அகத்திணை அன்பு!
Love Within!
மு. கருணாநிதி
அகத்திணை அன்பு!
ஒரு அழகான பெண். அவளுக்கு ஈடான அழகு இந்த உலகத்தில் யாருமேஇல்ல; புராணிகர்கள் கூறுகின்ற அழகு! ஊர்வசி, ரம்பை, திலோத்தமை கூட இல்லை. அவ்வளவு அழகான பெண். அவள் ஒரு குளிர்புனல் ஓடைக்குக் குளிக்கச் சென்றாள் அவள் குளித்து முடித்துவிட்டுக் கரையேறுகின்ற நேரத்தில் மற்றொரு பெண் கைக் குழந்தையோடு கையில் குடத்துடன் வருகிறாள்.
வந்தவள் கைக் குழந்தையை ஒரு மேட்டினிலே உட்கார வைத்துவிட்டு ஓடையிலே குடத்தைத் துலக்கிக் கொண்டிருக்கிறாள்.
அந்த நேரத்திலே மேட்டிலே இருந்த குழந்தை தவழ்ந்து வந்து கீழே தண்ணீரில் விழக்கூடிய சூழ்நிலை.
இவள் ஓடி, குழந்தை விழாமல் தடுக்க முடியுமா என்றால் முடியாது ஏனென்றால் அவள் அவ்வளவு தொலைவில் இருக்கிறாள். எனவே அவள் அழகான அந்தப் பெண்ணைப் பார்த்து ‘ஓடிப்போய் குழந்தையைக் காப்பாற்று’ என்று சொல்லுகின்றாள்
ஆனால் அந்த அழகான பெண் அதை அலட்சியமாகப் பார்த்துவிட்டுப் போய்விடுகிறாள்.
தாய் ஓடி வருவதற்குள்ளாக குழந்தை தண்ணீருக்குள் விழுந்து விடுகின்றது. விழுந்தாலும் உடனடியாகப் போய்த் தூக்கிய காரணத்தால் குழந்தைக்கு உயிர் மூச்சு தரமுடிகிறது தாயால்.
அப்போது அந்த அழகான பெண்ணைப் பார்த்து அந்தத் தாய் சொல்லுகின்றாள்.
“புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு”
இவ்வளவு அழகாக நீ இருந்து என்னடி! உன் அகத்தில் அன்பில்லையே என்று சொல்லுகின்றாள்.