ஆலமரத்துப் புறாக்கள்
Aalamarathup Puraakkal
கலைஞர் மு. கருணாநிதி · கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
ஆலமரத்துப் புறாக்கள்
அருவிகளின் சலசலப்பு ஓசையும், அதைச் சுருதியாகக் கொண்டு குயில்கள் மீட்டிய கீதமும், அதற்கேற்றாற் போல மயில்கள் காட்டிய நடனமும் அந்தக் காட்டையே ஒரு சுந்தரபுரியாக விளங்கச் செய்யும்.
காட்டின் நடுவிலே ஒரு பெரிய ஆலமரம். ஆலமரத்துப் பொந்துகளிலே அழகுற விளங்கும் சிறு சிறு புறாக்கூடுகள். அந்தக் கூடுகளிலிருந்து எட்டிப் பார்த்தபடி கானகத்து உற்சாகத்தை ரசித்திடும் மணிப்புறாக்கள்.
“மயிலாட்டத்தைப் பார்த்தாயா?” என்றிடும் ஒரு புறு. ‘மைனர்’ புறுவின் மயக்கத்தைக் கிண்டல் செய்தபடியே “அதோ கேள், குயிலின் கீதம்!” என்றிடும் மற்றொரு சங்கீதப்புறு. “மயிலாட்டக் கண்டு வான்கோழிகள் ஆடிப் பார்த்து முடியாத காரணத்தால், ஆட்டமே கூடாது என ஆர்ப்பரிக்கும் வான்கோழியின் வறட்டுமதிபற்றிக் கேள்விப்பட்டார்களா?” எனப் பிரசங்கம் செய்யும் ஓர் இளத்த புறு. “எல்லாம் சரிதான், இன்றைக்கு எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் உணவே கிடைக்கவில்லை!” என்று ஏக்கக் குரல் எழுப்பும் ஓர் இளத்த புறு. “எனக்குக் கிடைத்த உணவை ஒரு பருந்து பறித்துக்கொண்டு போய்விட்டது!” என பரிதாபச் சிந்து பாடி வரும் ஒரு புறு. “நல்ல வேளை! பருந்துக்கு விருந்தாகாமல் நீ தப்பினையே!” என்று மகிழ்ச்சி கொள்ளும் இன்னொரு புறு. இப்படி இவைகள் பேசிக்கொண்டிருக்கும் போதே விர்ரெனப் பறந்துவந்து மரத்தின் கிளையிலே அமரும் வல்லூறு! அதைக் கண்டதும் அதிர்ச்சியுற்ற புறாக்கள், அலறியடித்துக்கொண்டு காடுகளிலே புகுந்திடும். அவசரத்திலே அல்மோதிக் கிடந்திடும் சில புறுக்களோ வல்லூறு வயிற்றுக்குள் தள்ளிவிட்டு ஏப்பம் விடும். அந்த ஏப்பத்திலே “வந்தேன் எமாத்தினேன்” என்ற வார்த்தைகளும் இருமாப்போடு கலந்து வரும். இது வாடிக்கையாக அந்த ஆலமரத்திலே—ஆமாம்; புறாக்கள் ராஜ்யத்திலே நடைபெறும் நிகழ்ச்சியாகிவிட்டது.
இந்தக் கொடுமைபற்றிப் புறுக்கள் யோசிக்கத் தொடங்கின. “நிம்மதியற்ற வாழ்வு நித்திய நிகழ்ச்சியாகிவிட்டதே! இதற்கு நிவர்த்தியே கிடையாதா?” என ஏக்கக் குரல் எழுப்பின.
இதற்கொரு முடிவுகட்ட வேண்டுமென்று இரண்டு புறுக்கள் முதலில் கிளம்பின. ஒன்று கரும்புறு. மற்றொன்று வெண்புறு. வல்லூறை எதிர்த்திட இரண்டு திட்டங்கள் வகுத்தன. இரண்டு புறுக்களுக்கும் ஏற்கனவே “கொள்வினை கொடுப்பினை” விஷயத்தில் சிறிது தகராறு இருந்தபோதிலும் வல்லூறை விரட்டிடும் கொள்கையில் இரண்டும் கச்சையை வரிந்துகட்டிப் புறப்பட்டன. இது கண்டு ஆலமரத்துப் புறுக்கள் ஆனந்தம் “விடுதலை விருத்தம்” பாடி “வெற்றி முரசொலி” கொட்டத் தொடங்கின. ஆனந்த ஆரவாரம் செய்து கருப்புப்புறுவும், வெள்ளைப்புறுவும் இடும் கட்டளையை எதிர்பார்த்திருந்தன.
அந்தச் சமயத்தில் ஒரு நாள், ஒரு கவர்ப்புறு அவசர அவசரமாக துடித்துப் பறந்தபடி ஆலமரத்திற்கு வந்தது. அது பறந்து வந்த காரணம் ஒரு வேடன் அதைக் குறிபார்த்ததுதான். அந்த வேடன், ‘உணவுக்காகப் புறு தேவையில்லை; கவர்ப்புறு அழகாயிருக்கிறதே! அதைப் பிடித்துச் சென்றால் நல்ல விலைக்கு விற்கலாமே’ என்ற ஆசையாலேயே அதைப் பின்தொடர்ந்தான். கவர்ப்புறு ஆலமரத்தில் நுழைந்துவிட்டதைக் கண்ட வேடன் அதை எப்படியாவது உயிரோடு பிடிக்கவேண்டுமென்று எண்ணி மரத்தடியிலே சுற்ற ஆரம்பித்தான். இதைக் கண்ட கவர்ப்புறு கலங்கிவிட்டது. ஆலமரத்துப் புறுக்களிடம் சென்று அபயம் கோரியது. அந்தப் புறுக்கள் “எங்களால் வேடனை எதிர்க்க முடியாது” என்று கூறின. எப்படியோ கவர்ப்புறு தன் வேதனைக் குரலே அதிகப்படுத்தி மரத்திலுள்ள சில புறுக்களைத் தன் வசப் படுத்திக்கொண்டது. இந்த நிலமையைக் கரும்புறுவும், வெண்புறுவும் கண்டன. வல்லூறை எதிர்க்கும் வேலையோடு வேடனை விரட்டும் வேலை வேறு சேர்ந்துவிட்டதே; இதற்குக் காரணம் கவர்ப்புறுவின் செயல்தானே; கவர்ப்புறு இங்கு வராமலிருந்தால் இந்தப் புதுத் தொல்லை வராதே என்று வெண்புறு வருத்தப்பட்டது.
அதற்குள் கவர்ப்புறு, கரும்புறுவைத் தனியே அழைத்துச் சென்று ஏதோ பேசியது. இரண்டும் சேர்ந்து வேடனை விரட்டுவது என்று திடமெனத் திட்டம் தீட்டின. பிறகு கவர்ப்புறு, வெண்புறுவிடம் ஓடிவந்து—“வேடனை விரட்ட நீயும் வா!” என்று கூப்பிட்டது,
“வேடனை வெற்றிகொள்ள நான் வருகிறேன். நீ பிறகு வல்லூறை விரட்டிவிட்டு, ஆலமரத்தைப் புறுக்களின் தனி மாளிகையாக்கும் முயற்சியில் ஒத்துழைப்பாயா?” என்று வெண்புறு கவர்ப்புறுவிடம் ஒரு நிபந்தனை போட்டது. கவர்ப்புறு அதற்கு இணங்கவில்லை.
மரத்தின்கீழ் நின்றுகொண்டிருந்த வேடன், புறுக்கள் கூடிக் கூடிப் பேசுவதைக் கண்டான். அந்தப் புறுக்களிடமே சொல்லிக் கவர்ப்புறுவைத் தான் பிடித்துக்கொள்ளலாம் என்று கருதிப் புறுக்களைப் பார்த்து “ஓட்டு; ஓட்டு கவர்ப்புறுவை” என்று கத்தினான்.
இறுதியாக வேடன் மரத்திலேறிக் கவர்ப்புறுவை உயிரோடு பிடிக்கத் திட்டம் போட்டு, ஏற ஆரம்பித்தான். கவர்ப்புறுவோ பறந்து சென்றால் வேடன் கண்ணுக்கு இரையாவோம் என அஞ்சி, கரும்புறுவின் துணையோடும் வேடனை எதிர்க்கக் கிளம்பியது. கடைசி நேரத்திலும் வெண்புறுவுக்குக் கவர்ப்புறு அழைப்பு விடுத்தது.
“உன் காரியத்தை மட்டும் சாதித்துக் கொள்ள முடியாது; நம் காரியமென்ன?” என்று கேட்டது வெண்புறு.
உடனே கரும்புறு, வெண்புறுவிடம், “ஏதோ ஆனது ஆகி விட்டது; வேடனை விட்டால் நம்மையெல்லாம் கொன்று விடுவானே” என்று உபதேசம் செய்தது.
அது கேட்ட வெண்புறு “வேடனை எனக்கு வீழ்த்தத் தெரியும். அதற்காகக் கவர்ப்புறுவின் துணை எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டது கம்பீரமாக!
கரும்புறு வெண்புறுவைக் கோபித்துக்கொண்டது. கங்காணி என்றது. வெண்புறு அதற்காக அயரவில்லை.
வேடன் மரத்தில் ஏறிவிட்டான். கரும்புறுவும் கவர்ப்புறுவும் தங்கள் மூக்குகளில் குச்சிகளைப் பிடித்துக்கொண்டு வேடனை எதிர்க்கத் தயாராயின. அந்தச் சமயத்தில் வெண்புறு, பின்புறமாகச் சென்று வேடனின் காலில் பலமாகக் குத்தியது அலகுகளால். அதைச் சேர்ந்த புறுக்களும் வேடனின் காலைக் குத்தி ரத்தம் வழியச் செய்தன. வலி தாங்கமுடியாமல் வேடன் மரத்திலிருந்து கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு மாண்டான்.
வேடன் வீழ்ந்ததும் கரும்புறுவும் கவர்ப்புறுவும் வெற்றிச் சிரிப்புச் சிரித்தன. வெண்புறு தன் கடமையை செய்து முடித்து விட்டதாகக் களிப்படைந்தது.
மறுநாள் காலையில் பத்துப் புறுக்களை வல்லூறு அடித்துக் கொன்று குவித்தது. அது மட்டுமல்ல; வல்லூறு அந்த ஆலமரத்தில் “இது வல்லூறின் மரம்” என்று எழுதிவைத்தது.
அந்த எழுத்தை அழிக்க வேண்டுமென்று கரும்புறுவும் வெண்புறுவும் புறப்பட்டன. கரும்புறு, கவர்ப்புறுவைக் கூப்பிட்டுப் பார்த்தது. கவர்ப்புறு, ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி, அதில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தது.
ஆலமரத்திலிருந்து வல்லூறை விரட்டும் பணியிலே வெண்புறு தீவிரமாக ஈடுபட்டது.
கரும்புறுவும் அந்த முயற்சியில் இறங்கியது. அதற்குக் கவர்ப்புறுவைக் கூப்பிட்டது.
“வல்லூறு கொடிய பறவைதான், ஆனாலும் அதையும் இணைத்துக்கொண்டு எல்லோரும் ஆலமரத்தில் இஷ்டபூர்வமான குடும்பம் நடத்தலாம்,” என்று கவர்ப்புறு விளக்கம் தர ஆரம்பித்து விட்டது. கரும்புறுவுக்கு ஒரே கோபம். வெட்கம் வேறு, வெண்புறு சிரிக்குமே என்று! ‘அப்போதே சொன்னது அந்த வெண்புறு’ என்று அங்கலாய்த்துக் கொண்டது கரும்புறு.
“உனக்கு நான் உதவினேனே; நீயேன் எனக்கு உதவக் கூடாது” என்று கரும்புறு அலகால் குத்தியது. “தல”யால் மோதியது. கவர்ப்புறுவும் தன் “சக்தி”யைத் திரட்டி கரும்புறுவை எதிர்த்தது. இப்படி இரண்டும் ஒன்றோடொன்று அலகால் குத்தியும், சிறகால் அடித்தும், ஆலமரத்தையே ஒரு குழப்பத்திற்கு உள்ளாக்கி விட்டன.
வல்லூறே தன் வேலையைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறது. வெண்புறு, இந்த விசித்திரத்தை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் விழிக்கிறது. ஆனாலும் எதிரியைத் தாக்கத் தன் பலத்தை வளர்த்துக் கொண்டேயிருக்கிறது.
சில சில்லறை உதவிகளுக்காகவும், உடல் சுகமில்லா விட்டால் மருந்து கேட்கவும், கவர்ப்புறு வெண்புறுவிடம் வரும். அந்த உதவிகளை வெண்புறு செய்யும். ஆனால் இப்போது அந்த உதவிகளுக்கூடக் கரும்புறு, கவர்ப்புறுவுக்கு செய்வதில்லை.
இந்தக் கதையைக் கேள்விப்பட்டுக் காட்டிலுள்ள பறவைகள் எல்லாம் சிரிக்கின்றன; ஆச்சரியப்படுகின்றன. அதே நேரத்தில் வெண்புறுவின் அறிவுத்திறனைக் கண்டு பாராட்டிப் புகழ்ந்திடவும் செய்கின்றன. பாராட்டையும் புகழ்ச்சியையும் கேட்கவா வெண்புறுவுக்கு நேரம்! அதனுடைய லட்சியமெல்லாம் வல்லூறை விரட்டுவதுதான்!