அப்படித்தான் சிரிப்பேன்

Appadithan Sirippen

மு. கருணாநிதி

அப்படித்தான் சிரிப்பேன்

ஒரு மன்னரும் இராணியும் மாளிகையின் பால்கனியிலே மந்தகாசமாக அமர்ந்து வேலைக்காரர்களை அழைத்து - பழங்கள் கொண்டு வரச் சொல்லி அதிலே அருமையான ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து- அதை உரித்து இராணி இராஜாவுக்குத் தர - அந்த சுளைகளை - அவன் ஒன்று விழுங்கி விட்டு இன்னொரு சுளையை எடுத்து இராணிக்கு ஊட்டி விட - அப்போது - உரிக்கப்பட்ட அந்தப் பழத்தின் தோலை வெளியிலே தூக்கி எறிய - அப்போது தெருவிலே போன ஒரு பிச்சைக்காரன் அந்த ஆரஞ்சுப் பழத் தோலை எடுத்து கடிக்க - அதைப் பார்த்த இராணி கோபமடைந்து, “நாம் சாப்பிட்டு தூக்கியெறிந்த தோலை அவன் சாப்பிடுவதா? இது மாளிகையின் சொத்து என்றுகூட அவனுக்குத் தெரியாதா” என்று கோபிக்க, உடனே மன்னன் தன் ஊடைய காவலனை விட்டு அந்தப் பிச்சைக்காரனை சவுக்கால் அடிக்கச் சொல்ல, காவலன் கீழே இறங்கி ஓடி “எப்படியடா மன்னர் சாப்பிட்ட பழத்தின் தோலை நீ சாப்பிட்டலாம்” என்று சவுக்கால் அடிக்க-அந்தப் பிச்சைக்காரன் அடியை வாங்கிக்கொண்டு கலகலவென சிரிக்க, மன்னனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு-அவனே கீழே இறங்கி வந்து கேட்க, “ஆமாம்!

அப்படித்தான் சிரிப்பேன்!” என்று பிச்சைக்காரன் சொல்ல - “ஏன் சிரிக்கிறாய்?” என்று மன்னன்கேட்ட போது, பிச்சைக்காரன் சொன்னானாம்:

“அந்தப் பழத்தின் தோலை சாப்பிட்ட எனக்கே இவ்வளவு சவுக்கடிகள் என்றால், முழுப் பழத்தையும் சாப்பிட்ட உங்களுக்கு எவ்வளவு அடிகள் விழ வேண்டும் என்பதை எண்ணித்தான் சிரிக்கிறேன்” என்று மன்னனையும் ராணியையும் பார்த்து அந்தப் பிச்சைக்காரன் சொன்னானாம்.

*