கட்டுரை 2 / 19

2

2

அச்சுப் பக்கம் 10–10

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

அப்போது வயது எனக்கு பதினைந்து! என்னுடன் படித்த மாணவ நண்பர்கள் சிலரையும் நான் வசித்த தெருவில் உள்ள இளந்தோழர்கள் சிலரையும் சேர்த்துக் கொண்டு “சிறுவர் சீர்திருத்த சங்கம்” என்ற ஒரு அமைப்பை ஒரு ஓலைக் குடிசையில் தொடங்கினேன். அதில் காலணா கொடுத்தவர்களே உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள். வாரந்தோறும் அவர்கள் சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒரு பைசா சந்தாக் கட்டணம் செலுத்திவிட வேண்டும்.

“நெஞ்சுக்கு நீதி” என்ற எனது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளின் முதல் பாகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல, ஓலைக் குடிசையில் இருந்த அந்தச் சங்கம், விரைவில்—பழுதுபட்ட ஒரு ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு மாற்றப்பட்டது. அதற்கு முன்பே அந்த ஓலைக் குடிசையில் ஏழெட்டு சிறுவர்களை உட்கார வைத்துக்கொண்டு சங்கத்தின் தலைவனான நான் பேசுவேன்.

சிறுவர்கள் சுகாதாரத்துடனும் ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். பீடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகக் கூடாது. தீமை தாக்கக்கூடிய வார்த்தைகளை யாரும் பேசக் கூடாது. இதுபோன்ற அறிவுரைகளை எடுத்துச் சொல்வேன்.

அந்த ஓலைக் குடிசைக்குப் பக்கத்து வீடுதான் மறைந்த இசைமணி டி. வி. நமசிவாயத்தின் வீடு! நமசிவாயம் என் இளமைக் கால நண்பர். அவரது மாமன்கள்தான் டி. என். இராமன்—டி. என். லட்சப்பா என்ற சுயமரியாதை இயக்கத்தின் சுடர்களாக அப்போது அந்தப் பகுதியில் விளங்கியவர்கள். அறிஞர் அண்ணா அவர்களைக் கொண்டு பாட்டுக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பணமுடிப்பு வழங்கிய விழாவுக்கு முயற்சி எடுத்துக் கொண்ட டி.எம். பார்த்தசாரதி, ஜலகண்டபுரம் கண்ணன் போன்றவர்களுடன் முன்னணியில் நின்று பாரதிதாசன் மலர் ஒன்றையும் வெளியிட்டவர்தான் டி. என். இராமன்!

அத்தகைய அரசியல் சமுதாய ஈடுபாடு கொண்டவர்களை நண்பர் நமசிவாயம் இல்லத்தில் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. அதன் காரணமாகப் பல புத்தகங்களையும் பத்திரிகைகளையும் காண முடிந்தது. பல அரசியல் தலைவர்களின் கருத்துக்களைப் படித்து உணர்ந்து கொள்ள முடிந்தது.

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இது நமது கிராமங்களில் இன்னமும் ஒலிக்கிற பழமொழி. அதைப்போல பேசுவதற்கும் எதாவது விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தால்தானே பத்து பேர் கூட்டமென்றாலும் பேச வரும். பல தலைவர்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் பழக்கம்—நாளிதழ்கள்—வார—மாத இதழ்களை ஆர்வத்துடன் காத்திருந்து வாங்கிப் படிக்கும் பழக்கம்—இவைகள் என் உள்ளம் என்ற சட்டியை நிரப்பி வைத்திருந்தன. அந்த வயதில் புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் சமுதாயப் பிரச்சினைகளைப் புரிந்து வைத்துக் கொண்டிருந்தேன். அதனால் அந்த ஓலைக் குடிசைக் கூட்டங்களில் என்னால் நடுக்கமின்றிப் பேச முடிந்தது. அந்தத் தயாரிப்பு, நான் பயின்ற உயர்நிலைப்பள்ளியில்<!-- source scan: 14 / printed page: 12 --> நடைபெற்ற மேடைப் பேச்சுப் போட்டிக்கு மிகவும் துணையாக இருந்தது.

அவை நடுக்கம்—அதாவது சபைக் கூச்சம்—அதிலிருந்து ஒருவன் மீண்டுவிட்டால், அவன் நல்ல பேச்சாளனாக வாய்ப்புப் பெற்று விட்டான் என்று கூறிவிடலாம். இன்றைக்கு மேடை அதிர முழங்குகிற பல பேச்சாளர்கள் தங்களது முதல் மேடைப் பேச்சின்போது உடலிலுள்ள நாடி நரம்புகள் எல்லாம் அதிக வியர்வை வழிந்தோட—நாக் குழற மேடையில் நின்றிருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

அந்தச் சங்கடம் எனக்கு ஏற்படாமல் போனதற்கு இளம் வயது முதலே, சிறுசிறு கூட்டங்களில் நானே பேசிப் பழகிக்கொண்டதுதான். அப்படியிருந்தும்கூட பெரிய கூட்டங்களைக் காணும்போது ஆரம்பகாலத்தில் சிறிது நேரம் எனக்கு நடுக்கம் ஏற்பட்டதும் உண்டு. உயர்நிலைப் பள்ளியில், ‘நட்பு’ என்ற தலைப்பில் எனது முதல் மேடைப் பேச்சை நிகழ்த்தினேன்.

எனது தமிழாசிரியர்களில் ஒருவரும், இன்று மகா வித்துவானாக விளங்கக் கூடியவருமான, தண்டபாணி தேசிகர் அவர்கள்தான் எனது பேச்சுக்குத் தேவையான பல குறிப்புகளை எனக்கு வழங்கினார். அந்தக் குறிப்புகளைப் பெற, அவரது வீடு தேடி நாலைந்து முறை நடந்திருக்கிறேன். திருவாரூர் குமர கோவில் தெருவில் அப்போது அவர் குடியிருந்தார். அவர் தந்துதவிய குறிப்புகளை அப்படியே எழுதி, பல முறை மனப்பாடம் செய்து கொண்டேன். ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசிய எனக்குத்தான் மிகப் பெரும் பாராட்டு கிடைத்தது.

நான் அந்தப் பாராட்டைப் பெறுவதற்கு இரண்டு மூன்று நாட்கள், நான் எழுதிய குறிப்புக் கோவையை உறக்கமின்றி மனப்பாடம் செய்திருக்கிறேன். வீட்டில்<!-- source scan: 15 / printed page: 13 --> உள்ள தூண்கள், சுவர்கள், இவைகளின் முன் எல்லாம் நின்று பேசிப் பார்த்திருக்கிறேன். என் வீட்டார் அனைவரையும் தாழ்வாரத்தில் உட்கார வைத்து, நான் முற்றத்து மையத்தில் நின்று பேசிக் காட்டி ஒத்திகை நடத்தியிருக்கிறேன். அதனால்தான் எனது மாணவப் பருவத்து முதல் மேடைப் பேச்சு, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவராலும் பாராட்டப்படுகிற அளவுக்கு அமைந்தது.

சபை நடுக்கத்தால் ஏற்படுகிற வேதனையான விளைவுகளுக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.

‘கடவுள்’ என்ற தலைப்பில் எனது பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி! அதில் எனக்கு எதிராகப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ நண்பர், பேசத் தொடங்கும்போதே நாக்கு தடுமாறிற்று. எப்போது பேச்சை முடிப்பது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த அந்த நண்பர் “இதுடன் என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்” என்று கூறுவதற்குப் பதிலாக—“இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்” என்றாரே பார்க்கலாம்! கூட்டம் ‘கொல்’லென்று சிரித்துவிட்டது.

நடிகர் திலகம் சிவாஜி நடித்த “கட்டபொம்மன்” நாடகம், சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. அந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டும் வாய்ப்பு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் எனக்குக் கிட்டியது. “தம்பி! நீ எங்கிருந்தாலும் வாழ்க!” என்று அண்ணா சிவாஜிக்குக் கூறிய அன்பு வாழ்த்து—அந்த நிகழ்ச்சியில்தான்!

ஒரு பெரும் பட அதிபர், நாடகம் காண வந்திருந்தார். திடீரென சிவாஜி அவர்கள் அவரை மேடைக்கு அழைத்து மாலை அணிவித்து இரண்டு வார்த்தை வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் பட அதிபர் ஒலிபெருக்கியின்<!-- source scan: 16 / printed page: 14 --> முன்னால் நின்றார். கை கால்கள் உதறல் எடுத்தன. எத்தனையோ இயக்குநர்களை, நடிகர், நடிகைகளை, திரையுலக நிபுணர்களை உருவாக்கிய பெரியவர் அவர்! நூற்றுக்கணக்கானவர்கள் அவரது நிறுவனத்தில் பணிபுரிகிற அளவுக்கு படத்துறையில் சிறந்த அனுபவம் பெற்றவர். இந்தி மொழியிலும் கூடப் படங்கள் எடுத்து, தமிழகத்துக் கலைத் திறனை வெளிப்படுத்தியவர். மலை போன்ற உருவம் கொண்டவர். அப்படிப்பட்டவர் ஒலிபெருக்கியின் முன்னால் நின்றவுடன் வியர்வைக் கடலில் மிதந்தார். இறுதியாக அவர் பேசியது என்ன தெரியுமா?

“நானும் நீங்களும் கண்டு களித்த...இந்த...இந்த... பொம்மன் கட்டன் நாடகமானது...”

அதுவரையில் அவையோர் சும்மா இருப்பார்களா! அதிர் வெடிச் சிரிப்பு! இதற்குமேல் அவருக்குத்தான் பேச வருமா? முடியுமா?

இதிலிருந்து, பேசும் கலைக்குப் பெருமை சேர்க்க வேண்டுமானால், முதலில், கூட்டத்தைக் கண்டு ஏற்படுகிற அச்சத்தை மெல்லமெல்ல ஒத்திகை பார்த்தாவது போக்கிக் கொள்ள வேண்டும் என்ற உண்மை புரிகிறதல்லவா?

கலைஞர் மு. கருணாநிதி · பேசும் கலை வளர்ப்போம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்