அந்தக் காலத்திலே!

In Those Days!

மு. கருணாநிதி

அந்தக் காலத்திலே!

அந்தக் காலத்திலே பாராளப் பிறந்த ராமனின் பாதுகைகளை, தம்பி பரதன் தலையிலே சுமந்து, அவற்றை அரசுக் கட்டிலிலே அமர்த்தி அதன் பிரதிநிதியாகத் தானிருந்து அரசோச்சினானே - அவனல்லவா உண்மையான தம்பி...

...அண்ணன் பாதுகைகளைச் சுமந்து சகோதர வாஞ்சையின் எடுத்துக்காட்டாக நின்ற பரதன் வாழ்ந்த, அதே அந்தக் காலத்திலேதான், அவன் அண்ணன் அயோத்தியானுக்கு, தன் அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்த சகோதரன் விபீஷணனும் இருந்திருக்கிறான்...

இந்தக் கால மாணவர்கள், ஆசிரியர் நாற்காலியில் முள் வைக்கிறார்கள். அந்தக் காலத்திலே, துரோணாச்சாரியார் என்ற குருவுக்குக் கட்டை விரலைத் துண்டித்து காணிக்கையாகக் கொடுத்த ஏகலைவன் இருந்திருக்கிறானே...

....ஆச்சாரியார் துரோணருக்குக் கட்டை விரலைத் தந்த சிஷ்ய சிரேஷ்டன் ஏகலைவன் வாழ்ந்த அந்தக் காலத்திலே தான் - குரு பத்தினி தாரையைக் கூடிய சந்திரனும் இருந்திருக்கிறான்...