புத்தர் உணர்த்திய உண்மை

The Truth Buddha Made Clear

மு. கருணாநிதி

புத்தர் உணர்த்திய உண்மை

இறந்தவர்களைக் காப்பாற்றக்கூடிய மகாத்மாக்கள்— மகான்கள் இவர்கள் எல்லாம் உலகத்திலே இருந்ததாக—

அவர்கள் இருப்பதாகக் கூட இன்றளவும் கற்பனை செய்து கொண்டிருப்பவர்கள் இதைச் சொல்லி மக்கள் உள்ளத்திலே ஒரு மாயை ஏற்படுத்துகின்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் உலகத்தை உண்மையாக உணரச் செய்ய வேண்டும் என்று கருதிய புத்தரைப் பற்றி அவருடைய வாழ்க்கையிலே நடைபெற்ற நிகழ்ச்சியைப் பற்றி ஒரு குறிப்பு உண்டு.

புத்தர் ஒரு நாள் ஓர் ஊரிலே வீதியிலே நடந்து சென்ற போது கண்ணீரும் கம்பலையுமாக கையிலே ஒரு குழந்தையினுடைய சவத்தோடு ஒரு பெண்மணி ஓடோடி வந்தாள். புத்தரிடம் வந்து அழுதாள்.

“என்னம்மா உனக்கு என்ன நேர்ந்தது” என்று புத்தர் கேட்டார்.

இறந்துபோன தன்னுடைய பச்சிளங் குழந்தையைப் புத்தருடைய பாதாரவிந்தங்களிலே வைத்துவிட்டு அந்தப் பாவை சொன்னாள் “இது என் குழந்தை; இந்த ஒரே குழந்தையை நான் இழந்துவிட்டேன். இதற்கு நீங்கள் தான் உயிர்தர வேண்டும்” என்று கேட்டாள்.

புத்தரை உலகமே கொண்டாடுகிறதே! அவர் மாமனிதர் என்று புகழப்படுகிறாரே! மனிதசக்திக்கு அப்பாற்பட்ட காரியங்கள் அவரால் செய்ய முடியும் என்பது அவருக்கு அவர்மீது இருந்த நம்பிக்கை.

எனவேதான் இறந்துபோன குழந்தையினுடைய சவத்தை புத்தருடைய காலடியில் வைத்து, “இதற்கு எப்படியாவது உயிர்கொடுத்துமீண்டும்பிழைக்கவையுங்கள்!” என்று கெஞ்சினாள்; மண்டியிட்டுக் கதறினாள்.

புத்தர் அந்தப் பெண்ணை சுலபத்திலே தேற்றிட முடியாது என்று தெரிந்து கொண்டு, “சரியம்மா! அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு, நீ ஒரு காரியம் செய்” என்றார்.

அந்தப் பெண்மணி தன்னுடைய குழந்தை பிழைத்து விடும் என்ற நம்பிக்கையில் “எந்தக் காரியம் ஆனாலும் செய்கிறேன். சொல்லுங்கள்” என்று கேட்டாள்.

உடனே புத்தர், “இந்த ஊரில் போய் ஒரு பிடி அரிசி வாங்கிக் கொண்டு வா” என்றார்.

“இது தானா பிரமாதம்? இப்போதே வாங்கிக் கொண்டு வருகிறேன்” என்று அந்தப் பெண்மணி ஓடத் துவங்கினாள்.

புத்தர் அந்தப் பெண்மணியைக் கைதட்டிக் கூப்பிட்டார். ஓடியவள் திகைத்துப்போய் அருகே வந்து “என்ன” என்று கேட்டாள்.

“ஒரு பிடி அரிசி வாங்கி வா; ஆனால் அப்படி வாங்கி வருகின்ற அந்த அரிசி எந்த வீட்டிலே இருந்து வாங்கப்பட வேண்டும் தெரியுமா! யாருடைய வீட்டிலே இதுவரை யாரும் சாகாமல் இருக்கிறார்களோ அவர்களுடைய வீட்டிலே இருந்து வாங்கிவா” என்று புத்தர் சொன்னார்.

அவளுக்கு எப்படியும் குழந்தை பிழைக்க வேண்டும் என்ற ஆவல் அதனால் அந்த ஊர் முழுவதும் சென்று கேட்டாள்; பக்கத்து ஊருக்கு ஓடினாள்; அருகாமையில் இருக்கின்ற ஊர்களுக்கு ஓடினாள். எந்த வீட்டிலே போய் அரிசி கேட்டாலும் அரிசி கொடுப்பதற்கு தயாராக இருந்தார்கள். ஆனால் அந்த வீட்டிலே எப்பொழுதோ ஒரு சாவு ஏற்பட்டிருக்கிறது.

போன ஆண்டு ஒரு சாவு அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாவு! பச்சிளம் பாலகன் இறந்து விட்டான்! ஒரே மகள் இறந்து விட்டாள்! கல்யாண மாப்பிள்ளை இறந்து விட்டான்! தந்தை இறந்து விட்டார்! இப்படிப்பட்ட ஒரு சாவுச் செய்தியைச் சொல்லாத வீடே கிடையாது

திரும்பி வந்தாள் புத்தருக்கு நேராகத் தலைகுனிந்தாள். பின்புத்தரைப் பார்த்துச் சொன்னாள். “எனக்கு உங்களுடைய அறிவுரையின் மகாத்மியம் புரிந்து விட்டது நான் வருகிறேன்” என்றுஇறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு போனாள்.

ஆக சாவு நிகழாத வீடு கிடையாது! சாவு என்பது எல்லா வீட்டையும் எல்லா இடத்தையும் தொடக் கூடியது.

புத்தர் தன்னை ‘மகான் மகிமை பொருந்தியவர்’ என்று காட்டிக் கொள்ள வேண்டுமேயானால் “அந்த ஊரில் அந்தக் குழந்தையை உயிர் கொடுத்து எழுப்பினார்! இந்த ஊரில் இந்தக் குழந்தையை உயிர்கொடுத்து எழுப்பினார்” என்றெல்லாம் கூட கதைகள் கட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிப்பட்ட கதைகள் சமுதாயத்தைச் செல்லரிக்கக் கூடியவை என்று எண்ணிய காரணத்தினாலேதான் புத்தரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பிலே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நாம் காணமுடிகிறது.