இலங்கை மன்னர் பரம்பரை
The Lineage of the Kings of Lanka
மு. கருணாநிதி
இலங்கை மன்னர் பரம்பரை
...இந்தியாவில் உள்ள வங்கதேசத்தில் ஓர் அரசு. அந்த அரசில் ஒரு ராஜகுமாரி. சுபதேவி என்பது அவளுடைய பெயர். அவள் வீட்டுக்கு அடங்காப் பெண். ஆடம்பரமானவள். குடும்பத்திற்குத்தகுதியற்றவள். திருத்தப் பார்க்கிறார்கள். திருந்த வழியில்லை. தன்னைத் திருத்த முற்படுகிறார்கள் என்கிற ஆத்திரத்தின் காரணமாக அரண்மனையை விட்டு வெளியேறுகிறாள். வெளியில் நடக்கிறாள். பல கல் தொலைவு நடக்கிறாள். வழியில் சிங்கன் என்கிற ஒரு முரட்டு மனிதனைப் பார்க்கிறாள். அந்தச் சிங்கன் - மனிதர்களை அடித்துக் கொன்று சாப்பிடுபவன். அவன் அந்தப் பெண்ணைப் பார்க்கிறான். அழகாக இருந்த காரணத்தால் கொல்ல மனம் இல்லை. திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவளும் சம்மதிக்கிறாள். வேறு வழியில்லை. மறுத்தால் உயிர் போகும் என்பதால். அவளைத் திருமணம் செய்து கொண்டு அந்த சிங்கன், என்கிற முரடன் சுபதேவியை ஒரு பெரிய குகைக்குள்ளே கொண்டுபோய் அடைத்து அந்தக் குகையினுடைய வாயிலை ஒரு பெரும் பாறாங்கல்லால் அடைத்துவிட்டு, அவன் வெளியில் போவதும், மாலை நேரத்திலே திரும்பி வருவதும், அந்தக் கல்லை எடுத்துவிட்டு உள்ளே சென்று களித்திருப்பதும் அவனுடைய வாழ்க்கை. அவர்களுக்கு அந்தக் குகையிலே இரண்டு குழந்தைகளும் பிறக்கின்றன. ஆண் குழந்தைக்கு சிங்கபாகு என்றும், பெண் குழந்தைக்கு சிங்கவல்லி என்றும் பெயர் வைக்கிறார்கள். அவர்கள் வளர்கிறார்கள்.
வளர்ந்துவிட்ட பருவத்திலே ஆண் மகன் தாயைப் பார்த்து, “நம்மை இங்கே உள்ளே அடைத்து வைத்துவிட்டு அப்பா இப்படி எங்கேயோ போய்விடுகிறாரே என்ன மர்மம்?” என்று கேட்கிறான். தாய் உண்மைகளையெல்லாம் அவனிடத்திலே சொல்லுகிறாள்.
“எவ்வளவு நாளைக்கு அம்மா இங்கே அடைந்து கிடப்பது? தந்தைக்குரிய பலம் எனக்கும் உண்டு. வாருங்கள் என்னோடு” என்று சொல்லி தாயை ஒரு தோளிலும், தங்கையை ஒரு தோளிலும் எடுத்துக் கொண்டு, தந்தைக்குரிய பலம் அவனுக்கும் இருந்த காரணத்தால் அந்தப் பெரும்பாறைக் கதவைக் கைகளால் இழுத்துத் தள்ளிவிட்டு அங்கிருந்து விடுபட்டு வெளியே சென்று விடுகிறான்.
வெளியே சென்ற சிங்கன் திரும்பிவருகிறான். மனைவியைக் காணவில்லை. மக்களைக் காணவில்லை. அவர்களைத் தேடி அலைகிறான். அவர்கள் கிடைக்கவில்லை. பிறகு ‘லாலா’ என்கிற ஒரு நாட்டின் பக்கம் போகிறான். இவர்கள் கிடைக்காத ஆத்திரத்தில் எதிரே கண்ட மனிதர்களையெல்லாம் அடித்துச் சாப்பிடுகிறான்.
லாலா நாட்டில் பெரும் அமளி. இந்தச் சிங்கன் என்கிற முரடனைப் பிடித்துத் தருகிறவர்களுக்கு அந்த நாட்டையே பரிசாக அளிப்பதாக அந்த நாட்டு மக்கள் அறிவிக்கிறார்கள். அந்த சிங்கனை அவனுடைய மகனான சிங்கபாகுவே கொன்று தந்தையின் தலையை தன் கையில் எடுத்துக் கொண்டு போய், கொளு மண்டபத்தில் காட்டி, தந்தை தலைக்குப் பரிசாக லாலா நாட்டையே ஆளுகின்ற பாத்தியதையைப் பெறுகிறான்.
நாட்டை ஆளும் பாத்தியதை கிடைத்தவனுக்கு ராணி வேண்டாமா? அந்தப் பாத்தியதை வேறு யாருக்கும் போய்விடக்கூடாது என்பதற்காக தன் தங்கையையே தாரமாக ஆக்கிக் கொள்கிறான். சிங்கபாகு என்ற அண்ணனுக்கும், சிங்கவல்லி என்ற அவனது தங்கைக்கும் ஒன்றல்ல, இரண்டல்ல, பதினாறு இரட்டைக் குழந்தைகள். அந்தப் பதினாறு இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தைதான் விஜயன். அந்த விஜயன் எழுநூறு தோழர்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டு ஊரையே வேட்டையாடுகிறான்; மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். விஜயன் இப்படிப்பட்ட கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதைப் பார்த்த தந்தை சிங்கபாகு, விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் ஒரு கப்பலில் ஏற்றி “எங்கேயாவது போய்த் தொலை” என்று அனுப்பு கிறான். கப்பல் பல நாள் கடலிலே அலைந்து கடைசியாக ஒரு தீவைச் சேர்கிறது. அந்தத் தீவுதான் இலங்கைத் தீவு. அந்த இலங்கைத் தீவுக்கு மன்னனாக முடி சூட்டிக் கொள்கிறான் விஜயன், அவனுடைய பரம்பரை தான் சிங்களவர்கள்.
...இலங்கையின் சரித்திரப் புத்தகம், தமிழ் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்ற நான்காம் வகுப்பினுடைய புத்தகம். அதிலே தீட்டப்பட்டிருக்கின்ற சரித்திரக் குறிப்புதான்...