களஞ்சியப் பகுதி 1
மடாலய வெளிப்புறம்
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
ஒரு கோச் வந்து நிற்கிறது. பலதேவர், ராணி, எல்லோரும் இறங்கி உள்ளே செல்கின்றனர். கோச்சை ஓட்டிவந்த முத்தனும் இறங்குகிறான். அவன் குதிரையை எடுக்கிறான். அதிலிருந்து படம் ஒன்று விழுகிறது. சுகதேவ் கண்டு விடுகிறான். சுக : ஏ!—முத்தா! என்ன படம் இது? முத் : ஒன்றுமில்லை... சுக : ஏ!...சும்மா காட்டு; பார்க்கலாம்... [காட்டுகிறான்.] சுக : அடேடே!...முத்தா! நான் இதுமாதிரி ஒரு படம் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் எங்கேயோ பார்த்தது போலே ஞாபகம்!... முத் : இப்போது நீங்கள் காணப்போகும்...இந்தப் படம் என் லட்சியக் கனவு...இன்ப விடிவெள்ளி...இரண்டொரு வாரங்களுக்கு முன் நீங்கள் பார்த்த படம் இந்தப் படத்தின் இன்னொரு பிரதி—முற்றுப் பெறாத சித்திரம்... சுக : ஓகோ! அதுவும் உன்னுடையதுதானா? முத் : ஆமாம் முன்னது கை தவறிப்போய் களவாடப்பட்டு விட்டது....! நான் வேறு எழுதிக் கொண்டேன். அது...இது... சுக : சரி; சரி; ஆளு முத்தா இந்தப்படத்திலே இருக்கிறமாதிரி ஒரு பெண்ணு உலகத்திலே இருந்தா நான் தான் அதை கல்யாணம் பண்ணிக்குவேன். முத் : உம்; இல்லாததைப்பற்றிப் பேசவானேன். சுக : சரிதான், உலகத்திலே பேசறதே இல்லாததைப் பற்றித்தான்...சரி நீ வரவில்லையா மடத்துக்கு. முத் : ஊர் கூடம். [முத்தன் நண்பர்கள் வருகிறார்கள்] நண் : என்ன முத்தண்ணா சுகந்தானா? முத் : இது என்ன சுந்திர பூமியா சுகமாயிருக்க? சுகவாசி இதோ இந்த மடத்துக்குள்ளே இருக்கிறார் மாய்கைநாத சாமியார். மாய்கை : அகில ஜெகத்திற்கும் அம்மையப்பன் அருள் சித்திக் கட்டும்...அடியார்க்கு அடியார்களே! அன்பு நிறைந்த பக்தர்களே!.......அய்ய வினைகள் ஏதேனும் இருப்பின் கேட்டுத் தெளிவு பெறுக........ சுகதேவ் : அம்மையப்பன் என்பதற்கு அர்த்தம் என்ன ஸ்வாமி......... மாய்கை : அடடா, இதுவா புரிய வில்லை—இளவரசே. இதோ இருக்கும் பாளையக்கார பலதேவர் உமக்கு... சுகதேவ் : அப்பா!...... மாய்கை : சரி, அவர்கள்.......? சுகதேவ் : அம்மா!....... மாய்கை : அம்மா......அப்பா......அம்மையப்பா. சுகதேவ் : அடடே! அப்படியானால் நீங்கள் தோலத் தரிப்பது என் அம்மாவையும் அப்பாவையும் தானா! மாய்கை : கேளும் உமக்கு ஒரு அம்மையப்பன் இருப்பது போலவே, உலக மக்களுக்கும் ஒரு அம்மையப்பன் இருக்கிறார்கள். சுகதேவ் : அவர்கள் எங்கு இருக்கிறார்களோ?— மாய்கை : கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள்!— சுகதேவ் : பிள்ளைகளாகிய நாம் கண்ணுக்குத் தெரியும் போது, பெற்றவர்களும் தெரிய வேண்டியது தானே. மாய்கை : தவறு!...தெரிய மாட்டார்கள் அந்த தெய்வப் பெற்றோர்கள் — அவர்கள் அரூபிகள் — அண்ட சராசரங்களையும் படைத்து அழிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்...ஆயிரம் நாமம் படைத்தோர்...பாயிரம் பலவற்றுள் பாராட்டப் பெற்றோர்...இகபரம் சுகதுக்கம் ... தூண் துரும்பு...அங்கு...இங்கு எங்கும் பிரகாசமாய் இருப்போர்...என்ன சுகதேவ் ... குழப்பம் முடிவுற்றதா?... சுகதேவ் : இப்போது தானே ஆரம்பமே ஆகிறது மாய்கை : அட அம்மையப்பா— பலதேவர் : சுகதேவ் இப்படி எல்லாம் குறும்புத் தனமாக கேள்விகளை கேட்டாதே; மகான்களை இப்படி யெல்லாம் மடக்குவது மகாபாபம்...... சுகதேவ் : இல்லையப்பா தெரியாமல்தான் கேட்டேன். திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்....... மாய்கை : சந்தோஷம்.