அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3520

முரசொலி கடிதங்கள் · 3520

பட்டிதொட்டி எங்கும் பணிகளைத் தொடர்ந்திட; வெற்றி முரசு கொட்டிட விரைந்தெழுவீர்!

நாள் 21.12.2010சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3520. பட்டிதொட்டி எங்கும் பணிகளைத் தொடர்ந்திட; வெற்றி முரசு கொட்டிட விரைந்தெழுவீர்!

உடன்பிறப்பே,

தி.மு. கழக அரசு கடந்த ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்காக ஆற்றிய சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்கள் காரணமாக வரவிருக்கின்ற பொதுத் தேர்தலில் தி.மு. கழகத்தை வெற்றி காண முடியாது என்று தெரிந்து கொண்டுள்ள ஜெயலலிதாவும், அவருடைய ஆதரவாளர்களான ஒருசில பத்திரிகையாளர்களும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினையை பூதாகாரமாக ஆக்கி, அதைச் சொல்லியே தேர்தலில் தி.மு. கழகத்திற்கு சோதனையை ஏற்படுத்தலாமா என்று கனவு காண்கிறார்கள். அந்த வரிசையில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிவருகின்ற ஒரு கிழமை ஏடு, தி.மு. கழகத் தலைவர் மிகவும் சோர்ந்துவிட்டார், உடன்பிறப்புக் கடிதம் எழுதுவதையே நிறுத்தி விட்டார், கேள்வி பதில்களும் எழுதுவதில்லை, ஒரு வார காலமாக எதையும் எழுதவில்லை, கோபித்துக் கொண்டு மாமல்லபுரத்திற்கும், ஏலகிரிக்கும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார் என்றெல்லாம் எழுதி தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்தச் செய்தியும்கூட உண்மையா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. இந்த டிசம்பர் திங்களில் மட்டும் 1-ந்தேதி, 2-ந்தேதி, 4-ந்தேதி, 7-ந்தேதி, 10-ந்தேதி, 12-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி ஆகிய 8 நாட்களில் உடன்பிறப்புக் கடிதமோ அல்லது கேள்வி பதிலோ எழுதியிருக்கிறேன். இடையில் சில நாட்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், அங்கே நான் பேசிய பேச்சோ, அல்லது எனது பேட்டிகளோ, அல்லது அரசு அறிவிப்புகளோ வந்திருக்கும். அரசு நிர்வாகப் பணிகள் காரணமாக ஓரிரு நாட்களில் எனக்கு எழுதுவதற்கு நேரம் இருந்திருக்காது. ஆனால் நான் ஏதோ எழுதுவதையே நிறுத்திவிட்டேன் என்றெல்லாம் கற்பனையாகவே எழுதி மகிழ்கிறார்கள்.

அந்த ஏடு மேலும் ஒருபடி சென்று, மத்திய அமைச்சரவை 2009ஆம் ஆண்டு புதிதாக அமைந்தபோது தொலைத் தொடர்புத்

துறை ராசாவிற்குத்தான் ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிடம் தி.மு.க. தலைமை வலியுறுத்தி பெற்றதாகவும், அதற்கு உள் நோக்கம் என்னவென்றால் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயன்பெற வேண்டும் என்பது தான் என்பதைப் போலவும் எழுதியிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு. கழகம் வெற்றி பெற்று, நான் 19-5-2009 அன்று டெல்லி சென்றிருந்தபோது, “ஜெயா தொலைக்காட்சியின் செய்தியாளர் என்னிடம் கேட்ட கேள்வியே, “ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் ராசாவிற்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டுமென்று கேட்பீர்களா?” என்பது தான். எந்த அளவிற்கு ராசா மீது அ.தி.மு.க. வினருக்கு காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கின்றது என்பது இதிலிருந்தே புரிகிறது அல்லவா?

மத்திய அமைச்சரவையில் தி.மு.க. சேருவது பற்றிப் பேச்சுவார்த்தை நடைபெற்றபோதுகூட, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் என்னைச் சந்தித்து, காங்கிரஸ் கட்சி அமைச்சரவை அமைப்பதில் இந்தமுறை கையாளவிருக்கும் ஒரு “பார்முலா” தெரிவிக்கப்பட்டதே தவிர, யாருக்கு அமைச்சர், யாருக்கு என்ன இலாகா, என்பது பற்றிப் பேசப்படவில்லை. 22-5-2009 அன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம், செய்தியாளர்கள் “தி.மு.க. சார்பில் ஏற்கெனவே மத்திய அமைச்சர்களாக இருந்த டி.ஆர். பாலு மற்றும் ஆ. இராசா ஆகியோரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதில் ஏதாவது கருத்து வேறுபாடு உள்ளதா?” என்று கேட்டதற்கு, “அவ்வாறான கேள்விக்கே இடம் இல்லை, அவர்கள் இருவரும் எங்களின் மதிப்பு மிக்க அமைச்சரவை சகாக்கள். அவர்கள் மீது குறை சொல்லும் கேள்விக்கே இடம் இல்லை” என்றுதான் பதிலளித்தார். மேலும் பிரதமர் அவர்கள், தி.மு.க. வினர் அமைச்சரவையில் சேராமல், வெளியில் இருந்து ஆதரவளிப்போம் என்று சென்னையில் எடுத்துள்ள முடிவை ஓரிரு நாட்களில் மறு பரிசீலனை செய்வார்கள் என்று நாங்கள் இன்னமும் நம்புகிறோம். அவர்களது செயற்குழுவில் விவாதித்த பின்னர் காலம் கடத்தாமல் மீண்டும் தி.மு.க. வினர் மத்திய அமைச்சரவையில் சேர வேண்டுமென்று தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

பிரதமரின் விருப்பத்தின் பேரில் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களோடு கலந்து பேசிவிட்டு, கழகத்தின் சார்பான அமைச்சர்களின் பட்டியலை தெரிவித்ததின் அடிப்படையில், பிரதமர் அவர்கள் 25-5-2009 அன்று மாலையில் என்னோடு சென்னைக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு கழகத்தின் சார்பில் பரிந்துரைத்த பெயர்கள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நானும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். 28-5-2009 அன்று கழகத்தின் சார்பில் தம்பி மு.க. அழகிரி உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராகவும், தம்பி தயாநிதி மாறன் ஜவுளித் துறை அமைச்சராகவும், தம்பி ஆ. இராசா தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் என மூவரும் கேபினட் அமைச்சர்களாகவும், மற்றும் தம்பிகள் பழநி மாணிக்கம், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் முறையே நிதி, சமூக நீதி, தகவல் ஒலிபரப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளின் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.

இவர்களுக்கு துறைகளை ஒதுக்கும்போது கூட, ஆ. இராசா 2009ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த மத்திய அமைச்சரவையிலேயே 18-5-2007 முதலே தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காரணத்தால் அவருக்கு தொடர்ந்து அந்தத் துறை மீண்டும் ஒதுக்கப்பட்டதே தவிர, அதில் திராவிட முன்னேற்றக் கழகம் பிடிவாதமாக இல்லை என்பதையும் யாருக்கும் யாரும் சிபாரிசு செய்திடவில்லை என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

இதிலே ராசாவிற்கு இந்தத் துறை கிடைப்பதற்காக யாரோ ஒருவர் தொலைபேசியிலே பேசினார். அவரிடம் யார் யாரோ பரிந்துரை செய்தார்கள், அதனால்தான் இந்த இலாகா அவருக்குக் கிடைத்தது என்றெல்லாம் ஏடுகள் சில செய்துள்ள விமர்சனங்கள் விஷமத்தனமே தவிர வேறல்ல!

தொலைபேசியில் பேசிய பேச்சினை “டேப்” செய்து, அந்தப் பேச்சு எப்படியோ வெளியே வந்து ஒருசில ஏடுகளில் அதனைப் பெரிதுபடுத்தி வெளியிடுகின்ற காரணத்தாலேயே, அந்த பேச்சுக்கள் எல்லாம் அப்படியே உண்மையாகி விடாது. அதற்கு உதாரணம் கூற வேண்டுமென்றால், என் பேரன் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவி பெற 600 கோடி ரூபாய் என் மனைவி தயாளுவுக்குக் கொடுத்தார் என்று “டேப்”பில் ஒலித்ததாகச்

சொல்லப்படும் ஒரு உரையாடலே போதும்! இதைப்பற்றி நானே இந்தச் செய்தியை உண்மை என்று நம்புபவர்கள் அவர்களின் பெயர்களைப் போட்டு இந்தச் செய்தியை வெளியிட்டால் அவர்களை நான் சட்ட ரீதியாகச் சந்திக்கிறேன் என்றே கூறியிருக்கிறேன்.

ரத்தன் டாட்டா என்ற ஒரு பெரிய தொழிலதிபர் என்னை முதலமைச்சர் என்ற முறையில் சந்தித்தார் என்றால் உடனே அதற்குக் காரணம் ஊழல்தானா? அவர் என்னைச் சந்தித்தபோது, “அவருடைய நிறுவனத்தின் சார்பில் யாருக்கும் கமிஷன் கொடுப்பதில்லை - அதுபோலவே முதலமைச்சர் என்ற முறையில் நீங்களும் அதனை ஆதரிப்பதில்லை என்று நான் கேள்விப் பட்டேன் - அதுவே உங்களைச் சந்திக்க முதல் காரணம்” என்று கூறி விட்டுத்தான் தனது பேச்சையே தொடங்கினார்.

ஸ்பெக்ட்ரம் பிரச்சினையிலே உத்தேசமாக (presumptive) 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று தணிக்கை அதிகாரி தனது அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார் என்றால், அதிலே “இழப்பு” என்ற ஒரு வார்த்தையை மாற்றி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையிலே 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் “ஊழல்” என்ற வார்த்தையை திணித்து - பிறகு அந்த ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தையே லஞ்சமாக வழங்கப்பட்டது என்பதைப்போல ஏடுகள் சில பெரிதுபடுத்துகின்றன!

அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலமாக விற்றிருந்தால், இந்த அளவிற்கு அரசுக்கு வருவாய் வந்திருக்கும், ஆனால் அது தற்போது கடைப்பிடித்த முறையினால் இழப்பாகிவிட்டது என்றுதான் தணிக்கை அறிக்கை கூறுகிறது.

ராசா கடைப்பிடித்த முறை, ஏற்கனவே அந்தத் துறையினால் பின்பற்றப்பட்டு வந்த முறைக்கு மாறானதா? அவருக்கு முன்பு அந்தத் துறையிலே இருந்த அமைச்சர்கள் உகந்தமுறை என்று கருதி என்ன நடை முறையைப் பின்பற்றினார்களோ, அதே முறையைத்தானே ராசாவும் கையாண்டுள்ளார். ராசா தற்போது கையாண்ட முறையினால் அரசுக்கு வருவாய் இழப்பு என்றால், அவருக்கு முன்பு அதே துறையில் கையாளப்பட்ட முறைகளினாலும் அரசுக்கு இழப்புதானே? அந்த அமைச்சர்கள் அப்போது கையாண்ட முறையினால் அரசுக்கு இழப்பு என்பதை இதற்கு முன்பே

தணிக்கைத் துறை அறிக்கையிலே குறிப்பிட்டிருந்தார்களே, அப்போது ஏன் பாராளுமன்றம் முடக்கப்பட வில்லை! அப்போது ஏன் இந்தப் பிரச்சினை பூதாகாரமாகப் பெரிதுபடுத்தப்படவில்லை!

இதே துறையின் முன்னாள் அமைச்சராக இருந்த திரு. அருண் ஷோரி (பா.ஜ.க.) அவர்கள்கூட நேற்று ஒரு கருத்தரங்கில் பேசும்போது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசியல்வாதிகள் கூறுவது போல, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என்பது தவறானது. இதில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத்தான் முறைகேடு நடந்திருக்கலாம். கருணாநிதி கூறியிருப்பது போல, தனிப்பட்ட ராசா ஒருவரால் இவ்வளவு பெரிய தொகையை ஊழல் செய்திருக்க முடியாது என்றெல்லாம் சொல்லியிருப்பதோடு, “ராசா எல்லா உண்மைகளையும் தெரிவிக்க வேண்டும்” என்றும் சொல்லியிருக்கிறார்.

(Arun Shourie, Former Union Minister for Communications advised the media not to run after the “hypothetical figure of loss (Rs.1.76 lakh crore) to the exchequer” mentioned by the CAG. The realistic figure, he said, could be around Rs. 30,000 crore. - The Hindu 19.12.2010)

எதற்கெடுத்தாலும் “டேப்பு”தான் - குறிப்பாக ஜெயலலிதாவுக்கு அறிக்கை விட வேறு காரணமே தேவையில்லை. இதே “டேப்” பற்றி அவரே இதற்கு முன்பு “டேப்பு” என்றால் உண்மையாகி விடுமா? ஒருவர் குரலில் ஒருவர் மாதிரி இன்னொருவர் பேசி அதனை “டேப்பு” செய்ய முடியாதா? சி.பி.ஐ. சொன்னால் அது உண்மையா? சி.பி.ஐ. என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா?” என்றெல்லாம் விமர்சனம் செய்தவர்தான்!

“பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்த கட்சி இன்று பேசிப் ஓ ஓ ஓதி.மு.க. ஆளாகியிருக்கிறது” என்று அந்த ஆங்கில ஏட்டின் ஆசிரியர் எழுதியிருக்கிறார். தி.மு. கழகத்தின் மீது தற்போது சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மையான விளக்கத்தையும் தி.மு. கழகம் மக்களிடம் பேசிப் பேசி விளக்கிக் கூறி, இந்தப் பத்திரிகாசிரியர் போன்றவர்கள் செய்யும் விஷமப் பிரச்சாரங்களுக்கும் எதிர்காலத்தில் தீர்வு காணும் என்ற நம்பிக்கையை அவர்கள் பெறலாம்.

2 ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தை அரசு தனது சாதனைகளில் ஒன்றாக சொல்கிறது. ஆனால் இத்திட்டத்தில்

பல முறைகேடுகள் நடந்திருக்கின்றன” என்று விரிவாக எழுதியுள்ள அந்த இதழிலேயே இந்த நான்கு ஆண்டுகளில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை 1 லட்சத்து 75 ஆயிரத்து 798 விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பது ஆறுதலாக இருந்தாலும், அந்தக் கட்டுரையிலே கூறப்பட்டுள்ள குறைபாடுகளைப் பற்றி அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நிலத்தைப் பெற்றவர்கள் விதிகளை மீறி விற்று விடுகிறார்கள், அல்லது யாரோ சிலர் அதைப் பறித்துக் கொண்டு விடுகிறார்கள் என்றெல்லாம் எழுதப்பட்டுள்ள புகார்கள் உண்மையாக இருந்தால் அவற்றின் மீது நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். இதுபோன்ற புகார்கள் வரும்போதெல்லாம் தீர விசாரித்து உடனடியாகக் களையப்பட்டுள்ளன என்பதற்கு என் தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சியில் எத்தனையோ சான்றுகள் உண்டு என்பதை இந்தக் கட்டுரையாளரே நன்கறிவார். எனினும் என்ன செய்வது? ஏதோ ஒரு கட்டுக்குள் அடங்கி எரிச்சலைக் கட்டவிழ்த்து விடுகிறார், பாவம்! உடன்பிறப்பே, கடந்த நான்கரை ஆண்டுகளாக கழக அரசு தொடர்ந்து ஆற்றி வரும் சாதனைகள், திட்டங்கள் காரணமாக மக்கள் மத்தியில் பெருகிவரும் நல்ல பெயருக்கு எப்படியாவது ஊறு ஏற்படுத்திட வேண்டுமென்ற கெடு நினைப்போடு நான் மேலே குறிப்பிட்டுள்ள ஏடுகள் போன்ற ஒரு சிலர் திட்டமிட்டுச் செய்கின்ற பொய் பிரச்சாரத்திற்கு இரையாகிடாமல், போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும், நம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற உறுதியோடு தொடர்ந்து மக்கள் பணியினை ஆற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு; விஷமப் பிரச்சாரங்களை முறியடித்து வெற்றி முரசு கொட்டிட விரைந் தெழுவீர் - சிற்றூர், பேரூர், நகரப் பகுதிகள் எங்கணும் சிங்கங்களாம் உமது முழக்கம் ஒலிக்கட்டும்! அன்புள்ள, மு.க. 21-12-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 265–270. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்