காடு சென்ற குமணன்
Kumanan Who Went to the Forest
மு. கருணாநிதி
காடு சென்ற குமணன்
நுகர்பொருள் வாணிப நிறுவன ஊழியர்களாகி உங்கள் தீர்த்தி மிக்க சங்கத்தினுடைய மாநில மாநாட்டை சீரும் சிறப்புமாக நடத்தி 29 கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள்.
உங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால் முப்பதாவது கோரிக்கை ஒன்றும் — அதாவது இருக்கின்ற ஆட்சி மாறி கருணாநிதி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இங்கு பேசிய நண்பர்கள் குறிப்பிட்டார்கள்.
கோரிக்கைகள் நிறைவேறுகின்ற முதல்வராக நான் இல்லாவிட்டாலும் இந்தக் கோரிக்கைகளை எடுத்துச் சொல்வதில் முதல்வனாக இருப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நீங்கள் துணிச்சலாக 29 கோரிக்கைகளை வைத்து அதற்காகப் போராடக்கூடிய திண்டோளையும் பெற்றிருக்கின்றீர்கள் என்பதை எண்ணி நான் பெருமையடைகிறேன்.
என்னால் நிறைவேற்ற முடியாது—முடியவில்லை என்று வருத்தத்தோடு சொல்கிற நேரத்திலே எனக்கு குமணன் கதை தான் நினைவுக்கு வருகிறது.
குமணன் தன்னுடைய இளவலின் விருப்பத்திற்கேற்ப முடிதுறந்து காட்டில் வாழ்ந்து வந்தான். அப்படியும் நிறைவு கொள்ளாத அவன் தம்பி குமணன் உயிரோடு இருந்தால் தனக்குத் தொல்லை என்று கருதி அவன் தலைக்கு விலைவைத்து அறிவித்திருந்தான்.
இந்த நிலையில் இவற்றை எல்லாம் அறியாத புலவர் ஒருவர் காட்டுக்கு வந்து குமணனைப் பாட அப்போது “அந்தநாள் வந்தில அருங்கவிப் புலவோய் இந்தநாள் வந்துநீ நொந்து ஏன் அடைத்தாய் தலைதனைக் கொண்டுபோய் தம்பிகைக் கொடுத்து விலைதனப் பெற்றுஉன் வறுமைநோய் களையே!”
என்று குமணன் சொன்னானே அதைப் போல சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
அந்த நாள் இல்ல என்றாலும், இந்த நாளும் அந்த நாளும் எனக்கு சமமான நாட்கள்தான் என்பதைநீங்கள் அறிவீர்கள்.
எனவே உங்களுக்காக எந்தவித தியாகத்திற்கும், உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக எத்தகைய வகையிலே வாதாட வேண்டுமோ - போராட வேண்டுமோ அவற்றுக்கு நான் தயாராக இருப்பேன்—நான் சார்ந்திருக்கின்ற திமுகழகம் உங்களுக்குத் துணை நிற்கும் என்ற உறுதியை வழங்குகிறேன்.