காட்சி 1 / 21
காட்சி 1
காட்சி 1
மூல ஸ்கேன் 92, 93
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[மாணவர் மன்றம் கூடியிருக்கிறது. மாணவ மாணவியர் நிறைந்து இருக்கின்றனர். மாணவி மரகதம் பேசுகிறாள்.]
மரகதம்: வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீரங் கொள் கூட்டம்-உள்ளத்தால் ஒருவரே! மற்றுடலினால் பலராய்க்காண்பார். அவரைக் கள்ளத்தால் நெருங்கொணாதே எனக்கண்டு, வையம் கலங்கும் நாள் எந்த நாளோ? எனக்கேட்ட புரட்சிக் கவிஞரின் கேள்விக்குப் பதில் கிடைக்கும்நாள்... தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று போர்ப்பரணி பாடும் இந்நாள்... வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள் என்று முரசு கொட்டும் இந்நாள்... தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - என்று இளந் தமிழர் - எழுச்சித் தமிழர் - ஏறு நடை போட்டுக் கிளம்பி விட்ட மகத்தான நாள்! மாணவர் மானப்படை எழுந்த நாள்-மாதர் குலம் கொதித்த நாள் - மறவர் இனம், வீறிட்டு முழங்கிய நாள்-இந்த நாளில் தமிழ்காக்க உயிர்விட்ட தியாகிகளை எண்ணிக்கொள்வோம். அவர்களின் கல்லறை இருக்கும் திசை நோக்கி வீர வணக்கம் செலுத்துவோம்.
(மாணவ, மாணவிகள் அனைவரும் மௌனமாக எழுந்து நின்று, பின் அமர்கிறார்கள்.)
மரகதம்: தியாகச் செம்மல்களின் தினமான இன்று... மாணவ மணி சாரங்கபாணியின் பெயரால் அமைந்த இந்த மன்றத்தில்... மாணவமணி ராசேந்திரன் நினைவுக் கலைக் கழகத்தார் நடத்தும்—ஓரங்க நாடகம் ஒன்று ஏற்பாடாகியிருக்கிறது. நாடகத்தின் பெயர் வஞ்சியும் காஞ்சியும்! எழுதியவர் முரசொலி மாறன் எம். ஏ.! பல்லாண்டுகாலத்திற்கு முன்னர் மறைந்துவிட்ட சேரன் செங்குட்டுவன் திடீரெனக்கல்லறையிலிருந்து எழுந்து வந்து இன்றையதமிழகத்தைக்கண்டால்... என்ன நினைப்பான்... என்ன நடக்கும் என்பதே நாடகத்தின் கருத்து... இப்போது ஆரம்பமாகிறது; வஞ்சியும் காஞ்சியும்!...
(திரை)