அடுத்த பிறவியில் ஐந்து கணவன்

Five Husbands in the Next Birth

மு. கருணாநிதி

அடுத்த பிறவியில் ஐந்து கணவன்

“நளா! ஏனம்மா இப்படி எப்போதும் அழுது கொண்டேயிருக்கிறாய்?”

“காரணமா கேட்கிறாய்; இதயா! தணலிற் புழுவாய் தவிக்கிறேன் நான் என்பதை நீ அறிய மாட்டாயா? அதோ ஜோடியாகக் கூவும் பறவைகளின் சங்கீதத்தைக் கேட்கிறாயா நீயும்! சோலைப் புறமிருந்து காதலர் மீட்டும் வீணாகானம் எத்தகைய விரகதாபத்தை ஒரு பருவ மங்கைக்கு எழுப்பும் என்பதை நீ அறியமாட்டாயா? அறிவாய்! அறிந்தும் எனக்கு ஆறுதல் கூறுவதற்காக இப்படி மெளனம் சாதிக்கிறாய் - இல்லையா?

“உண்மைதான் நளாயினி! உலகா உன்னைப் பத்தினி என வாழ்த்தினாள். அதையும் மறைந்து நின்று கேட்டேன். அந்தப் புகழ் வெளிச்சம் மட்டுமே போதுமென்று திருப்தி அடைய வேண்டியதுதான்.”

“இதயா! உண்மையைச் சொல், நான் பத்தினியா? எப்படி? எப்படி?”

“ஆமாம்! குஷ்டரோகம பிடித்த கணவனைத் தாசி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறாயே!”

“கிண்டல் செய்யாதே இதயா! குஷ்டரோகம பிடித்தவனோடு கூடிக் கிடக்க எனக்கு விருப்பமில்லை. என்னை ஆசையோடு அழைக்கிறான். அணைக்கவோ என் கை நடுங்குகிறது. ஆகவேதான் அவனைத் தாசி வீட்டுக்கு அனுப்பினேன். என் அழகுக்கு ஆபத்து வராமல் அவன் ஆவல் தீர்ந்தால் சரியென்று எண்ணினேன். இந்தத் தந்திரம் உனக்குத் தெரியாதா இதயா!”

“நாணறியாதது ஒன்றுண்டா நளாயினி? ஆனாலும் உலகா நம்பியிருக்கிறாள். உன் பதிவத்தை! குஷ்டரோகியைத் தாசி வீட்டுக்குத் தலையிலே தூக்கிக் கொண்டு போனதைப் பெரிய பத்திபக்தி என உலகா எண்ணுகிறாள்”

“தலையில் தூக்கிக் கொண்டுபோனேன் என்கிறாயே நீயும்! திருத்திக்கொள். கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போனேன். குஷ்டரோகியைக் கையால் தொட்டுத் தலையில் தூக்கிப் போக எனக்கென்ன பைத்தியமா? அதெல்லாம் ஜாக்கிரதையாகக் கூடையில் வைத்துத்தான் கொண்டு போனேன்!”

“நளா! உன் கணவன் எவ்வளவு கடுமொழிகளைக் கூறினாலும் எதிர்த்து ஒரு சொல் கூறாத கற்பரசி என நேற்றுக் கூட உலகா என்னிடம் உன்னைப் புகழ்ந்தாள்”

“கணவன் திட்டினான். நான் மறுமொழி பேசவில்லை. உண்மை தான்! குஷ்டரோகிதானே திட்டுகிறான் என்று அலட்சியப்படுத்தினேன். நானும் அவனுடன் பேசினால் பேச்சு வளரும். அந்த வாதத்தின் காரணமாக அவனோடு நெருங்கி நின்று வார்த்தையாட வேண்டும். அதற்காகத்தானடி அந்தக் குஷ்டம் பிடித்தவன் குறைத்துக் கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்”

“உம். எப்படியோ, பத்தினி என்று பட்டம் பெற்றுவிட்டாய். பார் புகழும் பதிவிரதை - பதிபக்தி மிகுந்தவள் என்றெல்லாம் உலகா புகழ்ந்து விட்டாள் உன்னை!”

“உலகாவுக்கு என்னடி தெரியும். என் உள்ளத்தில் இருக்கும் எரிமலை? பத்தினிப் பட்டம் போதுமா, பருவங்களை சுட்டும் இந்தப் பரிதாபத்திற்குரியவளுக்கு? சொல்லடி இதயா, சொல்லு! சுக வாழ்க்கைக்கு வழி சொல்லு!”

“வழி சொல்கிறேன் நளாயினி. நான் ஒரு புதிய வரம் தருகிறேன். இந்த ஜென்மத்தைச் சீக்கிரம் கழித்துவிட்டு விரைவில் அடுத்த ஜென்மம் எடு! அந்த ஜென்மத்தில் நீ திரெளபதியாகப் பிறக்கப் போகிறாய்! ஒரு கணவன் இருந்தும் உனக்கு உற்சாகமில்லை; உல்லாசமில்லை; உள்ளமோ வேதனைகளமாயிருக்கிறது உனக்கு! ஆகவே அடுத்த பிறப்பில் ஐந்து கணவரோடு ஆனந்த வாழ்வு வாழி அருமையான வரம் தருகிறேன்”