கட்டுரை 2 / 6
‘அஸ்தி’ கரையட்டும்!
Let the ‘Ashes’ Dissolve!
அச்சுப் பக்கம் 11–16
scan 10 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
குள்ளநரிக் குணம்படைத்த ஒரு வஞ்சகப் பார்ப்பனனால் கொலை செய்யப்பட்ட காந்தியாரின் ‘அஸ்தி’ கரைப்புச் சடங்கும் இந்துமத முறைப்படி, அநேக புண்ய(!) நதிகளில் நடைபெற்றுவிட்டது.
அண்ணல் காந்தியாரின் உடல் இவ்வளவு சீக்கிரத்தில் நெருப்பில் நொறுக்கப்பட்டு, ‘அஸ்தி’ கரைக்கும் நிலைமை ஏற்படும் என யாரும் எதிர் பார்க்கவில்லை.
அந்தக் காரியத்தை ஆரியம் செய்துவிட்டு, அந்த ‘ஆனந்த சுதந்திரத்தைக்’ கொண்டாட மிட்டாய்கள் வழங்கியதோடு நிற்காமல், காந்தியாரின் கொலையையும் தன் கொள்கைக்குச் சாதகமாக்கிக்கொண்டு, ஒரு கோரமான சுடுகாட்டைத் திராவிடத்தில் உண்டாக்க ஆயத்தம் செய்கிறது.
அந்த இடுகாட்டிற்கு அஸ்திவாரக்கல் நாட்டுவது போல, மித்திரன்—இந்து போன்ற ஆரிய ஏடுகள் விஷமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
அந்தக் கல்நாட்டு விழாவைத் தோழர் பாஷ்யம் அய்யங்கார் நடத்தி யிருக்கிறார்!
காந்தியாரைக் கொன்றவன் ஒரு பார்ப்பனன் என்ற செய்தியைப் பத்திரிகைகள் மறைத்துள்ள நேரத்தில், திராவிடர் அதை அம்பலப் படுத்துகிறார்கள் என்பதுதான் அய்யங்காரின் இருதயத்திலே விழுந்த இடி! இந்து—மித்திரன் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கிலி!
ஜவஹரைக் கொல்ல முயற்சித்தவன் யார் என்று தெரியாமல் இருக்கும்போதே—அவன் ஒரு முஸ்லீம் என்ற செய்தியைப் பிரசுரித்துப் பல இடங்களில் இந்து—முஸ்லீம் போராட்டத்தைத் தூண்டிவிட்டு, ஈரோடு போன்ற இடங்களில் இலட்சக் கணக்கான ரூபாய் பொருள் சேதத்தை விளைவித்து விட்டு- இன்று உத்தமர் காந்தியாரின் உயிரைக் குடித்தவன் ஒரு ஊதாரிப் பார்ப்பனன் என்ற செய்தி, உறுதியான செய்தி வெளியாகிற பொழுது, ஆரியமே! நீ உறுமுவது ஏன்?
ஐயோ! எங்கள் மானம் போகிறதே! ஒரு பிராம்மணன் கொலை செய்ததற்காக, எங்கள் கோத்திரத்தையே சந்தியில் இழுக்கிறீர்களே எனக் குய்யோ முறையோவென ஒப்பாரி வைக்கும் ‘இந்து’ பத்திரிகையாரே! முதலில் உமது நீலிக் கண்ணீரைத் துடையும்! உமது இன வரலாற்றின் பழைய சுவடியைச் சற்றுப் புரட்டிப் பாரும்!
இதோ பாரும்.....—எத்தனை சூரர்களின் உயிர், உம் வர்க்கத்தின், சூழ்ச்சியால் சூறையாடப்பட்டிருக்கிறது, என்பதை!........
துப்பாக்கி ஏந்தாத காலத்திலே துளசிமணி மாலையையும், தர்ப்பையையும் காட்டி, எத்தனை தோள்வலி கொண்டோரின் வாழ்வைத் துளைத்திருக்கிறது, உமது இனம்!
களத்திலே காளையெனப் போரிட்டோரெல்லாம் உம்மினத்தவரின் கமண்டலத்திற்கு முன் கதியற்ற பிணமாயினரே! அவ்வளவு ஏன்? ....
நேற்றைய ‘அற்பாயுசு’ ஆட்சியில்கூட, ஆச்சாரியார் அவர்களின் கொடுமைக் கூர் அம்புகளால் இரண்டு திராவிடச் சிங்கங்கள் குத்துண்டு மடிந்தனவே!
சேலத்திலே கண்ணையும் காலையும் இழந்தவர்—உடையார் பாளையத்தில் உயிரினுமினிய மனைவி, மழலை பேசும் மக்கள் இவர்களைத் தனியே, தவிக்க விட்டு விட்டு, தணியாத சோகத்திற்கு ஆளாக விட்டு விட்டு—அத்தான்—அத்தான் என அந்த அம்மை அழ, அப்பா—அப்பா என அவர் குழந்தை அழ, சித்திர வதைக்குள்ளான வேலாயுதம்—இவர்களெல்லாம் உம்மினத்தின் கொள்கையை எதிர்த்ததற் கல்லவா, இந்தப் பரிசு பெற்றார்கள்?
குடியேறிப் பிழைக்க வந்த உமது இனத்தின் கோரப் பற்கள் காந்தியாரையும் ருசி பார்த்துவிட்டு, அந்த இரத்த வெறி அடங்காமல் திராவிடரின் குரல் வளைக்கும் குறிவைக்கின்றனவே!
காந்தியாரைப் பார்ப்பனன் கொன்ற செய்தியை வைத்துக் கொண்டு பார்ப்பன துவேஷத்தைக் கிளப்புகிறார்கள் திராவிடர்! ஆகவே அரசியலார் அவர்கள் பக்கம் கண் திருப்ப வேண்டும் என ஆணையிடுகிறது, ஆரியம்!
உண்மையான செய்தியை வெளியிடுவது, ஆரிய அகராதிப்படி, துவேஷம்!
இந்த அகராதி இருக்கலாமா? இருக்க விடலாமா? என்பது திராவிடரைப் பார்த்து, நாம் கேட்கும் கேள்வி!
ஏ! ஆரிய ஏடே! காந்தியாரைத் தப்பித் தவறி ஒரு முஸ்லீம் கொன்றிருந்தால், இந்நேரம், இந்தியாவின் மண்ணை, இரத்த நிறமாக்கி இருப்பாயே! வங்காளக் கடலிலும்—அரபிக் கடலிலும் சவங்களை மிதக்க விட்டுப் பார்த்திருப்பாயே! அவ்வளவு வேகமாக உன் விஷமப் பிரச்சாரம் நடைபெற்றிருக்குமே!
அதை விடுத்து........‘காந்தியாரைக் கொன்ற பிறகாவது, பார்ப்பனீயத்தை நம்பாதீர்கள், திராவிடரே!’ என எச்சரிக்கை வழங்குகிறவர்கள் மீது “எறியுங்கள், சட்ட விரோத பாணத்தை” எனத் தூண்டுவது ஏன்?
வெள்ளாட்டின் விலாவை முறித்து, அதை விழுங்கிய வேங்கை—அடுத்த வேட்டைக்குத் தயாராவதற்கு முன், எதிரே வரும், மான், தன் குட்டிகளுக்கு எச்சரிக்கை செய்வது, ‘வேங்கை-மான்குட்டி துவேஷத்தைக் கிளப்புவதாகும்’ என நினைத்துப் பேசாமலிருக்க முடியுமா!
காந்தியார், உண்மைக்காகப் பாடுபட்டார். காந்தியாரைக் கொன்றவன், பார்ப்பனன் என்ற உண்மையை, நீ மறைத்தாய், ஏன்?
காந்தியார் அமைதியாகப் பாடுபட்டார். காந்தியாரின் சாம்பல் கரைவதற்கு முன்பே, நீ உன் சாணக்கிய வலையை வீசி அமைதியைக் குலைக்க எண்ணுகிறாயே, ஏன்?
“காந்தியார் பார்ப்பனனால் கொல்லப்படலாம்.... ஆனால் அதை வெளியிடுவது குற்றம்!” இதுதானே உன் முடிவு!
இது பத்திரிகை தர்மம் அல்லவே! செய்திகளை மறைக்காமல் வெளியிடுவதற்குப் பெயர்தானே, பத்திரிகை!
இனநலத்திற்குப் பாதகம் ஏற்படும்போது செய்தியில், கத்தரிக்கோல் வேலை நடத்துவது என்பதுதான் அகில இந்திய பத்திரிகாசிரியர் மாநாட்டு, இரகசியத் தீர்மானமா?
பார்ப்பனீயமே! உன் ஆதிக்கத்திற்கு அழிவுகாலம் என்ற அறிகுறி தென்பட்டதும் அண்ணல் காந்தியாரை அழித்தாய்.
அவர் அஸ்தியைக் கரைக்கும் சடங்குகளில்—வைபவங்களில், உன் கொள்கையை—உன் சாஸ்திர—சம்பிரதாயத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொண்டாய்!
புத்த மதத்தை ஒழிக்க, புத்தரைக் கடவுளாக்கியதுபோல் காந்தி கொள்கைகளைக் கருவறுக்க அவரையும் கடவுளாக்கக் கங்கணம் கட்டி விட்டாய்!
இப்பொழுது, உன்னுடைய ஒரேஎதிரி, திராவிடர், திராவிட கழகத்தார்.
உன் காலடியில் கிடந்த, விபீஷணர்கள்கூட, உன் கோரச் செயலுக்குப் பிறகு கண்விழித்துப் பார்த்து, உன் சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்க எண்ணிவிட்டனர்!
நீ....பழைய வெங்கண்ணா வாழ்வு வாழவேண்டுமானால்; சாணக்கிய சாம்ராஜ்யம் சிருஷ்டிக்க வேண்டுமானால்; உன் இனத்தின் மேனி மெருகு கலையாமல்—குலையாமல், உல்லாசமாய்—உழைக்காத சமுதாயமாய்—உண்பதும், உறங்குவதுமே பிறவி யெடுத்த பயன் எனக்கொண்டு வாழ்க்கையை, அமைக்கவேண்டுமானால்; திராவிடரை, திராவிட இன உணர்ச்சியை, இன முழக்கத்தைத் தீர்த்துக் கட்டியாக வேண்டும்!
அதற்குத்தான் பாஷ்யம் அய்யங்கார் பாய்ச்சலும்—இந்து பத்திரிகையின் சிந்தும்—மித்திரனின் மிரட்டலும் நடைபெறுகின்றன!
திராவிடரின் திட்டம் பார்ப்பனரை எதிர்ப்பதல்ல; ஒழிப்பதுவுமல்ல! பார்ப்பனீயத்தை எதிர்ப்பது; அழிப்பதுதான்!
இதைத் தெரிந்து கொண்டும்—தெரியாத மொழியில், தேசீயப் போர்வையில் துவேஷப் பிரச்சாரத்தைத் துவங்கி யிருக்கிறது ஆரியம்!
அஞ்சவில்லை, நாம்! ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை என்று கூறும் பரம்பரையில் வந்தவர்கள் நாம்!
மீண்டும், ஒரு முறையல்ல, பலமுறை கூறுகிறோம்; ‘காந்தியாரையே கொன்றது பார்ப்பனீயம்! திராவிடா! இனியாவது பார்ப்பனீயத்தை நம்பாதே!’ என்று.
ஆரியப் பத்திரிகைகளின் ஆணையை அரசியலார், தலைமேற்கொண்டு திராவிடரின்மீது சீறிப் பாயலாம்!
அந்தச் சீற்றலும், பாய்ச்சலும் ஏற்படும் பொழுது சிந்தை கலங்கி, முதுகைத் திருப்புகிறவர்கள் அல்ல. திராவிடக் கழகத்தார்!
பார்ப்பனீயத்தின் கரத்திலிருந்து பாய்ந்த குண்டுகளுக்கு, மார்பைக் காட்டினார் காந்தியார்!
எங்கள் சட்டையைக் கிழித்துக்கொண்டு எங்கள் இருதயத்தையும் பிளக்கட்டும், ஆளவந்தாரின் ‘குண்டுகள்’ எனக் கூறுகிறோம், நாம்.
ஆளவந்தவரில், பிரதம அமைச்சர், திராவிடர், திராவிட இனத்தவர்! அவர் வீசும் குண்டு, திராவிடரின் மார்பில் பாயட்டும்!
‘சுட்டது திராவிடர்—ஆகவே இந்தச் சாவு, சுவை தருகிறது’ எனச் சொல்லிச் சாவோம்.
ஆரியம் காந்தியாரைக் கொன்று அவர் ‘அஸ்தி’யைக் கரைத்தது!
இதோ, நாம்! ஆரியத்தின் விரோதிகள்! நம் ‘அஸ்தி’யும், இரத்தக் கடலில் கரையட்டும்! மானத்தை இழந்த வாழ்வு இனியும் வேண்டாம்!
கலைஞர் மு. கருணாநிதி · கொலைக்களம்!. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்