இருவரும் கூடியிருப்பது ஆத்தி மாலைதான்

What Unites the Two Is the Aathi Garland

மு. கருணாநிதி

இருவரும் கூடியிருப்பது ஆத்தி மாலைதான்

கோவூர் கிழார் என்ற சங்ககாலப் புலவர் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற இரண்டு சோழர்களுக்கும் நண்பர். ஒரு நாள் நெடுங்கிள்ளியின் பால், நலங்கிள்ளியின் அவைக்களப் புலவர் இளந்தத்தன் என்பான் வருகிறான்.

நெடுங்கிள்ளி, ‘இவன் புலவன் அல்லன். நலங்கிள்ளியால் அனுப்பி வைக்கப்பட்ட ஒற்றன்’ என்று சந்தேகப்படுகிறான்.

உடனே கோவூர்கிழார் தலையிட்டு, “அல்ல அல்ல நெடுங்கிள்ளி! அவசரப்படாதே, இவன் புலவன்தான்! நலங்கிள்ளியின் கொழு மண்டபத்தில் பணியாற்றுகின்ற புலவன்தான் இந்த இளந்தத்தன்” என்று சொல்லி அவனைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த கட்டம் - உறையூரில் இருந்த சோழன் நெடுங்கிள்ளிமீது, சோழன் நலங்கிள்ளி போர் தொடுக்கின்றான். அந்தப் போரில் கோவூர்கிழார் பங்கு என்ன தெரியுமா?

கிருஷ்ணனைப் போல - பாண்டவருக்காகத் தூது சென்ற கிருஷ்ணன் போல் - அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்கவில்லை.

இரண்டு மன்னர்களுக்கிடையே நின்று பாடுகிறார். என்ன பாடுகிறார்?

“நின்ன கண்ணியும் மார்பிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியும் மார்பிடைந்தன்றே”

அதாவது, “சோழனே, நெடுங்கிள்ளியே, நீ அணிந்திருப்பதும் ஆத்திதான்; நலங்கிள்ளியும் ஆத்திதான் சூடியிருக்கிறான்; இருவருமே சோழ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.”

“ஒருவீர் தோற்பினும் தோற்ப துங்குடியே”

இரண்டு பேரில் யார் தோற்றாலும் சோழர் குடிதான் தோற்பது என்று சரித்திரத்தில் வரும்.

“இருவீர் வேறல் இயற்கையு மன்றே”

இருவரும் வெற்றி பெறுவது என்பது இயற்கையல்ல. அதனால்,

“குடி பொருளன்று நுஞ்செய்தி”

ஆகவே உங்களுடைய செயல் குடிப் பெருமைக்கு ஏற்றதல்ல- என்று பாடுகிறார்.