பொருளடக்கம்நச்சுக்கோப்பை

காட்சி 1 / 18

சீன். 1.

சீன். 1.

மூல ஸ்கேன் 5, 6, 7, 8

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம் : நந்தவனம்

ஏகாம்பரம் நிலாவைப் பற்றிப் பாடுதல்.

சாந்தா கண்ணைப் பொத்தல்.

(பாட்டு : வானில்)

சாந் : என்ன,நிலவின் அழகிலே உள்ளத்தைப் பறி கொடுத்து விட்டாப் போலிருக்கிறதே !

ஏகா : ஆமாம், நீ இல்லையே என்ற காரணத்தால் தான்!

சாந்: உங்களுக்கு மட்டும் இந்தப் பேச்சில்லா விட்டால்....?

ஏகா : உன்னிடமிருந்து தப்பித்துவிட முடியாது. ஏன்? அப்படித்தானே!

சாந் : என்னைத்தான் உங்கள் பேச்சால் ஏமாற்ற முடியும்.

ஏகா : ஏன், இன்னும் எத்தனை பேரை ஏமாற்ற வேண்டும்?

சாந்: சற்று எங்க அப்பாவை ஏமாற்றிப் பாருங்களேன், பார்க்கலாம்.

ஏகா : நாம் இருவரும் இங்கு தனியாக இருப்பது உங்க அப்பாவை ஏமாற்றிய பலன்தானே!

சாந் : ஆமாம், நேற்று அப்பா ஏதாவது தங்களைக் கேட்டாரா?

ஏகா: இல்லையே. ஆனால், நம் விஷயத்தில் சற்று முன் ஜாக்கிரதையாகவே இருந்து வருகிறார்.

சாந்: உங்களுடைய வெள்ளை வேஷ்டியும், சட்டையும் அவரது கண்ணை உறுத்துகின்றன.

ஏகா: 'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்பதை அவரிடம் கூறுவதுதானே, சாந்தா! ஐயோ மூளையே!

சாந்: அந்த மூளையைச் சூளையில்தான் வைக்க வேண்டும்!

ஏகா: தந்தையைத் தூற்றலாமா?

சாந்: தகுந்ததைப் பேசினால்தானே போற்றலாம்!

ஏகா: நீயும் உன் அண்ணன் பழனியப்பனும் உன் தந்தைக்கு நேர் மாறாகப் பிறந்தீர்களே, அதுதான் ஆச்சர்யம்!

சாந்: ஆமாம், உங்கப்பா இளமையில் இம்மாதிரி காதல் பாடம் படித்தாரா?

ஏகா: சாந்தா! உண்மை. அப்பா படிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவரது முன்னோர்கள் காதலின் தன்மையை உணர்ந்திருந்தனர். 'காதலுக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை; அவை காலத்தால் அழிவதுமில்லை' என்ற உண்மை உணர்ந்து அவர்கள் வாழ்வு நடத்தினர். கடலிலே எழும் அலைபோன்றது காதல்! அதன் கொந்தளிப்பிலே சிக்கியவர் எவரும் தப்புவது இல்லை! காதல் ஆணையும் பெண்ணையும் ஒன்றாகிக் காட்டும் ஒரு வசீகரமான வானவில் ! பாலும் சர்க்கரையும் சேர்ந்து உண்டான சுவையை எப்படிப் பிரிக்க முடியாதோ அதே போல்தான் காதலையும் நெஞ்சையும் பிரிக்க முடியாது! அதுவும் உண்மைக் காதலாய் இருந்தால்தான், சாந்தா!

சாந்: தாங்கள் எதையோ மறைத்துப் பேசுகிறீர்கள்.

ஏகா: இல்லை, சாந்தா! உன் உறுதியை நிலைநாட்டவே நினைப்பூட்டுகிறேன்.

சாந்: அன்பே! எனது உறுதி ஞாபகத்தை மூட்டத்தக்க அவ்வளவு நிலையற்றதென்ற எண்ணமா தங்களுக்கு?

ஏ கா : இல்லை சாந்தா, நீ காதலைப்பற்றிப் பேச்சை எடுத்ததும் எனது எண்ணம் எங்கேயோ போய்விட்டது. வேறொன்றுமில்லை. ஏன் சாந்தா இப்படிச் சந்தேகப்படுகிறாய்?

சாந்: ஆண்களின் பேச்சை நம்பி விடுவது அவ்வளவு சுலபமான காரியமா?

ஏகா: என்னவோ பார்ப்போமே. இன்னும் சிறிது நாள் தானே இருக்கிறது. இந்த ஏழை ஏகாம்பரத்திற்கு இந்தக் கனி கிடைக்கிறதா இல்லையா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடுகிறது.

சாந்: கனி, தானே வந்தடையும். காதல் வஞ்சகமற்றது; எவ்விடத்தும் சமத்துவம் பாராட்டக் கூடியது. உயர்வு தாழ்வு அதனிடம் இல்லை. வீரத்திற்கும்,தியாகத்திற்கும் காதலே பிறப்பிடமென்பதை நிரூபிக்க நான் தயாராய் இருக்கிறேன்.

ஏகா: உன் தந்தையின் நினைப்பு எப்படியோ...?

சாந்: பணத்தைத்தானே அவர் மனம் நாடும். என்னை உங்களுக்கு மனைவியாக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்.

ஏகா: உன் அண்ணன் பழனியப்பன்...?

சாந் : அண்ணாவைப் பற்றித்தான் கவலையே இல்லையே. எனக்காகத்தான் உயிரையும் கொடுக்கச் சம்மதிப்பாரே

ஏகா : சாந்தா! இதுமாதிரி அண்ணன் கிடைக்க வேண்டுமே, அதுதான் ஆச்சர்யம்!

சாந்: அண்ணன் மட்டுமா கிடைத்தார்.அன்பர் ஒருவரும் அல்லவோ கிடைத்து விட்டார்.

(பாட்டு முடிந்ததும்)

சாந் : சரி, நாழியாகிவிட்டது. அப்பா விழித்துக் கொண்டால் தேடுவார்.நான் வரட்டுமா?

ஏகா : சரி,நாளை உன்னை எதிர்பார்க்கலாமா?

சாந்: தேனையா வண்டு மறந்திடும்! வானத்தையா சந்திரன் மறைத்திடுவான் ! வருகிறேன்.