அமிர்தமதி
Amirthamathi
கலைஞர் மு. கருணாநிதி · கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
அமிர்தமதி
எரிமலை ஆகிவிட்டதப்பா என் நெஞ்சம்; தாங்க முடியவில்ல இந்த வேதனையை என்னால்! தாய்க்குப் பிள்ளையில்ல பென்கிறார்கள். எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும்; அந்தப் பிள்ளையையாவது ஒழுங்காக வளர்க்கிறார்களா என்றால். அதுவுமில்ல; அதைச் சித்திரவதை செய்து சீரழிக்கிறார்கள். எப்படியப்பா சுமக்க முடியும் இந்த சோகச் சுமையை? சொல் சுந்தர்; நீயே சொல்! சுவையான செய்திகளையே உன்னோடு தினம் தினம் பேசியிருக்கிறேன்; இன்று உன்னையும் அழவைக்கும் செய்தியைப் பேசுகிறேன்பென்று என்மீது வருத்தப்படாதே—சகோதரா! சகிக்க முடியவில்லையடா இந்தக் கொடுமையை! என் இருதயச் சுமையை உன் கனிவான மொழியொன்றினால் மட்டுமே குறைக்க முடியும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நீயும் தோற்றுவிடுவாய்! அப்படி நொந்து போயிருக்கிறேன் நான்.”
“அன்பா! அழாமல் பேசு—முதலில் விஷயத்தைச் சொல்! அப்படி யென்ன வராத்து வந்துவிட்டது?”
“வராத்து வந்துவிடவில்ல—வழக்கமாக வஞ்சகர்கள் செய்யும் வேலைதான் இது! ஆனால் இது, இதுவரை நடக்காத இடத்திலே நடந்து விட்டது!”
“மாமனார் வீட்டிலா?”
“குடும்ப விஷயமில்ல சுந்தர் நான் பேசுவது! கொந்தளித்துக் குமுறிவிட்ட கோர நிகழ்ச்சியடா இது!”
“பிறகு யாராவது நண்பர்களிடம்?”
“நண்பர்களா? சகோதரா!—நண்பர்களைப் பற்றித்தான் நாமிருவரும் ஒரு நல்ல முடிவுக்கு வந்து பல நாளாகிறதே!—நாசம் நடந்துவிட்டது—நடக்காத இடத்திலே நடந்துவிட்டது!”
“புரியும்படிச் சொல்—என்னையும் குழப்பாதே!”
“திருடி விட்டார்கள்!”
“எதை? பணத்தையா?”
“பணம் போனால் என்ன—அதைப் பற்றி நான் என்றைக்கடா இப்படிக் கவலைப்பட்டிருக்கிறேன்?”
“பிறகென்ன; குழந்தையின் முத்தாரமா?”
“அது அந்த திருடனுக்குத் தேவையில்ல போலும்?”
“பிறகு எதைத் தான் திருடினன்? யார் அந்தத் திருடன்? அதைச் சொல்!”
“திருடன் பெயரைச் சொன்னால் நீ நம்பமாட்டாய்—நானும் நம்பவில்ல முதலில்! இப்போதுதானப்பா உள்ளம் கொதிக்கிறது! மகனைப் பறிகொடுத்த தாயின் வயிறுகூட இப்படி எரியாதப்பா!”
“சரிதான்—ரத்தக் கண்ணீரே விட ஆரம்பித்து விட்டாய்!”
“அது தானப்பா என் கதை!—கண்ணீர்க் குளமாகத்தான் மாறிவிட்டது என் வாழ்க்கை!”
“நீ இப்போது சொல்லப் போகிறயா இல்லையா? கடைசியாய்க் கேட்கிறேன், விவரத்தைச் சொல்!”
“என் எழுத்தைத் திருடிவிட்டார்கள்!”
“என்ன?”
“யசோதர காவியத்தைத் தழுவி ஒரு கற்பனைச் சித்திரம் வரைந்தேனே தெரியுமா உனக்கு?”
“ஆமாம், சொன்னுய்! நான் படித்துப் பார்க்கவில்ல—அந்தக் கற்பனைக்குத் தலைப்புகூட ‘சுகம் எங்கே’ என்று அமைத்திருந்தாய் அல்லவா!”
“அதுதான் சகோதரா! குதர்களால் களவாடப்பட்டு விட்டது!”
“தலைப்புதானே!”
“அல்ல! அல்ல! தலைப்பைப்பற்றியல்ல நான் பேசுவது! கருத்துக்களும் உரையாடல்களும் களவாடப் பட்டுவிட்டன பாவிகளால்!”
“பதறுதே!”
“நான் என்றைக்காவது இப்படிப் பதறிப் பார்த்திருக்கிறயா? என் அன்பு உருவான தங்கையின் பிணத்தைப் பார்த்த போது கூட மரம் போலத்தானே நின்றேன்—அழுதேனா? பதறினேனா? சுந்தர்! உனக்குத்தான் தெரியுமே; என் இதய ராணி, இல்லறத்தின் விளக்கு, இமைகளைத் திறக்காமல் மூடி இறப்புலகம் ஏகிவிட்ட நேரத்தில் கூட வாய்விட்டுக் கதறவில்ல. நான் அமைதியாகத்தான் நின்றேன்—பட்டமரம்போல் ஆனேனே தவிரப் பதறவில்லையே சகோதரா! அப்பா! அப்பா! என அழைத்துத் தாவிய என் செல்வன் செத்துவிட்டபோதும். கண்ணீர் உகுத்திடவில்ல—கலங்கினேன்—கதறிடவில்ல! அதுவும் தெரியும் உனக்கு! அருமைச் சகோதரனே! இப்போது நான் பதறுகிறேன்—துடிக்கிறேன்! இதை நான் மறைத்திட விரும்பவில்ல. கழுத்திலே அரிவாள் பாய்ந்திருந்தால் தலைவேறு முண்டம் வேறுகப் போயிருக்கும்! இந்த அரிவாள் இருதயத்தைக் கொத்திவிட்டதடா என் சுந்தர்! அலறுகிறேன்—இந்த உலகத்தின் காதிலே விழட்டும் என்ற நினைப்பிலே கூவுகிறேன்—கூச்சலிடுகிறேன்!—கூடாது! கோழைபோல் அழக்கூடாது, என்று நீ கூறுகிறாயா?—என் ஒருவனின் கண்ணீர் அந்தப் பாதகர்களின் பாருங்கல் மனத்தைக் கரைத்துப் பண்படுத்திவிடும் என்பதால் அல்ல நான் அழுவது! பழம் கிடைக்கும் அழுதால் என்று குழந்தை நினைக்கிறதே அது போலவோ; பலன் கிடைக்கும் அழுதால் என்று பாசாங்குக்காரி நினைப்பாளே அது போலவோ அல்ல நான் அழுவது! மண்டையைப் பிளந்தால் ரத்தம்தானே கொட்டுகிறது—அது போலத்தான் கண்ணீரும் கொட்டுகிறது. என் கண்ணீருக்குச் சக்தியிருக்கிறதோ இல்லையோ—அதைப்பற்றி ஆராய்ச்சி எனக்குத் தேவையில்ல—நான் அழுகிறேன்—இல்ல—அழும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டு விட்டேன்!”
“மிகவும் புண்பட்டிருக்கிறாய்—கொஞ்சம் நிம்மதியாக மெளனமாக இரு!”
“முடியாது சுந்தர்! என் இருதய பாரம் குறையவேண்டும்—எதாவது பேசிக் கொண்டேயிருக்கிறேன்—பித்தன் என்று கூறுவாய்! கூறிக்கொள், கவலையில்ல!”
“நானும் சேர்ந்து உன்னோடு அழுகிறேன்—விஷயத்தை யாவது புரியும்படிச் சொல்!”
“அதுதான் சொன்னேனே; யசோதர காவியத்தைத் தழுவி ‘சுகம் எங்கே?’ என்று ஒரு கற்பனைக் காவியம் தீட்டினேன். அதிலே உள்ள என் உரை நடைகளைத் திவட்டிக் கொள்ள அடித்துவிட்டார்கள் தீயவர்கள்!”
“அந்தத் தீயவர்கள் தான் யார் என்று கேட்கிறேன்—அதைச் சொல் முதலில்!”
“யசோதர காவியத்தில் வரும் அமிர்தமதி என்ற அரசியை விடக் கொடியவர்களப்பா அந்தத் திருடர்கள்!”
“அமிர்தமதி! யசோதர காவியம்! நான் எதுவுமே படித்த தில்ல—நீ என்னிடம் வந்து உதாரணம் காட்டுகிறாய்!”
“யசோதர காவியம்—நீ படித்ததில்ல? ஐஞ்சிறு காப்பிய வரிசையிலே உள்ளதல்லவா அந்தக் காவியம்! அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறும் சமண சமய நூல். சுந்தர்! அதிலே வரும் அமிர்தமதி என்ற பாத்திரத்திற்கும் என் எழுத்தைத் திருடிய எத்தர்களுக்கும் கொஞ்சமும் வித்தியாச மில்ல! சுருங்கச் சொல்லப்போனால் இந்தச் சம்பவத்துக்கும் யசோதர காவியத்திற்கும் நிரம்பத் தொடர்பு உண்டு!”
“சரி! அதையாவது புரியும்படிச் சொல்!”
“யசோதரன் அவந்தி நாட்டு மன்னன். அவனது பட்டத்து ராணி அமிர்தமதி. ராணியின் மனமறிந்து மகிழ்ச்சியளிக்கும் மன்னன்தான் யசோதரன். சுந்தரரூபன். சுகுமாரன். நாட்டுக்கு அதிபதி! அத்தகைய செங்கோல்வேந்தியின் சிற்றின்பக் கூடாரத்தை அலங்கரிக்கக் கூடிய பாக்கியம் அந்தச் சிங்காரி அமிர்தமதிக்குக் கிடைத்திருந்தது, மன்னவனின் மஞ்சத்து மயில் என்றால் சாதாரணமா? தாதிகள் உண்டு; தயவு கேட்டு நிற்கப் பல சேவகருண்டு! தங்கம் கலந்த உணவை உண்டு—அங்கம் பூரிப்பு கொண்டு—காதல் மிஞ்சுதே சேடி—காவலனேக் கூப்பிட்டு வாடி! என்று அழைத்த கணமே அவர்கள் ஓடி, ஆடிப்பாடி அரசனை அழைத்து வருவர். ஆண்மேல் அம்பாரியா? அணி தேர்ச்சவாரியா? பூண் ரோமத்தால் மிதியடியா? புலிப் பாலா? புரவிக் கொம்பா? எது கேட்டினும் தருவர்—அதற்கெனவே எடுபிடிகள் ஏராளமாக உளர். இந்தச் செல்வாக்கின் மத்தியிலே செல்லநடை போடும் சேயிழையாள் அந்த அமிர்தமதி!”
“ஆகா பிரமாத வர்ணனை! சொல்! இன்னும் சொல்!”
(தன் தோழன் சொல்ல வந்த சோகச் செய்தியை மறந்து காவியத்தின் சுவையிலே இலயித்துவிட்டதைச் சுந்தர் உணர்ந்தான்—ஆகவே, மீண்டும் காவியத்தைத் தொடரத் தூண்டினன்.)
“அழகி அமிர்தமதியும், அரசன் யசோதரனும் ஒரு நாள் அந்தப்புரத்தில் இன்பக் கேளிக்கையில் ஈடுபட்டனர்.”
“ஓகோ! ஒய்யாரமான கட்டமே இப்போதுதான் ஆரம்பம் போலும்—சொல் சோதரா, சொல்!”
“கட்டிற் காவியம் எழுதி முடித்தனர்—கண் அயர்ந்தனர்.”
“சரிதான், சுருக்கமாக முடித்து விட்டாய்! பிறகு காலையில் எழுந்தனர்; அவ்வளவுதானே?”
“இல்ல இல்லை—அரசன் தூங்கும் சமயம், ராணி கண் விழித்தாள். ஆமாம்! மலர் விழித்துக்கொண்டது; வண்டோ தூங்கிக்கொண்டிருந்தது. விழித்த சமயம் அந்த இரவில் ஒரு இனிய கானம் அவள் காதில் ஒலித்தது!”
“சரி”
“கானம் வந்த பக்கம் கருத்தைச் செலுத்தினாள். அந்தக் கானம் எழுப்பியவனைக் கட்டித் தழுவவேண்டுமென்று துடித்தாள்!”
“அய்யய்யோ—அப்புறம்!”
“மறுநாள் தன் தோழி குணவதியை அனுப்பினாள்; அர்த்த ராத்திரியிலே பாடியவன் யாரென்று அறிந்துவர! தோழியும் போய் அவனைக் கண்டாள். இசை எழுப்பியவன் ஒரு யானைப் பாகன். அவன் எப்படிப்பட்ட அழகுடையவன் தெரியுமா? தோழி வாயிலாகக் கவிஞர் கூறுகிறார் கேள்:—
‘நரம்புகள்விசித்த மெய்யன், நடையினிற் கழுதணிந்தோன், திரங்கியவிரலன், கையன், சிறுமுகன், சினவன், சீற்ற குரங்கினே யனையன், கூனன், குழிந்து புக்கழிந்த கண்ணன்!’
“இன்னும் பலவாறுக அவன் துவிகாரங்களை வர்ணித்து அவன் மீது ஆசை வைப்பது தகாது என்று ராணியிடம் தோழி கூறுகிறாள். அமிர்தமதியோ ‘அவன் எப்படியிருந்தாலும் கவலையில்ல. அவனே அண்ணத்து மகிழத்தான் வேண்டும்’ என்று பறக்கிறாள். ‘கனியிருப்பக் காய் பறிக்கலாமா அம்மா! சகல அழகும் பொருந்திய அரசர் பெருந்தகையின் மனைவியாகிய நீங்கள், கேவலம் குரங்கைப் போன்ற—ஒரு சாக்கடை மனிதனைக் கொஞ்சிக் குலவ விரும்பலாமா தாயே!’ என்றெல்லாம் குணவதி தடுக்கிறாள். ஆனால் அரசியோ, ‘அவன் எப்படியிருந்தால் எனக்கென்ன; அவன் நல்ல இசைவாணன்—அவன் அன்பிலேதான் சுகம் இருப்பதாக நான் உணர்கிறேன்’ என்று கூறியதோடு, அந்தப் பாடல் கற்ற யானைப் பாகனையும் வலிய இழுத்து, அண்ணத்து மகிழ்ந்தாள். நாளொருமேனியாக அந்த நாய்க் காதல் வளர ஆரம்பித்தது. ஒரு நாள் அரசனே அவர்களது காதல் களியாட்டத்தைத் தூர நின்று பார்த்துவிட்டான். அப்போது என்ன நடந்தது தெரியுமா? அரசன் எந்தக் காட்சியைக் கண்டான் தெரியுமா? வழக்கமாக யானைப்பாகனைச் சந்திக்கும் அமிர்தமதி அன்று சற்றுத் தாமதமாக அவனிடம் வந்து விட்டாளாம். அதற்காக அந்த யானைப் பாகன்—அட்டபங்கன் என்னும் பெயருடைய அந்த அவலட்சணம்—அமிர்தமதியின் அழகுக் கருங்கூந்தலைக் கையால் இழுத்து எறிந்து, அவளைக் கீழே தள்ளி, இரு கைகளாலும் கையைப் புடைத்து ‘ஏன் காலம் தாழ்த்தி வந்தாய்?’ என்று கனல் கிளம்பக் கேட்கிறான்.
“கட்டளையிட்டால், காதம் யோசனை என்ற தூரம் ஓடிக் காரியமாற்றிடும் பணியாளர்களின் தலைவி—மண்டலாதிபதியின் மனைவி—ஒரு அழுகிய உடல் படைத்த யானைப்பாகன், தன்னைத் திட்டி அடிப்பதிலே சுகம் காண்கிறாள்.
“அவள் மலர்ப் பாதங்கள் அர்ச்சிக்க ஆயிரம் பேர் காத்திருப்பர்—அவள் அந்தப் பாகனின் கால்களைக் கண்ணில் ஒத்திக் கொண்டு காலந் தாழ்ந்தமைக்கு மன்னிப்புக் கோருகிறாள். இதைக் கண்ட மன்னன் வெகுண்டான். தனக்குத் தடையாக வந்த மன்னனுக்குத் தந்திரமாக நஞ்சு கலந்து அவனையே தீர்த்துக்கட்டி விட்டாள், அந்தப் பாகனின் பாட்டிலே சுகம் கண்ட பாதகி. அந்தப் பாதகிக்குப் பெயர் அமிர்தமதி! இதுதான் சுந்தர் யசோதர காவியத்தின் சுருக்கம்!”
“நன்றுயிருக்கிறது—சந்தனத்தை மறுத்துச் சாக்கடையிலே சுகம்கண்ட ராணியின் கதை நன்றுயிருக்கிறது! இந்தக் காவியத்திற்கு நீ ‘சுகம் எங்கே?’ என்று பெயர் வைத்தது மிகவும் பொருத்தம்.”
“இப்போது புரிகிறதா—என் எழுத்தைத் திருடியவரும் அந்த அமிர்தமதியும் குணத்தால் ஒருவரே என்பது; கேள் சுந்தரம்! பேச்சை மாற்ற வேறு பக்கம் திரும்பாதே! காவியத்தில் வரும் அமிர்தமதி அரசனைவிட்டு யானைப் பாகனைத் தேடுகிறாள்; அந்த விகாரியுடன் விபச்சாரமும் நடத்துகிறாள். நல்லது கசக்கிறது, நாசம் இனிக்கிறது அவளுக்கு! அவளைப் போலத்தான் என் எழுத்தைத் திருடியவருக்கும் தேன் கசக்கிறது! ஆமாம் சகோதரா! திருட்டுத் தனம் இனிக்கிறதாம்.”
“யார் என்று தான் சொல்வேன்!”
“சொன்னால் நம்பமாட்டாய்! அவ்வளவு நல்லவராயிருந்தார்—யாரோ அவரை விஷமாக்கி விட்டார்கள். அய்யோ அவர்கள் வாழமாட்டார்கள்! மூளையை உருக்கிச் செய்த கற்பனைகளை உழைக்காமல் எடுத்து விழுங்கிவிட்ட எத்தர்கள் அதிக நாள் வாழமாட்டார்கள்! வியர்வை சொட்டச் சொட்ட, விலா விலே வலி கொட்டக் கொட்ட, விழி மூடாமல் வேலை செய்து நான் உருவாக்கிய தழுவல் இலக்கியத்தைப் பாடுபடாமல் எடுத்து, வாயிலே போட்டுக் கொண்டவர்களுக்கு நல்லதொரு தீர்ப்புக் கிடைக்காமல் போகாது!”
“உஸ்! பேசாமலிரு! அலட்டிக்கொள்ளாதே!”
“என் நிலைமையிலே நீ இல்ல—அதனால் அப்படிச் சொல்கிறாயா?”
“நானும் நீயும் ஒன்றுதானே—வேறு வேறு?”
“அப்படியானால் இதற்கு என்ன தான் வழி? அதையாவது சொல்! இந்த அக்கிரமத்திற்கு அழிவே கிடையாதா?”
“ஏன் கிடையாது! நீ சொன்னுயே கதை—அதிலே இருக்கிறதே முடிவு! அமிர்தமதி தன் ‘சுகம் எங்கே?’ பென்று தேடிக் கொண்டாள். கணவனையும் கொன்றாள். ஆனால் அந்த அற்ப புத்திக்காரி காவியத்திலே களங்கம் நிறை அவமானச் சின்னமாக ஆகிவிட்டாளே—அதை அந்தக் கைகாரியால் மாற்ற முடிந்ததா? அதேபோல் உன் எழுத்தைத் திருடியவர்களும் அவமானத் தோட்டத்திலே பூத்துவிட்ட எருக்கம் பூவாகி விடுவார்கள் பயப்படாதே!”
“சுந்தர், நீதான் எனக்கு ஆறுதல்!”
“கவலைப்படாதே! அந்த எழுத்துக் கொள்ளையர் யார்? அதைச் சொல்!”
“பிறகு சொல்கிறேன்—இப்போது என்னால் பேச முடியவில்ல.”
◆ ◆ ◆