பொருளடக்கம்சேரன் செங்குட்டுவன்

காட்சி 1 / 4

காட்சி — 1

காட்சி — 1

மூல ஸ்கேன் 44, 45

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

நாடகத் துவக்கத்திற்கு முன் அச்சிடப்பட்டதுஸ்கேன் 44

நாடகத் துவக்கத்திற்கு முன்பு குரல்: செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் தீட்டிய சிலப்பதிகாரத்தில் ஒரு பொன்னேடு!....

கண்ணகி சிலை நாட்டுவதற்கு வடநாட்டிலே இருந்து கல் கொண்டு வந்த கதை !

தமிழகத்துப் பழம்பெரும் சரித்திரத்தைச் சொல்லும் வீர வரிகள்!

அன்றொரு நாள்! அணிதேர்ப்புரவி ஆட்பெரும்படையோடு நாம் அரசு கட்டிலில் அமர்ந்திருந்த நாள்!

அப்போது வடபுலத்திலே....கனகவிசயர் சபையில்...


தீராதிதீர தீன தயாபர தெய்வீக புருஷ வேதாந்த சாகர வேந்தர்குலதிலக உத்திரதேசத்து மன்னாதிமன்னர்கள் கடவுள் அவதார கனக விஜயர் பராக்! பராக்!

மன்னர்கள்: நமஸ்கார்!

கனகர்: நமஸ்கார்!

விஜயர்: நமஸ்கார்!

கன: சுயம்வரத்துச் சுந்தரிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலும் ஹி! ஹி!...

மன்: ஆமாம், நீங்கள் இருவருமே வந்து விட்டீர்களே! சுயம்வரப் போட்டியில் உங்களில் ஒருவர் ஜெயித்துவிட்டால், அந்தப் பெண்ணை நீங்கள் இருவரும் எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது?

தமிழ்நாட்டுப் புலவர்: பிறகு பாரதந்தான்.

விஜ. யாரப்பா நீ? என்ன பேசுகிறாய்?

புல: தமிழ்! செந்தமிழ்! உலகத்தோடு பிறந்த தமிழ்! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்!

விஜ: சுயம்வர மண்டபத்தில் உனக்கென்ன வேலை?

புல: உம்; விசித்திரமான கேள்வி வேந்தரே! சுயம்வர மண்டபத்தில் வயதான உங்களுக்குத்தான்வேலை; வாலிபர்களாகிய என் போன்றவர்களுக்கு வேலை இல்லை என்பது.

விஜ: குறும்பு தேவையில்லை. நீ யார் என்று கூறு!

புல: நானோர் தமிழ்ப்புலவன்—வடநாட்டு யாத்திரை வந்தேன்.

கன: புலவனா? கவிதை புனையத் தெரியுமா உனக்கு?

புல: கவிதை புனையத் தெரியாத புலவன்—கத்தி தூக்கத் தெரியாத வீரன்—இவர்களைத் தமிழகம் இதுவரை கண்டதே இல்லை.

கன: அதையும் பார்த்து விடுவோம். எங்கே, உடனே, ஒரு கவிதை சொல்லு!

புல: கங்கை நதி தீரத்திலே போராடினான்—தமிழன் காவிரியின் ஓரத்திலே புகழ் பாடினான். பொங்குகடல் அத்தனையும் கட்டி ஆண்டான்—தமிழன் பூதலத்தில் மேலவனென் றுலகம் போற்ற!

கன: நிறுத்து! நிறுத்து!

விஜ: நிறுத்தும் ஓய்!

கன: பைத்தியக்காரன், கங்கை நதி தீரத்திலே போராடினான் தமிழன்! போராடுவான்! போராடுவான்! அவன் கனக விஜயன் காலத்திலே வந்து போராடினால் காலை ஒடித்திடுவோம் ஜாக்கிரதை.

மன்னர்கள்: ஹா! ஹா!! ஹா.!!!

விஜ: கனகர் சொன்னது ஆயிரம் லட்சம் பெறும் புலவனே! இமயத்தின் நெற்றியிலே உம் மன்னர் புலி—வில்—கயல் சின்னங்களைப் பொறித்த போது எம்போலும் மன்னர்! ஈங்கில்லை போலும்!

புல: ஏன்? காலில் விழுந்து காணிக்கை செலுத்தவா? பித்து மனம் கொண்டவரே; கேளீர்! இன்றே தென்னாடு திரும்புகிறேன். காவாநாவிற் கனகனும் விஜயனும் விருந்தின் மன்னர் தம்முடன் கூடி அருந்தமிழாற்றல் அறிந்திலராகிச் செப்பிய மொழிகளைச் சேரனுக்குணர்த்துவேன். மதோன் மத்தர்களே! மாண்டு விடவில்லை தமிழர் வீரம்! மீண்டும் சந்திப்போம். ஆண்டு கொண்டிருப்பவன் சேரன் செங்குட்டுவன்! சேரன் செங்குட்டுவன்!!