முரசொலி கடிதங்கள் · 3507
தேர்தல் தீர்ப்புக்குக் கூட்டமே; அளவுகோலா?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3507. தேர்தல் தீர்ப்புக்குக் கூட்டமே; அளவுகோலா?
உடன்பிறப்பே,
ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிகள் எதிர்க்கட்சிகளாவதும், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிகளாவதும்; மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கருவிகளாக விளங்குவதைப் புறந்தள்ளிவிட முடியாது. ஆளுங்கட்சி ஆகிவிட்டோம் என்ற ஆணவப் போக்குடன் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதும்; எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டுமா என்ற எரிச்சலில், எதையும் பேசுவது, ஏற்காகவும் போராடுவது, ஏனோதானோவென்று ஆளுங்கட்சியை விமர்சிப்பது; இவையெல்லாம் ஜனநாயகத்தில் ஏற்புடையதா என்று அரசியல் அறிவுடையார், நேர்மையுடையார், நியாய உணர்வுடையார் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த அடிப்படைக் கருத்தை அடியோடு மறந்துவிட்டு; மத்தியில் ஆளுகின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியையும், அந்த அணியுடன் தோழமை கொண்டு மாநிலத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கின்ற தி.மு.க. அணியையும்; கடுமையானதும், காரசாரமானது மானதாக்குதலை நடத்தியே, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று ஒரு அணியைத் திரட்டுவதற்கான ஆயத்தங்கள் அனைத்திந்திய அளவிலும், தமிழக அளவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இன்றுள்ள அரசியல் நிலையை மாத்திரம் அளந்து பார்த்தோ - எடைபோட்டுப் பார்த்தோ நமது கழகம் எந்த முடிவையும் எடுக்க விரும்பாமல்; அனைத்திந்திய அளவில் சாதி, மத வேறுபாடுகள், மதமாச்சரியங்கள், மனித நேயத்திற்கு மாறான செயல்கள், நம் மூட நம்பிக்கைகள் என்ற அடிப்படையில் நடைபெறும் முயற்சிகள் எதுவாயினும்; அது இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடியதாகவும், மத நல்லிணக்கத்திற்கு மாறுபட்டதாகவும், திராவிட இன உணர்வுகளைச் சிதைக்கக்கூடியதாகவும், அன்னைத்
தமிழின்பால் கொண்டுள்ள பற்றினை அசைக்கக்கூடியதாகவும் அமையுமேயானால்; அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் வாய்மூடி மவுனியாகக் கழகம் இருந்ததுமில்லை; இருக்கப் போவதுமில்லை.
கழகத்தின் இந்த உணர்வுகளை - அவற்றின் அடிப்படையிலான இலட்சிய முழக்கங்களை, ஒரு குறைந்தபட்ச அளவிலான பொதுத் திட்டங்களாக அமைத்துக் கொண்டுதான்; இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தேர்தல் அல்லாத நேரங்களிலேகூட கட்சிகளின் தோழமை அணிகள் உருவாகியிருக்கின்றன. அந்த அணிகளில் ஒன்றாக விளங்கி வீரநடை போட்டு வருவதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்தக் கழகத்தைப் பொறுத்தவரையில், நேற்றைய முந்தினம் கோவை மாவட்ட தி.மு.க. ஆய்வுக்கூட்டத்தில் நான் எடுத்துரைத்தவாறு, கொள்கையும், இலட்சியமும் முன்வைக்கப் பெற்று அவற்றை வென்றெடுக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் பயன்பட வேண்டுமேயல்லாமல்; தேர்தல் வெற்றிதான் தி.மு.கழகத்தின் மூல நோக்கம் என்று நாம் என்றைக்கும் கூறியது இல்லை; கருதியதுமில்லை.
ஆனால், தமிழகத்தில் உள்ள சில ஏடுகள், ஒரு கட்சியைப் பொறுத்தவரை; தேர்தலுக்காக எடுத்து வைக்கும் திட்டங்கள், கொள்கைகள், அவற்றை நிறைவேற்றும் பாங்குகள் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தலுக்கு முன்பு அந்தக் கட்சியின் பிரச்சாரத்துக்காகக் கூடுகிற அல்லது கூட்டப்படுகின்ற கூட்டத்தையே அளவாக வைத்துக்கொண்டு; எது நல்ல கட்சி அல்லது எது பெரிய கட்சி என்ற தீர்ப்பு வழங்க இப்பொழுதே எழுதுகோல்களைக் கூர்த்திடக் கொண்டிருக்கின்றன.
உடன்பிறப்பே, 1971ஆம் ஆண்டு நம் கழகப் படையை நடத்துவதற்கு தலைவர் அண்ணா அவர்கள் இல்லாத காலம். தந்தை பெரியாரின் துணையோடு, அன்றைக்கு நம்முடன் நட்பு கொண்டிருந்த சில கட்சிகளின் தோழமையோடு, இ.காங்கிரஸ் கட்சியுடன் அணிவகுத்துத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டம். பெருந்தலைவர் காமராசரும், பெரியவர் மூதறிஞர் இராஜாஜியும் ஓரணியிலிருந்து நம்மை எதிர்க்கின்ற நேரம். அப்பொழுதுதான், சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் காமராசரும், இராஜாஜியும் ஒரே மேடையில் ஏறி நமது அணியை எதிர்த்து
முழங்குகிறார்கள். அந்த மேடையிலேதான் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு நெற்றியிலே வெற்றித் திலகம் இட்டு, ஆசி வழங்கினார்கள்.
நமது அணியின் தலைவியாக இருந்த திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், அந்தக் கூட்டத்தின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு, நாம் வெற்றி பெறுவோமா என்பது போல், விழிகளை அகல விரித்துப் பார்த்தார்கள். “கவலைப்படாதீர்கள்; இதுவரையில் இந்த அரசு புரிந்துள்ள சாதனைகளையும், அடுத்து வரும் ஆட்சிப்பொறுப்பில் நாம் புரியவிருக்கும் சாதனைகளையும் நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் நம்மை ஏமாற்ற மாட்டார்கள்” என்று நான் இந்திரா அம்மையாருக்கு விளக்கமளித்தேன்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்தத் தேர்தலில் - மகா கூட்டணி அமைத்து பெருந்தலைவரும், பெரியவர் இராஜாஜியும் - பரமாத்மாவே பாஞ்ச சன்யம் முழங்கியது போல் முழங்கிய அந்தத் தேர்தல் போரில்; திருவல்லிக்கேணி கடற்கரையில் கூடிய அந்தக் கூட்டம்; கணித்த ஆரூடத்தையும் மிஞ்சி, தெருவோரத்தில் நின்ற மனிதர்களின் தீர்ப்பே வென்று காட்டியது.
உடன்பிறப்பே, கூட்டத்தை வைத்து வெற்றி தோல்வியை எடைபோட்டு விடக்கூடாது என்பதற்காக அல்ல; கூட்டமும் தேவைதான் - நாம் கூறுகிற கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து மக்கள் தீர்ப்பளிப்பதற்கு; என்பதில் எனக்கு இருவேறு எண்ணமும் இல்லை. ஆனால், கூட்டம் மாத்திரமே அளவுகோல் எனக் கணிப்போருக்கு, அதுவே அளவுகோல் என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காக,
அந்த நாள் திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தை நினைவுபடுத்தினேன்.
1962 பொதுத் தேர்தலில், காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு, அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சைக் கேட்க இலட்சக் கணக்கில் மக்கள் கூடினர். ஆனால், அந்தத் தேர்தல் முடிவு என்ன?
பொதுமக்கள் நமது கருத்துக்களைக் கேட்கிறார்கள்; நமது கழகத்தின் தேவையை உணர்கிறார்கள். அவர்களை அழைத்து,
“வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள் உதயசூரியனுக்கு” என்று சொல்வதற்கு அல்லும் பகலும் உழைக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள், ஆர்வம் படைத்தவர்கள், அக்கறையுடன் பணியாற்றக் கூடியவர்கள் - ஆம்; தொண்டர்கள், தொண்டர்கள், தொண்டுள்ளம் படைத்த தூயவர்கள் இடைவிடாது உழைத்து இணையற்ற வெற்றியைத் தேட வேண்டும் என்று செயல்படுகிற சிங்க ஏறுகள், கொள்கை வேங்கைகள் - இன்று உழைத்தது போதும் என்றெண்ணாமல்; இன்னும் எண்ணற்ற பணிகள் இருக்கின்றன நமக்கு என்றெண்ணி; “கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டம்” என புரட்சிக் கவிஞரின் வீரவரிகளுக்கு இலக்கணமாகத் திகழும் செயல் வீரர்கள், காஞ்சியில் மட்டுமல்ல; கழகம் தேர்தலில் நிற்ற எல்லா இடங்களிலும் அது போன்ற பணி தொடர்ந்திருக்குமேயானால்; அண்ணா தலைமையில் 1967-ல் அமைந்த ஆட்சி, அதற்கு முன்பே 1962-லேயே அமைந்திருக்கும் என்பதை யார்தான் மறுத்திட இயலும்?
உடன்பிறப்பே, இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறாய்? உழைப்பு உழைப்பு உழைக்கும் மாமணிகளாம் உங்களுக்கிடையே ஒற்றுமை ஒற்றுமை - இவை இருப்பின் எவர் அணி வகுத்து நின்றாலும், நம் அணிக்கு வெற்றி உறுதி உறுதி!
அன்புள்ள,
மு.க.
24-10-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 176–179. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.