கைதியின் கதை

The Prisoner's Story

மு. கருணாநிதி

கைதியின் கதை

சந்தானம் சொல்கிறான்:

குமுதம் என்னோடு படித்தவள். குபேரன் வீட்டுக் கோதை. நானோ குடியானவன் மகன். இறந்துபோன என் அப்பாவின் எண்ணத்தை எப்படியும் பூர்த்தி செய்ய எண்ணி, என் தாய் என்னைப் படிக்க வைத்தாள். படித்தேன். குமுதமும் நானும்; சரி கதையை வளர்த்துவானேன், காதலர்களாகிவிட்டோம். வலியோன் மகளை எளியோன் காதலித்தேன் என்பதைத் தவிர எங்கள் காதலில் வேறெந்தக் குற்றமும் யாரும் சொல்ல முடியாமல் தான் இருந்தது. வழக்கம் போல் எங்களின் திருமணத் திட்டம் முறியடிக்கப்பட்டது. வயதான என் தாயும் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள். குமுதமோ, ஒருநாள் இரவு என் குடிசைக்கு ஓடி வந்தாள். “கொத்தடிமை ஆகிவிட்டேன் உங்களுக்கு; குடும்பம் நடத்துவோம் வாருங்கள்” என அழைத்தாள். “எதிர்ப்பு மலையாகுமே குமுதம்?” என எச்சரித்தேன். “மலையைப் பிளக்கும் சிற்றுளி நம் காதல்” என்றாள் - மறுக்க முடியுமா என்னால்! அன்றிரவே பயணமானோம்.

அயலூரிலே எங்கள் குடும்பம் ஆரம்பமானது. ஆனந்தமானது. ஆனந்தமயமான அந்த வாழ்க்கையை நினைத்து இப்போது அழுவானேன்! எங்களுக்கு ஒரு செல்வமும் தோன்றினான்.

.... குழந்தையுடன் குதூகலமாய் நடைபோட்டோம் வாழ்வுப் பாதையில். குமுதாவின் அண்ணன்- மலேயா போயிருந்தான் சம்பாதிக்க - அவன் திரும்பி வந்துவிட்டான். வீட்டார் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள் - அவன் ஒரு பர்மாக்காரியை பாரியாளாக அமைத்து வந்தவன். அவனுக்குக் குமுதா மீது கொள்ளை ஆத்திரம் பிறந்துவிட்டது. ஆகவே எதிர்க்கப் புறப்பட்டான். ஆள் முரடன். சண்டை போட்டுச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். குமுதாவை அடிமையாக்கினது என் அழகுதான் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள் அவனிடம் - ஏன், குமுதாவே அடிக்கடி அதைச் சொல்லிக் கொண்டிருப்பாள். அந்த அழகையே குலைத்து விடுகிறேன் என்று அவள் அண்ணன் அக்கினித் திராவகத்துடன் புறப்பட்டுவிட்டான், வீட்டிலே தூங்கிக் கொண்டிருந்தேன். அவன் வந்துவிட்டான் விழித்துக் கொண்டேன். திராவகத்தை என் அழகான முகத்திலே வீசி விட்டான். அய்யோ - அந்த எரிச்சலை இப்போது நினைத்தாலும் பயமாயிருக்கிறது.

பொறாமைக்காரர்களின் வயிற்றெரிச்சலையும் மிஞ்சக் கூடிய எரிச்சல் அது! திராவகம் ஊற்றப்பட்ட இடத்தைக் கையால் தொடாமல் இருப்பது கொஞ்சம் நல்லதாம் - அவசரத்தில் அந்த யோசனையெல்லாமா வருகிறது? முகத்தைத் துடைத்துக் கொண்டேன் கையால். அப்போது கிழிந்ததுதான் இந்தச் சதையெல்லாம் - குமுதாவின் அண்ணன் ஓடினான். நான் துரத்திப் பிடித்தேன். முடியவில்லை - தெருவில் விழுந்துவிட்டேன்.

குமுதாவும் குழந்தையும் அப்போது வீட்டில் இல்லை. பையனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விடுவதற்காகப் போயிருந்தாள். உடனடியாக என்னை யாரோ தெருவிலுள்ளோர் வைத்திய சாலையில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். குமுதாவும் குழந்தை செல்வனும் வைத்தியசாலைக்கு ஓடி வந்து அலறினார்கள். குமுதா என் முகத்தின் கோரத்தைக் கண்டு அலறிவிட்டாள். முதலில் நான் சோகத்தின் உச்சக்கட்டில் அலறுகிறாள் என்று தான் நினைத்தேன். பிறகுதான் ஊகித்துக் கொண்டேன். அவளுக்குத் தேவையான அழகு முகம் போய்விட்டதேயென அலறியிருக்கிறாள் என்று. மறுநாள் வைத்தியசாலையில் இருந்தபடியே கேள்விப்பட்டேன். குமுதா எங்கோ போய்விட்டாள் என்று. குழந்தை செல்வன் மாத்திரம் தெருவினரால் பராமரிக்கப்பட்டான்.

குமுதாவின் அண்ணன் மீது வழக்கு நடைபெற்றது. நானும் சிகிச்சை பெற்று இந்த அலங்கோலமான முகத்துடன் வெளியே வந்தேன். ஐந்து வருடத்திற்குக் கிட்டத்தட்ட வழக்கு நடைபெற்று கடைசியில் குமுதாவின் அண்ணன் விடுதலை பெற்றான். அவன் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறப்பட்டுவிட்டது.

என்னால் தாங்கமுடியவில்லை. பொறுக்க முடியாத ஆத்திரத்தில் துடித்தேன். அவசரப்பட்டு ஏதேனும் செய்துவிட்டால், குழந்தை செல்வன் நாதியற்றுப் போய்விடுவானேயென்று யோசித்தேன். கடைசியாக சிலரது சிபாரிசு பிடித்து செல்வனை வெளியூரிலே ஒரு பள்ளிக்கூடத்தாம் உணவு விடுதியில் சேர்த்துவிட்டு ஒரு பெருமூச்சை விட்டேன்.

அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து குமுதாவின் அண்ணனைப் பழிவாங்கும் மூச்சும் பிறந்தது. குமுதா என் விகார ரூபத்தைச் சகிக்காமல் எங்கோ போய்விட்டாள். குமுதா என் இருதயத்தைக் காதலிக்கவில்லை. அழகைத் தான் காதலித்தாள் என்ற பேருண்மையை அவள் அண்ணன் வீசிய அக்கினித் திராவகம் எனக்கு உணர்த்தியது என்றாலும் கூட, போகும் பாதை மோசம் என்பதை எச்சரிக்கும் தோரணையில் முள் குத்துகிறது என்பதற்காக அந்த முள்ளை எடுத்து முத்தமிட முடியுமா? அதை ஒடித்து முறித்து தூரத்தில் வீசித்தானே எறிகிறோம்! அதுபோலவே என் முகத்தைப் பாழ்படுத்திக் காதல் பாதை மோசம் என்று உணர்த்திய மூர்க்கனை விட்டு வைக்க மனமில்லை.

என் அருமைச் செல்வனுக்கு அறிவுரைகள் பகன்றேன். “எந்தத் தவறு வேண்டுமானாலும் செய். ஒரு பெண்ணை மட்டும் காதலிக்காதே” என்பதை அவனுக்கு ஆயிரம் முறை சொல்லிவிட்டு கையில் கத்தியுடன் புறப்பட்டேன். குமுதாவின் அண்ணன், அந்த பர்மாக்காரி, அவர்களின் பெண் குழந்தை மூவரும் முற்றத்தின் பக்கம் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். யாரையும் கேட்காமல் உள்ளே நுழைந்தேன். வீட்டிலும் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை. குமுதாவின் தகப்பன் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டான். பர்மாக்காரிக்கும் கூஷ்டரோகம் வந்து மிகவும் கஷ்டப்படுகிறாள் என்று கேள்விப்பட்டிருந்தேன்.

இந்தச் சோக நிகழ்ச்சிகளெல்லாம் குமுதாவின் அண்ணனைத் தாக்கி வேதனை கொடுத்திருந்தாலும்கூட, நான் நேரிடையாக வஞ்சம் தீர்த்துக் கொள்ளவே மிகவும் துடித்தேன். அவர்கள் பக்கம் வேகமாக வந்தேன். பர்மாக்காரி பலமாக இருமிக் கொண்டிருந்தாள். கையிலிருந்த கத்தியை குமுதாவின் சகோதரனுடைய நெஞ்சில், - ஆம், என்னை அலங்கோலப்படுத்திய அந்தப் பாவியினுடைய இருதயத்துக்கு நேராகச் செலுத்தினேன் - மாறிமாறிக் குத்தினேன் - அங்கேயே பிணமானான். அதனுடைய விளைவுதான். இத்தனை ஆண்டு சிறைவாசம். அவன் என்னைக் கொல்லாமல் கொன்று விடுதலை பெற்றான். அவனை ஒரேயடியாகக் கொன்று தண்டனை பெற்றேன்.