கட்டுரை 19 / 19
19
19
அச்சுப் பக்கம் 77–77
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இப்போது வயது நாற்பத்தி ஆறு: தோற்றம் வயதைத் தெரிவிக்காது என்றாலும் நன்கு முதிர்ச்சி பெற்ற கருத்துக்களை மேடைகளில் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் குனிந்து வளைந்த, ஆனால் யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருகிறார். கறுப்புச் சட்டை மேனியை அலங்கரிக்கிறது. கையில் சொற்பொழிவுக்கான குறிப்புகள். அருகேயுள்ள மேஜையிலே அன்றைய பேச்சுக்கான ஆதாரங்களை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பான பெரிய பெரிய புத்தகங்கள். “இங்கேதான் நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது; மிக முக்கியமானது” என்ற சொற்றொடர் அடிக்கடி பேச்சினிடையே வந்து கொண்டிருக்கிறது. மணிக்கணக்கில் பேசுகிறார். யார் இவர்?
வேறு யாருமல்ல: தனது பத்தாவது வயதிலேயே திராவிடர் இயக்க மேடைகளில் பேச ஆரம்பித்தவர்—இன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்—விடுதலை நாளிதழின் ஆசிரியர்—வீரமணி அவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.
பத்து வயது முதற்கொண்டே பெரியாருடன் பணிபுரிந்து கொண்டு—பள்ளியிலும் பயின்று—கல்லூரியிலும் பட்டம் பெற்று—திராவிடர் கழகத்தின் ஒப்பற்ற தொண்டராகவும் விளங்கிய வீரமணி, இளந்தளிர்ப் பருவத்திலே மேடையிலே பேசுகிற வியப்புமிகு நிகழ்ச்சியைக் காணப் பெருங்கூட்டம் திரளும்.
பெரியாரின் தலைமையை ஏற்றுக் கொண்டோம் என்பது மட்டுமல்லாமல்—அவருடனேயே இருந்து—அவருடனேயே சுற்றுப்பயணம் நிகழ்ச்சிகளுக்குச் சென்று—அவரது குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு ஏடுகளின் அலுவலகங்களில் பணிபுரிந்து—அவரது கொள்கைகளை எழுத்து வாயிலாகவும், பேச்சின் மூலமும் மக்களிடம் பரப்பிய பல தலைவர்கள் உண்டு.
அவர்கள், கால வேறுபாட்டால் பல இயக்கங்களுக்குச் சென்றிருக்கக் கூடும். ஆனாலும் அவர்கள் தலைவர்களாக, பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக மதிக்கப்பட்டதற்கும்—மதிக்கப்படுவதற்கும்—பெரியாரிடம் பெற்ற பயிற்சியே காரணம் என்பதை அவர்களும் மறந்ததில்லை! மறைத்ததுமில்லை!
அதைப்போலவே பெரியாரைத் தலைவராகக்கொண்ட பேரறிஞர் அண்ணாவின் தலைமையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல; அவருடன் உரையாடி—அவருடன் நீண்ட சுற்றுப்பயணங்களில் கலந்து கொண்டு—அவரை பிரியாமல் இருந்தே பயிற்சி பெற்றுப் பல்வேறு ஆற்றல் பெற்றவர்களும் உண்டு!
பெரியார்—அண்ணா—இருவரிடமும் பயிற்சி பெறக் கூடிய வாய்ப்பு பெற்று அவர்கள் வகுத்த இலட்சியங்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்களும் உண்டு! அவர்கள், தாங்கள் பெற்ற அந்த அரும் பேற்றுக்காகப் பெருமைப்படக் கூடியவர்கள்! அந்தக்குழுவினில் எனக்கும் ஒரு இடம் இருந்தது! என்று என்னைப்போல எண்ணி மகிழக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள்.
மிக இளம் வயதிலே சிறுவர் சிறுமியர் மேடைகளில் பேசுவது இன்றைக்கு எல்லாக் கட்சிக்கூட்டங்களிலும்; ஏன், சமய நெறிக் கூட்டங்களில் கூடக் காணுகிற நிகழ்ச்சியாகி விட்டது.
ஆனால், பல சிறுவர், சிறுமியர்—ஏதோ தாங்கள் பெற்றோர் ஆசைக்காக—உற்றார் உறவினர் விருப்பத்திற்காக—அல்லது அந்தச் சிறுவர்களே அதை ஒரு “மேனரிசம்” ஆக எடுத்துக்கொண்டு, மேடைகளில் யாரையோ தாக்கியோ, புகழ்ந்தோ பேசிவிட்டு கைத்தட்டலைப் பெற்று விட எண்ணுகிறார்களே தவிர, தங்களுடைய கல்விப் பயிற்சியை வளர்த்துக் கொள்ளவும், தெளிவாகத் தெரிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை.
அத்தகைய சிறுவர்கள், அல்லது சிறுமியர்—நண்பர் வீரமணி எப்படித் தனது இளம் வயதில் இடைவிடாது உழைத்து—கல்வியில் அக்கறை காட்டி—தலைவரிடம் விசுவாசமாக இருந்து—அதேபோலக் கொள்கையிலும் உறுதியாக விளங்குகிறார் என்பதைவெல்லாம் எண்ணிப் பார்த்திட வேண்டும்.
பெரியாரின் அண்ணன் மகனார் தோழர் ஈ.வெ.கி. சம்பத், இளம்வயதிலேயே அண்ணாவுடன் நெருங்கிப் பழகி—“சொல்லின் செல்வர்” என்ற சிறப்புப் பெறுகிற அளவுக்குப் பேச்சாளராக விளங்கினார். கொள்கையில் நிலைத்த நெஞ்சமில்லாத காரணத்தால் அவரது அரிய ஆற்றலைத் தமிழகம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இயற்கை, அவரை முழுவாழ்வு வாழ<!-- source scan: 82 / printed page: 80 --> விடாமல் நம்மிடமிருந்து பறித்துக்கொண்டு விட்டது. திராவிடர் இயக்கம், தமிழ் தேசியக் கட்சி, காங்கிரஸ் என்று கட்சி மாற்றங்கள் அவருக்கு ஏற்பட்டபோதிலும் வீருகொண்ட விரிவுரையாளராகத் திகழ்ந்தார்.
அவரை எதிர்த்துத் தி.மு.கழகச் சார்பில் 1962-ல் தென்சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாஞ்சிலார் என்னும் நாஞ்சில் கி. மனோகரன் அவர்கள், அவருக்கு ஈடுகொடுக்கும் சொல் வல்லாராகத் திகழ்ந்தவர்—இப்போது மின்வெட்டுப் போன்ற மிடுக்கான பேச்சுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிற அவர், தனது இளம் பிராயத்திலேயே மேடைகளில் முழங்கிடத் தொடங்கியவர்தான்!
மிக இளம் பருவம் எனக் கூறமுடியாவிட்டாலும்—கட்டிளம் காளையாக மேடையேறிக் கனல் தெறிக்கும் சொற்களால் மக்களைக் கவர்ந்து கடினமான விஷயங்களையும் பெரியார் பாணியில் மிக விரிவாக எடுத்துரைத்து “வாலிபப் பெரியார்” என்றே அழைக்கப்பட்ட வசீகரமிகு பேச்சழகர் எ.வி.பி. ஆசைத்தம்பி அவர்கள், மறைந்து விட்டார் எனினும் அவரது எழுத்து, பேச்சு ஆகிய தொண்டுகளை மறந்திட இயலுமோ!
பெரியார், அண்ணா இருவரின் அணுக்கத் தொண்டராகவும், எனக்கு உறுதுணையாகவும் இருந்த என். வி. நடராசனார் கொள்கைப் பிடிப்புடன் அழுத்தம் திருத்தமாக அளப்பொழியுமாறு ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசி, மக்களின் அன்பைப் பெற்றவரன்றோ!
“பேசும் கலை வளர்ப்போம்” என்ற இந்தக் கட்டுரைத் தொடர் வாயிலாக, எளிய நடையில் பல இனிய நிகழ்ச்சிகளையும்—இதயத்தைத் தொடும் நிகழ்ச்சிகளையும்—பல்வேறு துறைகளிலும் இயக்கத்திலும் உள்ள திறமை வாய்ந்த பேச்சாளர்களைப் பற்றியும்—எப்படிப் பேச வேண்டும், பேசக் கூடாது என்பன போன்ற கருத்துக்களையும்—என்னால் இயன்ற அளவு எடுத்துக் கூறியிருக்கின்றேன்.
பேசும் கலையில் சிறந்து விளங்கிட விழைந்திடுவோர்க்கு இந்தக் கட்டுரைத் தொடரும் ஓரளவு பயன்படுமேயானால், நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன்.
கலைஞர் மு. கருணாநிதி · பேசும் கலை வளர்ப்போம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்