அறுபதாயிரம் பொற்காசுகள் வழங்குவதாகச் சொன்னீர்களே! அதை வாங்கிச் செல்லத்தான் காத்திருக்கிறேன்”. என்று சொன்னாராம்.
உடனே கஜினிமுகமது “அறுபதாயிரம் பொற்காசுகளா? யார் சொன்னது அப்படி? வேண்டுமானால் அறுபதாயிரம் வெள்ளிக் காசுகள் தருகிறேன்; வாங்கிக்கொண்டு செல்லும்” என்று கூறினான்.
அதைக்கேட்ட கவிஞர். “உன்னுடைய வெள்ளிக்காசு யாருக்கு வேண்டும்” எனச் சொல்லிவிட்டு தன்னுடைய இல்லத்திற்குச் சென்றார். இல்லத்திற்குச் சென்றவர் கவலையினால் வாடினார்; தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அந்த ஏமாற்றத்தின் விளைவாக அவருடைய நெஞ்சு அடைத்தது; இதயம் வெடித்தது. மாண்டே போனார்.
அவர் மாண்டபின் அவருடைய சடலத்தை இல்லத்திலிருந்து எடுத்துக் கொண்டு போகிற நேரத்தில், கஜினிமுகமதுவுடைய அரண்மனையிலிருந்து அறுபதாயிரம் பொற்காசுகள் ஏற்றிக் கொண்டு ஒரு வண்டி வந்தது.—வந்தவர்கள் கவிஞர் இறந்த செய்தியை கஜினி முகமது விடம் போய் சொன்னார்கள்.
கஜினியோ “என்னுடைய பாராட்டுக் கவிமாலையை அவர் பாடி முடித்ததும், அவரை ஒரு திடீர் ஏமாற்றத்துக்கு ஆளாக்க வேண்டும் என்று விளையாட்டுக்குத்தான் அப்படிச் செய்தேன். அவருக்கு அறுபதாயிரம் பொற்காசுகளைத் தருவதென்று தீர்மானித்த பிறகுதான் அப்படிச் சொன்னேன். ஆனால் அதுபோய்ச் சேருவதற்குள்ளேயே கவிஞர்பார்டோசியை இழந்து விட்டேனே” என்று கதறி அழுதான்.
அதைப் போலத்தான் பாரதியாருக்கு இன்று நாம் நூற்றாண்டு விழாக் கொண்டாடுகிறோம். பாரதியார் மறைந்த பிறகு மணிமண்டபம் கட்டினோம் அதற்குப் பிறகும் அவரைப் பாராட்டினோம்; புகழ்ந்தோம்; இவைகளெல்லாம் எதற்கு ஒப்பிடக்கூடிய தன்மையில் இருக்கிறதென்றால், தருகிறேன் என்று சொல்லி விளையாட்டுக்காக ஏமாற்றி, ஏமாற்றமடைந்த கவிஞன் இறந்து போனபிறகு “இதோ அறுபதாயிரம் பொற்காசுகள்” என்று அனுப்பினேனே கஜினிமுகமது அதைப் போலத்தான் இன்றைக்கு நாடு பாரதியாருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.