இளமைக் காலம்
Youth
மு. கருணாநிதி
இளமைக் காலம்
பாரதப் போரில் அபிமன்யு நடத்திய போருக்கு இணையாக அர்ச்சுனன் கூட நடத்தவில்லை.
ஏனெனில் தன்னுடைய மிக இளமையான மனைவியை வீட்டில் விடுத்து - விடைபெற்று - தாயிடத்தில் விடைபெற்று தந்தையிடமும் வேறு போர்க்களத்தில் போராடிக் கொண்டு இருந்த நேரத்தில் தந்தை யையும் காணச் சந்தர்ப்பம் இல்லாமல் போர்க்களம் புகுந்து, போரில் கையிழந்த போதும் நாக்கினால் - வாயால் வாளைக் கவ்விக் கொண்டு எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்கின்ற அளவுக்குப் போரிட்டு இறுதியாக ஜெயப்பிரதன் என்கிற ஒரு துரோகியினால் பின்னாலிருந்து குத்தப்பட்டு இறந்தான் வீர இளைஞனாக அபிமன்யு. அவனுடைய இளமைப் பிராயத்திலேயே தான் அந்த அற்புதத்தைச் செய்து காட்டினான்.
அதைப் போல்தான் இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் இராவணனால் கூட - கும்பகர்ணனால் கூட அல்லது வேறு பலதர நாயகர்களால் கூட நடத்திக்காட்ட முடியாத சாகசங்களை இராமனும் - இலக்குவனும் - அனுமனும் - சுக்கிரீவனும் - அத்தனை பேரும் கதி கலங்கக் கூடிய அளவுக்கு - எதுவும் புரியாமல் திகைப்புறக் கூடிய அளவிற்குப் போரிட்டு அவர்களை ஓட ஓட விரட்டி இறுதியில் மாண்டு போனானே இந்திரஜித், அவனும் இளைஞன்தான். அவனும் தன்னுடைய இளமைத் துடிப்பைப் போர்க்களத்திலே காட்டி ராமாயணப் போராட்டத்தை, எப்படி பாரதப் போரில் அபிமன்யு போராடிய நாள் பிரசித்தி பெற்ற நாளோ - அதேபோல இந்திரஜித் போராடிய நாள் - புகழ் கூடிய நாள் என்கிற குறிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அவன் போர் புரிந்து காட்டினான்.
அபிமன்யுவினுடைய தந்தை அர்ச்சுனன் புகழ்பெற்ற வில் வீரன். காண்டீபன் என்கிற புகழைப் பெற்றது ஐம்பது வயதிற்கு மேலல்ல. அந்தப் புகழைப் பெற்றது அவன் துரோணரிடத்தில் மாணவனாக இருந்த போதுதான். அப்போது - பாண்டவர்களும் கெளரவர்களும் துரோணரிடத்திலே மாணவர்களாக இருந்தபோது, அவர்களது பயிற்சி முடிந்து சோதனை செய்வதற்காக துரோணர் பாண்டவர்களையும், கெளரவர்களையும் அழைத்து ஒரு பெரிய மரத்தைக் காட்டி - அந்த மரத்தில் அமர்ந்திருந்த ஒரு கிளியைக் காட்டி - ஒவ்வொருவரையும் வில்லை வளைச்சச் சொல்ல வில் வளைத்து நின்ற துரியனைப் பார்த்து என்ன தெரிகிறது? என்று கேட்க அவனும் மரம் தெரிகிறது, இலை தெரிகிறது, கிளை தெரிகிறது என்று வர்ணித்துக் கொண்டே போக ‘நீ வேண்டாம்’ என்று கூறிவிட்டு துரோணர் எல்லா வீரர்களையும் பார்த்துக் கேட்க, ஒவ்வொருவரும் மரம் தெரிகிறது, கிளை தெரிகிறது, இலை தெரிகிறது என்று கூற அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு இறுதியாக அர்ச்சுனனை அழைத்து “நீ பார். என்ன தெரிகிறது?” என்று கேட்க, அர்ச்சுனன் ‘என்னுடைய வில்லில் பூட்டப்பட்டிருக்கின்ற அம்பின் நுனியும் மரக் கிளையில் அமர்ந்திருக்கின்ற கிளியின் கழுத்தும்தான் தெரிகிறது’ என்று சொன்னானாம்.
உடனே அம்பை விடுத்தான். கிளியின் கழுத்து கீழே விழுந்தது.