பொருளடக்கம்பரதாயணம்

தொடர் நாடகப் பகுதி

பரதாயணம்

பரதாயணம்

மூலம் இவ்வாக்கத்தைக் காட்சிகளாகப் பிரிக்கவில்லை — ஒரே தொடர்ச்சியான நாடகப் பகுதியாகவே அச்சிட்டுள்ளது. இந்த முகவரிப் பெயர் வழிசெலுத்தலுக்கானது; அது மூலத்தின் காட்சி எண் அல்ல.

மூல ஸ்கேன் 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

அச்சிடப்பட்ட தொடக்கக் குறிப்புஸ்கேன் 6

(பொதுக்கூட்டம் — மக்கள் கூடியிருக்கிறார்கள். அறிவியக்கத்தைச் சேர்ந்த ஒரு தோழர், பாகவதர் உடையுடனும் — இன்னொரு தோழர் சீடன் வடிவிலும் நின்று கொண்டு, பரதாயணக் காலட்சேபத்தை நடத்துகிறார்கள், இடையிடையே பாடிக்கொண்டு! கேட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். இதில் பிற்பகுதிதான் கற்பனை! முற்பகுதி — வால்மீகி ராமாயண உண்மை)

குறிப்பு : (காலட்சேப நடையில் இழுத்தாற்போலப் படிக்கின் இனிமை பயக்கும்)


பாகவதர் : அகோ வாரும் பிள்ளாய், சிஷ்யா! முன்னொரு காலத்தில் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும். இந்த உலகத்திலே ராஜரீகம் செய்து வந்தார்கள்.

சிஷ்யன் : ஆமாம்........!

பாக : உலகமென்றால்........?

சிஷ் : உருண்டை வடிவமாக........சதா சர்வ காலமும் சுற்றிக் கொண்டேயிருக்கும்.

பாக : அட முட்டாளே! அது இப்போதுள்ள உலகமடா? முன்பெல்லாம் உலகமென்றால், கன்யாகுமரி முனையிலேயிருந்து இமயமலைத் தொடரிலேயுள்ள கைலாச மலையின் அடிவாரம்வரையிலே வியாபித்துப் பரந்து கிடந்ததாக்கும்!

சிஷ் : ஆமாம்....ஆமாம்........!

பாக : அப்படிப் பரவிக் கிடந்த உலகத்திலே........அயோத்தியாபுரிப் பட்டணத்தை தசரத மகாராஜா ஆண்டு வந்தார்!

சிஷ் : ஆமாம்!........

பாக : யார் ஆண்டு வந்தா?

சிஷ் : தசரத மகாராஜா!....

பாக : அந்த மகாராஜாவின் அரண்மனையில்....அறுபதினாயிரம்....

(சிஷ்யனிடம் திரும்ப)

சிஷ் : போர் வீரர்கள் இருந்தார்கள்.

பாக : (திகைத்து) போர் வீரர்களா?....... அடப்பாவி!.......போர் வீரர்கள் இல்லையடா!

சிஷ் : ஆங்....(சமாளித்து) க்ஷமிக்கவும்; ஸ்வாமி, அறுபதினாயிரம் பொன் நாணயங்கள்!

பாக : அட புத்தி கெட்டவனே....பொறுடா பொறு!....நீ சொல்வதும் உண்மைதான் — பொன் நாணயங்கள்தான் — அவர்கள் உடம்பெல்லாம் பொன்தான்!.... தங்க நிறந்தான்! நீ சொல்லியபடி போர் வீரர்கள்தான்!.... ஆனால் அவர்கள் போரிடும் இடமே வேறு!.... தசரதனோடு பஞ்சணையிலே போரிடும் பாவையர்கள்! அறுபதினாயிரம் பத்தினிமார்கள்!

சிஷ் : அய்யோடா ஆமாம்!

பாக : பிள்ளைகள் இருந்திருந்தால்........

சிஷ் : அயோத்தியில் பஞ்சம் வந்திருக்கும்!

பாக : ஆங்!....முந்திரிக் கொட்டை! பிள்ளைகள் இருந்திருந்தால் தசரதன் சந்தோஷமாக இருந்திருப்பான்!.... தசரதனுக்கு அறுபதாயிரம் உற்சவ விக்கிரகங்களே இல்லாமல் மூன்று பேர் மூல விக்கிரகங்கள்! அவர்கள் கெளசல்யா — சுமித்திரை — கைகேயி......என்னும் நாமதேயமுடையவர்கள்!...... அதற்காக தசரதன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். அந்த யாகத்திலே குதிரை வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட குதிரையை அணைத்துக்கொண்டு மூல மனைவியர் மூன்று பேரும் தூங்கினார்கள்!

சிஷ் : ஆமாம்!

பாக : யாகத்திலே அவிர்ப்பாகம் வரவழைக்கப்பட்டது!

சிஷ் : ஆமாம்!

பாக : அதை அந்த மூன்று மனைவிகளும் சாப்பிட்டுவிட்டு, யாகத்திற்கு வந்திருந்த ரிஷிகளோடு இந்திர போகத்தை அனுபவித்தார்கள்.

சிஷ் : ஆமாம்!

பாக : அதனால் என்ன ஆயிற்று!

சிஷ் : கற்பு போயிற்று!

பாக : இல்லையடா ! கரு உருவாயிற்று....

சிஷ் : ஆமாம்!....

பாக : அகோ வாரும் பிள்ளாய் சிஷ்யா! இப்படியாகத்தானே, வால்மீகி ராமாயணத்து சுலோகத்தின்படி யாகம் நடை பெற்று, மூன்று பட்டமகிஷிகளும் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள்.

சிஷ் : ஆமாம் !

பாக : அந்தப் பிள்ளைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து யானையேற்றம் — குதிரையேற்றம் முதலிய எல்லா வித்தைகளையும் கற்றுக்கொண்டார்கள் !

சிஷ் : ஆமாம்!

பாக : அந்த தசரதனாகப்பட்டவனுக்கு....மூத்த பிள்ளை ராமன் மீதுதான் மோகம், அன்பு எல்லாம்!.... அதனால் அவனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்து தேதி குறிக்க வசிஷ்ட முனிவரை வரவழைத்தான்!

சிஷ் : ஆமாம்!........

பாக : இப்படியாகத்தானே வசிஷ்ட முனிவர் வந்ததும், அவரைப் பார்த்து தசரதன், — “அகோ வாரும், அன்பார்ந்த முனிபுங்கவரே! அடியேன் ஒரு விண்ணப்பம் செய்து கொள்கிறேன். அதாகப்பட்டது, நமது ராமச்சந்திரனுக்கு அயோத்தி யுவராஜா பட்டாபிஷேகத்தைச் செய்து முடித்துவிடலாமென நினைக்கிறேன்” என்பதாகச் சொல்லி நின்றான் — உடனே வசிஷ்ட முனிவர், தனது நரைத்த தாடியைத் தடவியபடிச் சொல்வதாவது:—

“கேளும் தசரத மகாராஜனே! முன்னொரு காலத்தில் கேகயன் மகள் கைகேயியை நீ விவாகம் செய்துகொள்ளப் போகும்போது நடந்ததை மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன் — வயதான உனக்கு பாரியாளாய் வர கைகேயி இணங்கவில்லை. கிழவருக்கு எப்படி இந்தக் கிளியைக் கொடுப்பது என்று கேகய ராஜன் மறுத்துவிட்டான். உடனே நீ கைகேயியின் சௌந்தர்ய ரூப லாவண்யத்திலே மயங்கித் தேன் குடித்த வண்டுபோல இருந்த காரணத்தால், கைகேயிக்கு அயோத்தியையே காணிக்கையாகத் தருகிறேன் என்று வாக்களித்து, அந்த க்ஷணமே அவளுக்கு ஆரிய தர்ம சாஸ்திரகிரமப்படி — ‘கன்யா சுல்கம்’ என்ற பெயரால் அயோத்தியைத் தாரை வார்த்துக் கொடுத்து, இந்த தேசத்திலே நீ கைகேயியின் பிரதிநிதியாக இருந்து ஆள்வதென்றும், கைகேயிக்குப் பிறக்கும் குழந்தைக்கே அயோத்தி சொந்தமென்றும், அப்படி அவளுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்காவிட்டால், அவளுடைய சகோதரன் யுதாஜித்து ராஜகுமாரனுக்கே அயோத்தி ஸ்வாதீனமாகுமென்றும் ஒப்பந்தம் செய்து கொடுத்து, கைகேயியை மணந்துகொண்டிருக்கிறாய்! அதை மறந்துவிடாதே மகாராஜனே!” என்று பழைய சம்பவத்தை ஞாபகப்படுத்தி நின்றார் ரிஷி சிரேஷ்டர்!

சிஷ் : ஆமாம்!

பாக : அதைக் கேட்ட தசரதன் கலகலவென நகைத்து, “என்ன சுவாமி! தாங்களே இப்படிச் சொல்லுகிறீர்கள்? ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து என்று பழமொழியே இருக்கிறது. அதன் பிரகாரந்தான் நான் கைகேயியை மணந்து கொண்டேன்!” என்றான். அதைக் கேட்ட வசிஷ்ட முனிவர், “ஆயிரம் பொய்யைச் சொல்லலாம். ஆனால் ஆரிய தர்மப்படி அயோத்தியை கைகேயிக்கு சுவாதீனப்படுத்திவிட்டாயே நீ; அதை அவளிடமிருந்து பறிப்பதுபோல் அல்லவா இருக்கிறது இந்த முயற்சி?” என்று வியாக்யானம் செய்தார் முனிவர்.

சிஷ் : ஆமாம்!

பாக : “எது எப்படியானாலும் சரி; என் மகன் ராமன்தான் நாடாளவேண்டும்! வசிஷ்ட மகரிஷியே! வாக்குறுதிகளைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயனில்லை. தாங்கள் பட்டாபிஷேகத்திற்கு சுப லக்னம் பார்த்துக் கொடுங்கள்! இது தான் நல்ல சமயம். பரதன் அவனுடைய பாட்டன் வீட்டுக்குப் போயிருக்கிறான். அவன் திரும்பி வருவதற்குள் ராஜ்யத்தை ராமனிடத்திலே ஒப்படைத்துவிடுகிறேன். பிறகு ராமன் பாடு; பரதன் பாடு! பார்த்துக்கொள்ளட்டும்; நமக்கென்ன?” என்று தசரதன் கண்டிப்பாக மொழிந்ததைக் கண்ட வசிஷ்ட மகாமுனிவரும் பட்டாபிஷேகத்திற்கான சுப யோக சுபதினமொன்றைக் குறித்துக்கொடுத்துவிட்டு, ராமனையும் அழைத்துவரச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார்.

சிஷ் : ஆமாம்!

பாக : இந்த விஷயம் அரண்மனையிலேயுள்ள எல்லோருக்கும் தெரிந்துவிட்டது !........ ஆனால் கைகேயிக்கு மாத்திரம் தெரிவிக்கப்படவில்லை.

சிஷ் : ஆமாம்!........

பாக : காரணம் என்னவென்றால்........

சிஷ் : ஆமாம்!

பாக : என்னடா ஆமாம்.......?

சிஷ் : காரணம் என்னவென்றால்........

பாக : (கோபமாக) என்னு சொல்லு!

சிஷ் : கைகேயிக்குத் தெரிந்தால், தசரதன் மீது கோர்ட்டிலே கேஸ் போட்டுவிட்டு, பட்டாபிஷேகத்தை நிறுத்த ‘ஸ்டே ஆர்டர்’ வாங்கிவிடுவாள்!

பாக : அடே அதெல்லாம் இந்தக் காலம்!.....அந்தக் காலத்திலே கோர்ட் ஏது?........

சிஷ் : அப்படியானால் இராவணனுக்கு “ஏரோப்ளேன்” ஏது சாமி?

பாக : ஏய்....அவசரக்காரா! அதற்குள் ஆரண்ய காண்டத்துக்கு வராதே!

சிஷ் : செத்தாலும் ஆரண்யத்துக்குப் போக மாட்டேன் சாமி

பாக : அகோ வாரும் பிள்ளாய் சிஷ்யா!....இப்படியாகத்தானே பரதனுக்கும் கைகேயிக்கும் தெரியாமல் ராமனின் பட்டாபிஷேகத்திற்கான காரியங்களையெல்லாம் தசரதன் கவனித்துக்கொண்டிருந்தான்....

சிஷ் : ஆமாம்!

பாக : எப்படியோ கூனியென்னும் தோழிமூலமாகக் கைகேயிக்குச் சேதி எட்டிவிட்டது!

சிஷ் : ஆமாம்!

பாக : சேதி கேள்விப்பட்ட கைகேயி, சீறும் பாம்பானாள்! அடுக்குமா இந்த அக்கிரமம் என்று ஆத்திரப்பட்டாள்! இதை எப்படித் தடுப்பது என்று கூனியிடம் யோசனை கேட்டாள்!

சிஷ் : ஆமாம்!

பாக : உடனே கூனியாகப்பட்டவள், கைகேயியைப் பார்த்து “கவலைப்படாதே பெண்ணே! உன்னைக்கல்யாணம் செய்யும்போது, தசரத ராஜன் இந்த அயோத்தியை உனக்குக் ‘கன்யா சுல்க’மாக அளித்திருக்கிறார். அதை அடிப்படையாக வைத்துப் போர்க்கொடியை உயர்த்து” என்று யுக்தி கூறினாள்!

சிஷ் : ஆமாம்!

பாக : அது கேட்டுக் கைகேயி, “வேண்டாமடி! என்னுடைய நாயகன் தசரதராஜனுக்கு தேச முழுவதும்சத்திய கீர்த்தி, உத்தமன், சிரேஷ்டன் என்றெல்லாம் புகழும் பெயரும் இருக்கிறது! அவன் அயோத்தியைமுன்பே-எனக் களித்து விட்டு, இப்போது பறித்துக்கொள்ளச் சூழ்ச்சி செய்கிறான் என்று நான் கூறுவேனேயானால், தசரத மகாராஜாவைப் பற்றி உலக முழுவதும் தகாத முறையிலே பேசுவார்கள்! வாக்கு மறந்தவர், வஞ்சகர் சூழ்ச்சிக்காரர், காமபோதையில் ராஜ்யத்தை அளித்துவிட்டு இப்போது கபட நாடகம் ஆடிப் பிடுங்கிக் கொண்டவர் என்றெல்லாம் என் கணவருக்குக் களங்கம் ஏற்பட நான் காரணமாயிருக்கமாட்டேன்” என்று சொல்லி அழுதாள்.

சிஷ் : ஆமாம்!

பாக : உடனே கூனி, “அப்படியானால் ராமனே நாடாளட்டும்!” என்றாள் சிரித்துக்கொண்டே! அது கேட்டுக் கைகேயி, “அதற்கும் சம்மதிக்கமாட்டேன். அந்த துஷ்டனுடைய ஆட்சியிலே, என்கதியும் என்மகன் கதியும் என்ன ஆவது?” என்று பிரலாபித்துவிட்டு, மீண்டும் சொல்கிறதாவது: “கேளடி கூனி! கேகயத்தில் இந்தக் கிழவன் அளித்த ‘கன்யா சுல்க’த்தை, மக்களிடம் ஞாபகப்படுத்தி, அவருக்கு அபகீர்த்தி உண்டாக்காமல், அந்தப்பழியையும் பாவத்தையும் நானே ஏற்றுக்கொண்டு, அவருக்கு வரும் தீயபெயரை நான் பெற்றுத் தியாகம் செய்யப்போகிறேன்.” என்றாள்! அது கேட்ட கூனி அதிசயத்தால் நிமிர்ந்துநின்று “எப்படியம்மா?” என்றாள்! “கேளடி கூனி! முன்பொரு முறை மன்னர், இரண்டு வரங்கள் அளித்திருக்கிறார். அதன்படி நான் எது வேண்டுமானாலும் கேட்டுப் பெறலாம். அப்படி வரத்தைக் கேட்டு, பரதனுக்கு நாடும், ராமனுக்குக் காடும் வாங்கித்தரப்போகிறேன்.... இதிலே ஏதாவது பழி வந்தால், என் பர்த்தாவிற்காக அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கைகேயி சபதம் செய்வதுபோலப் பேசினாள்!

சிஷ் : ஆமாம்!

பாக : இராஜ்ய பட்டாபிஷேகத்திற்கான காரியங்களையெல்லாம் பார்த்துவிட்டு, வழக்கம்போலத் தன் இளம் மனைவி கைகேயியிடம் காமக் களியாட்டத்தில் ஈடுபடுவதற்கான முஸ்தீபுகளோடு முதிய மகாராஜா தசரதர் பராக்! பராக்!!

சிஷ் : பராக்! பராக்!!........

பாக : கைகேயி மாளிகையிலே வாசனைத் திரவியங்கள், பான விசேஷங்கள், வழக்கம்போல் எல்லாம் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. தசரத மகாராஜனுடைய பிரகிருதிவேகம் அதிகரித்தது! ராமனுக்குப் பட்டங் கட்டிவிட்டு, வனவாசம் செல்ல வேண்டுமென்று தீர்மானித்திருந்த அந்தக் கிழமகாராஜனுக்கு உள்ளமுழுதும் காதல்வேகம் பொங்கிட, “கைகேயி! கைகேயி!” என அழைத்தான் — கைகேயி, எந்த நிலைமையிலே இருக்கிறாள்!

சிஷ் : ஒரே ஆத்திரமாக------

பாக : ஆமாம்! தசரதன் வந்ததுதான் தாமதம்! ஒரு கூடை நெருப்பை அள்ளி அவன் தலையிலே கொட்டினாள்! குய்யோ முறையோவெனக் கத்தினாள்! மாரடித்தாள்! புலம்பினாள்! ஒப்பாரி வைத்தாள்!

சிஷ் : ஆமாம்!

பாக : இப்படியெல்லாம் அவள் எதுவும் செய்யவில்லை. கேகயன் மகள் கேட்ட வரம் இரண்டு! ஒன்று ராமன் காட்டுக்குச் செல்லவேண்டும்; மற்றொன்று பரதன் நாடாள வேண்டும்!

சிஷ் : ஆமாம்!

பாக : வரம் கேட்டதும் தசரதன் என்ன செய்தான்?

சிஷ் : கொடுத்தான்.

பாக : கொடுக்கவில்லை. சூழ்ச்சி அம்பலமாகிவிட்டதே என நினைத்தான். அவள் காலிலே விழுந்தான். இருதயம் வெடித்துவிட்டது! இறந்துவிட்டான்! இப்போது கைகேயி என்ன ஆனாள் தெரியுமா?

சிஷ் : விதவையானாள்!

பாக : அதுமட்டுமல்ல; ‘கன்யா சுல்க’ முறைப்படி அயோத்திக்கு அவள் அரசியாகிவிட்டாள்! இனி அவள் இட்டது தான் சட்டம்! இராமனைக் கூப்பிட்டாள்! “காட்டுக்குப் போ!” என்று கட்டளையிட்டாள்! இராமனும், சீதையும், இலக்குமணப் பெருமாளும் காட்டுக்குப் போனார்கள்! கைகேயி சொல்லாமலே நாட்டு மக்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது! நாட்டை ராமன் பறிக்கச் சூழ்ச்சிசெய்தான் என்ற சங்கதி, கேகய ராஜன் மூலமாக உலகமெங்கும் தெரிந்துவிட்டது!....பாட்டன் வீட்டுக்குப் போன பரதன் ஓடோடியும் வந்தான்!

சிஷ் : ஆமாம்!

பாக : விஷயமனைத்தும் தெரிந்தது அவனுக்கு!

சிஷ் : ஆமாம்!

பாக : தேசத்திலே உள்ள சில பிரமுகர்கள், பரதன் நாடாளுவது நியாயம்—ஆனால் ராமன் காட்டுக்கு விரட்டப்பட்டது என்னவோ அநியாயம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்! இதைக் கண்ட கைகேயிக்குக் கொஞ்சம் பயம் பிறந்தது! பரதன் மீது அயோத்தியில் உள்ளவர்களுக்கு நல்ல எண்ணம் ஏற்படவேண்டுமென்று நினைத்தாள். அதற்காக ஒரு தந்திரம் செய்தாள்! பரதனைக் கூப்பிட்டு, “என் செல்வச் சிரஞ்சீவி பரதா! நான் ஒரு விஷயம் சொல்லுகிறேன் கவனமாகக் கேள்! உன் தந்தை எனக்குக் கொடுத்த நாட்டை அபகரித்து உன் அண்ணனுக்குக் கொடுக்கப் பார்த்தார்! அப்பாவுக்குப் பழிவரக் கூடாதென்று நானே பழியைச் சுமந்துகொண்டு உன்னை நாட்டுக்கு உரியவனாக ஆக்கிவிட்டேன். ஆனால்—நாட்டிலே சிலர், ராமன் காடேகியதைப் பற்றி வருந்தி, உன்னை தூஷிப்பதாகத் தெரிகிறது. அதனால் நீ நல்ல பெயர்வாங்க, ஒரு நாடகம் நடத்தவேண்டும்!” என்றாள்!

சிஷ் : ஆமாம்!

பாக : அது என்ன நாடகம்? எப்படிப்பட்ட நாடகம்?

சிஷ் : “த்ரீ டி” நாடகம்!

பாக : த்ரீடி நாடகமில்லையடா! திருடி நாடகம்!

சிஷ் : திருடி நாடகமா?

பாக : ஆமாம்....ராமன் காட்டுக்குப் போகும்போது ஒரு விலை உயர்ந்த பொருளைத் திருடிக்கொண்டு போய்விட்டான்! அது என்ன பொருள் தெரியுமோ?........

சிஷ் : சீதை........

பாக : சே! சீதையை ராமன் எப்படா திருடினான்? சீதைதான் அவன் மனைவியாயிற்றே!....அவன் போகும்போது திருடிக்கொண்டு போனது விலை உயர்ந்த மாணிக்கம்! அதைக் கொடுத்தால் அயோத்தியாபுரிப் பட்டணத்தைப்போல் ஆறு பட்டணங்களை விலைக்கு வாங்கலாம்! அந்த மாணிக்கத்தை ராமன் திருடிக்கொண்டு போய்விட்டான்!

சிஷ் : ஆமாம்!

பாக : மாணிக்கக் கல் திருட்டுப் போன சங்கதி கைகேயிக்கு அறிவிக்கப்பட்டது! அது எப்படி காணாமற் போயிருக்குமென்று கைகேயி ஆராய்ச்சி நடத்த ஆரம்பித்தாள்!

சிஷ் : ஆமாம்!

பாக : அப்படி ஆராய்ச்சி நடத்தியதில்.....பார் புகழும் அந்த மாணிக்கக்கல்லை ராமன் தனது பாதரட்சையிலே மறைத்து எடுத்துக்கொண்டு போய்விட்டான் என்று புலன் கிடைத்து விட்டது கைகேயிக்கு!

சிஷ் : ஆமாம்!

பாக : அப்போதுதான் பரதன் கேகய நாட்டிலிருந்து வந்து சேர்ந்தான். அவனிடம் கைகேயி சொல்லுவாள்: “தம்பி பரதா! ஈரேழு லோகத்திலும் காண முடியாத ஈடு இணையற்ற மாணிக்கக்கல்லை உன் அண்ணன் பாதுகையிலே மறைத்துக்கொண்டு போய்விட்டானாம்! மாணிக்கக் கல் இல்லாத அயோத்தி, சூரியனில்லாத வானம் போன்றது, கண் இல்லா முகம் போன்றது! எப்படியும் அந்தக் கல்லைத் திரும்பக் கொண்டு வரவேண்டும்” என்றாள்.

சிஷ் : ஆமாம்!

பாக : அதற்கு என்ன வழியென்று தெரியாமல் பரதன் விழித்துத் திகைத்து நின்றான்.

சிஷ் : ஆமாம்!

பாக : அப்போது கைகேயி சொல்கிறாள்: “பரதா! பயப்படாதே! சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்ல வேண்டும்! நீ இப்போதே ராமன் காட்டுக்குப் போவது கூடாது அவன்தான் நாடாளவேண்டும்” என்று கதறு! நான் சமாதானப் படுத்துவேன்! — கேட்காதே மந்திரிப் பிரதானிகளையெல்லாம் கூப்பிட்டுக்கொண்டு ராமனைத் தரிசித்து திருப்ப அழைத்து வருவதாகப் புறப்படு! புலம்பலை நிறுத்தாதே! அண்ணலே, அண்ணலே என்று அழு! அவன் பாதங்களைத் தொழு! நானிருக்கும் வரையில் அவன் நாட்டுக்குத் திரும்பிவரப் பயப்படுவான்! ஒரு வேளை, அப்படியே அவன் திரும்பி வந்துவிடுவான் போல் ஜாடை தெரிந்தால் அதற்கு இடங் கொடுக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்! அவனுக்கு நேராகவே என்னைத் திட்டு!.... மந்திரிப்பிரதானிகள் எல்லாம் உன்னுடைய சகோதரப் பாசத்தை மெச்சுகிற அளவுக்கு நாடகத்தை நடத்து!

“அண்ணா, நீ தந்தை சொல் மறவாத தனயன்! தந்தையின் வாக்குபடித் தரணியை வெறுத்துவிட்டு, இப்படித் தவக்கோலம் பூண்டுவிட்ட நீயல்லவா உத்தமன்! நீயல்லவர் தெய்வம்!” இப்படிப் புகழ்ந்து பேசியே அனைவரையும் மயக்கு! “திரும்பி வருகிறேன்” என்று ராமன் சொல்வதற்கு அவனுக்குச் சந்தர்ப்பமே கொடுக்காமல், ஜாக்கிரதையாகப் பேசு! ஒன்று மறந்துவிடாதே பரதா! ராமனின் பாதுகையிலே பதுக்கி வைத்திருக்கும் நமது மாணிக்கக்கல்! அதைக் கவர்ந்து வரவே இவ்வளவு ஏற்பாடும்! “நீ ஆளாவிட்டாலும் உனது பாதுகை நாட்டை ஆளட்டும்” என்று கெஞ்சிக் கூத்தாடி அதை எப்படியாவது பிடுங்கிக்கொண்டு வந்துவிடு! மந்திரிப் பிரதானிகளுக்கு மத்தியிலே ராமன் மாணிக்கக்கல்லை எடுத்துக்கொள்ள முடியாது! விழிப்பான்! திகைப்பான்!
“வேண்டாமடா தம்பி, பாதுகையைத் தொடாதே, பாபம்!” என்பான்.
“பாதுகையா இது? பார்புகழ் தெய்வத்திருவடியண்ணா!” என்று கூறி நீயாகவே அவைகளைக் கழற்றி எடுத்துக் கொண்டு வந்துவிடு, மகனே!” என்பதாகக் கைகேயி கூறவும், பரதனும் நாடகத்தை நடத்தப் பரவசத்தோடு புறப்பட்டான்.

சிஷ் : ஆமாம்!

பாக : அன்னையின் சொற்படியே, ராமனோ, லக்ஷ்மணனோ தன்னைக் கொன்றுவிடாமல் இருப்பதற்கான பாதுகாப்பாக ரதகஜதுரகபதாதிகளை அழைத்துக்கொண்டு பரதன் ராமனிடம் சென்றான். தந்திரமாகவும் சாகசமாகவும், அழுதும் புலம்பியும் அண்ணனிடத்தில் அவனுக்கு அழியாத பாசமிருப்பதாகக் காட்டிக் கொண்டான்! அதை அண்ணன் ராமனும் நம்பவில்லை — ஆனாலும் எதிரேயுள்ள மந்திரிப் பிரதானிகளுக்காக இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டார்கள்!

சிஷ் : ஆமாம்!

பாக : அப்படி ஒருவரையொருவர் தழுவிக் கொள்ளும்போது என்ன நடந்தது தெரியுமோ?

சிஷ் : மறைந்திருந்த புலி நகத்தால் குத்திக் கொன்றுவிட்டான்!

பாக : அடே முட்டாள்! அது சிவாஜி கதையடா!

சிஷ் : ஆமாம்!

பாக : இருவரும் தழுவிக்கொண்டதைக் கண்ட அரண்மனை வாசிகள் ஆனந்த பாஷ்பம் பொழிந்தனர்!

சிஷ் : ஆமாம்!

பாக : உடனே பரதன், ராமனைப் பார்த்து அண்ணா! நீதான் தந்தை சொல் தட்டக்கூடாதென்று ஆரண்யம் வந்து விட்டாய்!....உனக்குப் பதிலாக உன் பாதுகைகளைக் கொடு! அவைகளுக்குப் பட்டங் கட்டி, அவற்றின் பிரதிநிதியாகநான் ஆளுகிறேன்” என்று, ராமனுடையகாலிலேயிருந்த பாதுகைகளைக் கழற்றிக்கொண்டான்.

சிஷ் : ஆமாம்!

பாக : ராமனும் வேறு வழியின்றி, மாணிக்கக்கல் மறைந்திருந்த பாதுகைகளைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

சிஷ் : ஆமாம்!

பாக : அப்படி ராமன் பாதுகைகளைக் கொடுத்ததிலும் ஒரு சூழ்ச்சியிருந்ததை பரதன் உணர முடியவில்லை. கைகேயியும் உணர முடியவில்லை!

சிஷ் : ஆமாம்! உணரமுடியவில்லை!

பாக : பாதுகையிலே மாணிக்கக்கல்! மண்டலங்களை விலை கேட்கக் கூடிய மதிப்பு வாய்ந்த மாணிக்கக்கல்! அதனால் அவைகளைத் தலையிலே வைத்துத் தூக்கிக்கொண்டு போனான் பரதன்!

சிஷ் : ஆமாம்!

பாக : பிறகு, தனக்குரிய நாட்டில் ராமன் படை எடுப்பது அநியாயம் என்று பரதன் வாதிட்டான்.

சிஷ் : பதினாலு ஆண்டு தன் பாதுகை ஆண்டிருப்பதால் ஆளும் அனுபவ பாத்தியதை தனக்கே உரியது என்று ராமன் பதில் கொடுத்தான்........

சிஷ் : ஆமாம்!

பாக : “பன்னிரண்டு ஆண்டுக்கு மேல் போனாலே பாத்தியதை வந்துவிடுகிறது; அதுவும்பதினாலு ஆண்டு என்றால் பாத்தியதை வந்தது நியாயந்தானே” என அண்டமா முனிவரெல்லாம் அபிப்பிராயம் தெரிவித்தனர்!

சிஷ் : ஆமாம்!

பாக : உடனே, பரதன் நாட்டை விட்டு வெளியேறி நந்திக் கிராமம் என்னும் ஊரிலே தீக்குண்டம் வளர்க்கச் சொல்லி அதிலே குதித்து உயிர்விட்டான்!

சிஷ் : ஆமாம்!

பாக : அந்த மாணிக்கக்கல்லும் அவன் மடியிலே இருந்து, நெருப்பிலே கருகி, வெடித்துச் சிதறிப்போயிற்று!

சிஷ் : ஆமாம்!

பாக : இந்தப் பரதாயணத்தைப் படித்தவர்கள், படிக்கப் பக்கமிருந்து கேட்டவர்கள், கேட்டவர்கள் சொல்லிக்கேட்டவர்கள் அனைவருமே........

சிஷ் : மோக்ஷத்திற்குப் போவார்கள்!

பாக : இல்லையடா இல்லை!... படித்தவர்களும் கேட்டவர்களும் மோட்சத்திற்கும் போகமாட்டார்கள்; மோசத்திற்கும் போகமாட்டார்கள்! பகுத்தறிவு பெறுவார்கள்!........

சிஷ் : நமப் பகுத்தறிவுபதே!

பரதாயணம் முற்றிற்று!