கட்டுரை 6 / 19
6
6
அச்சுப் பக்கம் 29–29
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
முன்பெல்லாம் நான் திருமண விழாக்களில் பேசும் போது வெளிநாட்டுச் சிறுகதையொன்றை எங்காவது ஒரு மணவிழா நிகழ்ச்சியில் சொல்லுவதுண்டு. அந்தக் கதையை மிக விரிவாக மெருகிட்டு நமது தாய்நாட்டுக்கு ஏற்றவாறு கூறுவேன்.
“ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். ஏழ்மை அவர்களைத் தாக்கியது. பிழைப்புக்கு வழியின்றித் தவித்தனர். ஒருநாள் மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்கு மிங்கும் மிரண்டு ஓடியது.
அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான். அறிவிற் குறைந்த அந்தக் கணவன் மாட்டைக்<!-- source scan: 32 / printed page: 30 --> கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.
எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி, கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய் விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக் கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.
போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்து விடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.
அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து “அட முட்டாளே! நானும் உன்னை கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய்—ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய்—கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய்—இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியே விடுவாள்; அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்” என்றான்.
அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்றான். நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிட வேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிட வேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டுக்குத் திரும்பினர்.
அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களை எல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான். அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து, “அந்தத் தேநீராவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்களா?” என்று அன்பொழுகக் கேட்டாள்.
பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி. பந்தயத்தில் தோற்றுப் போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்து விட்டான்.
மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, “என்னடா, உன் மனைவி உன்னைவிட மூடமாக இருக்கிறாள்?” என்று கேட்டான். “அப்படியொன்று மில்லை. என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ கோபமோ இருந்தாலும் அதைப் பிறர் முன்னால் காட்டிக் கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்” என்றான் அந்த அறிவிலிக் கணவன்.
தங்கள் குடும்பத்துப் பிரச்சனைகளைப் பிறர் முன்னால் பெரிதுபடுத்தக் கூடாது என்பதற்கு இந்தக் கதை எடுத்துக் காட்டு!”
மணமக்களுக்கு அறிவுரை வழங்குவதுபோல் நான் இதைச் சில இடங்களில் வாழ்த்துரையில் இணைத்துக் கூறியிருக்கிறேன்.
நாகையில் ஒரு திருமணம். அங்கு வாழ்த்துரைக்குச் சென்ற நன்னிலம் நடராசன் என்ற கழகப் பேச்சாளர் இந்தக் கதையை நகைச்சுவையுடன் கையொலியும் சிரிப்பொலியும் எதிரொலிக்கிற அளவுக்குச் சொல்லியிருக்கிறார்.
அதே மண விழாவுக்கு இன்னொரு பேச்சாளர் தாமதமாக வந்திருக்கிறார். அவருக்கு நன்னிலம் நடராசன்<!-- source scan: 34 / printed page: 32 --> இந்தக் கதையைச் சொன்னது தெரியாது. அவரை வாழ்த்த அழைத்த போது அவரும் இதே கதையை மிகவும் அழகுபடவும் சுவையாகவும் நீட்டி முழக்கியும் சொல்லியிருக்கிறார். மக்களிடமிருந்து எந்தவிதமான வரவேற்பும் இல்லை. பலர் எழுந்து போகத் தொடங்கினர். சிலர் கேலியாகப் புன்னகை புரிந்தனர்.
பேசி முடிந்ததும் பேச்சாளர், நடராசனைப் பார்த்து “என்ன நடராசா! கலைஞர் சொன்ன கதையைச் சொன்னேன். ஒருவரும் ரசிக்கவில்லையே?” என்று வியப்புடன் கேட்டிருக்கிறார். “அண்ணே, நான் அந்தக் கதையை முதலிலேயே சொல்லிவிட்டேன்” என்று நடராசன் சிரித்திருக்கிறார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிற சொற்பொழிவாளர்கள், தங்களுக்கு முதலில் பேசியவர்கள் என்ன பேசினார்கள் என்பதை கவனிக்க வேண்டும். நிகழ்ச்சிக்குத் தாமதமாக வர நேரிட்டால் மேடையில் உள்ளவர்களிடம் மாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் பேசியதையே அடுத்தவரும் அதே நிகழ்ச்சியில் திரும்பப் பேசினால் அப்படிப் பேசுகிறவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
அதிலும் குறிப்பிட்ட குட்டிக் கதைகள், உவமைகள், உதாரணங்கள் கூறுவதில் தனக்கு முன் பேசியவர் எது குறித்துப் பேசினார் என்பதைத் தெரிந்து கொண்டு பேசுவது மிக முக்கியம்.
கலைஞர் மு. கருணாநிதி · பேசும் கலை வளர்ப்போம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்