ஜாடி குட்டி போடுமா?

Jaadi Kutti Poduma?

மு. கருணாநிதி

ஜாடி குட்டி போடுமா?

பக்கத்து பக்கத்தில் இரண்டு வீட்டுக்காரர்கள். ஒருவன் கொஞ்சம் புத்திசாலி... ஒருவன் புத்திசாலி என்றால் இன்னொருவன்... என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம். இந்த புத்திசாலி, பக்கத்திலே உள்ளவனிடம் ஒரு நாள் “என் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு தேநீர் தருவதற்கு என் வீட்டிலே ஒரு ஜாடி கூட இல்லை. எனவே உன் வீட்டிலே இருக்கின்ற பீங்கான் ஜாடியை இரவலாகக் கொடு” என்று கேட்டானாம்.

உடனே அவனும் தயக்கமில்லாமல் பீங்கான் ஜாடியை இரவலாகக் கொடுத்தானாம். வாங்கி வந்தவன் அந்த பீங்கான் ஜாடியை இரண்டு வாரம் வரையிலே திருப்பித் தரவில்லை. இரண்டு வாரம் கழித்து அந்தப் பீங்கான் ஜாடியோடு இன்னும் இரண்டு சிறிய குட்டி ஜாடிகளை சேர்த்து எடுத்துக் கொண்டு செல்கிறான். கொடுத்தவன் கேட்கிறான்: “நான் ஒரு பீங்கான் ஜாடி தானே கொடுத்தேன். இதனோடு சேர்த்து இரண்டு குட்டி ஜாடிகளைக் கொண்டு வந்திருக்கிறாயே” என்று கேட்கிறான்.

அதற்கு இவன் சொன்னான் “நீ கொடுத்தாயே பீங்கான் ஜாடி - அதை நான் இரண்டு வாரமாகக் கொண்டு வராததற்குக் காரணமே, அது காப்புமுற்று இந்த இரண்டு பீங்கான் குட்டி ஜாடிகளை பிரசவித்ததுதான்” என்று சொன்னானாம். “அப்படியா!” என்று ஆசையோடு அதையும் சேர்த்து அவன் வாங்கி வைத்துக் கொண்டான்.

மறுபடியும் ஒரு மாதம் கழித்து இதே மனிதன் - ஜாடியை இரவல் வாங்கியவன், இரவல் கொடுத்த வன் வீட்டிற்குச் சென்று, “வீட்டிற்கு விருந்தினர்கள் வருகிறார்கள் ஜாடி கொடு” என்று கேட்டான். அவனுக்குப் பேராசை. பீங்கான் ஜாடி கொடுத்தால், பீங்கான் குட்டிகள் தான் போடும். எனவே வெள்ளி ஜாடியே கொடுப்போம், வெள்ளி குட்டிகள் போடும் (சிரிப்பு) என்று வெள்ளி ஜாடியை கொடுக்கிறான். வாங்கிக் கொண்டு போனவன், பிறகு ஆளே வரவில்லை. ஓரிரு மாதங்கள் ஆயிற்று. ஒரு நாள் வழியிலே அவனைப் பார்த்து “என்னவாயிற்று வெள்ளி ஜாடி?” என்று கேட்டான். அதற்கு அவன் “காப்புமுற்றிருக்கின்றது” என்றான். சில நாட்கள் கழித்து ஒரு நாள் அவனே வந்தான். “என்னப்பா காப்புமுற்றிருக்கிறது என்று சொன்னாயே, என்ன ஆயிற்று” என்று கேட்டான். அதற்கு அந்தப் புத்திசாலி “பிரசவத்திலே ஜாடி செத்துப் போய் விட்டது” (பலத்த சிரிப்பு) என்று சொன்னான்.

உடனே அவன் திருப்பி “ஜாடியாவது காப்பு மடைவதாவது? பிரசவிப்பதாவது? என்னடா? யாரை ஏமாற்றுகிறாய்?” என்று கேட்டானாம்.

ஆதாயம் கிடைத்தபோது கேள்வி கேட்கத் தோன்றவில்லை இழப்பு ஏற்படும் போதுதான் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. இது மனித இயல்பாக ஆகிவிட்ட ஒன்று.

*