பொருளடக்கம்

1. வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற

கட்டுரை 1 / 1

வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற

Freedom from the Prison of Suffering

அச்சுப் பக்கம் 4–7

scan 3 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

குடும்ப நலத்திட்ட இருவார விழா, டிசம்பர் 15-ஆம் நாள் முதல் தமிழ்நாடு எங்கணும் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

பீறிட்டுப் பெருகிவரும் மக்கள் தொகை, பிரம்மபுத்திரா நதி வெள்ளத்தைவிட—கங்கை நதிப்பெருக்கைவிடப் பெருங் கொடுமை புரிகிறது; பேரதிர்ச்சி தருகிறது!

அதனைத் தடுத்து நிறுத்திடாவிட்டால்—ஒரு கட்டுக்குள் கொண்டுவராவிட்டால்—நம்முடைய எதிர்கால இளந்தளிர்களின் இன்ப வாழ்வு, அந்தக் கொடிய வெள்ளத்திலேயே அமிழ்ந்து போகலாம்; அழுகியும் போகலாம்!

எனவே, நம்மை அச்சுறுத்தும் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்கே இத்தகைய விழாக்கள் எடுக்கப்பட்டு இன்று—எழிலோடும் ஏற்றத்தோடும்!

உணவு, உடை, உறையுள்—ஆகிய அடிப்படைத் தேவைகள் எல்லா மக்களுக்கும் அளித்திடவே அரசுகள் இயங்குகின்றன.

அந்தத் தேவைகளை நிறைவு செய்திட, உற்பத்தி பெருகிட வேண்டும்.

ஆனால் நெல்லும், எள்ளும் உற்பத்தி ஆவதைவிடப் பிள்ளை உற்பத்திதான் பெருமளவு நடக்கிறது, நாட்டில்!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எத்துணை நிலப் பரப்பு இருந்ததோ ஏறத்தாழ அதே அளவுதான் இன்றைக்கும் நிலம் இருக்கிறது. இதே வேளையில் மக்களின் எண்ணிக்கையோ விமானத்தைவிடப் பன்மடங்கு வேகமாக உயர்ந்து கொண்டே செல்கிறது; அத்தனை மக்களின் அடிப்படைத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

இந்த நிலையில், எத்துணைதான் திறமைகளைக் கொட்டித் திட்டங்களைத் தீட்டினாலும்—எவ்வளவுதான் கோடி கோடியாகத் தொகைகளைக் கொட்டிச் செயலாற்ற முற்பட்டாலும்—அவ்வளவும் ‘யானைப் பசிக்குப் போட்ட சோளப் பொறி’யாகத்தான் வீணாகிப் போகின்றன.

எந்த நாட்டுப் பொருளாதாரமும் இடுப்பொடிந்து வீழ்வதற்கு மக்கள் தொகைப் பெருக்கமே முக்கியக் காரணம் ஆகும்.

இன்று உலகு முழுவதையுமே ஆட்டிப்படைத்து வருகிறது இந்தச் சிக்கல்.

இதற்குத் தீர்வு கண்டிடும் பொருட்டுத் தீவிரமாய்ச் சிந்திக்காத—செயல் திட்டம் மேற்கொள்ளாத நாடு, எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை.

ஐக்கிய நாடுகள் மன்றம்—சென்ற 1974-ம் ஆண்டை ‘உலக மக்கள் தொகை ஆண்டாக’ அறிவித்தது; அதன் வாயிலாக அந்தந்த நாட்டு அரசுகளின் துணையோடு மக்கள் தொகைப் பெருக்கத்தைத் தக்க வழிகளில் தடுத்து நிறுத்திட உரிய விளக்கங்களை எடுத்துரைத்து மக்களிடையே ஊட்ட முயன்றது விழிப்புணர்வை!

அதே போன்று இந்த 1975-ம் ஆண்டினை ‘உலக மகளிர் ஆண்டு’ என ஐ.நா. மன்றம் அறிவித்தது; அதனையொட்டி எல்லா நாடுகளிலும் மகளிர் நலம் பேணிடும் மாபெரும் முயற்சிகள்—திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கடந்த ‘மக்கள் தொகை ஆண்டுக்கும்’, இந்த ‘மகளிர் ஆண்டுக்கும்’ நெருக்கமான தொடர்பு இருப்பதைச் சொல்லித் தேவையில்லை.

அடிக்கடிப் ‘பேறுகாலம்’—என்னும் அல்லலுக்கு ஆளாகிப் பிள்ளை பெறும் யந்திரங்களாகவே பெண்மணிகள் தொல்லையுறுகின்றனர். அவர்கள் அந்த வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெறுவதற்குரிய ஒரே வழி—சீரிய வழி—‘சிறு குடும்ப நெறியே’!

இத்தனைக் குழந்தைகள் போதும் என்று முடிவு எடுத்திடவும்—அடுத்த குழந்தையை எப்போது பெற்றுக் கொள்ளலாம் என்று நிர்ணயம் செய்திடவும்—பெண்கள் உரிமை பெற்றிட வேண்டும். அத்தகைய உரிமையினை அடைகின்ற வரை பெண்ணுரிமை முழுமை பெற்று விட்டதாகப் பெருமிதம் கொள்ள முடியாது.

குடும்ப நலத்திட்ட செயலாக்கத்தைப் பொறுத்த மட்டில்—தமிழகம், மிகுந்த அக்கறையினைக் காட்டி வந்திருக்கிறது—மெச்சத்தக்க வெற்றியினையும் ஈட்டி வந்திருக்கிறது.

கடந்த 1972-73-ம் ஆண்டு முதல் 1974-75-ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளிலும் இந்திய அரசு தமிழகத்திற்கு வகுத்த இலக்கினையும் தாண்டிடும் வகையில் அறுவை சிகிச்சைகள் இங்கே நடைபெற்றிருக்கின்றன.

எனினும், அறுவைச் சிகிச்சைக்கென்று முன்பு மத்திய அரசு அளித்த நிதியுதவி இப்போது குறைக்கப்பட்டு விட்டது.

குடும்ப நலத்திட்டச் செயலாக்கத்தையொட்டி பிரச்சாரம்—விளம்பரம் முதலான பிற ஏற்பாடுகளுக்கென, இந்திய அரசு முன்பு வழங்கி வந்த நிதியுதவியும் பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது.

அதற்காக—அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள முன்வரும் ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் முன்பு அளித்து வந்த தொகையினையும் குறைத்திட முடியவில்லை. இதனால் செலவுச் சுமை தமிழக அரசின் மீது ஏராளமாக ஏறிக்கொண்டே இருக்கிறது.

அதற்காகக் குடும்ப நலத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறிட, விறுவிறுப்போடு எடுக்கப்படும் நடவடிக்கைகளில்—துளியளவு கூடத் ‘தொய்வு’ விழுந்துவிடவும் இடம் தந்திடவில்லை நாம்!

இவ்வாறு மக்கள் தொகையினைக் கட்டுப்படுத்துவதில் நம்முடைய மாநில அரசு காட்டிடும் ஆர்வத்தால் நமக்குச் சில இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

பிறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைத்து விட்டதன் விளைவாக நாடாளு மன்றத்தில் 41 ஆக இருந்த தமிழக உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 ஆகக் குறைந்து போய்விட்டது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மக்கள் தொகையே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால், அந்த வகையிலும் தமிழ்நாட்டிற்கென ஒதுக்கப்படக் கூடிய நிதியின் அளவும் இயல்பாகக் குறைந்தே போகிறது.

இத்துணை இடர்ப்பாடுகள் அடுக்கடுக்காக எதிர்த்து வந்திட்ட போதிலும் குடும்ப நலத்திட்டத்தை முடுக்கி விடுவதில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளது மாநில அரசு!

ஏன் தெரியுமா?

எதிர்காலத்தை இருள் சூழாவண்ணம்—

தாய் நலமும், சேய் நலமும், தனி அக்கறையுடன் காப்பாற்றப்பட—

வருவாய்க்கேற்ற வளமான வாழ்வு எவராக இருப்பினும் எளிதில் அமைந்திட—

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் ஊனம் ஏதும் அடையாமல் உருப்படியாய் நிறைவேறிட—

மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துவதை விட வேறு வழியே இல்லை என்பதில் முழு நம்பிக்கைக் கொண்டுள்ளது தமிழக அரசு!

இந்தியாவில் குடும்ப நலத் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தினை வகிக்கிறது.

22 மாநிலங்களில் ஒன்றிரண்டு மாநிலங்களில் மட்டும் இந்தத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுவதும் மற்றப் பெரும்பாலான மாநிலங்கள் நத்தையென நகர்வதும் நல்லதல்ல!

இன்னும் பத்தாண்டுக் காலத்தில் தமிழகம் மட்டும் தீவிரமாகச் செயலாற்றி மக்கள் தொகை ஓரளவில் இருக்குமாறு கட்டுப்படுத்திவிட—ஆனால், அண்டையிலுள்ள மாநிலங்கள் அவ்வாறு செய்யாமல் மக்கள் தொகை பல மடங்கு பெருகுவதற்கு இடம் கொடுத்து விடுவதாக வைத்துக் கொள்வோம்.

மக்கள் தொகை மலையென வளர்ந்துவிட்ட மற்ற மாநிலத்தைச் சார்ந்தோர்—மக்கள் பெருக்கம் இல்லாத மாநிலங்களில் குடியேற முற்பட்டால் நிலைமை என்ன ஆகும்? அங்கெல்லாம் குடும்ப நலத் திட்டத்தை நிறைவேற்றியதன் நோக்கமே தோற்கடிக்கப்பட்டு விடாதா?

எனவே, அகில இந்திய அளவிலே—எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான அடிப்படையிலே—நாடாளு மன்றமே ஒரு சட்டத்தை நிறைவேற்றி அதனைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகளோடு சேர்ந்து மத்திய அரசும் தீவிரமான அக்கறை செலுத்திட வேண்டும்.

மதுவிலக்குத் திட்டம், குடும்ப நலத்திட்டம் போன்றவைகள் ஒன்றிரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே ஒதுக்கிவிட்டு, மற்ற மாநிலங்கள் தங்கள் போக்கில் போய்க் கொண்டிருப்பது—இந்தியாவின் முழுமையான முன்னேற்றத்திற்கு—ஒருமைப்பாட்டு வலிமைக்கு ஊறுதான் விளைவிக்குமேயன்றி வேறல்ல!

தமிழ்நாட்டு மாவட்டங்களில் எல்லாம், குடும்ப நலத் திட்டத்தையொட்டிய ‘முன்பியக்கம்’ இந்த ஆண்டுக்குரிய இலக்கை எட்டிட வேண்டிச் சுறுசுறுப்போடு நடந்தேறி வருகிறது. இப்போது தஞ்சையில் அதனைத் தொடங்கியுள்ளார்கள், சில மாவட்டங்களில் ‘முன்பியக்கக்’ காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உள்ளாட்சித் துறையினர், குடும்ப நலத்துறையினர்—ஆகிய அனைவரும் ஏனைய துறைகளைச் சார்ந்தோரும் இணைந்து நின்று இந்த இருவார விழாவினை வெற்றிகரமாக நடத்திடுவர் என்னும் நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு!

‘சிறு குடும்ப நெறி’ அளிக்கக்கூடிய சிறப்பினை—செழிப்பினைப் பொதுமக்களுக்குத் தெளிவாக விளக்கிக் காட்டிட, இந்த விழா ஓர் அரிய வாய்ப்பாக அமைந்திடல் வேண்டும்.

அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கினால்தான் எந்த ஒரு திட்டத்தினாலும் ஏற்படக்கூடிய இனிய பலன்கள் சமுதாயத்துக்கு முழுமையாகக் கிடைத்திட முடியும்.

இதனை நெஞ்சிலே நிறுத்திப் பொதுமக்களும் தங்களுக்குள்ள பொறுப்பினை உணர்ந்து இந்தக் குடும்ப நலத்திட்ட இருவார விழா வெற்றிக்கனியினைக் கொய்திட ஒத்துழைப்பை நல்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அச்சிடப்பட்ட source / occasion note — scan 7

[1975-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 15-ம் நாள் துவங்கிய குடும்ப நலத்திட்ட இருவார விழாவினையொட்டி தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தி]

கலைஞர் மு. கருணாநிதி · வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்