ஜெயத்ரதனின் வீழ்ச்சி

The Fall of Jayadratha

மு. கருணாநிதி

ஜெயத்ரதனின் வீழ்ச்சி

பாரதப் போர்க் களத்தில் அபிமன்யு வீழ்ந்து விடுகிறான்.

அபிமன்யுவை பின்னாலிருந்து கௌரவர்களின் தளபதிகளில் ஒருவனாக நின்று போரிட்ட ஜெயத்ரதன். அபிமன்யு சக்கர வியூகத்தைப் பிளந்துகொண்டு உள்ளே சென்று போரிடுகிற நேரத்தில் யாருமே அவனை வெல்ல முடியாது என்றிருந்த நேரத்தில் பின்னாலிருந்து கொன்று விடுகிறான்.

அபிமன்யு மாண்டான் என்ற செய்தி வேறு ஒரு போர்க் களத்தில் இருந்த அர்ச்சுனனுக்கு எட்டுகிறது அர்ச்சுனனின் தேரைச் செலுத்துபவர் கண்ணன். அன்றையப் போர்க் களத்தில் தன்னுடைய மகன் மாண்டான் என்ற அதிர்ச்சியான செய்தியால் தாக்குண்ட அர்ச்சுனன் என்னுடைய மகன் அபிமன்யுவைக் கொன்றவனை இன்று மாலை சூரியன் மறைவதற்குள்ளாக கொல்வேன்; அப்படி என்னால் கொல்ல முடியாவிட்டால் நெருப்புக் குண்டம்வளர்த்து அதிலேவிழுந்து செத்துவிடுவேன் என்று சபதம் செய்கிறான்.

கண்ணனும் அதை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

பகல் பொழுதெல்லாம் பகைவன் ஜெயத்ரதனை அர்ச்சுனன் தேடித்தேடி அலைகிறான். அவன் கிடைக்கவில்லை ஜெயத்ரதனைக் கொண்டுபோய்— அவனை அர்ச்சுனன் கண்டால்தானே கொல்லுவான் என்று — ஒளிய வைத்து விடுகிறார்கள். தேடித்தேடி அலுத்துப் போகிறான் அர்ச்சுனன்.

மாலைப் பொழுதும் மங்க ஆரம்பிக்கிறது சூரியன் அஸ்தமித்து விடுகிறான். அர்ச்சுனன் தான் சபதம் செய்தவாறு நெருப்புக் குண்டத்தை வளர்த்து அதில் விழுவது என முடிவு எடுத்து நெருப்புக் குண்டத்தைச் சுற்றி வருகிறான். இரண்டு முறை சுற்றி வந்து விட்டான்.

இதற்கிடையே அர்ச்சுனன் தீயில் விழுந்து சாகப் போகிறான் என்ற செய்தி கௌரவர்களுக்கு எட்டுகிறது.

ஜெயத்ரதனுக்கு ஒரு ஆசை! அர்ச்சுனன் தீயில் விழுந்து சாவதைப் பார்க்கவேண்டும் அபிமன்யுவைக் கொன்றே அந்த ஜெயத்ரதனுக்கு அப்படிப்பட்ட விபரீத ஆசை ஏற்படுகிறது.

அவனை ஒரு யானையின் அம்பாரியில் உட்கார வைத்துக் கொண்டு வந்து ஒரு மலை முகட்டில் நிறுத்துகிறார்கள். ‘அந்தக் கண்ணுக்கினிய காட்சியைப் பார்’ என்று நிறுத்துகிறார்கள்.

அவனும் அங்கே அமர்ந்து மூன்றாவது முறையாக அர்ச்சுனன் தீயை வலம் வந்து தீயில் விழப்போகும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அப்பொழுது அர்ச்சுனனுக்குப் பின்னாலே வந்து கொண்டிருந்த கண்ணன் கேட்கிறான்.

“பார்த்திபா உனக்கு கடைசியாக என்ன வேண்டும்?” அப்பொழுது அர்ச்சுனன் :—

“பரமாத்மா எனக்கு வேறெதுவும் தேவையில்லை. கொஞ்சநேரம் சூரிய வெளிச்சம் வேண்டும்” என்கிறான்.

அப்பொழுது கண்ணன் சொல்கிறான். உண்மையிலேயே சூரியன் மறையவில்லை அப்பா ! அதை என் சக்கராயுதத்தால் மறைத்து வைத்திருக்கிறேன் ஏமாந்து போய் ஜெயத்ரதன் எங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறான் இதோ பார் சக்கராயுதத்தை எடுக்கிறேன் சூரியன் தெரிவான்’ என்று சொல்கிறான் சக்கரத்தைக் கண்ணன் அகற்றியதும் சூரியன் ஒளிவிட அந்த சூரிய ஒளிபட்ட அதேகணத்தில் அர்ச்சுனன் தன்னுடைய வில்லிலிருந்து நாண ஏற்றி அம்பை விடுத்து ஜெயத்ரதனின் தலையை வீழ்த்துகிறான் இப்படிப் பாரதப் போரில் அந்த காட்சி முடிகிறது.

அதைப் போலத்தான் சட்டமன்றத்திலே தி. மு கழகம் தோற்றுவிட்டது; அபிமன்யு மாண்டு விட்டதைப் போல ! எம். ஜி. ஆர் தி. மு. கழகம் தொடர்ந்து தோல்வியைப் பெற்று அது அழிந்து போகிற காட்சியைக் காணவேண்டும் என்று யானை மீது அம்பாரிகட்டி ஜெயத்ரதனைப் போல உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

நம்மிடத்திலே கண்ணனும் இல்லை; நம்முடைய அன்பு அண்ணனும் இல்லை. எனினும் தமிழ்நாட்டு மக்கள் சூரிய ஒளியை இரண்டு மூன்றாண்டுகாலம் ஒளித்து வைத்திருந்தார்கள் என்றாலும் இப்போது நம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள் உனக்கு ஒளிதானே தேவை. இதோ சூரியன்— அதோ ஜெயத்ரதன் என்று சொல்கிறார்கள், நாம் வில்லை எடுக்கிறோம்! அம்பை வில்லில் பூட்டுகிறோம்! கண் பார்க்கிறது ! தி. மு. கழகம் தீயிலே விழாத காட்சியை நாட்டு மக்கள் பார்க்கிறார்கள் !

நிச்சயமாக தீயிலே தி. மு. கழகமோ - தோழமைக் கட்சிகளோ விழாது.

சர்வாதிகார சக்திகள்தான் — தொழிலாளர் விரோத சக்திகள்தான் இந்த உணர்வுகள்தான் தீயிலே விழும்; கழகமோ கழகத்தை ஆதரிக்கும் தோழமை கட்சிகளோ அந்தத் தீக்கு இரையாகாது !