இரு நிழல்கள்

Two Shadows

மு. கருணாநிதி

இரு நிழல்கள்

இலக்கியத்தில் இரண்டு நிழல்கள் குறிப்பிடப்படுகின்றன ஒன்று காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தில் வருவது. மற்றொன்று சங்க இலக்கியத்தில் வருவது.

காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தில் கோடையைப் பற்றி அவன் வர்ணிக்கிறான்.

தாங்கமுடியாத வெப்பம். வயல்களெல்லாம் வெடித்துப் பிளந்திருக்கின்றன. அப்பொழுது நிழலே எங்கும் கிடைக்காமல் ஒரு பாம்பு அங்கேயும் இங்கேயும் ஓடி நெளிகிறது. அது ஓடுகின்ற நேரத்தில்கூட வெப்பம் தாங்க முடியாத காரணத்தால் தன் வாலை மாத்திரம் கீழே ஊன்றிக் கொண்டு முழு உடலையும் தூக்கி நின்று கொண்டிருக்கிறது; அந்தப் பாம்பினுடைய நிழல் கீழே படுகிறது. அப்பொழுது நிழல் என்று தெரியாமல் அந்த நிழலுக்குக் கீழே போய் ஒதுங்குகிறது.

சாகுந்தலத்தில் வந்தது போலவே ஒரு கோடைக்காலம். அந்தக் கோடைக்காலத்தில் ஆண் மானும், பெண்மானும் ஒரு பாலைவனத்தில் செல்லுகின்றன.

தாங்க முடியாத அந்த வெப்பத்தில் பெண்மான் துடிப்பதைக் காணச் சகிக்காமல் ஆண்மான் அங்கே நின்று கொண்டு தன் நிழல் கீழே விழுகின்ற இடத்தில் பெண்மானைப் படுக்க வைத்து நிழல் தருகிறது இது சங்க இலக்கியத்தில் வரும் நிழல்.

இரண்டு நிழல்களையும் ஏன் சொல்லுகிறேன் என்றால் சாகுந்தலத்தில் பாம்பின் நிழல் என்று தெரியாமல் தவளை போய் அந்த நிழலில் நின்று கொண்டிருக்கிறது. பாம்புக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியும்.

ஆனால் சங்க இலக்கியத்தில் உணர்ந்தே நிழல் தரப்படுகிறது. தனது துணைக்கு நிழல் தருகிறோம் என்று ஆண்மான் நின்று கொண்டு நிழல் தருகிறது. பெண்மான் கவலைப் படாமல் பயமில்லாமல் கீழே படுத்திருக்கிறது.

நான் சிறுபான்மை சமூகத்தார்க்குச் சொல்லிக் கொள்வேன். நீங்கள் இடைக் காலத்தில் கொஞ்சநாள் பாம்பின் நிழலைத் தேடிப் போனீர்கள். அந்த நிழலைப்பற்றித் தான் நண்பர் சுலைமான் சேட் அவர்களும் மற்றவர்களும் வெகுவேகமாகத் தாக்கிப் பேசினார்கள்.

இப்போது தனக்கு நிழல் இல்லாவிட்டாலும்பரவாயில்லை, தன்னுடைய துணைக்கு நிழல் தரவேண்டும் என்று சொல்கின்ற கலித்தொகை காட்டுகின்ற நிழல் சிறுபான்மையோருக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான் தி. மு. க. என்னும் நிழல்