இடிக்குப் பின் மழை
Rain After Thunder
மு. கருணாநிதி
இடிக்குப் பின் மழை
மணமக்களை வாழ்த்துகிற நேரத்தில் ஒரு குடும்பம்-அதுவும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு வரலாற்று ரீதியாக நமக்கு இரண்டு சான்றுகள் இருக்கின்றன. உலகத்திலே பொதுவுடைமை வித்து ஊன்றப்படக் காரணமான கார்ல் மார்க்ஸ் பெரிய அறிஞர். அவருடைய ஒப்பற்ற நூல் இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கத்தால் படிக்கப்பட்டு பின்பற்றப்படுகின்ற நூல். அந்த நூலினை எழுதிய கார்ல்மார்க்ஸ், அந்தக் கொள்கைக்காக வாழ்ந்த கார்ல் மார்க்ஸ் எத்தனை இடையூறுகளுக்கு, இன்னல்களுக்கு ஆட்பட்டார் என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது, அவற்றுக் கெல்லாம் ஈடு கொடுத்து, கணவனுக்கு வருகின்ற சங்கடங்களையெல்லாம் சகித்துக் கொண்டு தான் கார்ல் மார்க்ஸின் மனைவி இறுதி வரையில் வாழ்ந்தார் என்பது ஒரு வரலாறு.
அதைப் போல கிரேக்க நாட்டு தத்துவஞானி சாக்ரட்டீசை பற்றியும் படிக்கிறோம். அவர் பொது மக்களுக்காகவே தன்னை ஒப்படைத்துக் கொண்டு, எங்கே மக்களை சந்திக்கிறாரோ? அந்த இடத்திலெல்லாம் அந்தக் கிழவன் தன்னுடைய கருத்துக் களைச் சொல்லத் தவறுவதில்லை. வீட்டு வாயிலில் நின்று கொண்டு தெருவிலே போவோர் வருவோரையெல்லாம் இழுத்து நிறுத்தி தன்னுடைய கருத்துக்களை, தத்துவங்களை பொழிந்து கொண்டே இருப்பார். ஆனால் அவருடைய மனைவி அதற்கு நேர்மாறானவர். உள்ளே இருந்து குரல் கேட்கும்: திட்டுவார்; வசைபாடுவார். “உனக்கு வேறு வேலையே கிடையாதா” என்றெல்லாம் சத்தமிடுவார். சாக்ரட்டீசின் பேச்சைக் கேட்க வந்தவர்கள் “என்ன உள்ளே சத்தம்?” என்று கேட்பார்களாம். அதற்கு சாக்ரட்டீஸ், “ஒன்றுமில்லை, இடி இடிக்கிறது” என்று சொல்வாராம். பொறுத்துப் பொறுத்துப் பார்க்கும் அவருடைய மனைவி வெளியே வந்து ஒரு வாளி தண்ணீரை கொண்டு வந்து சாக்ரட்டீஸ் தலை யிலே கொட்டுவாராம். அப்பொழுது பொதுமக்கள் “என்ன இது?” என்று கேட்பார்களாம். “இடி இடித்தது அல்லவா! அதைத் தொடர்ந்து மழை பொழிகிறது” என்று சாக்ரட்டீஸ் சொல்வாராம்.
இப்படி தன்னுடைய மனைவியை அனுசரித்துக் கொண்டே பொது வாழ்க்கையில் ஈடுபட்ட ஒரு பெருமகனின் வரலாற்றையும், மனைவியும் கணவனும் சேர்ந்தே பொது வாழ்க்கையில் எல்லா விதமான இடையூறுகளையும் தாங்கிக் கொண்டு குடும்பத்தை நடத்திய கார்ல்மார்க்ஸின் வரலாற்றையும் நான் சொன்னதற்குக் காரணம் இரண்டையும் உணர்வதற்காகத்தான். எந்த வாழ்க்கை தாங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை மணமக்கள் மதி ஒளியும், பிரின்சும் உணர்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு மீண்டும் என்னுடைய வாழ்த்துக்களை மணமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*