பகுதி 1 / 1
சாரப்பள்ளம் சாமுண்டி
Sarapallam Samundi
இத்தலைப்பு மூலக் காப்பகத்தின் வாசிப்புப் பிரிவுக்கான விளக்கக் குறிப்பே; அச்சிடப்பட்ட தலைப்பு அல்ல.
மூல ஸ்கேன் 24–48
கீழே 1947 முதற்பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
“சாரப்பள்ளம் சாமுண்டி” ஒரு கற்பனைக் கதைதான்! ஆனால், வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு வரையப்படும் ஒரு சித்திரம்.
கி.பி. - 1005 ஆம் ஆண்டு! முதலாம் இராசராசன் தஞ்சையில் ‘இராசராசேச்சரம்’ என்னும் பெரிய கோயில் ஒன்றை எழுப்புகின்ற முயற்சியில் ஈடுபடுகிறான். அந்தக் கோயில் வெறும் சமயத் திருப்பணி மட்டுமல்ல ; அவன் பெற்ற வெற்றிகளின் நினைவுச் சின்னம்! அவன் உள்ளத்தில் சுடர்விட்டுக் கொண்டிருந்த கலையார்வத்தின் எடுத்துக்காட்டு!
கரிகால் பெருவளத்தான் காலத்தில் ஓங்கி உயர்ந்திருந்த சோழப் பேரரசு வீழ்ந்துவிட்டதென்று உலகம் முடிவு கட்டிய நேரத்தில் தஞ்சையில் விசயாலயச் சோழன், சோழமண்டலத்தில் புலிக்கொடியைத் தூக்கிப் பிடித்து நின்றான். அந்தக் கொடிக்குத் தலைவணங்கிப் பல நாடுகளைத் தன் செங்கோலின் கீழ்க் கொண்டு வந்த பெருமை இரண்டாம் பராந்தகச் சோழனின் மகன் முதலாம் இராசராசனையே சாரும்.
கி.பி. 985 சூன் திங்கள் இருபத்தைந்தாம் நாள் இராசராசன் அரசுக் கட்டில் ஏறினான். முதிர்ந்த அரசியல் அனுபவங்களைப் பெற்று முடிசூட்டிக்கொண்ட காரணத்தால் இவன் ஆட்சியைப் ‘பொற்காலம்’ என்று வரலாறு வருணிக்கிறது. இவன் உருவாக்கி நிலைநிறுத்திய சோழப் பேரரசு இரண்டு நூற்றாண்டுகள் வரையில் பெருமையுடன் திகழ்ந்தது. பட்டத்திற்கு வந்த நான்கைந்து ஆண்டுகள் வரையில் போர் பற்றிச் சப்தம் எழவில்லை. சப்தம் கேட்கவில்லையே தவிரத் திட்டங்கள் தீவிரமாகத் தீட்டப்பட்டன.
சோழநாட்டைச் சுற்றியுள்ள சிற்றரசர்களையும், பிற வேந்தர்களையும் சோழப் பேரரசுக்கு உட்படுத்த வேண்டுமென்ற<!-- source: scan 25; printed page: 21 --> எண்ணங்கொண்டு செயலாற்றினான் இராசராசன். சுற்றியுள்ள மன்னர்களால் என்றைக்கும் சோழநாட்டுக்கு விபத்து ஏற்படக் கூடும் என யோசித்து அதை முன்கூட்டியே தவிர்க்கவேண்டி, நாட்டின் படை பலத்தைப் பெருக்குவதிலும், அரணை உறுதிப்படுத்துவதிலும் நாட்டு மக்களுக்கு எல்லாக் காலத்திலும், வளமான வாழ்வு அமையவேண்டும் என்பதிலும் தன் ஆற்றல் முழுவதையும் செலவிட்டான். அவனது மகன் இராசேந்திரன் ஒரு வேங்கைப் புலி. திரும்பிய பக்கமெல்லாம் வெற்றிக் கனிக் குவிக்கக்கூடிய மாவீரன். இராசேந்திரனின் முதல் மனைவியின் பெயர் பஞ்சவன் மாதேவி ; மனைவியிடம் கொண்டுள்ள அன்பின் காரணமாக தனக்குப் பஞ்சவன் மாராயன் என்ற புனைப் பெயரைச் சூட்டிக்கொண்டான் போலும்! “மாராயம்” என்பது படைத் தலைவர்க்கு அரசனால் செய்யப்படும் சிறப்பு. இராசேந்திரன் முடி சூட்டிக் கொள்ளும் வரையில் சோழ நாட்டின் படைத் தளபதியாக இருந்து சோழப் பேரரசின் பரப்பளவை விரிவுபடுத்துவதில் கண்ணுங்கருத்துமாய் இருந்தான். தந்தையைப் போலவே இராசேந்திரனும் கலையார்வம் கொண்டவன். அந்தக் கலைச் செல்வத்தை அவனுக்கு வாரி வழங்கும் வள்ளலாக அமைந்தாள், மனைவி பஞ்சவன் மாதேவி.
தந்தை, மகன் இருவரது திறமையும், இருவரிடையே ஆழமாய் முகிழ்த்திருந்த அன்பும் சோழநாட்டை எஃகுக் கோட்டையாக மாற்றிடவும் பயன்பட்டன.
மணி முடி தலையில் இருக்கிறது ; மந்திரிப்பிரதானியர் பக்கவில் இருக்கிறார்கள் ; மாளிகை இருக்கிறது ; மஞ்சம் இருக்கிறது ; மன்னர் என்ற பெயர் இருக்கிறது - இதுவே போதும் இகத்தில் இன்பம் பெற என எண்ணிக் கிடக்கும் மந்தமதி இராசராசனுக்கு இருந்திருக்குமேயானால் அவனது எல்லைகள் பறிபோயிருக்கக்கூடும். சோழ நாடு சுருங்கிச் சீர்குலைந்து போயிருக்க வழி வகுத்தவனாகியிருப்பான். ஆனால், அவனே எதிர்காலமுணர்ந்த அறிஞர் பெருந்தகை. பகைவர்களின் உளப்பாங்கு புரிந்துகொண்ட ராஜதந்திரி. ஆகவேதான், அரணை வலுவாக்கிப் படையைப் பெருக்கிட நாலைந்து ஆண்டுகள் செலவிட்டான். அதன் பின்னர் எதிரிகளைக் கணக்கிட்டான். யார் யாரைப் படைகொண்டு அழிக்கலாம்—யாருடன் நட்புப் பாராட்டலாம்—யார் யாரை வளர விடாமல் சோழ நாட்டுக்கு அடங்கி நடக்கச் செய்யலாம் என்ற தீர்க்கமான திட்டங்களையெல்லாம் சிந்தித்துச் செயல்பட முனைந்தான். பிறகு, புலிக்கொடிப் படைகள் புறப்பட்டன. பெரும் படைத் தலைவன் பதவியை ஏற்றுக்கொண்ட பஞ்சவன் மாராயன் எனும் இராசேந்திரனின் வீர வாள் சுழன்றது. மின்னல்கள் ஆயிரம்,<!-- source: scan 26; printed page: 22 --> கோடியென வெளிப்பட்டன. அவை இராசராசனின் வெற்றி ஒளியைப் பாய்ச்சின.
ஆனைப்படை, குதிரைப்படை, காலாட் படைகளுடன் கடற்படையும் கொண்டு மாற்றரைச் சுற்றிவளைக்க மாமன்னன் இராசராசனின் போர் முழக்கம் இடியென முழங்கியது. கி.பி. 989-இல் சோழர் படை, சேர நாட்டில் நுழைந்தது. சேரனுடன் இணைந்து நின்று பாண்டியன் அமரபுசங்கன் என்பானும் சோழரை எதிர்த்தான். காந்தளூர்ச்சாலை எனப்பட்ட துறைமுகப்பட்டினத்தில் நடைபெற்ற போரில் சேரரின் மரக்கலங்களையெல்லாம் சோழர் படை அழித்து வெற்றி கண்டது. சேர நாட்டை வென்ற இராசராசன் அங்குத் தன்னுடைய பிறந்த நாளான ஐப்பசித் திங்கள் சதயநாளைக் கொண்டாடுமாறு செய்வித்தான். அங்கிருந்து பாண்டியன் அமரபுசங்கனை விரட்டிக்கொண்டு சோழப்படை புறப்பட்டது. விழிஞம் என்ற துறைமுகம் இராசேந்திரனால் கைப்பற்றப்பட்டது. இந்த இரண்டு நாடுகளுக்கும் மூண்ட போர் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நடைபெற்றிருக்கின்றது.
பின்னர், குடமலை நாட்டு மன்னன்மீது தஞ்சை, பழி தீர்த்துக் கொள்ளக் கிளம்பியது. அந்த நாட்டிற்குத் தஞ்சையிலிருந்து அனுப்பப்பட்ட தூதன் கொல்லப்பட்ட செய்தி கேள்வியுற்ற சோழவேந்தன் இராசராசன் படைகொண்டு புறப்பட்டான். பெரிய காடுகள் பதினெட்டுக்கும் மேற்பட்டவைகளைத் தாண்டி, குடமலை நாட்டின் தலைநகரான வலிவுமிக்க உதகைப்பட்டினத்தை அழித்து வெற்றிமாலை சூடினான். குடமலை நாட்டு அரசன் மீனிசா போர்க்களத்தில் பெருவீரம் காட்டிப் போரிட்டான் என்பதை இராசேந்திரன் மூலம் அறிந்து, அந்த மீனிசாவுக்கு மாளவி என்ற நகரத்தை நன்கொடையாக வழங்கினான்.
கீழைச் சாளுக்கிய நாட்டில் அரசுக்கட்டில் யாருக்குச் சொந்தம் என்பதிலே பெருங் குழப்பம் மூண்டிருந்தது. சக்திவர்மன் என்பவனும் அவன் மரபினரும் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டனர். இராசராசன் சக்திவர்மனுக்கு ஆதரவு காட்டி அவனது எதிரிகளை முறியடித்துக் கீழைச்சாளுக்கிய நாட்டுக்குச் சக்திவர்மனை அரசனாக்கினான். சக்திவர்மனின் தம்பி விமலாதித்தனுக்கு இராசராசனின் மகள் சிறிய குந்தவையை மணம் செய்துகொடுத்துக் கீழைச் சாளுக்கிய நாட்டின் நட்பைப் பலப்படுத்திக்கொண்டது சோழநாடு!
பின்னர், கலிங்கத்தில் நடந்த கடும்போரில் இராசராசன் வாகை சூடினான். கங்கபாடியின் மீது போர் தொடுத்து, அதன் தலைநகரான தாலக்காட்டைப் பிடித்து, அதற்கு இராசராசபுரம் எனப் பெயர் மாற்றினான். அதே வேகத்தில் நுளம்பபாடி வீழ்ச்சி<!-- source: scan 27; printed page: 23 -->யுற்றது. தடிகைபாடியும் இராசராசனுக்குத் தலைவணங்கி நின்றது. அடுத்துக் கொல்லம் படையெடுப்பு ; கொடுங்கோளூர் மீது போர்! இரு நாடுகளையும் அடக்கிக் ‘கீர்த்திப்பராகிரமச் சோழன்’ என்ற பட்டத்தைப் பெற்றான் இராசராசன். மேலைக் கடற்கரையோரத்து மன்னர்கள் அனைவரையும் அடக்க முனைந்து, இராசேந்திரன் படைகொண்டு சென்று, துளுவர், கொங்கணர் ஆகியோரைச் சிறைப் பிடித்தும், சேரையும் தெலுங்கரையும் முறியடித்தும் சோழ பூமிக்கு ஒப்பற்ற வெற்றியைத் தேடிக் கொடுத்தான்.
ஈழப்படையெடுப்பில் இராசராசன் பெற்ற வெற்றியின் அறிகுறியாக வட இலங்கைக்கு ‘மும்முடிச் சோழ மண்டலம்’ எனப் பெயர் சூட்டினான். இந்தப் போரில் அனுராதபுரம் ஆக்கம் அழிந்தது. “பொலனருவா” என்ற இடத்தைச் சோழர் தலைநகராக இலங்கையில் அமைத்துக் கொண்டான் இராசராசன்.
“இராமன் இலங்கை செல்வதற்குக் குரங்குகளைக் கொண்டு பாலம் கட்டினான். ஆனால், இராசராசன் பாலம் கட்டாமல் படைகளைக் கப்பல்கள் மூலமாகக் கொண்டுசென்று, இலங்கை வேந்தனைக் கொன்றான். இதனால் இவன் இராமனைவிடச் சிறந்தவன்” என்று திருவாலங்காட்டுப் பட்டயம் பகர்கின்றது.
மேலைச் சாளுக்கியப் பகுதியான இரட்டப்பாடியில் சத்தியாச்ரயன் என்ற பலம் வாய்ந்த மன்னனை இராசராசன் எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டான். அதில் சத்தியாச்ரயன் புறமுதுகிட்டுப் பதுங்கிவிட்டான். என்றாலும் நாட்டை இழந்துவிடவில்லை. இராசராசன் இரட்டப்பாடிப் போர் மூலம் மிகுந்த பொன்னும் பொருளும் அடையப் பெற்றான். அந்த அளவற்ற செல்வத்தைக் கொண்டுவந்துதான் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கினான். முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் கைப்பற்றி, ‘மும்முடிச் சோழன்’ என்ற புகழ்மாலையும் பெற்ற இராசராசனது வெற்றித் தூண் போல நிற்பதுதான் தஞ்சை இராசராசேச்சரம் எனும் கலைக்கோயில்!
இராசராசனின் ஈடும் எடுப்பும் அற்ற வீரத்தோற்றம் போலவே அந்தக் கோயிலும் நிமிர்ந்து நின்று, பழந்தமிழ்ப் பெருவீரனின் போர்ப்பரணியையும் கலை முழக்கத்தையும் அரசியல் பேரொளியையும் அவனிக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறது.
அந்தக் கோயிலை எழுப்புவதற்கு இராசராசன் தீட்டிய திட்டங்கள் எத்தனை ; எத்தனை! அவன் எண்ணங்கள் அத்தனையும் நிறைவேறியனவா? அந்தக் கலைக்கோயிலில் அவன் காண வேண்டுமென்று விரும்பிய அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டனவா? இல்லை! அவன் எண்ணம் முழுதும் ஈடேறவில்லை! ஏன் ஈடேறவில்லை? அந்தக் கேள்விக்குப் பதில்தான் இந்தக் கதை!
கோயில் திருப்பணியைப் பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருப்பவன் கண்டராதித்தன் என்னும் பேரதிகாரி. இராசராசனின் சிற்றப்பாவான மதுராந்தகச் சோழனின் மகன்தான் கண்டராதித்தன். கண்டராதித்தனை ஒரு நாள் அழைத்து அரசனும், இராசேந்திரனும், இராசராசனின் அக்காள் குந்தவையாரும்<!-- source: scan 29; printed page: 26 --> கோயில் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதுபற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்கள்.
குந்தவையார், கோயிலுக்கு இராசராசேச்சரம் என்னும் பெயரே வழங்கப்பட வேண்டுமென்று கருத்து அறிவித்தார்.
“கோயிலுக்கு ஏழு வாயில்கள் அமைக்கப்பட வேண்டும். அங்குப் பதினைந்து வாயிற்காவலர் சிலைகள் அமைக்க வேண்டும்” என்றான் இராசேந்திரன்.
“இராசேந்திரனுக்கு எப்போதும் பாதுகாப்பைப் பற்றித்தான் அக்கறை! இராசேந்திரா! சிலைகள் கோயிலைப் பாதுகாக்குமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் மன்னன்.
“சிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அழகுக்காக இருக்கட்டும் என்றுசொன்னேன்.” —என்று பதில் கூறினான் இளவரசன். அவன் ஆசை ஒப்புக்கொள்ளப்பட்டது.
“தோரணவாயில், திருமாளிகை வாயில், திருஅணுக்கன் வாயில் என்று மூன்று வாசல்களையும் பழைய முறைப்படியே அமைத்துவிடலாம் அல்லவா?” என்று கண்டராதித்தன் கேட்டான். மன்னன் ‘சரி’ என்று தலையசைத்தான். அதற்குள் குந்தவையார் குறுக்கிட்டு, “இல்ல; இல்ல. அந்த வாசல் பெயர்களில் மாற்றம் வேண்டும். இராசராசன், கேரளர்களுக்கு எமனைப் போன்றவன் என்பதற்கு அடையாளமாக முதற்கோபுர வாயிலுக்குக் கேரளாந்தகன் வாசல் என்றும், இரண்டாவது கோபுர வாசல் இராசராசன் திருவாசல் என்றும் அமைக்க வேண்டும்” என்று கூறினார். அக்காளின் பேச்சை மறுத்துப் பேசிப் பழக்கமில்லாத இராசராசனும் வாளாயிருந்துவிட்டான்.
“கார்ப்பக்கிரகத்துக்கு மேலேயுள்ள விமானத்தை நல்ல உயரத்திலும் பதின்மூன்று கோபுர மாடிகள் கொண்டதாகவும் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறேன்” என்று கண்டராதித்தன் கூறியதை அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள்.
“அந்த விமானக் கோபுரத்தின் உச்சியில் வைக்கப்படும் ஸ்தூபிக்குடம் மூவாயிரம் பலம் எடையுள்ள செப்புக்குடமாக இருக்க வேண்டும். அதன்மேல் சுமார் மூவாயிரம் கழஞ்சு நிறையுள்ள பொன்தகடு போர்த்த வேண்டும்.”
இராசராசன் இந்த ஆசையை வெளியிட்டபோது, குந்தவையார் புன்னகையை நெளியவிட்டுத் தன் தம்பியை அருள் ஒழுகும் கண்களால் ஆசைதீரப் பார்த்துப் பரவசமுற்றார்.
“கோயிலில் சோழப் பேரரசின் சிறப்புக் குறிப்புக்கள்-வெற்றிச் செய்திகள் தாங்கிய கல்வெட்டுக்கள் செதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று குந்தவையார் கூறினார்.
“சிற்பிகளிடம் கூறி, கோயில் விமானத்தின் நிழல் தரையில்<!-- source: scan 30; printed page: 27 --> விழாதவாறு அத்துணை அற்புதமாக அமைக்கச் சொல்ல வேண்டும்” என்று உற்சாகத்துடன் கருத்தறிவித்தான் இராசேந்திரன்.
“சிற்பிகள் என்றதும் நினைவு வந்து; கண்டராதித்தா! எனக்கு நெடுநாளைய ஆசை! அதை அந்தக்கோயிலில் நிறைவேற்றியாக வேண்டும்” என்று பரபரப்புடன் தொடங்கினான் மன்னன். அனைவரும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
“ஆண்டவன் ஆடியதாக உள்ள திருத்தாண்டவம் இருக்கிறதே....”
—என்று அவன் முடிப்பதற்குள், “அதென்னப்பா; அதை ஆண்டவன்தானா ஆட முடியும்? எத்தனையோ ஆரணங்குகள் ஆடுகிறார்கள்!”
— என்று குறுக்கிட்டான் இராசேந்திரன்.
“இராசேந்திரா! உன் குறும்புமட்டும் போகாது! நான் கலைத்துவத்தோடு அந்தத் தாண்டவத்தைப் பார்க்கிறேன். அது ஓர் உன்னதக்கலை! இந்நேரம் உன் மனைவி பஞ்சவன்மாதேவி இருந்தால் என் பக்கம் சேர்ந்துகொண்டு உன்னைத் தாக்கியிருப்பாள்!” என்று செல்லக் கோபம் காட்டினான் மன்னன்.
“இப்போதுதான் என்ன? அவள் மும்முடிச் சோழபுரத்திற்குத்தான் போயிருக்கிறாள். போய் அழைத்து வரட்டுமா?”
—இது இராசேந்திரனின் கேள்வி.
அதற்குள் குந்தவையார்,
“இல்ல, இல்ல. அவள் நாளைக்கு வந்துவிடுவாள். அதுவரையில் உங்கள் வாதத்தை ஒத்திவையுங்கள்!” என்றார் சிரித்துக் கொண்டே!
“அத்தை! எனக்குக் கலையார்வம் இல்ல என்கிறீரே, அப்பா! நீங்கள் நம்புகிறீர்களா?”
இராசேந்திரன் குந்தவையாரிடம் அன்பொழுகக் கேட்டான்.
“சே, சே! யார் சொன்னது? உன் மனைவி பஞ்சவன்மாதேவி ஆடுவதும் நீ பாடுவதும் எத்தனையோ முறை என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.”
இராசேந்திரன் வெட்கத்தால் தலைகுனிந்துகொண்டான், குந்தவையாரின் கேலி கண்டு.
“சரி, சரி! நீங்கள் இடையே குறுக்கிட்டு நான் சொல்ல வந்ததை மறந்துவிடப் போகிறேன். கண்டராதித்தா! இறைவனின் எழுவகை ஆடல்களில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு என்பது தான் எல்லாருக்கும் தெரியுமே! நாம் கட்ட இருக்கும் கோயில் மேல்தளத்தின் உட்பாகத்து அடிவரிசையில் இறைவனது தாண்டவங்களைச் சிற்பங்களாகச் செதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நூற்றெட்டு நடை நிலைகளை நூற்றெட்டுச் சிற்பங்களாக அமைத்திட வேண்டும். ஒவ்வொரு சிற்பத்திலும் கலையின் உயிர்ப்பும்<!-- source: scan 31; printed page: 28 --> துடிப்பும் மிளிர்ந்திட வேண்டும். அந்தச் சிற்பங்களை உருவாக்குவதற்கு எவ்வளவு பொருள் செலவானாலும் பரவாயில்லை. திறமை மிக்க சிற்பி ஒருவனை இப்போதே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த என் ஆசையை நிறைவு செய்யவேண்டியது நின் தலையாய பொறுப்பாகும்.”
என்று இராசராசன் மிக்க உணர்ச்சியுடன் கூறினான். நூற்றெட்டுக் கலைச்சிற்பங்களை அமைப்பதிலே மன்னன் காட்டுகின்ற அளப்பரிய அக்கறை கண்டு குந்தவையாரும், இராசேந்திரனும் ஒருவரை யொருவர் வியப்புடன் பார்த்துக்கொண்டனர்.
கோயில் எழுப்புவதற்கான மேலும் பல திட்டவட்டமான யோசனைகளை வெளியிட்ட பிறகு, ஆக்கப்பணியில் இறங்குவதாக உறுதி கூறி, கண்டராதித்தன் விடை பெற்றுக்கொண்டான். அதன் பின் அரசன், சேனாதிபதி கிருஷ்ணன் இராமனை மும்முடிச் சோழப் பிரமராயனை அழைத்து, கோயிலுக்கான திருச்சுற்று மாளிகை எழுப்பும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான்.
கண்டராதித்தனும் பிரமராயனும் இராசராசேச்சரத்தை நாலைந்து ஆண்டுகளுக்குள் உருவாக்கிவிட வேண்டுமென்றே ஆவல் துள்ளக் காரியத்தில் இறங்கினர். நாடெங்கணுமிருந்து திறமை மிக்கச் சிற்பிகள் வரவழைக்கப்பட்டார்கள். கற்கள் மலைமலையாகக் குவிக்கப்பட்டன. கோயில் காரியங்கள் குறைவின்றி நடைபெறுவதற்காக முப்பத்தைந்து ஊர்களை தேவதானச்சிற்றூர்கள் என்ற பெயரால் கோயிலுக்குக் கல்வெட்டு மூலம் அரசன் அளித்தான். கோயிற்பணிகள் குறைவற நடைபெற நானூறு தேவ மாதர்கள் கோயிலைச் சுற்றி வடக்கிலும் தெற்கிலுமாகக் குடியேற்றப்பட்டனர். அந்த மாதர்களில் ஆடல் பாடல்களிலும் வல்லவர்கள் இருந்தார்கள். கோயில் சேவைக்கெனக் கொட்டி மத்தளக்காரர், வீணை வாசிப்பவர், மொராவியம், வங்கியம், பாடலியம், உடுக்கை, முத்திரைச் சங்கம் முழங்குவோர், உவச்சப் பறை, சகடை, கரடிகை என்னும் பறைக் கருவிகள் வாசிப்போர் அனைவரும் தருவிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தனித்தனியே ஒவ்வொரு வேலி நிலம் நிபந்தம் அளிக்கப்பட்டது. கோயில் பண்டாரிகள், கணக்கர், திருவிளக்கிடுவோர், மாலைகட்டி, மெய்க்காவலர், தச்சர், கன்னார் எனப்படும் துறையினரும் அமர்த்தப்பட்டனர். கோயில் வேலை முழுவதும் முடிவதற்குள்ளாகவே கோயிலுக்குத் தேவையான பொருள்களையும் சேகரித்துச் சிறப்புச் செய்வித்தான் அரசன்.
தஞ்சை மாதாவின் மடியில் காலூன்றி எழும் சோழப் பேரரசின் வெற்றிக் கலைச் சின்னத்தைக் காண்பதற்கு நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் நாள்தோறும் ஏராளமானவர்கள் தஞ்சையில் கூடினார்கள். தினந்தோறும் திருவிழா எனத் தக்க வகையில் விளங்கிற்றுச் சோழனின் தலைமை நகரம். அந்த மகத்தான காட்சியைக் காண வருபவர்கள் கடல் அலை போல் கூட்டம் கூட்டமாக வந்து திரும்பிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஊர்க்காரர்கள் தஞ்சையைக் சூழ்ந்துகொண்டு கோயிலின் வளர்ச்சியைக் கவனித்துச் சென்றனர்.
ஒரு நரை மூதாட்டி மட்டும் நாள் தவறாமல், அந்தி சாயும் நேரத்தில் ஆலயம் கட்டப்படும் இடத்திற்குச் சிறிது தொலைவில் வந்து நின்று, இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிச் சில ஆடுகள் நிற்கும். பின்னர், பொழுது நன்றாகப் போனதும் அவள் ஆடுகளுடன் திரும்பிப் போய் விடுவாள்.
நரை விழுந்த கூந்தல் எனினும் அதனை வாரி ஒழுங்காக முடித்திருந்தாள், வயது எழுபதை எட்டிப் பிடித்திருக்கும். ஆனால் அவள் நிற்பதற்குக் கம்பைப் பிடித்துக்கொள்ளவில்லை; நன்றாக உழைத்த உடம்பு என்பது பார்த்தவுடனேயே தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக விண்ணோக்கி உயர்கிற இராசராசேச்சரத்தைப் பார்க்கும் அவளது சுருங்கிய முகத்தில் ஒருவித மலர்ச்சி ஏற்படும். தொலைவிலே நின்றுகூட அவளால் சிற்பிகளும் ஏனையப் பணியாளர்களும் நடத்துகிற வேலைகளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. தினந்தோறும் அந்தக் கிழவி வருவதையும் மிகுந்த உற்சாகத்துடன் திருப்பணியைப் பார்வையிடுவதையும் கண்ட சிற்பிகள் சிலர் ஒரு நாள் அவளை நெருங்கிப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினர்.
அவள் ஆடு வளர்ப்பதைத் தொழிலாகக் கொண்டவள். பெயர் அழகி. தஞ்சைக்கு அருகே நாலு கல் தொலைவிலுள்ள குக்கிராமத்தில் வாழ்கிறாள்.
இந்த விவரங்களைச் சிற்பிகள் கேட்டறிந்தனர்.
“உனக்கேன் பாட்டி இந்த வயதில் இவ்வளவு ஆர்வம்?”
ஓர் இளம் சிற்பி சற்றுக் குத்தலாகக் கேட்டு வைத்தான்.
“இராசராசச் சக்கரவர்த்தி செய்கிற இந்தக் காரியம் தலைமுறை தலைமுறைக்கும் தஞ்சையின் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கும். எனக்கிருக்கும் கவலையெல்லாம் இந்தக் காரியத்திற்கு என் பங்கை எப்படிச் செலுத்துவது என்பதுதான்” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே பதில் கூறினாள் அந்தப் பழுத்த பழம்.
“ஆயிரம் - கோடியென்று பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொட்டி நடத்தப்படுகிற இந்த மகாப் பெரிய திருப்பணியில் ஆடு வளர்க்கும் உன்னால் என்ன பாட்டி உதவி செய்ய முடியும்”
என்று ஏளனமாகக் கேட்டான் இன்னொரு சிற்பி.
கிழவி அழகிக்கு அந்தக் கேள்வி கோபத்தைத் தூண்டிவிட்டது. அவள் அதனைச் சமாளித்துக்கொண்டு, அந்தச் சிற்பியை நிமிர்ந்து பார்த்தாள். அப்பப்பா! அந்த முதிர்ந்த விழிகளில்கூட எவ்வளவு கூர்மை! அவன் குனிந்துகொண்டே வேறு பக்கம் நடையைக் கட்டினான்.
அவள் உள்ளத்திலே பல நாட்களாக அந்தப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நற்பணிக்குத் தன்னாலான பங்கினையும் செலுத்த வேண்டும் என்பது அவளது தணியாத ஆசை. இந்த வயதில் ஆடு மேய்ப்பதைத் தவிர அவளால் வேறு கடினமான வேலை என்ன செய்ய முடியும்? சுற்றுச்சுவர் எழுப்புகிறவர்களுக்குக் கல் தூக்கித் தர முடியுமா? சேறு குழைக்கத் தண்ணீர் கொண்டுவந்து குடம் குடமாகக் கொட்டக்கூடிய அளவுக்கு அவள் உடலில் வலு இருக்கிறதா? ஆனாலும், சோழப் பேரரசின் செங்கதிரோன் எனப்படும் இராசராசனின் வீரத்தையும் வெற்றிகளையும் விவேகச் செயல்களையும் முகில்மாடத்தைத் தொட்டு நின்று வழங்கப்போகிற இராசராசேச்சரத்தின் எழிலுக்கும் ஏற்றத்திற்கும் தன்னாலான சிறு உதவியையாவது செய்தே தீரவேண்டும் என்று அவள் முடிவு கட்டிக்கொண்டாள். உதவி எத்தகையது என்பதைத்தான் அவளால் திடீரென்று தீர்மானிக்க முடியவில்லை. இரண்டொரு நாட்கள் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, அவள் கோயிற்பணி புரியும் சிற்பிகளை அழைத்துத் தன் முடிவை வெளியிட்டாள்.
அதாவது, தினந்தோறும் மாலைப்பொழுதில் இருபது சிற்பிகள் தமது வேலைமுடிந்ததும், அவள் அளிக்கும் உணவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாள்தோறும் இருபது பேர் என்ற வரிசையில் பட்டியல் மாறி மாறி வரும். அனைவருக்கும் ஏககாலத்தில் உணவளிக்க அவளால் இயலாது. கிழவியின் உணர்ச்சியையும் உள்ளன்பையும் சோழ நாட்டின் மீது வைத்துள்ள பற்றையும் பாசத்தையும் புரிந்து கொண்ட சிற்பிகளும் அவளது வேண்டுகோளுக்கு இணங்கினர்.
அந்திப் பொழுதில் அந்தக் கிழவியின் வீட்டுச் சாப்பாட்டு முறையென்றால் சிற்பிகளுக்கு ஒரே கொண்டாட்டந்தான். அவள் வளர்த்த ஆடுகள் ஒவ்வொன்றாகக் குறைந்துகொண்டு வருவதைச் சிற்பிகள் கவனித்தார்கள். அவைகளை விற்றுத்தான் அவளால் சிற்பிகளுக்கு விருந்து வைக்க முடிந்தது.
ஆடுகள் குறைந்துவிட்டதைப்பற்றி அவளுக்குத் துளி அளவு கூடக் கவலையேற்பட்டதாகத் தெரியவில்லை. சிற்பிகள் ஒரு நாள் கோயில் வேலைகளைக் கவனிக்க வந்திருந்த இராசேந்திரனிடம், கிழவி அழகியின் தூய்மையான அன்புபற்றியும் கடமையுணர்ச்சிபற்றியும் கூறிப் புகழ்ந்தார்கள். மறுநாள் இரவு கிழவியின் வீட்டு வாயிற்புறத்தில் ஆயிரம் ஆடுகள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. காலையில் அவைகளைக் கண்ட கிழவி, “ஆண்டவனின் லீலா விநோதம்தான் இது !” என்று ஆனந்தக்கூத்தாடினாள். இராசேந்திரனின் நல்லுதவியென்பது அவளுக்குத் தெரியாமலே போய் விட்டது. அவளை இராசேந்திரன் அழைத்துவரச் செய்து, தன் தந்தையிடம் அறிமுகப்படுத்திவைத்தான். அப்போதும் அவள் ஆடுகளை ஆண்டவன் அளித்தான் என்றுதான் சொன்னாள். கிழவியின் ஆர்வத்தைக் கண்ட இராசராசன் அவளைப் பார்த்துக் கனிவுடன் “அம்மையே ! உமது விருப்பம் எதாவது இருப்பின் தெரிவிக்கலாம். உடனே நிறைவேற்றுவதற்கு வழி செய்வேன்” என்றுரைத்தான்.
“சக்கரவர்த்தியார் அவர்களே ! தங்கள் திருவாயால் என்னை அம்மையே என்று அழைத்ததைவிட வேறென்ன பாக்கியம் இருக்கப்போகிறது எனக்கு ! தங்களின் அழியாத பெயரை ஆண்டாண்டுக் காலத்திற்கும் சொல்லிக்கொண்டிருக்கப்போகும் இராசராசேச்சரத்தில் பணிபுரியும் சிற்பிகளுக்கு உணவளித்த பெருமை யொன்றே எனக்குப் போதும்;”
என்று கூறி, மன்னனின் திருவடிகளில் விழுந்து வணங்கப் போன கிழவி அழகியை மன்னன் தடுத்து நிறுத்தி,
“அம்மையே ! உமது வெள்ளை உள்ளத்தை நான் புரிந்து கொண்டேன். மன்னன் செய்யும் காரியங்கள் மன்னனுக்கே மட்டும் சிறப்பூட்டுவன அல்ல ! அப்படி இருக்கவும் கூடாது என்பது என் விருப்பம். சோழப் பேரரசின் மேன்மைக்கு யார் பாடுபடுகிறவர்களோ, அவர்கள் யாராயிருப்பினும் என் நன்றிக்குரியவர்கள். என் ஒருவனுடைய தனி ஆற்றலால் விளைந்தது அல்ல இன்றையச் சோழ மண்டலம் ! இதோ நிற்கும் என் வீர மைந்தனின் வாள் வலிமையால் மட்டும் ஏற்பட்டதல்ல இந்தப் பேரரசு ! எத்தனையோ சோழ குல மாணிக்கங்களின் வீரத் தோள்களும், தங்களைப் போன்ற மாதாக்களின் நல்வாழ்த்துக்களும் உருவாக்கிய அரசு இது ! நான் தங்கள் நிழலில் தானம்மா நின்று கொண்டிருக்கிறேன் ! அதனால் தாராளமாகக் கேளுங்கள், தங்களுக்கு வேண்டியதை” எனப் பரிவுடன் கூறினான். அரசன். கிழவி, ஏதோ சொல்ல வாயெடுத்துச் சற்றுத் தயங்கிப் பின்னர் தொடர்ந்தாள்.
“மன்னர் மன்னு ! ஏழையின் விண்ணப்பம் ஒன்று உண்டு, கோயிலில் அமைக்கப்படும் விமானத்தின் மேல் தளத்திற்குப் பெரிய அளவில் ஒரே கல்லாக ஒன்று வேண்டுமென்று சிற்பிகள் சொல்லக் கேட்டேன். அப்படிப்பட்ட கல் ஒன்று என் வசம் இருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.”
இதைக் சொல்லி முடிப்பதற்குள் கிழவியின் கண்களில் நீர் துளித்துவிட்டது. “ஒரே கல்லா ?”
அரசன் வியப்புடன் சிற்பிகளைப் பார்த்துக் கேட்டான்.
“ஆம் அரசர் பெருமானே ! விமானத்தின் மீது ஒரே கல்லில் தளம் அமைப்பது சிறப்புடையதாக இருக்கும் என்று கண்டராதித்தர் கூடக் கருத்துத் தெரிவித்தார். இளவரசர் அவர்களும் அதனை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்” என்றனர் பணிவுடன் சிற்பிகள் !
“விமானம் விண்ணைத் தொடவல்லதாய் அமைகிறது. அதன் உச்சியிலே கொண்டுபோய் மிகப் பெரும் கல்லை ஏற்றுவதென்றால் சாத்தியமாகுமா ?” என்ற கேள்வியை இராசராசன் எழுப்பினான்.
உடனே கிழவி, மிக மரியாதையுடன் தல வணங்கி,
“அரசர்க்கரசே ! என் வீட்டிலிருந்து சாரம் ஒன்று கட்டினால் கோபுரத்தின் உச்சிக்கு அந்தக் கல்லை ஏற்றுவது மிகச் சுலபமாக இருக்கும். என் வீட்டுக்கும் கோபுரத்திற்கும் இடையே நான்கு கல் தொலைவு இருக்கும். அங்கிருந்து சாரம் கட்டினால் கல்லைச் சாலையில் உருட்டிக்கொண்டு போவது போலச் சாரத்தில் உருட்டிச் சென்று விமானத்தில் ஏற்றிச் சென்றுவிடலாம்.” என்று வழி சொல்லிக் கொடுத்தாள்.
அவளது வியத்தகு அறிவினைக் கண்டு சோழப் பெருவேந்தன் திகைத்துப்போனான். அவள் அளிக்கும் கல்லை விமானத் தளமாகப் பயன்படுத்த அவன் முடிவு செய்துவிட்டான். அந்த முடிவினைப் புன்னகை ததும்ப அறிவித்தவாறு, “ம் !.. நான் என்னதான் பெரிய கோயிலைக் கட்டினாலும் கடைசியில் ஆண்டவன் ‘யாம் கிழவி அளித்த நிழலில் உவந்திருப்பினோமே !’ எனக் கூறிவிடப் போகிறார்” என்று பெருமூச்சுவிட்டுக்கொண்டான். அது ஆயாச மூச்சல்ல ! ஆனந்த மூச்சு !
அழகி கூறிய ஆலோசனையின்படியே நான்கு கல் தொலைவிலுள்ள அவள் வீட்டிலிருந்து சாரம் கட்ட ஆரம்பித்து, அதில் அந்தப் பெரும் கல்லைத் தூக்கிவைத்து விமானத்திற்குக் கொண்டு சென்றார்கள் சிற்பிகள். சாரம் கட்டப்பட்ட அந்த இடத்திற்குச் ‘சாரப்பள்ளம்’ என்ற பெயரும் உடனே வழங்கத் தொடங்கிற்று. கிழவியின் நுண்ணறிவையும், தொண்டு உள்ளத்தையும் கெளரவிக்கும் முறையில் தஞ்சையில் அழகிக்குளம் ஒன்றை அமைக்கச் செய்தும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டான் அரசன்.
ஆலயம் முடிவடையும் கட்டத்தை அடைந்துவிட்டது. இராசராசனும் இராசேந்திரனும் குந்தவையாரும் கூறிய ஆலோசனைகளின்படி எல்லாப் பணிகளையும் கண்டராதித்தன் நிறைவேற்றி விட்டான். ஆனால் அரசன் விரும்பியவாறு நூற்றெட்டுத் தாண்<!-- source: scan 36; printed page: 33 -->டவ நிலைகள்தான் இன்னும் செதுக்கிடத் தொடங்கவில்லை. இது இராசராசன் இதயத்தில் பெருங் குறையாகவே இருந்தது. அந்த வேலை பூர்த்தியடையாமல் அவனுக்கு நிம்மதி கிடையாது.
சோழன் மாளிகையில் அதுபற்றி விரிவான பேச்சு அரங்கம் ஒன்றே ஏற்பட்டாயிற்று. கண்டராதித்தனை அரசன் அவசரமாக அழைத்துவரச் சொன்னான். இராசராசன், இராசேந்திரன், அவன் மனைவி பஞ்சவன்மாதேவி, குந்தவையார் முதலிய சோழக் குடும்பத்தினர் அந்த உரையாடலில் கலந்து கொண்டனர். இராசராசன் மன நிலையை விளக்கிக், குந்தவையார் மிக உருக்கமாகக் கண்டராதித்தனிடம் கூறினார்.
“அரசரின் விருப்பம் என்ன காரணம் பற்றிக் கவனிக்கப்படவில்லை ?”
—இது குந்தவையாரின் கேள்வி.
“கவனிக்கப்படவில்லை என்று கற்பனை செய்வது தவறு. நாடெங்கும் தேடிப் பார்த்த பின் சென்ற கிழமைதான் ஒரு கைதேர்ந்த சிற்பியைக் கண்டு பிடித்தேன்.”
—இது கண்டராதித்தன் பதில்.
“கைதேர்ந்த சிற்பியைக் கண்டு பிடித்து ஒரு கிழமையான பிறகும் சிற்ப வேலை தொடங்கப் பெறுமைக்கு என்ன விசித்திரக் காரணம் வைத்திருக்கிறாய் ?”
அரசனின் ஆத்திரம் கலந்த வினவுக்குக் கண்டராதித்தன் நிதானமாகவே விளக்கமுரைத்தான்.
“கல்லில் உயிரூட்டித் துள்ள வைக்கும் சிற்பி அவன் ! அவன் இளம் வயதினன்தான் ! ஆனால், அவனது கலையில் பண்பின் முதிர்ச்சி இருக்கிறது. கருங்கல் பாறையிலே மென்மையான மலர்களைக்கூடச் செதுக்கிவிடுகிறான். உளியைக் கையில் எடுத்து, ஒரு பாறையின் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு வேலையைத் தொடங்கினான் என்றால், சிறிதுநேரத்திற்கெல்லாம் அந்தப் பாறையில் பாவையொருத்தி சிரிக்கிறாள் ; பழம் கொத்தும் கிளியைக் காட்டுகிறான் ; பண் இசைக்கும் ஆயன - மாயன ஆனவரையும் நம் எதிரே நிறுத்துகிறான்.”
“யார் அவன் ? பெயர் ?”
“மாமல்லபுரத்திலிருந்து வந்திருக்கிறான். அவன் பெயர் இனியன்.”
“அவ்வளவு ஆற்றல் படைத்தவன் தாண்டவச் சிற்பங்களை அமைக்கத் தாமதம் செய்வது ஏன் என்பதுதான் என் கேள்வி !”
“அதைத்தான் சொல்ல வருகிறேன் ; தாண்டவச் சிற்பங்களை அவன் ஆக்குவதற்கு உதவியாக, நடனக் கலையை முறையோடு பயின்று, நல்ல தேர்ச்சிபெற்ற பெண்ணொருத்தி அவன் எதிரே நின்று, தேவைப்படும் போதெல்லாம் தாண்டவ நிலைக்கு ஏற்றவாறு<!-- source: scan 37; printed page: 34 --> பாவம் பிடித்துக் காட்ட வேண்டும். அப்போதுதான் கற்றறிந்த தாண்டவ நிலைச் சிற்பங்களைச் செதுக்க முடியும் என்று முடிவாகக் கூறிவிட்டான்.”
“ஓ ! இயற்கையைக் கலையில் வடிக்கும் உண்மைக் கலைஞன் போலும் ! அவன் கோரியபடி ஏற்பாடு செய்திருக்கலாமே ! ஏன் தாமதம் ?”
“தேர்ச்சி பெற்ற நடனப் பெண்கள் யாரும் கிடைக்கவில்லை.”
“என்ன ஆச்சரியம் ? நானூறு தேவமாதர்களுக்குத் தலைக்கு ஒரு வேலி நிலம் நிபந்தம் கொடுத்து நியமித்திருக்கிறேன். அவர்களில் ஆடத் தெரிந்தவர்கள் யாருமே இல்லையா ?”
“நூறு நடன மாதர்கள் அந்தச் சிற்பிக்கு முன் ஆடிக்காட்டிவிட்டார்கள்.”
“நூறு பெண்களில் ஒருத்திகூடத் தேறவில்லையா ?”
“நக்கன் ராசராச கேசரி, நக்கன் சோழகுல சுந்தரி போன்ற ஆடற்கலையரசிகள் எல்லாரும் தங்கள் திறமை முழுதும் காட்டி ஆடிவிட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குற்றம் கூறிப் புறக்கணித்துவிடுகிறான். அவன் தீர்ப்பும் சரியானதாகத் தோன்றுகிறது.”
“அப்படியா ?”
“ஆம் ! அகோர தாண்டவத்தை அழகாக ஆடிக் காட்டியவள் ஆனந்தத் தாண்டவத்தில் தவறு செய்கிறாள். அற்புதத் தாண்டவத்தை ஆடிக்காட்டிப் பாராட்டைப் பெற்றவள் திரிபுர தாண்டவத்தின் தீ மிதிப்பது போல ஆடித் தீர்த்துவிடுகிறாள். இப்படியே அவர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டார்கள்.”
“சோழப் பேரரசில் கலையின் உயிர் போய்விட்டது. அது தானே கண்டராதித்தா இதற்குப் பொருள்? கலை வளர்த்த பூமி சோழபூமி என்ற பெருமை நிலைக்கும் என்று எண்ணிக்கிடந்தேன். எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது. கலிங்கம் வென்றேன், ஈழம் வென்றேன் என்றெல்லாம் வருங்காலம் என்னைப் புகழும்போது, என்னுடைய ஆட்சியில் என்னுடைய ஓர் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தோற்றுப்போனேன் என்று அவச் சொல்லும் சேர்ந்து தானே ஒலிக்கப்போகிறது? கலை வளர்ச்சிக்காகச் செலவிடப்படும் பொருட் குவியல் என்ன ஆயிற்று? முறையாகக் கலையைப் பயிற்றுவிக்கும் கலைக்கூடங்களின் தலையில் பேரிடியா விழுந்துவிட்டது ? அவமானம் ! அவமானம் !! மேலைக் கடற்கரையோரத்து மன்னர்கள் என் கப்பற்படை கலக்கியிருக்கிறது. சோழ நாட்டில் கலை கருகியது என்ற செய்தி இப்போது என்னைக் கலக்குகிறது. மகேந்திர மலையில் நான் நிலை நாட்டிய வெற்றித்தூண் ! ‘அவையெல்லாம் வீண்’ என்று இப்போது எனக்குச் சொல்லாமல் சொல்கிறார்கள், தஞ்சையில் கலை அழிந்தது என்ற தணல் நிகர் செய்தியின் மூலம் !” எதிர்காலத்தில் நமது பேரரசின் பரப்பளவா மிச்சம் இருக்கப்போகிறது ? இருந்தால்தான் என்ன ? அதைப் பார்த்து எனது வீரத்தை மதிப்பிடலாம். ‘கலையுள்ளம் இல்லாத காட்டுமிராண்டியின் போக்கிற்கு வீரமென்று பெயர் ? வெறிக்கூத்தல்லவா ?’ - என்று எதிர்காலம் கேள்வி கேட்குமே ! அதற்குப் பதில் சொல்லுவது யார்? தஞ்சைக் கோயிலில் இருக்கும் என் சிலையா ? வேண்டாம் ! வேண்டாம் ! அந்தச் சிலையை அவமானப்படுத்த வேண்டாம் ! இப்போதே அதனை உடைத்தெறிந்துவிட உத்தரவிடுகிறேன் !”
இராசராசனின் ஆவேசமும் சோகமும் கலந்த உரைகளைக் கேட்டு, அனைவரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். குந்தவையார் கண்களில் நீர் தளும்பிற்று. கண்டராதித்தன் மெளனமாக வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். பஞ்சவன்மாதேவி தன் கணவன் இராசேந்திரனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
இராசேந்திரன் தந்தையின் ஆத்திரத்தைத் தணிக்கும் எண்ணத்துடன் தழுதழுத்த குரலில் அவனது கால்களில் தனது முகத்தை புதைத்தவாறு, “தந்தையே ! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். தாங்கள் ஆணையிட்டு நாங்கள் அதை நிறைவேற்றாமல் விட்டிருக்கிறோமா? நூற்றெட்டு நிலையுள்ள நடனச் சிற்பங்களை அந்தச் சிற்பி இனியன்விட்டே செதுக்கச் செய்கிற பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். தாங்கள் கவலையை விடுக !” என்று உறுதியாகக் கூறினான். இராசராசனும் மகனின் உறுதி கேட்டுச் சிறிது அமைதி பெற்றான்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒருநாள் மாலை, கோயில் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் எல்லாரும் தங்களுடைய அன்றைய வேலையை முடித்துவிட்டு, உணவருந்தவும் ஓய்வு பெறவும் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள். மாமல்லபுரத்திலிருந்து வந்துள்ள சிற்பி இனியன் மட்டும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்த பெரிய நந்திச் சிலையின் அருகே அமர்ந்து ஆகாயத்தை நோக்கிச் சிந்தனையை ஓடவிட்டுக் கொண்டிருந்தான். வந்து நாட்கள் பலவாகியும் தனக்குரிய சிற்ப வேலையைத் தொடங்குவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லையே என்ற கவலை அவன் முகத்தில் படர்ந்திருந்தது என்று யாரும் யூகித்துவிடலாம். தன்னை அழைத்திருக்கிற அரசனே சோழப் பேரரசின் இணையற்ற சக்கரவர்த்தி இராசராசன். அவன் பெயர் கேட்டுப் பகைவர் நாடுகள் ஊமையாய் ஆமையாய் அடங்கிக் கிடக்கின்றன. அப்பேர்ப்பட்ட மாவீரன் அழைத்திருக்கிறான். அவன் இட்டிருக்கிற பணியோ மிகப் பெருமை வாய்ந்தது. அதனைச் செய்து முடித்துவிட்டால் இராசராசனின் பெயரோடு சிற்பி இனியனின் பெயரும் சேர்ந்து ஒலிக்கும், கலை உலகத்தில் ! ஆனால் அந்தப் பேறு விரைவில் கிட்டாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே<!-- source: scan 39; printed page: 36 --> போகிறது. அதை நினைத்து ஏங்கிக்கொண்டிருந்த இனியனின் காதில் “தம்பீ!” என்று யாரோ அழைக்கும் ஒலி கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கிழவி அழகி அவனருகே வந்தாள். அவளைப் பார்த்த இனியனின் கண்கள் அவளுக்குப் பின்னால் நின்ற அழகிய பெண்மீது பாய்ந்தன.
தங்கமேனி.
தாமரை முகம்.
நீலக் குறுநயனம்.
கோலச் செவ்வாய்.
வில்போல் புருவம்.
விம்மிய மார்பகம்.
ஆலிலை வயிறு.
நூலிழை இடை.
இத்தனை அழகையும் இனியன் ஒரே பார்வையில் மொண்டு விட்டான். அது சிற்பியின் கலைக் கண்ணோட்டமே தவிரச் சித்தம் பேதலித்தவனின் காம வெறியாட்டமல்ல!
“பாட்டி! என்ன வேண்டும்? யார் இந்தப் பெண்?”
“தம்பீ! இவள் என் மகள்! உறையூரிலிருந்து நேற்றுத்தான் வந்தாள். உன்னைப் பார்க்கத்தான் அழைத்து வந்தேன்.”
இனியன் அவளை மீண்டும் கவனமாகப் பார்த்தான். அழகே உருவாக நிற்கும் அவளுக்கு அந்தச் சாதாரண ஆடைகள் மேலும் பொலிவை அள்ளிப் பொழிந்ததை அவனால் ரசிக்க முடிந்தது.
“உன் பெயர் என்னம்மா?”
சிற்பியின் கம்பீரமும் கனிவும் குழைந்த கேள்விக்கு அவள் அளித்த பதிலில் இனிமை தவழ்ந்தது.
“என் பெயர் சாமுண்டி!”
கிழவி, இனியனிடம் தான் வந்த காரியத்தை எடுத்துரைக்க விரும்பினாள்.
“தம்பீ! இந்த இராசராசேச்சரத்தை வெற்றிகரமாகக் கட்டி முடிக்க என்னால் இயன்ற உதவிகளை யெல்லாம் செய்வ தென்று முடிவுகட்டிக் கொண்டிருக்கிறேன். அது ஒன்றுதான் என் வாழ்க்கையின் கடைசி இலட்சியமாகும். அரசர் பெருமான் விரும்பியவாறு நடனச் சிற்பங்கள் இன்னும் செதுக்கப்படாததால் ஆலயத் திருப்பணி முடிவடைந்தும் அவருக்கு மன நிறைவு ஏற்பட்ட வில்லையென்று கேள்விப்பட்டேன். நீ செதுக்க வேண்டிய சிற்பங்களுக்குத் தேவையான நாட்டியமாடப் பெண்கள் கிடைக்காமல் வேலை தயங்கிக் கிடக்கிறதாமே? அதற்காகத்தான் என்மகள் சாமுண்டியை அழைத்து வந்திருக்கிறேன். இவள் நாட்டியக் கலையை முறையாகப் பயின்றவள். உன் சிற்பங்களுக்கு ஏற்றவாறு ஆடிக் காட்டுவாள். இவள் உதவியை நீ பெற்று அரசர்<!-- source: scan 40; printed page: 37 --> பெருமானின் ஆசையை விரைவில் நிறைவேற்ற முடியுமா - என்று சொல்லு!”
இனியன் ஆச்சரியத்துடன் கிழவியையும் சாமுண்டியையும் மாறி மாறிப் பார்த்தான்.
“நான் முதலிலேயே நினைத்தேன்—உடலமைப்பு நடனத்திற் கென்றே அமைந்ததுபோல் இருக்கிறதென்று! எங்கே சாமுண்டி, நான் கேட்கும் சில தாண்டவ நிலைகளின் பாவத்தைப் பிடித்துக் காட்டு, பார்ப்போம்!”
—என்று குளிர் மொழிகள் வாரியிறைத்தான் இனியன்.
ஆடற்கலையில் மிக்க வல்லவர்களாகவும், அதற்கெனக் கலைக்கூடங்களில் பயின்றவர்களாகவும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் தோல்வியுற்றுத் திரும்பிய ஒரு போட்டிக்குச் சாதாரண ஒரு பெண் - ஆடுங்கலை தெரியாத குடும்பத்தில் பிறந்தவள் - ஆடு வளர்க்கும் கலை மட்டுமே பயின்ற அழகியின் திருமகள் - தைரியமாக வந்து நிற்பது கண்டு அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் சிற்பப் பணி முடிவடைந்துவிடும் என்ற ஆர்வமும் தோன்றிற்று. அந்த மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் வெற்றிகொள்ளும் வகையில் ஐயப்பாடும் எழுந்தது. ‘அவள் திறமையுள்ளவள்தானா? தனக்கு உதவியாக இருப்பாளா? தன் கலைத் தொண்டினை வெற்றிபெறச் செய்வாளா?’ இந்த வினாக்குறிகளின் கலமாயிற்று இனியனின் நெஞ்சம்.
சாமுண்டி பூமியைத் தொட்டு வணங்கி, ஆசான் வணக்கம் தெரிவித்துவிட்டு, அந்தச் சிற்பியின் முன்னால் வந்து நின்றுகொண்டு அவன் வாயசைவுக்குக் காத்திருந்தாள். சிற்பி இனியன் அவளைச் சோதித்துத் தேர்ந்தெடுக்கும் முறை எப்படியென்பதைக் கிழவியும் ஆவலுடன் எதிர்பார்த்தவாறு அங்குள்ள ஒரு படியின் மீது உட்கார்ந்துகொண்டாள். மகள் சாமுண்டி வெற்றிபெறுவாள் என்ற நம்பிக்கை அந்தக் கிழவியின் முகத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது.
ஊர்த்துவ தாண்டவத்தின் நிலைகளைக் குறிப்பிட்டு பாவங்களைக் காட்டுமாறு முதலில் கூறினான். சாமுண்டி அவன் விரும்பிய பாவங்களையெல்லாம் துரிதமாகவும் மிகத் துல்லியமாகவும் பிடித்துக்காட்டினாள். அடுத்து ஆச்சரிய தாண்டவம்! அகலத் திறந்துகொண்ட அவள் விழிகளிலிருந்துபொழிந்த வண்ணமிருந்த வியப்பே வியப்பு!
வெள்ளிமலை ஒன்றின் நடுவில் கரு வண்டு சூழ்வதே போல் அவள் கரு விழிகள் சுழன்ற காட்சி கண்டு இனியன் அயர்ந்து போனான்.
அகோர தாண்டவத்தின்போது அந்த மலர் முகம் எப்படித் தான் நெருப்பாக மாறியதோ தெரியவில்லை! ஆனந்தத் தாண்டவம் என்றான். நெருப்பு முகம் நிலவாகச் சிரித்தது! நெளியும் கைவிரல்கள் பார்ப்பவர் நெஞ்சில் புதுத் துணர்ச்சி பாய்ச்சின! நெஞ்சத்து விம்மல், கலையழகின் உச்சத்தை உணர்த்தியது!
அனவரதத் தாண்டவத்தின் பாவமும், அற்புதத் தாண்டவத்தின் நேர்த்தியும், இனியன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. தன் முயற்சி வெற்றிபெறும் என்ற பூரண நம்பிக்கையில் பூரிப்படைந்தான். திரிபுரம், புஜங்கம் ஆகிய தாண்டவங்களுக்குரிய பாவங்களை அவள் ஆடிக்காட்டி இனியனின் மனமார்ந்த பாராட்டுரைகளைப் பெற்றாள்.
சங்கார தாண்டவத்தின் பாவ உணர்ச்சியை அவள் காட்டும்போது, கொடுவாள் கொண்டு நிற்கும் மாவீரனும் நடுங்கிவிடக் கூடும்.
பிரளய தாண்டவத்திற்குரிய சில நிலைகளைக் காட்டும்போது கலைவயப்பட்ட இளைஞனும் சிற்பி இனியனின் கண்கள் நீர்த்திவலை நிறைந்து மின்னிக்கொண்டிருந்தன. அவள் கைகள் அசைந்தன; அதில் கடல் கொந்தளித்தது! உடல் குலுங்கி ஆடிற்று; அதில் மலைகள் நடுங்கின! இடை துவண்டது; அதில் நதிகள் திசை மாறிப் போயின! விழிகள் உருட்டின; அதில் எரிமலை பொங்கியெழுந்தது! கோபச் சிரிப்பு; அங்கே மின்னல்கள் கோடி கோடி! பூமி அதிர்ந்தது போல் - பூகம்பம் வந்தது போல் - புயலும் தீயும் தோழமை கொண்டு தாவியது போல் - அவள் ஆடிக் காட்டிய பிரளய நடனத்து நிலைகள் கண்டு இனியன் மெய்ம்மறந்து போனான். அழகிக் கிழவி ஓடிப்போய்த் தன் மகளைக் கட்டித் தழுவிக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டாள்.
தன்னை மறந்து நின்றுகொண்டிருந்த இனியன், மெல்ல நினைவு வரப் பெற்றவனைப்போல் நாவை நனைத்துத் தயார்படுத்திக் கொண்டு, “சாமுண்டி! கலையுலகின் தலைமைப் பீடத்தை அலங்கரிக்க வேண்டிய தெய்வம் நீ! அழகிப் பாட்டி செய்த பாக்கியம் கலைமகள் அவள் வயிற்றில் உதித்திருக்கிறாள் என்றுதான் கூற வேண்டும். பாட்டி மிகுந்த புண்ணியம் செய்தவள். அதனால் தான் அவள் அளித்த தளக்கல் இவ்வளவு புகழ் வாய்ந்த கோபுரத்து விமானத்தின் உச்சியில் ஏறிக்கொண்டது. அவள் வயிற்றில் பிறந்த உன் கலைச் செல்வமும் கோயிலின் மேல்தளத்தின் உட்பாகத்து அடிவரிசையில் பாதுகாக்கப்படப் போகிறது. சாமுண்டி! ஆண்டவனே வந்து இந்தத் தாண்டவங்களை ஆடிக் காட்டியிருந்தாலும் உன்னை ஜெயித்திருக்க முடியாது என்பதே என் திடமான அபிப்பிராயம்.” என்றவாறு வர்ணிக்கத் தொடங்கிய இனியனை இடைமறித்துக் கிழவி, “அப்படியானால் தம்பீ, நாளை முதல் சாமுண்டியை இங்கு வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டாள். “கேட்க வேண்டுமா என்ன? அவளால் கலை பிழைக்கப் போகிறது! அவளால் கலை வாழப் போகிறது! அவளால் கலை வளமுறப் போகிறது!” என்று பேரானந்தத்தில் பிதற்றத் தொடங்கினான் அந்த வாலிபச் சிற்பி.
மறுநாள் சாமுண்டி, இனியன் குறித்த நேரத்திற்கு வந்து சேர்ந்தாள். சிற்ப வேலை தொடங்கிற்று! தேவையான அபிநய பாவங்களை அவன் விரும்பியபோதெல்லாம் பிடித்துக் காட்டி, முதல் சிற்பத்தை எழிலோடு வடிப்பதற்குத் துணை நின்றாள். ஒரு நாளைக்கு ஒரு சிற்பச் சிலை வடித்துவிடலாம் என்ற நம்பிக்கையைச் சாமுண்டிக்குத் தெரிவித்து அவளை முதல் நாள் வழியனுப்பி வைத்தான்.
அடுத்த நாளும் அவர்கள் எண்ணியவாறு சிலை முடிந்தது. அடுத்தடுத்து ஐம்பது நாட்கள் உருண்டு விட்டன. ஒவ்வொரு நாளும் சாமுண்டி வரும்போது “வா!” என்று வரவேற்பான். இடையிடையே தேவையான பாவ நிலைகளைக் குறிப்பிடுவான். மாலையில் “போய் வா!” என விடையளிப்பான். இதைத்தவிர மற்ற நேரமெல்லாம் மெளனம் தான்! கலையுணர்வுதான் அவனை ஆட்சி செலுத்தி வந்தது.
அந்தச் சிற்புப்பணி நடைபெறுகிற இடத்திற்கு வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இனியன் - சாமுண்டி இருவரைத் தவிர வேறு யாரும் அங்கிருப்பதுமில்லை. எப்போதாவது அழகிக் கிழவி வருவாள். மகளின் திறமையை வியந்து முத்தமளித்து மகிழ்வாள். இனியனின் கலைத்திறன் பற்றி புகழ்வாள். “ஆண்டவனைக் காட்டிலும் சாமுண்டி அழகாக ஆடுகிறாள்; உண்மைதான்! ஆனால், அவளைக் காட்டிலும் அழகான சிற்பங்களை யல்லவா நீ படைத்திருக்கிறாய்?” என்று அவளைத் தழுவி உச்சி மோந்து வாழ்த்திக் கூறுவாள். பின்னர் போய்விடுவாள்.
ஐம்பது நாட்களுக்குப் பிறகு ஒரு நாள், இனியன் கல்லை மிக நுட்பமாகச் செதுக்கிக்கொண்டிருக்கும்போது, அவன் விரல் நுனியில் உளி பட்டுவிட்டது. நல்ல வாலிபப் பருவமல்லவா? இரத்தம் குபுகுபு எனக் கொட்டியது. சாமுண்டி பரபரப்படைந்தாள். உடனே தன் சேலைத் தலைப்பைக் கிழித்து அவன் விரலில் சுற்றிவிட்டாள். அதன் காரணமாக இரண்டுநாள் வேலை தடைப்பட்டது. சாமுண்டி, கோயில் பக்கம் வரவில்லை. அவளைக் காணாது இனியனுக்கு ஏதோ ஓர் ஏக்கத்தை ஏற்பட்டது. அந்த ஏக்கம் எதனால் எழுந்தது? இத்தனை நாளாகத் தோன்றாத ஏதோ ஓர் உணர்வு இன்று எங்கிருந்து முளைத்தது? அப்படியானால் அவளைப் பற்றித் தவறான எண்ணம் தன் நெஞ்சின் அடித்தளத்தில் படிந்து கிடந்ததா? அந்த எண்ணம் அவளைக் காணவில்லையென்றதும் சிறகு<!-- source: scan 43; printed page: 40 --> முளைத்துக் கிளம்பிவிட்டதா? இவ்வளவு நாளும் அவளைக் கலைக் கண் கொண்டுதானே ரசித்து வந்தான் அந்தச் சிற்பி! இப்போது மட்டும் அவன் கண்களுக்குப் புதுப் பசியை உண்டாக்கியது யார்? வேறு யாருமில்லை! அவளேதான்! சாமுண்டியேதான்! அவள் பார்வையில் தனி அர்த்தம் இருந்ததா? இல்லை; இதுவரையில் அவன் கவனிக்கவில்லை! அவள் அழகைக் கண்டு அவன் வியந்திருக்கிறானே தவிர, மயங்கியது கிடையாது. இப்போது ஏதோ எழில் நினைத்து உருகிக்கொண்டிருக்கிறான். அவள் ஆடிக் காட்டிய ஒவ்வொரு நிலையிலும் கலாதேவியின் செளந்தர்யத்தைத்தான் அவன் பார்த்துப் பரவசமுற்றிருந்தான். இப்போது அந்த அபிநயங்களின்போது அசைந்த அவள் அழகுத் திருமேனியின் ஒவ்வொரு அங்கமும் அவன் நெஞ்சத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி அவனைச் சித்திரவதை செய்துகொண்டிருக்கிறது.
ஒருவேளை அவளைக் காணாத காரணத்தால் ஏற்பட்ட தடுமாற்றமாக இருக்கக் கூடுமா? அங்ஙனமானாலும் அந்தத் தடுமாற்றத்தின் அடிப்படையில் ஏதோ ஓர் உணர்ச்சி தீண்டாக்குவானேன்? அந்த உணர்ச்சிக்கு நிச்சயமாகக் கலைமெருகு கொடுத்து மூடி மறைக்க அவன் தயாராக இல்லை.
இப்படி இரண்டொரு நாட்கள் அவனைப் பித்தனாக அலைய விட்ட சாமுண்டி, அவன் சிற்ப மண்டபத்தை நாடி வழக்கம்போல் வந்து சேர்ந்தாள். அவனும் வழக்கம் போலத்தான் “வா” என்று அழைத்தான். ஆனால் அவன் குரல் நடுங்கிற்று. அதை அவள் உணர்ந்தாள். அவன் கவனிக்கவில்லை. “விரலில் பட்ட காயம் எப்படியிருக்கிறது?” என்று கேட்டாள். “மருந்து எதுவும் போடவில்லை; உன் சேலைத் தலைப்பு பட்ட பிறகும் காயம் ஆறாமல் இருக்குமா?” என்று படபடவென்று கேட்டு முடித்துவிட்டான். அந்தப் பதைப்பு அடங்கச் சிறிது நேரமாயிற்று, அவனுக்கு! அவள் அவனை மிரட்டுகிற பாவனையில் பார்த்தாள். இனியன் சமாளித்துக் கொண்டு, “ம்! இதுதான் இன்றையச் சிற்பத்துக்குத் தேவையான பாவம்!” —என்று கூறியவாறு உளியைக் கையில் எடுத்துக் கல்லில் செதுக்கத் தொடங்கினான். அன்று வழக்கத்திற்கு மாறாக மாலைப் பொழுதுக்குப் பிறகும் சிற்ப வேலை முடியவில்லை. கொஞ்சந் தான் இருக்கிறது; முடித்துவிடலாம் என்று கூறித் தீப்பந்தங்களின் உதவியோடு அவன் வேலையில் கவனம் செலுத்தினான். அன்று வேலை வேகமாக ஓடாத காரணம் அவனுக்குத்தான் தெரியும்! சாமுண்டிக்குப் புரியவில்லை. சிற்பச் சிலையின் மீது ஒரு கண்ணும், சாமுண்டியின் மீது ஒரு கண்ணுமல்லவா அன்று இனியனுக்கு இருந்தது! தீப்பந்த வெளிச்சத்தில் சாமுண்டியின் தங்கமேனி மேலும் தகதகாயமாய்த் தோன்றுவதை அவன் அன்றையதினம்<!-- source: scan 44; printed page: 41 --> சுவைத்துக்கொண்டே ஒருவாறு அன்றையப்பணியை முடித்தான். “சிலை மிக அழகாயிருக்கிறது!” என்று சாமுண்டி பாராட்டிவிட்டுத் தான் போனாள். ஆனால் அவனுக்கு என்னவோ அவ்வளவு திருப்தியில்லை.
இப்படியே சில நாட்கள் நகர்ந்தன. சாமுண்டியின் உள்ளத்திலும் இனியனைப் பற்றிய குழப்பம் எழுந்திருக்கிறது என்பதற்கு அறிகுறிகள் அவள் முகத்தில் தோன்றியவண்ணம் இருந்தன.
அன்று எண்பத்தொன்றாவது சிற்பத்திற்கான அபிநயத்தைச் சாமுண்டியிடம் அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.
“இறைவன் நான்கு புஜங்களுடன் மானுடவும் மழுவாடவும் யக்ஞோபவீதத்துடன் ஆடும் தாண்டவத்திற்கான பாவ நிலைகளை ஆடிக்காட்டு!” - என அவன் கூறியதும் அவளும் அந்த பாவத்தை அவனுக்குப் பகுதி பகுதியாகப் பிரித்து அங்கங்களின் அசைவுகளைக் கூடத் தனித் தனியாக விளக்கிக் காட்டும் தோரணையில் ஆடிக் காட்டினாள்.
“இந்தக் கையை கொஞ்சம் உயரத் தூக்கி நின்றால் இன்னும் அழகாயிருக்குமல்லவா?” - என்று கேட்டபடி அவன் சாமுண்டியின் கரத்தைத் தொட்டு அதை உயரத் தூக்கப் போனான்.
அவளோ சட்டென்று அவனை விட்டு நகர்ந்துகொண்டாள். அவள் கன்னம் சிவந்திடும்—நாணம் பொங்கிடும்—தலை குனிந்திருப்பாள் - என்றெல்லாம் எதிர்பார்த்த இனியன் ஏமாந்து விட்டான்.
அவளோ, அப்படியொரு நிகழ்ச்சி நடக்காதது போலத் தொடர்ந்து தன்னுடைய கலைப் பணியைத் தொடங்கினாள். இனியன் முகத்தில் அசடு வழிந்தது.
அவள் தன்னை விரும்பவில்லையா? “இனியன், எழிலன் என்று ஊர் முழுதும் பேசுவார்களே! என்னுடைய உடற்கட்டையும், உறுதியான தோள்களையும் பார்ப்பவர்கள் நீ ராஜ வம்சத்தில் பிறந்திருக்க வேண்டியவன் என்று பாராட்டுவார்களே! அப்படிப்பட்ட என்னை இந்தச் சாமுண்டிக்கு மட்டும் பிடிக்கவில்லையா?” என்றவாறு கேள்விகள் அவன் இதயத்தைச் சல்லடைக் கண்களாக்கிக்கொண்டிருந்தன. அத்துடன் அன்றைய வேலையும் தங்கு தடையின்றி நடைபெற்றது. பயத்திலும் பரபரப்பிலும் அவன் வேலையில் தீவிரங்காட்டி மாலைப் பொழுதுக்குள்ளாகவே அந்தச் சிலையை முடித்துவிட்டு, “நாளைக்கு எண்பத்திரண்டாவது சிலை” என்று அவளிடம் கூறினான்.
அன்றையச் சிலையின் அழகைச் சாமுண்டி வெகுவாக விமர்சித்தாள். “நான் ஆடிக் காட்டிய பாவங்களைத் தங்கள் உளியின் வலிமையால் படைத்து விட்டீர்கள்!” என்று அவள் புன்னகை<!-- source: scan 45; printed page: 42 --> பொங்கக் கூறியபோது, அதன் இதயம் குளிர் தாமரைக் குளம் போல ஆயிற்று. அவள் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள். அவள் பின்னழகைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்கள் இமைக்க மறந்தன. அவன் செதுக்கியிருந்த எண்பத்தொரு சிற்பங்களையும் பார்த்தான். சிற்பங்கள் திடீரென மறைந்து விட்டன. எண்பத்தொரு சாமுண்டிகள் அங்கே ஆடிக்கொண்டிருந்தார்கள். அந்த ஆட்டத்திலே அவன் லயித்துக் கிடந்தான். கலை நினைவோடு உருவாக்கப்பட்ட அந்தச் சிலைகள் சாமுண்டியின் உருவில் அவன் உள்ளத்தில் காதல் தீயை மூட்டிவிட்டுத் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. அந்தப் பெரு நெருப்பின் ஜ்வாலையை அவனால் தாங்கத்தான் முடியவில்லை. தனக்குத்தானே அறிவுரை கூறிக்கொண்டான். பால்பானையை உருட்ட வந்த பூனையை எத்தனை முறை விரட்டினாலும் அது ஓடி ஓடிப் பின்னர் பதுங்கிப் பதுங்கிப் பால்பானையைத்தான் வட்டமிடும். அது போலாயிற்று அவன் உள்ளத்தில் கொப்புளித்துக் கிளம்பிய காதல் மகா சக்தி!
மறுநாள் எண்பத்திரண்டாவது சிற்பத்தைச் செதுக்க அவனும் தயாராக இருந்தான். அவளும் வந்து சேர்ந்தாள். அவன் அவளைப் பார்வையாலே வரவேற்றான்.
“வா” என்று கூற நா எழவில்லை.
“இன்று எண்பத்திரண்டல்லவா?” - அவள்!
“ஆமாம்!” - அவன்!
“இன்னும் இருபத்தேழு இருக்கிறதே!” - அவள்!
“ஏன் உனக்குக் கஷ்டமாயிருக்கிறதா? கலை கூடவா தெவிட்டி விட்டது?”
“இல்ல! இல்ல! இன்னும் எத்தனை இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தேன். அவ்வளவுதான்!”
“நான் நினைக்கிறேன், இன்னும் நூறு சிற்பங்கள் பாக்கி இருக்கக்கூடாதா? அத்தனை நாளும் சாமுண்டியின் கலையழகை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு ஏற்படக்கூடாதா என்று!”
“நான் நினைக்கிறேன், அரசர்க்கு அரசர் நூற்றெட்டு சிற்பங்கள் ஏன் செதுக்கச் சொன்னார்? எண்பத்து இரண்டுதான் என்று கூறியிருக்கக்கூடாதா என்று!”
“கேலி செய்கிறாயா சாமுண்டி?”
“இல்ல! இல்ல ...ம், வேலையைப் பார்ப்போம். வீண் பேச்சு எதற்காக?”
சாமுண்டி நடன நிலைக்கான பாவங்களைக் காட்டத் தயாராகி நின்றாள். இனியனும் உளியை எடுத்துக்கொண்டு கல்லினருகே சென்றான். அவனுக்கு உளி பிடிக்கக்கூடச் சக்தியில்லாதது போல் ஓர் உணர்வு! மயக்கம்!
“செளந்தர்ய தாண்டவம்!” என்றான் தழுதழுத்த குரலில்! அவன் நா ஒட்டிக்கொண்டது. அவள் ஆடத் தொடங்கினாள்.
அவளே செளந்தர்யச் சுரங்கம்! அதிலே செளந்தர்ய தாண்டவம் ஆடச் சொன்னால் எப்படியிருக்கும்? அவன் தலை கிறுகிறுத்தது. இராசராசேச்சரமே தலை கீழாகச் சுற்றுவது போன்ற ஒரு நினைவு! அவனையும் மீறி அவன் கையிலிருந்த உளி, கலைப்பணியில் ஈடுபட்டிருந்தது. அவன் பூமியில் ஆடவில்லை. அவனது மென்மையான இதயத்தில் ஆடினாள்; அவன் விழி மணிகளில் ஆடினாள்; அவன் நரம்பு, நாளங்களில் ஆடினாள்; இரத்தத்துளிகளில் ஒவ்வொன்றிலும் ஆடினாள். ஆடினாள்; ஆடினாள்; ஆடிக் கொண்டேயிருந்தாள்! அவள் பட்டுப் பாதங்கள் அவன் தலையில் பட்டு ஆடுவது போல் நினைத்தான். அவள் மாணிக்கக் கரங்கள் அவன் மார்பகத்தைத் தழுவுவது போல் உணர்ந்தான். அவள் விழிகள் அவன் விழிகளை விழுங்குவது போல் கற்பனை செய்தான். அவள் இதழ்கள், அவன் இதழ்களை..... அய்யோ! அதற்குள் கருங்கல் செதில் ஒன்று அவன் கண்ணில் தெறித்துக் குத்திக் கொண்டது; அவன் உளியைக் கீழே எறிந்துவிட்டு “அம்மா!” என்று கதறிவிட்டான்.
அவள் பதறிப்போனாள். அவனைத் தாங்கிப் பிடித்து விழாமல் நிறுத்தினாள். அவளது அழகிய கரங்களால் அவன் முகத்தை நிமிர்த்திக் கண்ணில் விழுந்த கருங்கல் செதிலைக் காந்தள் விரலால் மிக லாவகமாக எடுத்தெறிந்தாள். அவ்வளவுதான்! ஒரு திடீர் மின்னல்! அவன் அவளைப் பலங்கொண்டமட்டும் சேர்த்துப் பிடித்துத் தழுவிக்கொண்டான்! மின்னலைத் தொடர்ந்து பேரிடி! பெரும் புயல்! பிரளயத் தாண்டவத்தின் பிரதிபலிப்பு! சாமுண்டி அவனைப் பிடித்துக் கீழே வேகமாகத் தள்ளிவிட்டாள். அவன் அலறிக்கொண்டு தரையில் மோதி விழுந்தான். விழுந்தவன் சிறிது நேரம் எழவேயில்லை. அவன் கண்கள் சுழன்றன; சிற்ப மண்டபமே சுழன்றது; அவன் செதுக்கிய எண்பத்தொரு சிலைகளும் சுழன்று ஆடின!
மானழியது! பிறகு அது மிரண்டோடியது! மான் புலியாக மாறிப் பாய்ந்தாடியது! இறைவன் கழுத்தில் அணிந்திருந்ததாகச் செதுக்கப்பட்ட பாம்புகள் ஆயிரமாயிரம் படமெடுத்தாடின! இறைவன் கைநெருப்பு பல திக்கிலும் சூழ்ந்தாடியது! இனியன் சுழலும் கண்களை நிலைநிறுத்தி எழுந்திடப் பார்த்தான். முடியவில்லை! அப்போது “தேவி!” என்று ஒரு குரல் கேட்டு சாமுண்டி திரும்பிப்பார்த்தாள். திடுக்கிட்டுப்போனாள். இராசேந்திரன் அவளை நோக்கிப் பரபரப்புடன் வந்துகொண்டிருந்தான்; அவன் பின்னால் இராசராசச் சோழரும் குந்தவையாரும் வந்தனர். சாமுண்டி இராசேந்திரனிடம் ஓடி, “அத்தான்!” என்று தழுவிக்கொண்டு கண்ணீர் வழிய வழிய விம்மி அழத்<!-- source: scan 47; printed page: 44 --> தொடங்கினாள்.
“அத்தான்! போதும் நான் செய்த சிலைத் தொண்டு!!” என்று கதறினாள்.
இராசேந்திரன் அவளை இறுக அணைத்தவாறு ஆறுதல் மொழியில்,
“பஞ்சவன் மாதேவி! கலைத் தொண்டினைப் பழிக்காதே! எவரோ ஒரு சிலருன் செய்த தவற்றுக்காகக் கலையின் மீதே வெறுப்புக் கொள்ளலாமா? பாவம்; இனியன் தெரியாமல் செய்த பிழைதான் இது! அவனை மன்னித்துவிடலாம்!”
இந்த உரையாடல் இனியனைத் தட்டி எழுப்பியது.
அவள் யார்?
பஞ்சவன் மாதேவியா?
அவள் சாமுண்டி இல்லையா?
சாரப்பள்ளம் அழகியின் மகள் இல்லையா?
பஞ்சவன் மாதேவி!
பஞ்சவன் மாதேவி!!
இராசேந்திரன் மனைவி!
இராசராசனின் மருமகள்!!
அய்யோ! என்ன தவறு செய்துவிட்டோம்!!
இனியனுக்கு இப்போது எங்கு நிற்கிறோம் என்றே புரியவில்லை! அவன் செத்துக்கொண்டிருக்கிறான்!! அவனுக்கே தெரியவில்லை!
அழுதுகொண்டிருக்கும் மருமகளிடம் வந்து இராசராசன் “பஞ்சவன் மாதேவி! என்னுடைய சிலை ஆசையை நிறைவேற்று வதற்கு உன் கணவன் இராசேந்திரன் இட்ட கட்டளையை எனக்காக ஏற்றுக்கொண்டு நீ செய்த தியாகத்தை நான் என்றும் மறவேன். உங்களுக்குத் துணையாக இருந்து உதவிய கிழவி அழகியை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை, அவள் உன்னைச் சிற்பக் கூடத்திற்கு அனுப்பியது மட்டுமல்ல; கண்ணுங் கருத்துமாக இருந்து உன்னைப் பாதுகாத்தும் வந்திருக்கிறாள். நேற்றைய தினம் அவள் கொடுத்த செய்திக்குப் பிறகுதான் சிற்பியின் மீது சந்தேகமுற்ற நாங்கள் இன்று இங்கு வந்தோம். உனக்கு நாங்கள் அளித்த தொல்லைக்காக எங்களை மன்னித்துவிடு!” என்று கண்ணீர் பொங்கக் கூறியதும், “சக்கரவர்த்தி! அப்படிச் சொல்லாதீர்கள்!” என்றவாறு அரசரின் காலில் விழுந்து வணங்கினாள் பஞ்சவன்மாதேவி!
“யார் யாரை மன்னிப்பது?” என்று அவள் அரசரைப் பார்த்துத் தேம்பும் குரலில் கேட்டாள்.
“நாம் எல்லாரும் சேர்ந்து சிற்பி இனியனை மன்னித்து விடுவோம்.” என்றவாறு அரசர் அவன் நின்ற பக்கம் திரும்பினார்-<!-- source: scan 48; printed page: 45 -->அனைவரும் இனியன் பக்கம் திரும்பினர். அவன் அங்குக் காணவில்லை.
அவன் ஓடினான்! ஓடினான்! யாரும் அவனைப் பிடித்து மன்னிக்க முடியாத தூரத்துக்கு ஓடியே போய்விட்டான்!
குறிப்பு : “இராசராசன், இறைவனின் 108 தாண்டவ நிலைகளைப் பெரிய கோயில் மேல்தளத்தின் உட்பாகத்து அடிவரிசையில் சிற்பங்களாகச் செதுக்க ஏற்பாடு செய்தான். வேலையும் தொடங்கி நடைபெறுகிறது. ஆனால் எக்காரணம் பற்றியோ 81 சிற்பங்கள் செய்து முடித்து 82-வது ஆரம்பித்து முடிக்காமல் விடப்பட்டிருக்கிறது” என்ற சரித்திரக் குறிப்பை அடிப்படையாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டது.
கலைஞர் மு. கருணாநிதி · சாரப்பள்ளம் சாமுண்டி. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்