ஆட்டக்காவடி

Aattakkavadi

கலைஞர் மு. கருணாநிதி · கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்

ஆட்டக்காவடி

“ஆட்டக் காவடி என்றால் பக்திக் காவடி அல்ல! பக்திக் காவடி எடுத்துப் பிரார்த்தனை செலுத்துகிறார்களே, அவர்களுக்கு முன்னே நடைபெறுகின்ற காவடி ஆட்டக் கச்சேரி—அவ்வளவுதான்! ஆட்டக் காவடி எடுத்து ஆடுகிறவர்கள் பல பேர் ஏழெட்டுக் குடுக்கை மதுவை உள்ளே செலுத்தியபடி ஆடிக் கொண்டே இருப்பார்கள். பக்திக் காவடி எடுப்பவர்கள் மட்டும் ஒழுங்கோ என்று கேட்கிறாயா? அவர்கள் தான் மதுவைவிடப் பயங்கரமான பக்திப் போதையில் இருக்கிறார்களே! அதனால் நான் சொல்லுவதைக் கேள், கனிமொழி! நான் நடத்தப் போகும் ஆட்டக் காவடிக் கச்சேரி, பக்தியின் பாற்பட்டதல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்! கழுத்திலே காவடியிருக்கும்; அவ்வளவுதான்—கருத்திலேயும் ஆண்டவனின் சேவடியிருக்கும் என்று நினைத்துவிடாதே! அந்த மூட நம்பிக்கைப் போதை—என் எதிரே அலகு குத்திக்கொண்டு பால் செம்பு கட்டிய காவடியைச் சுமந்து வருவார்களே, அந்தப் பக்தர்களிடத்திலேதான் இருக்கும். என் காவடியில் ‘பாவலா’ இருக்குமே தவிர பால் இருக்காது! ஆட்டக்கலை இருக்கும்—அறிவுக் கொலை இருக்காது! மயில் தோகை, காவடியின் முன்னே இருக்கும்—மங்கை உன் நினைவு தான் மனத்தில் இருக்குமே தவிர மயிலேறும் முருகனைப் பற்றிய மடமைக் கனவு இருக்காது!—உத்திரவு கொடு என் தங்கமே! :

நூறு ரூபாய் தருவதாகச் சொல்லுகிறார்கள்—நாவெல்லாம் பாடுபட்டாலும் நாலைந்து மாதம் சேர்ந்தாற்போல் உழைத்தாலும் முழுசாகக் காண முடியாத பணம்—நூறு ரூபாய்! பழனிக்குப் போய் அங்கே ஆடினால், புதிய கிராக்கிகள் கிடைத்தாலும் கிடைக்கலாம். உத்தேசமாக இரண்டு மூன்று கிராக்கி கிடைத்தால் போதும்—முந்நூறு ரூபாயாவது மிச்சப் படுத்திக்கொண்டு வருவேன். அனுமதி கொடு கனிமொழி! நாளைக் காலையிலே புறப்பட வேண்டும்; பிரார்த்தனைக்காரர்கள் பெரிய பணக்காரர்கள். அவர்களிடத்திலே வாக்கலித்துவிட்டு வந்துவிட்டேன், நிச்சயம் வருவதாக; தடை சொல்லாதே தங்கம்! அவர்களே ஏமாற்றி விட்டால், அவர்களுக்கு வேறு ஆட்டக் காவடிக்காரன் கிடைக்க மாட்டான். சாகிறவரையில் என்னைச் சபித்துக் கொண்டேயிருப்பார்கள்!—சரி என்று சொல்லு!—எங்கே? என்னைப் பார்! சரியென்று சொல்ல மாட்டாயா?...”

கனிமொழியின் முகத்தை ஆவலோடு நோக்கியவாறு கொஞ்சந் தோரணையில் கந்தன் பேசிக்கொண்டே இருந்தான். கனிமொழியின் கண்கள் கலங்கியிருந்தன. அவள் அவனைப் பார்த்தாள் அனுதாபத்தோடு!

“பண ஆசைதானே உங்களை இப்படியெல்லாம் பேசச் செய்கிறது! உடலிலே வலுவிருக்கிறது—உழைக்கக் கைகள் இருக்கின்றன. கடவுள் சந்நிதானத்திற்குக் காவடி எடுப்பவர்களுக்குக் காவடி ஆடி, நூறு ரூபாய் சம்பாதிப்பதைவிடக் கைத்தறி வேலையிலே கிடைக்கிற பத்து ரூபாய், இருபது ரூபாய் எவ்வளவோ உயர்ந்தது, அத்தான்! வேண்டாம்; நான் சொல்வதைக் கேளுங்கள்—பக்கத்து வீட்டுக்காரர்கள் பரிகாசம் செய்வார்கள்! ‘சாமி இல்லை, பூதம் இல்லை என்று சொல்லித் திருக்குறள் திருமணம் செய்து கொண்டான். அவன் இப்போது ஆட்டக் காவடி எடுத்து ஆடப் போகிறானாம்’ என்று ஊரார் கை கொட்டிச் சிரிப்பார்கள், அத்தான்!” என அழுதாள் கனிமொழி.

“ஆட்டக்காவடி என்றால் அர்த்தம் தெரியாதவர்கள்தான் சிரிப்பார்கள்!—இது ஒரு நடனம் போலத்தான்!”

“நடனம் என்றால் அந்த ஆட்டக் காவடி நடனத்தை ஒரு மேடையில் ஆடிக் காட்டுங்கள்! பழனிக்குக் காவடி தூக்கும் பக்தர்களுக்கு முன்னால்தானே ஆட வேண்டும்?”

“பணம் வருகிறதே—பணம்!”

“மானம் போகிறதே—மானம்!”

“கனிமொழி! உனக்கு எத்தனை தடவை சொல்லி விட்டேன்; நான் ஆடுவது ஆட்டக் காவடி—அவர்கள் தூக்குவது பக்திக் காவடி என்று!”

“அவர்கள் தனியாக ஆட்டும் பக்திக் காவடி! நீங்கள் வேறொரு நாளைக்கு ஆட்டக் காவடி ஆடுங்கள்! உங்கள் கலைத் திறமையைக் காட்டுங்கள்! யார் வேண்டாமென்றது? இரண்டும் ஒரே நேரத்தில் வேண்டாம்—இழிவும் பழியும் வந்து சேரும்! உங்கள் ஆட்டக் காவடித் திறமையைக் காட்ட நானே ஏற்பாடு செய்கிறேன்; ஒரு நாள் ஊர் மக்களைக் கூட்டுவோம்; அவர்கள் எதிரே உங்கள் கலைத்திறமையைப் பொழியுங்கள்; அதைக் கண்டு களிக்கிறேன் நான்! அதை விட்டுவிட்டுக் காசுக்காக, மாசு ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்!”

“பைத்தியக்காரி! நூறு ரூபாய் ஒரு சாமான்யமா?”

“எதற்கு நூறு ரூபாய் இப்போது?—நானென்ன உங்கள் ஜரிகைப் புடவையும் தங்க நகையும் கேட்டுத் துன்புறுத்திக் கொண்டாயிருக்கிறேன்? குடிக்கக் கஞ்சி போதும்—குடியிருக்க உங்கள் நெஞ்சு போதும், எனக்கு!”

“கனிமொழி!... நீ என்ன சொன்னாலும் சரி, நாளைக்கு நான் பழனிக்குப் போய்த்தான் தீருவேன்—முடிவை மாற்றவே முடியாது!”

என்று வேகமாக எழுந்தான் கந்தன். அவன் கையைப் பிடித்துக் கனிமொழி நிறுத்தியபடி,

“நன்றாக யோசித்துப் பாருங்கள். ஊர் கேலி செய்யும்; உங்களையே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் உயிர்த் தோழர்கள் எல்லாம் ஊரார் முகத்தில் விழிக்க முடியாதபடி அவமானத்தால் தலையைக் குனிந்து நடக்க நேரிடும்; நண்பர்களை உத்தேசித்தாவது இந்த முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்!”

“சரி! ஒரே முறை! அனுமதி கொடுத்துவிடு! இனிமேல் போகவில்லை!”

“ஒரே முறை விஷம் சாப்பிட அனுமதி கொடுக்க முடியுமா?”

“கனிமொழி, குற்றம் செய்கிறோம் என்பது தெரிகிறது—தெரிந்தாலும் சில நேரங்களில் செய்துதான் தீரவேண்டியிருக்கிறது!”

“முன்னொரு காலத்தில் ஆட்டக்காவடி நிபுணராயிருந்தீர்கள்; அதையே தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தால்—பழனிக்குமட்டுமல்ல—திருச்செந்தூர், திருத்தணி, எட்டுக்குடி, கதிர்காமம் வரையிலேகூடச் செல்லலாம். இடையிலே பகுத்தறிவு புரியிலே நுழைந்துவிட்டோம். அத்தான்—அதைச் சற்று எண்ணிப் பாருங்கள்! தெரிந்த குற்றத்தைப் பிறகு செய்ய மாட்டவர்கள்!”

கந்தன் அசைவற்று நின்றுகொண்டேயிருந்தான். கனிமொழியின் கண்கள் அவனையே நோக்கியபடி இருந்தன. அவளது எண்ணங்களோ கடந்த கால ஏடுகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தன.

கனிமொழி நெசவாளர் வீட்டிலே உதயமான நீல நிலவு; அவள் தந்தை நெல்லையப்பர் பழுத்த பகுத்தறிவுவாதி. ஒரே மகளைச் செல்லமாக மட்டுமன்றி, சிந்தனைத் தோட்டமாகவும் வளர்த்து வந்தார். பட்டிக்காட்டு நடைபுடை பாவனைகளோடு பகுத்தறிவுப் பெட்டகமாகவும் விளங்கிடும் முதல் பெண்மணி கனிமொழியாகத்தான் இருக்கவேண்டுமென்று நெல்லையப்பர் பெருமையோடு கூறிக்கொள்வார். கனிமொழி, குழந்தை முதலே பகுத்தறிவுப் பாடசாலையின் மாணவியாக மாறிவிட்டாள்.

தீபாவளி! தெருவெல்லாம் ரகளைப்படும்! வர்ண மத்தாப்புக்கள்—வானவில்லை ஒத்த நிறங்காட்டும் வாண வகைகள்—அவைகளெல்லாம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள். அப்பா வாங்கித் தந்த “தீபாவளி கொண்டாடாதே!” என்ற புத்தகத்தை வாசலில் உட்கார்ந்து கொண்டு உரக்கப் படிப்பாள். தெருப் பிள்ளைகள் கொளுத்தும், சீன வெடிகளோடு போட்டி போடும் இந்தச் சிங்காரச் சிட்டெழுப்பும் சிந்தனை முழக்கம்!

சோமவார விரதம்—மாரி, காளி பண்டிகை—திரௌபதியம்மன் தீமிதி உற்சவம்—இப்படியெல்லாம் மனத்தைக் கவரும் திருவிழாக்கள் வரும்—போகும். கனிமொழியோ, அந்தக் குக்கிராமத்தில் இருந்தபடியே—குவலயத்துப் புதுமைகளைப் பற்றி எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பாள்.

கனிமொழி—தனி மரமானாள். அந்தக் கன்னியைத் தனியே விட்டுவிட்டுத் தந்தை காலமானார். தாயற்ற அவள் இப்போது அனாதைப் பட்டத்துக்குரியவளானாள். அவளது வாழ்க்கை எப்படியெப்படித் திரும்பப் போகிறதோ என்பது பற்றி ஊரார் ஆரூடம் கணித்துக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில்தான் அவள் வீட்டு வாசலிலே பம்பை, மேள வாத்திய ஒலி கேட்டது.

எப்போதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அலட்சியம் செய்து விடும் அவள் அன்றைக்கு ஏனோ தெருப் பக்கம் திரும்பிப் பார்த்தாள். பார்த்தவள் கண்களைத் திரும்ப எடுக்க முடியாமல் திணறிப் போனாள். ஆட்டக் காவடி ஆட்டம்! அதிருப சுந்தரன் ஒருவன்—அழகும் இளமையும் தேங்கிய உருவினன்—குன்றினை தனது நெடுந்தோளில் ஆட்டக் காவடியைச் சுமந்திருந்தான்.

எழுச்சியூட்டும் பம்பை முழக்கம்—அதற்கேற்றாற்போல அவன் ஆடும் துடிப்பு நிறைந்த ஆட்டம்! “ஆகா—அழகான வாலிபன்—அற்புதமான கலை!” என்று தனக்குள்ளேயே யாரோ பேசியது போலிருந்து அவளுக்கு! கண்களைச் சிறிது திருப்பினாள்—திடுக்கிட்டாள்! அந்த ஊர் மிராசுதார் மிருகண்டு முதலியார், அவரது தர்ம பத்தினி, பட்டணத்துக் கல்லூரியில் படிக்கும் அவரது மகன்—மூவரும் நெற்றியிலே அலகுகளைக் குத்திக்கொண்டு பக்திபூர்வமான பால் காவடிகளைச் சுமந்தபடி நின்றார்கள். இப்போது கனிமொழிக்கு ஆட்டக் காவடிக் கலையும் வெறுத்து விட்டது.

‘அடப் பாவிகளே! அருமையான கலை—இதை விழலுக்கிரைக்கும் நீராக்குகிறீர்களே! சந்தனத்தைச் சாக்கடை நீரில் குழைத்துத் தருகிறீர்களே! பாலோடு விஷம் கலந்தாலும்—விஷத்தோடு பால் கலந்தாலும் இரண்டும் ஒன்றுதானே!’ என்றெல்லாம் எண்ணியபடி வாயிற்படியில் வியப்போடும் விசாரத்தோடும் நின்று கொண்டிருந்தாள். மிராசுதார் மிருகண்டுவின் பார்வை மட்டும் கனிமொழியின் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. தோளிலே காவடி! மனத்திலே கனிமொழி மந்திரம்! அத்துணை பக்திபூர்வமாக நின்று கொண்டிருந்தார் பண்ணையார்!

“ஊரதிர ஆடுகிறேனே, காவடி ஆட்டம்—அவன்தான் கந்தன்!” என்று அடுத்த வீட்டுக்காரி கனிமொழியிடம் கூறினள். குழப்பம் உந்தித் தள்ளக் கனிமொழி வீட்டுக்குள்ளே போய் விட்டாள்.

மிருகண்டு முதலியாரும் காவடியுடன் நகர்ந்தார்—கனிமொழியின் வீட்டுக் கதவைப் பார்த்தபடி!

பம்பை ஒலிகள் சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைந்தன. கனிமொழியின் இருதயத்திலே மட்டும் எங்கேயோ ஒரு மூலையில் ஏதோ ஓர் ஒலி ஈனக் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் இரவு கதவு தட்டும் சப்தம் கேட்டுக் கனிமொழி கதவைத் திறந்தாள். மிராசுதார் மிருகண்டு முதலியார் மளமளவென்று வீட்டுக்குள்ளே நுழைந்தார். கதவை அவரே தாழிட்டார்.

காரணத்தை விளக்கவா வேண்டும்? கனியிருக்கிறது—வெளவால் பறந்து வந்துவிட்டது!

“யாரடா நீ—அன்று நெற்றியிலே அலகு குத்திக்கொண்டு பக்தி ததும்பக் காவடி எடுத்த கண்ணியவானு நீ?”—கனிமொழி நெருப்பானாள்.

“ஆமாம், கிளியே! அந்த அலகு—வெள்ளி அலகு! கிள்ளி நீ உன் அலகால் என் கன்னத்தை வருடு!” என்று கை தொட்டார் மிராசுதார்.

கனிமொழி—பகுத்தறிவுப் பெண்ணன்றே! கண்ணகி சரிதம் படித்தவளன்றே! அவள் கை வீணாயிற்று, பண்ணையாரின் கன்னங்களிலே! இருந்தாலும் வெறிபிடித்த வேங்கை—நெறிபிறழா மான்குட்டி—ஆபத்து நெருங்கிவிட்டது! கூக்குரல்—கூச்சல்—அபயங்கேட்கும் அபாய அறிவிப்பு—அந்தக் குடிசையிலே இருந்து கிளம்பிற்று! அப்போது அங்கே வந்து குதித்தான் ஆட்டக்காவடி கந்தன். மிருகண்டு மிரண்டார். கந்தனின் கால்களில் மிதியுண்டார். கனிமொழி தப்பினள். கதைகளிலே கதாநாயகிக்கு ஆபத்து வருவதும், கதாநாயகன் காப்பாற்ற வருவதும், பின் காதல் உதயமாவதும் வழக்கமாகிவிட்டதைப்போலவே, கனிமொழியின் வாழ்க்கையிலும் அப்படி ஓர் உண்மைச் சம்பவம் எதிர்பாராமல் நடந்துவிட்டது. கந்தனும் கனிமொழியும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவதற்கு அவள் விதித்த நிபந்தனைகள் ஏராளம்.

அவைகளிலே ஒன்றுதான், அவன் ஆலயங்களுக்கு ஆட்டக் காவடி ஆடுவதை நிறுத்த வேண்டுமென்பது! ஒத்துக்கொள்ளாமல் இருப்பானு?—ஆட்டக்காவடி நிறுத்தப்பட்டது—அவனுக்கு அவள் அறிவு புகட்டும் ஆசானை ஆனாள். கந்தனும் அவளுக்குக் கருவிழியானை. அதன் பிறகே இருவருக்கும் திருமணம். ஊரே ஆச்சரியத்தில் மூழ்கியது! கந்தனின் வழியிலே பல காளையர் நடைபோடத் தொடங்கினர். கந்தன் அந்த ஊர் வாலிபர்களுக்கு இளந்தலைவனானான். கனிமொழியோ ஆனந்தக் கடலில் ஒளிவிட்டுப் புறப்படும் பூரண மதியம்போல் முகங்காட்டிப் பூரித்தாள். காவடிக் கந்தன் கைத்தறிக் கந்தனானான். கைத்தறியிலே வந்த பணம் அவன் தாராளச் செலவுக்குப் போதவில்லைதான்! கஷ்டப்பட்டான். ஆனாலும் கனிமொழியின் மனத் தீர்க்கு விரோதமாக நடப்பதற்குப் பயப்பட்டான்.

மிராசுதார் மிருகண்டுவின் மகன்—பீதாம்பரத்தின் மூளை வேலை செய்தது. ஊரிலே எழுந்துள்ள கொள்கைக் கோட்டையைத் தவிடுபொடியாக்கக் கருதினான். கந்தனின் நண்பனானான். காசின் அருமை பெருமைகளைப்பற்றி அடிக்கடி உபதேசித்தான் கந்தனுக்கு! கந்தனின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, அவைகளுக்குத் திருத்தங்கள் சில தருவதுபோல நடித்தான். அப்படி அவன் தந்த திருத்தங்களிலே ஒன்றுதான் பழனிக்கு ஆட்டக் காவடி எடுக்கலாம் என்பது!

கந்தன் அந்தத் திருத்தத்திற்கு விளக்கம் கொடுக்கக், கனிமொழி கற்சிலையாக நின்றுகொண்டிருந்தாள் அன்றிரவு.

நின்றுகொண்டிருந்த கந்தன், திடீரென அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றான்.

மறுநாள் அவனது பழனிப் பயணம் ஆரம்பமாயிற்று. ஆட்டக் காவடி ஆட்டமும் பழனித் தெருக்களில் பிரமாதமாக நடைபெற்றது. அவன் எதிர்பார்த்தபடியே, அங்கேயே அவனுக்கு மூன்று நான்கு கிராக்கிகள் மோதின. முந்நூறு ரூபாய் கிடைத்தது. எடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினான். பணத்தைக் காட்டிக் கனிமொழியின் கோபத்தைப் போக்கிவிடலாம் என்று பூரண நம்பிக்கையோடு வீட்டுக்குள் நுழைந்தான். அங்கே கனிமொழி இல்லை. அந்தப் பகுத்தறிவுச் சிட்டு எங்கேயோ பறந்து விட்டது. கட்டில் மேலே ஒரு காகிதச் சுருள் கிடந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தான் கந்தன்.

“பொது வாழ்க்கை என்பது கரும்பைச் சுவைப்பது போல அல்ல; கரும்பைக் கைகளால் தடவுவதுபோல! தடவிப் பார்த்தால்தான் தெரியும்—கை முழுதும் ‘சுண்’கள் குத்திக் கொள்ளும்!”

உங்களுடைய முடிவுக்குப் பிறகு, நான் மேற்கொள்ள வேண்டிய முடிவுகள் இரண்டேதான்!

ஒன்று விஷம்—

மற்றொன்று விவாக ரத்து!

இதில் எதைத் தேர்ந்தெடுப்பதென்று புரியாமல் உலகத்தில் எங்கேயோ ஒரு மூலையில் திரிந்து கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு

கனிமொழி

பகுத்தறிவுப் பெண்.

கடிதத்தைப் படித்து முடித்தான் கந்தன். கண்களிலே ‘அலகு’ செருகப்பட்டது போல் துடித்துக் கீழே விழுந்து மூர்ச்சையானான்.