பொருளடக்கம்

குறளோவியம்

குறளோவியம்

மதிப்புரை

அச்சுப் பக்கம் viiixi · ஸ்கேன் 912

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

மதுரை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பெரும்புலவர் டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களின்

மதிப்புரை

நம் கலைஞர், நாள்தோறும் சிந்தித்து வாரந்தோறும் தமிழோவியமாக வரைந்த குறளோவிய நூலுக்கு நான் மதிப்புரை எழுதுவது என் கடமை; என் எழுத்துக்குக் கூடுதல் பெருமை.

குறளோவியம் எழுதிய நூலாசிரியர் யார்? எத்தகையார்? அவர்தம் நெஞ்சின் மாண்பென்ன? நினைவின் மூச்சு எத்தகையது? பன்னூறாண்டு கழித்து இக்குறளோவியத்தைப் படிப்பவர் கூடப் பின்வருமாறு எண்ணுவர்: “இந்நூலை எழுதியவர் தமிழ்ப்பற்று, தமிழறிவு, தமிழுணர்வு மிக்கவர். சங்க இலக்கியப் பயில்வினர். தமிழ் நாகரிகமே மனித நாகரிகம் என்ற கடைப்பிடியினர். புத்திலக்கியம் படைக்கும் கற்பனைக் கவிஞர். எழுத்திலும் சொல்லிலும் தொடை வளமிக்க உரைநடைக் கவிதையர். நாடகப் பார்வையர். உரைபல கற்றவர். நாட்டின் ஆட்சியில் உயர்பதவி தாங்கியவர். உலக அரசியற் கண்ணோட்டத்தார். பல்துறை மக்களொடு அணுகிப் பழகிக் காலவுலகியல் கைவரப் பெற்றவர். வாழ்வுப் பாசறையில் மலையும் கடலும் கண்டவர். தோலா நாவினர். தொய்யா நெஞ்சினர். சாதிசமயச் சுழற்கிற்புகாப் பகுத்தறிவினர். சிந்தனைச் செயலினர். திருக்குறட் சிந்தையர். தமிழினத் தலைவர். எழுத்துக்கலை, பேச்சுக்கலை, நாடகக்கலை, கவிதைக்கலை, அரசியற்கலை, எழிற்கலை என்றாங்கு பல்வேறு கலைகளிலும் நெஞ்சு அறிவு செயல் தோய்ந்த கலைஞரே இவர்” - இவ்வாறு நாம் இன்று காண்பது போல எதிர்காலத் தமிழரும் இந்நூலாசிரியரின் பல திறங்களைப் பற்றி மதிப்புக் கொள்வார் என்பதில் ஐயமில்லை. ஏன்? இத்துணைக் கலைகளும் ஒருங்கு குடிகொண்ட பெருங்கலைஞர் ஒருவராலல்லாது பிரிதொருவரால் இக்குறளோவியம் கலைக்காவியமாக எழுதியிருக்க முடியுமா? மண்ணின் சிறப்பை வளங் காட்டும்; பண்ணின் சிறப்பைத் தமிழ் காட்டும்; கலைஞரின் சிறப்பைக் கருத்து வண்ணம் காட்டிவிடும்.

டாக்டர் கலைஞரின் குறளோவியத்திற் பல புதுநெறிகள் உள. ஒவ்வொரு குறட்கு முன்னும் ஏற்ற சூழ்நிலை அல்லது பின்புலம் அமைத்துக் காட்டியிருப்பது முதற் சிறப்பு. திருக்குறள், ஒரு நாளின் கிளையில்லை. அதுவே முதல்; மக்கள் வாழ்வியக்கத்தை அலசிப்பார்த்துக் குறளுருக் கண்டவர் வள்ளுவர். அவர் கண்ட பல நிகழ்ச்சிகள் குறட்பிழிவாயின. இவ்வுண்மையை அறிந்த நம் கலைஞர் கருணாநிதியார், கற்பனையானாலும் குறட்கேற்ற சூழ்நிலைகளைத் தொடுத்தும் அடுத்தும் கற்பாரை வழிப்படுத்துகின்றார். இத்தனிநெறி நோக்கிக் குறளோவியத்தைச் ‘சூழ்நிலையுரை’ என்றும் கூறலாம். உரையென்ற மரபுப்பெயர் சிறப்பாக இருக்குமாயின் சொற்புலங்காட்டுவது எளிது; பின்புலங்காட்டுவது அத்துணை எளிதன்று. சில குறட்பாக்கட்கு இரண்டு மூன்று பக்கங்கள்கூடப் பின்புலம் போட்டிருக்கும் பெருந்தன்மையைக் காண்கிறோம்.

தன் பின்புலக் கட்டுமானத்தில், திருவள்ளுவரையும் ஈடுபடுத்திப் பணி கொண்டிருப்பது இந்நூலின் மற்றொரு தனிச்சிறப்பு. மக்களின் புரட்சிக் கண்ணோட்டையும் கொடிய அரச

குலத்தின் ஒட்டக் கால்களையும் கண்டபோது தான், வள்ளுவருக்கு “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்” என்ற திருக்குறள் பிறந்தது எனவும் ஏரிக்கரை ஓரமாக நடந்து சென்றபோது “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல” என்ற உவமையைக் கண்டுபிடித்தார் எனவும் வெற்றி வேலொடு தன் முன் நின்ற மன்னனைப் பார்த்து “வேலன்று வெற்றி தருவது” என உண்மை கூறினார் எனவும் “கயவனைக் காட்டுக” என்று கேட்ட இளங்கோவுக்கு நேரிடையாக ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டித் தெளிவித்தார் எனவும் குறளோவியத்தில் வள்ளுவரின் நடமாட்டத்தைக் காண்கிறோம். கம்பர் தன் இராமாயணத்திற்குப் பாடபேதத்தைத் தன் காலத்திலேயே கேட்டார் என்பது போல, “அறத்தாறு இதுவென வேண்டா” என்ற குறட்குப் பொருந்தா உரையை வள்ளுவரே கேட்டு உண்மையுரை கூறித் திருத்தினார் என்று ஒரு பின்புலத்தைக் கலைஞர் செப்பனிட்டிருப்பது, துணிவு கலந்த புலமையாகும்.

‘வள்ளுவம்’ என்ற என்னூலில், திருக்குறள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வாழ்வுத் தனிமுறை எனவும் தத்தம் நடைமுறைக்கு ஒத்த செயல்நூல் எனவும் அவரவரும் தம் வாழ்வுப் போக்கோடு வைத்துப் பார்ப்பதே திருக்குறட்பயன் எனவும் வலியுறுத்தியிருக்கின்றேன். என் கருத்தோடு ஒத்த கருத்துடைய கலைஞர் அவர்கள், பல்வேறு மாந்தர்களின் நடைமுறை வாழ்வுப் பின்னணியாக முப்பாற் குறட்களையும் பின்னிக் காட்டியிருப்பது இதுகாறும் திருக்குறள் பற்றி எழுந்த நூல்களிற் காணப்படாத, ஆனால் காணவேண்டிய புதிய முறையாகும் என்று சுட்டிக்கூற விழைகின்றேன்.

அறிவுசான்ற திருக்குறட்கு விளக்கமாகத் தேவர்களின் வான வாழ்வையும் புராணங்களின் மயக்கக் கதைகளையும் காட்டிவரும் போக்கு ஒவ்வாது. நம் போல் மானுடமாய் வாழ்ந்த நன்மக்களின் ஒழுகலாறுகள்தாம் திருக்குறட்குக் காட்டாகத் தக்கவை. “தொழுத கையுள்ளும் படையொடுங்கும்” என்ற குறட்குக் காந்தியடிகள் சுடப்பட்ட கொலையையும் “பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர்” என்பதற்குப் பாகித்தானில் பூட்டோவின் தூக்குநிலையையும் “நிறைமொழி மாந்தர் பெருமை” என்பதற்குப் பேரறிஞர் அண்ணாவின் அறவுரையையும், “நிறைநீர் நீரவர் கேண்மை” என்பதற்குப் பெரியார் - மூதறிஞர் கேண்மையையும் “வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” என்பதற்குக் காரல் மார்க்சின் மனைவி சென்னியாளின் மாட்சிமையையும் இவ்வாறே நடந்த நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டுவர் நம் கலைஞர். நடப்பினைக் காட்டுவதால் திருக்குறள் வாழ்க்கை நூல் என்பதும் பிறநாட்டு நல்லறிஞர்களின் வாழ்வையும் மேற்கோட் படுத்துவதால், திருக்குறள் உலக அறநூல் என்பதும் கற்புப் பெண் கழுத்துத் தாலிபோல் விளங்கக் காணலாம்.

இத்தகைய பின்புலச் சூழலில் கலைஞர் வெளியிடும் தம் குடும்ப நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதுகேட்டு நம் மெய் அரும்பி விதிர் விதிர்க்கின்றது. கலைஞரின் அருமைத் தந்தையார் முத்துவேலர், தன்மேல் நல்ல பாம்பு ஊர்வதை அறிந்தபோது, ஏறிய பாம்பு தானே இறங்கும் வரை உள்ளம் நடுங்காதும் உடல் அசையாதும் இருந்து கடிவாய் பிழைத்தார் எனவும் “வெள்ளத்தனைய இடும்பை” என்ற குறட்பாவிற்கு இவ்விருக்கை எடுத்துக்காட்டாம் எனவும் குறளோவியம் மெய்ப்பமை சூட்டுகின்றது. எங்கெல்லாம் கலைஞர் குறட்காட்சி காண்கிறார் என்பதற்கு இதோர் வீட்டுச்சான்று. இதற்கு வரைந்த ஓவியத்தில் அஞ்சுக அன்னையும் அதனை அசையாது பார்த்துக் கொண்டிருப்பதாகப் பின்னணி செய்திருப்பது, கலைஞர் பிறந்த குடியின் மாட்சியைப் புலப்படுத்தும்.

குறளோவியத்தின் தனிச்சிறப்பு, பரந்த சூழ்நிலைப்புலமாகும். கலைஞர் கற்பனையில் வந்துபோம் எந்நிலைப் பெண்களும் ஆண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளுங்கூடத் திருக்குறளைக் கற்றும் உரையாடலிற் குறள் கலந்தும் பேசுகின்றனர். கலைஞர் கண்ட

பட்டிதொட்டி நாடு நகரமெல்லாம் குறள் மணக்கின்றது. “உறையூர்க் கோழிக்கும் உரனுண்டு” என்பது போலத் தமிழ்நாட்டுக் கரடியும் இவ்வோவியத்தில் “கேட்டினும் உண்டு ஓர் உறுதி” என்ற நட்புக் குறளை நல்லான் செவியுள் அறிவுறுத்துகின்றது. மண்ணுலகம் வந்து திரும்பிய விண் மண்டல வீரர்களுங்கூட, வள்ளுவரின் வான் சிறப்பினைப் பாராட்டுகின்றனர். மக்கள் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் திருக்குறள் தொடரும், தொடர வேண்டும் என்ற கலைஞரின் பெருந்தமிழுணர்வை இது காட்டவில்லையா? வள்ளுவர்கோட்டம் கண்ட கலைஞர்க்கு இவ்வுணர்வு இருப்பது இயல்புதானே. உயர்திணை அஃறிணை அனைத்தையும் திருக்குறட்கண்ணாகக் காண்பது நம் கலைஞரின் தமிழொருமைப்பாடு.

கலைஞர், ஒரு பெருங்கட்சியின் தலைவராகவும் தமிழ்கூறு நன்மாநிலத்தின் முதலமைச்சராகவும் பல்வேறு அரசியல் தொடர்பினராகவும் ஆட்சிநிலைகளை நன்கறிந்தவர். ஆதலின் குறளோவியத்தில் ஆட்சிக்குறள்கள் பெரிதும் இடம் பெற்றுள. இன்னும் உண்மை வரலாற்று நிகழ்ச்சிகளைப் பல பொருட்குறள்கட்கு அவரால் காட்டமுடியும். எனினும் நனிநாகரிகம் கருதி, குறட்பார்வைக்கு வேண்டுமளவு கோடிட்டுச் சென்றார் எனக் கொள்ள வேண்டும்.

குறளோவியத்தின் மேலும் ஒரு சிறப்பு, காதற்குறள்கள் கணக்காகச் செம்பாகம் இடம் பெற்றிருப்பது. கற்பவர்க்குப் பொருளும் இன்பமும் அடுத்தடுத்துக் கிடைக்குமாறு இருபாற்குறள்களும் ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டுள. ஒரு பக்கம் புற ஓவியம்; அடுத்த பக்கம் அக ஓவியம். தமிழுக்கு இனிமை, இன்பம் என்ற பொருளுண்டு. அப்பொருள், அன்புக்காதல் கூறும் அகத்திணையால் வந்தது. தமிழ் அகப்பொருள் தெரிந்தவரைத்தான் தமிழகம் தெரிந்தவர் என்று கூறலாம். அதனாலன்றோ அறங்கூறவந்த திருவள்ளுவர், காமத்துப்பாலினை நெறி படவும் சுவை படவும் பாடினார்.

கலைஞரின் குறளோவியத்திற் காதற்காமக் குறள்கள், கற்புக் காவியமாக உயர்கின்றன. அறக்குறட்கும் பொருட்குறட்கும் பின்புலம் பருப்பொருள் வடிவுடையது. வெளிப்படையானது. காதற்குறளின் பின்புலமோ எண்ணத்திலும் நுண்ணியது. சிறிது வழுவினும் தள்ளுபடியாவது. சங்க இலக்கியத் தோய்வுடைய தமிழ்ப் பெருமகனார் தொல்காப்பியம் வரையறுத்த நெறியில் நின்று, காதலோவியங்களைப் பொன்வண்ணத் தமிழ் நடையில் வரைந்துள்ளது கண்டு வியந்தேன். அன்றொழியும் ஐம்புல நுகர்ச்சியாகக் காட்டாமல், என்பும் அன்பும் இன்பும் கலந்த ஆராப்புணர்ச்சியாக ஒவ்வொரு குறட்கும் உள்ளழகு காட்டியிருப்பது எம் போன்ற புலவோர்க்கு விருந்துப்படைப்பு.

கடலின் ஆழ்ந்த ஒண்தீந்தமிழின் அகத்திறத்தினை இடைக்காலப் புலவர்களும் இக்காலப் புலவர்களும் கூடச் செவ்வன இதுகாறும் தெரிந்திலர்; தெளிந்திலர். அகத்திணை அரச குடிகட்கும் படைமறவர்கட்கும் செல்வப் பெருமக்கட்கும் உரியதென அப்புலவர்கள் தவறாகக் கருதி வழுவாகப் பரப்பி வருகின்றனர். உண்மையைத் தெளிந்து கண்டு, தெளியக் காட்டுகின்றார் நம் பெரும் புகழ்க் கலைஞர். உழவுக் குடும்பத்தார், உப்பங்கழிக் குடிசையார், ஆனினம் மேய்ப்பார், மீனினம் பிடிப்பார், விறகு வெட்டுவார், இன்னும் என்ன, தெருவீதிக் குப்பை கூட்டுவார் எல்லாரும் குறட்காதலர்களாக விளங்குவது மட்டுமில்லை, குறள் கற்றுத் தம் ஊடற்காலத்தும் கூடற்காலத்தும் காதற்குறளை, கன்னித்தமிழை, பாலும் தேனும் பழமும் கலந்தாற் போலப் பேசிப் பின்னிப்பிணைந்து இரண்டறக் கலந்து ஒரு மெய்ப்பாடு எய்துகின்றனர். ‘எளிய குடும்பத்துப் பருவப் புறாக்கள்’ குறளகத்துத் தலைவன் - தலைவியராக இணைகின்ற அகத்தமிழ் உண்மையை மீண்டும் உயிர்ப்பித்துக் காட்டுகின்றார் கலைஞர். இக்கலைத் தொண்டிற்கு எவ்வளவு நன்றி கூறினும் நன்றி என்ற மூன்றெழுத்துக்குள் நம் உணர்வு அடங்கும் அளவினதன்று.

குறளோவியத்தின் பதிப்பு, பேறு பெற்ற பாரதி பதிப்பகம்; புகழ்மிக்க பெரியவர்களின் புதுமை சான்ற நூல்களை வெளியிட்டுவரும் பெருமை தாங்கியது. ‘வாழிய செந்தமிழ்’ என்று வாயூறிப் பாடிய தேசிய மகாகவி பாரதியின் பெயரைக் கொண்ட பாரதி பதிப்பகம், தமிழ்த் தொண்டாற்றும் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமோ! அப்பெருந்தொண்டுகளுள் ஒன்று குறளோவிய வெளியீடு. எழுத்தோவியத்துக்குத்தக, பெரிய வடிவோவியம் கொடுத்திருப்பது இவ்வெளியீட்டின் தனிச்சிறப்பு. காதல் நோய்ப்பட்ட பெண்ணின் கவலை நெஞ்சம் பருத்துப் பெருத்து இருகையாலும் மணலை அள்ளி அள்ளிக் கடலைத் தூர்த்துக் கொண்டிருப்பதாகக் காட்டும் பூதநெஞ்சின் ஓவியமும் மூதறிஞர் இராசாசி நீடுதுயில் கொண்டபோது பெரியார் கைத்தடியைச் சாய்த்துப் பிடித்துச் சுடலை மண்ணுத்தரையில் அமர்ந்திருக்கும் சோக ஓவியமும் கற்பனைக் குற்றம் கணவனைக் கண்டவுடன் தோன்றாது என்று காட்டும் தலைவியின் மைக்கோல் ஓவியமும் இன்ன பல வனப்புக்களும் தனிச்சுட்டுக்கு உரியவை. குறளோட்டம் கண்ட வள்ளுவர்க்கு, வள்ளுவர் கோட்டம் கண்டார் நம் கலைஞர். ஆதலின் பக்கந்தோறும் வள்ளுவர் கோட்டம் பதிவு பெற்றிருப்பது இயல்பும் இனிமையும் ஆம். ஒப்பில் கலைஞரின் ஓவியக் குறளை ஓவியமாகவே பதிப்பித்த பதிப்புச் செம்மல் சிதம்பரனார்க்கு நன்றி கூறுவது மட்டும் போதாது; நும் பதிப்பகம் புகழோவியமாக வளர்க என்று வாழ்த்தும் கூறுவல்.

“இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் வள்ளுவர் என்று யார் கூறியது? அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். வாழ்வுக்கு இலக்கணம் வகுத்தவர். அவர் வழங்கிய குறட்பாக்கள் உள்ள வரையில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.”

என்ற கலைஞரின் நிறைமொழி, தமிழினத்துக்கு வழங்கிய உறுதிமொழியாகும். கற்புத்தெய்வமாம் கண்ணகிக்குச் செங்குட்டுவன் கல்லோவியம் கண்டான்; இளங்கோ சிலப்பதிகாரம் என்னும் சொல்லோவியம் கண்டார். இங்கனம் வேந்தர் இருவர் செய்த ஓவியங்களையும் தமிழ்த்தெய்வமாம் திருவள்ளுவர்க்குக் கலைஞர் என்னும் ஒருவரே கண்டார். வள்ளுவர் கோட்டமாகவும் குறளோவியமாகவும் தமிழ் என்ற குருதியோட்டம் ஓடும்வரை நிலைநிறுத்தினார்.

தமிழ்ப் பெருமகன் கலைஞர்க்கு நாம் செய்யவேண்டிய கடப்பாடு என்ன? திருக்குறளைக் குழந்தைப் பருவமுதலே முழுதும் கற்க; நம் வாழ்க்கை நடைமுறையோடு திருக்குறளைப் பொருந்தி நினைக. உங்கள் ஒரு கைக்குத் திருக்குறளும் ஏனைக்கைக்கு குறளோவியமும் கையணிகளாக விளங்குக.

“சொல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது”

என்று என் தொல்நட்பும் நன்மதிப்பும் வாய்ந்த கலைஞரை வாழ்த்துகின்றேன்.

கதிரகம் காரைக்குடி

டாக்டர் வ. சுப. மாணிக்கம்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்